Friday, November 26, 2004

கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்

தென் ஆப்பிரிக்கா 510/9 டிக்ளேர்ட் & 169/4, இந்தியா 466. ஆட்டம் டிராவில் முடிவடைந்தது

நான்காம் நாள் ஆட்டம் முடியும்போதே இனி இந்த ஆட்டத்தின் முடிவு டிராவைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது தெளிவாகி விட்டது. ஐந்தாம் நாள் ஆட்டம் 9.00 மணிக்குத் தொடங்க இருந்தது, ஆனால் 9.30க்குத்தான் ஆரம்பிக்க முடிந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே திராவிட் எண்டினி வீசிய அவுட்ஸ்விங்கர் ஒன்றில் விளிம்பில் தட்டி விக்கெட் கீப்பர் சோலிகிலேயிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். முதல் நாள் ஸ்கோரில் இரண்டே ரன்கள்தான் சேர்த்திருந்தார். திராவிட் 54, இந்தியா 407/5.

தொடர்ந்து போலாக்கும், எண்டினியும் பிரமாதமாகப் பந்துவீச ஆரம்பித்தனர். சடசடவென விக்கெட்டுகள் விழுந்தன. புதியவர் தினேஷ் கார்த்திக் உள்ளே வரும் பந்தில் ஷாட் ஏதும் அடிக்காமல் கால்காப்பைக் காண்பிக்க எல்.பி.டபிள்யூ ஆனார். தினேஷ் கார்த்திக் 1, இந்தியா 408/5. கும்ப்ளே இரண்டு அருமையான நான்குகளை அடித்தார். ஆனால் எண்டினி பந்து ஆஃப் ஸ்டம்பிலிருந்து வெளியே போனது. அதைத் தட்டி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கும்ப்ளே 9, இந்தியா 419/7. லக்ஷ்மண் அதே ஓவரிலேயே உள்ளே வந்த பந்தை சரியாக விளையாடாமல் , உள்விளிம்பில் வாங்கி ஸ்டம்பில் விட்டார். லக்ஷ்மண் 9, இந்தியா 420/8.

அதைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும், ஜாகீர் கானும் மட்டையை வீச ஆரம்பித்தனர். சில விளிம்பில் பட்டு ரன்கள் சேர்த்தன. சில பிரமாதமான விளாசல்களும் இருந்தன. பீட்டர்சன் கொண்டுவரப்பட்டார். ஹர்பஜன் கண்களை அகல விரித்துக்கொண்டு அவரைத் தூக்கி லாங்-ஆன் மேல் அடித்து ஆறு ரன்களைப் பெற்றார். அதே ஓவரில் தடுத்தாடப் போய், சில்லி பாயிண்டில் கேட்ச் கொடுத்தார். டிப்பெனார் மார்பளவில் வந்த கேட்சை அவர் தட்டி விட்டார், பின் தானே திரும்பி, தாவிப்போய் அருமையாகக் கீழே விழுந்து தரைகு ஓர் இன்ச் மேலே பாய்ந்து பிடித்தார். இந்த ஆட்டத்தின் தலை சிறந்த கேட்ச் இது. ஹர்பஜன் 17 (1x4, 1x6), இந்தியா 456/9.

அடுத்த ஓவரில் ஜாகீர் கான் அடுத்தடுத்த பந்துகளில் ஹாலை 4, 6 என்று அடித்தார். ஒரு பந்து விட்டு நான்காவது பந்தில், இறங்கி அடிக்கப்போக, நடு ஸ்டம்ப் பறந்தது. கான் 30 (3x4, 1x6), இந்தியா 466 ஆல் அவுட். தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 44 ரன்கள் கூடுதலாகப் பெற்றிருந்தது.

உணவு இடைவேளைக்கு முன்னர் நான்கு ஓவர்கள் வீச முடிந்தது. அந்த நான்கு ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 18/0 என்று இருந்தது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் ஸ்மித், ஹால் இருவருமே நன்றாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஹர்பஜன் வீசிய பந்தில் ஹால் வெளி விளிம்பில் தட்டி தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹால் 26, தென் ஆப்பிரிக்கா 67/1. அதைத்தொடர்ந்து முரளி கார்த்திக் அருமையாகப் பந்து வீசினார். கார்த்திக் காற்றில் மிதக்கவிட்ட பந்து ஒன்றில் மார்ட்டின் வான் யார்ஸ்வெல்ட் எல்.பி.டபிள்யூ ஆனார். வான் யார்ஸ்வெல்ட் 13, தென் ஆப்பிரிக்கா 100/2. ஸ்மித் தன் அரை சதத்தை அடையும் முன்னர் கார்த்திக் வீசிய மற்றுமொரு மிதந்த பந்தில் ஷார்ட் லெக்கில் நின்றுகொண்டிருந்த கம்பீரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஸ்மித் 47, தென் ஆப்பிரிக்கா 110/3. ