கடந்த சில நாள்களாக ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரரான அம்பானி குடும்ப சகோதரர்கள் முகேஷ், அனில் ஆகியோருக்கிடையே உள்ள பிரச்னை வெளியே வந்துள்ளது.
இந்தியாவில் குடும்பம் சார்ந்த நிறுவனங்களில் இதுபோன்ற பிரச்னை எழுவது இயல்பே. ஆனால் ரிலையன்ஸ் போன்ற மாபெரும் நிறுவனத்தில் இந்த பிரச்னை எழுந்துள்ளது முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் குடும்பப் பின்னணியில் கட்டப்பட்டுள்ள நிறுவனங்கள்தான் அதிகம். பன்னாட்டு நிறுவனங்களின் இந்தியக் கிளைகள் தவிர்த்து, இந்தியாவின் பெரிய நிறுவனங்கள் அனைத்துமே குடும்பங்களின் வழி வழியாக வருவதுதான். டாடா, பிர்லா என்று சொல்வோமே... இதில் பிர்லா என்பது பல துண்டுகளாக உடைந்த சில பல பிர்லாக்களின் நிறுவனங்கள். இதில்தான் கடைசியாக இறந்துபோன பிரியம்வதா பிர்லாவின் உயில் பற்றிய வழக்கு இன்னமும் தொடர்கிறது. இந்த பிர்லா குடும்ப நிறுவனங்களில் உருப்படியானது என்று பார்த்தால் அது ஏ.வி.பிர்லா நிறுவனங்களே. குமார் மங்கலம் பிர்லா தலைமையில் இயங்கும் குழுமம் இது. டாடா நிறுவனங்கள் துண்டாகிப் போகாமல் ஒரு குடையின் கீழ்தான் இன்னமும் உள்ளன. அதற்கு இந்த நிறுவனங்கள் முழுக்க முழுக்க திறமையான நிர்வாகிகளால் நடத்தப்படுவதும், குடும்பத்தின் ஆசாமிகள் அதிகமாக உள்ளே மூக்கை நுழைக்காது இருப்பதும் காரணமாகும். காந்தியின் நெருங்கிய நண்பர் ஜம்னாலால் பஜாஜ் தொடங்கிய பஜாஜ் நிறுவனம் இன்று அவரது பையன்கள், பேரன்கள் இடையேயான சண்டையில் துண்டுகளாக வெட்டப்படப்போகின்றன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நம்மூர் காவி ஆடிட்டர் குருமூர்த்தி அந்த பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து செய்து பெயர் பெற்றார் (ஆனால் பிரச்னை என்னவோ இன்னமும் தீரவில்லை.) ஆதி கோத்ரேஜ் தன் மகள்கள் இருவரையும் அவசர அவசரமாக நிறுவனத்துக்குள் நுழைக்கப் பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.
பார்தி டெலிசர்வீசஸ் சுனில் பார்தி மிட்டலின் குடும்ப நிறுவனம் போலத்தான் தொடங்கியது. மேற்பதவிகளில் இன்னமும் இரண்டு மிட்டல்களைப் பார்க்கலாம். ஆனால் இப்பொழுது சிங்டெல், வார்பர்க்-பிங்கஸ் போன்ற நிறுவனங்கள் செய்துள்ள முதலீட்டினால் வருங்காலத்தில் புரொபஷனல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
தகவல் தொழில்நுட்பம், த.தொவினால் வாய்த்த சேவைகள் ஆகிய துறைகளில் குடும்ப நபர்களின் தொல்லை இல்லை. விப்ரோவின் பங்குகள் கிட்டத்தட்ட 80% அசீம் பிரேம்ஜியிடம் இருந்தும், நிறுவனம் முழுதும் வெளியிலிருந்து வந்த நிர்வாகிகள் கையில்தான் உள்ளது. பிரேம்ஜியின் மகன், மகள், மனைவி, மருமகன்கள் என்று கிடையாது. இன்ஃபோசிஸ், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், டி.சி.எஸ், ஆயிரக்கணக்கான BPO நிறுவனங்கள் அனைத்திலும் நிர்வாகம் முக்கியப் பங்குதாரரின் குடும்பத்தினரிடம் கிடையாது. பழைய நிறுவனங்கள் என்று எடுத்துக்கொண்டால் எல்&டி மட்டும்தான் இதுபோன்று நடக்கும் நிறுவனம்.
சரி, அம்பானி விஷயத்துக்கு வருவோம். ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் என்பது பெட்ரோகெமிகல், எண்ணெய் சுத்திகரிப்பு, எண்ணெய், எரிவாயு தேடுதல், தோண்டுதல், பெட்ரோல் பம்புகளை நாடெங்கிலும் நிறுவுவது ஆகிய வேலைகளைச் செய்யும் மிகப்பெரும் நிறுவனம். ரிலையன்ஸ் எனர்ஜி என்பது மின்சாரம் உற்பத்தி, விநியோகம் ஆகிய துறைகளில் உள்ளது. ரிலையன்ஸ் இன்ஃபோகாம் என்னும் தொலைதொடர்பு நிறுவனம் மொபைல் செல்பேசிகள், பிராட்பேண்ட் இணையம் போன்ற சேவைகள் தருவது. ரிலையன்ஸ் கேபிடல் என்னும் நிறுவனம் பணத்தைப் பணமாக்கும் முதலீடு, பரஸ்பர நிதி ஆகிய வேலைகளைச் செய்வது. ரிலையன்ஸ் சில மாதங்களுக்கு முன்னர்தாம் ஐ.பி.சி.எல் என்னும் அரசின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியிருந்தது.
திருபாய் அம்பானி உயில் எழுதிவைக்காது இறந்துபோனார். அவர் இறந்தவுடனேயே அவரது மகன்களுக்குள் ஏதேனும் பிரச்னை வருமோ என்று எதிர்பார்த்தனர். ஆனால் தொடக்கத்தில் அப்படி ஏதும் இல்லை. மூத்தவர் முகேஷ் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தையும், ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத்தையும் நேரடியாகக் கவனித்துக்கொள்ள, இளையவர் அனில் ரிலையன்ஸ் எனர்ஜியில் கவனத்தைச் செலுத்தினார்.
ஆனால் சமீபகாலங்களில் முகேஷ் தான்தோன்றித்தனமாக ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத்தை நடத்துவது பற்றியும், ரிலையன்ஸ் எனர்ஜிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் மூலம் எரிவாயு வழங்குவதில் ஏற்படப்போகும் காலதாமதம் பற்றியும், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் போர்டில் அனிலுக்குத் தெரியாமல் நுழைக்கப்படும் மாற்றங்கள் பற்றியும் கண்டு கோபமான அனில், முகேஷுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து சி.என்.பி.சி தொலைக்காட்சி சானலில் ஒரு பேட்டியில் முகேஷ் தனக்கும், தன் தம்பிக்கும் இடையில் சில பிரச்னைகள் இருப்பதாகவும், ஆனால் அதனால் நிறுவனங்களில் எந்த பாதிப்பும் இருக்கப் போவதில்லை என்றும் சொன்னார். சொல்லிவிட்டு அமெரிக்காவிற்கு மூன்றுநாள் விடுமுறைக்குப் போய்விட்டார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளில் விலைகள் இறங்கத் தொடங்கின.
இந்த வாரம் திங்களன்று முகேஷ், தான் சொன்னதை தொலைக்காட்சி சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று எல்லாப் பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்தார். பங்குச்சந்தையில் பங்குகள் விலை முன்னளவுக்கு வந்தது. ஆனால் அடுத்த நாளே ரிலையன்ஸ் ஊழியர்கள் அனைவருக்கும் அனுப்பிய மின்னஞ்சலில் தான்தான் தலைவர் என்று திட்டவட்டமாக முகேஷ் அறிவிக்க, அனிலும் வாய் பேசாது இருக்க, அனைவருக்கும் இந்த பிரச்னை இப்பொழுதைக்குத் தீராது என்று தெரியவந்துவிட்டது. பங்குகள் மீண்டும் இறக்கம்.
அனில், முகேஷ் இருவருக்கும் இரண்டு சகோதரிகள். தாயார் கோகிலாபென் இந்த பிரச்னையில் தலையிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளாராம். சென்ற வார இறுதியில் குடும்பத்திற்குள்ளாகப் பேசி பிரச்னை தீர்ந்துவிடும் என்று சிலர் எதிர்பார்த்தனர். நடக்கவில்லை.
இதற்குள் நேற்று அனில் அம்பானி சேர்மனாக இருக்கும் ரிலையன்ஸ் எனர்ஜியில் இருந்து ஆறு டைரக்டர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் டைரக்டர் ஒருவரும் ராஜினாமா செய்துள்ளார். அனில் அம்பானி தன் கைகள் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பார் என்று சொல்லப்படுகிறது.
உயில் எழுதாமல் திருபாய் இறந்தது நிஜமென்றால் அவர் பெயரில் நேரடியாக இருந்த சொத்துக்கள் ஐந்தாகப் பிரிக்கப்படும்: மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். முகேஷ், அனில் பெயரில் தனியாக இருக்கும் பங்குகள் அவரவர்களுக்கே. இப்பொழுதைக்கு இந்த வழக்கு தீரப்போவதில்லை என்று தோன்றுகிறது.
சங்கராச்சாரியார் வழக்கு கூட இதற்கு முன்னால் முடிந்துவிடும்.
பயணம் என்பது அறிதலே
1 hour ago
பத்ரி,
ReplyDeleteஅருமையான பதிவு, நன்றி,
ஆனாலும் அவர்கள் தங்கள் பிரச்னைகளை உள்ளுக்குள் செட்டில் செய்ய முயற்சித்திருக்கலாம்.
ராஹுல் பஜாஜ் போன்றோர் முயற்சிக்கின்றனர். பார்க்கலாம்.
- அலெக்ஸ்
அலெக்ஸ்: தி எகனாமிக் டைம்ஸ், இந்தச் செய்தியைப் படிக்கவும். http://economictimes.indiatimes.com/articleshow/938044.cms
ReplyDeleteஇங்கு வரிவரியாக சகோதரர்களுக்கிடையில் என்ன நடந்தது என்பதை விவரிக்கின்றனர்.
முகேஷ் - அனில்: இருவரில் அனில் அம்பானிதான் வெளியே அதிகமாகத் தெரிபவர். நன்கு பேசக்கூடியவர். [முகேஷ் பேசுவது படு கேவலமாக இருக்கும். எழுதுவச்சுப் படிக்கறது கூட. நம்ம தயாநிதி மாறன் மாதிரி...] தொலைக்காட்சிகளுக்குப் பிடித்தவர் அனில்தான்.
அத்துடன் அரசியல் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்வதிலும் அனில்தான் பெரிய ஆள். (மாபெரும் fixer அமர் சிங்கின் நெருங்கிய நண்பர். அதன்மூலம் முலாயம் சிங் மனது வைத்து ராஜ்ய சபா உறுப்பினரானவர் அனில்.) அனில் ஜாக்கிங் செய்துகொண்டே வந்து மும்பையில் வாக்குச்சாவடிக்குப் போய் வாக்களித்தது முதல் பக்கச் செய்தியானது. எந்த CII விழாவென்றாலும், அதில் நல்ல பேச்சு இருக்க வேண்டுமென்றால் கூப்பிடுவது அனிலைத்தான். முகேஷை அல்ல.
இப்பொழுது நடக்கும் பிரச்னை சொத்தைப் பிரிப்பதற்கு அல்ல. யார் எந்த நிறுவனத்தை எப்படி control செய்வது என்பதில்தான். முகேஷ் பின்கதவு வழியாக தன் ஆளுகையை நிலைநாட்டியுள்ளார். அது அனிலுக்குப் பிடிக்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. முகேஷ் திட்டமிட்டே, போர்டில் தன் ஆசாமிகளை வைத்து தலையாட்டி பொம்மை போல ஆடவைத்து, தனக்கு வேண்டியதை supplementary agenda மூலம் சாதித்துக் கொண்டது அனிலின் கோபத்தையும், வெறுப்பையும் சம்பாதித்துள்ளது.
ரிலையன்ஸ் பங்குதாரர்கள் ரிலையன்ஸ் சேர்மன் மற்றும் போர்ட் மீது பல குற்றங்களை இதுவரை கொண்டுவந்ததேயில்லை. இப்பொழுது ரிலையன்ஸ் vs பி.எஸ்.என்.எல்/எம்.டி.என்.எல், DoT ஆகியவற்றுக்கிடையே உள்ள பிரச்னைகளைப் பாருங்கள்.
ரிலையன்ஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சாற்றப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்கள் கொதித்துப் போயிருக்க வேண்டும். ஆனால் வாயையே திறக்கவில்லை ஒருவரும். பெரும் நிதிநிறுவனப் பங்குதாரர்கள் கூட வாயைப் பொத்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். நல்லதொரு Corporate Governance என்பதற்கு ரிலையன்ஸ் நிச்சயமாக மோசமான உதாரணம். ரிலையன்ஸ் இன்ஃபோகாம் முழுவதிலுமே தொடங்கியதிலிருந்து சிறுசிறு மோசடிகள், ஏமாற்றல்கள். ஆனாலும் வாயைப் பொத்திக்கொண்டு இருந்ததால் independent directors மற்றும் நிதிநிறுவனப் பங்குதாரர்கள், தம் கடமையைச் செய்யத் தவறிவிட்டார்கள்.
அனில் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் பற்றி சில கேள்விகளைக் கேட்டதாகத் தெரிகிறது. ரிலையன்ஸ் இன்ஃபோகாம் முகேஷின் செல்லப்பிள்ளை. அதனாலும் முகேஷ் கோபம் அடைந்ததாகத் தெரிகிறது.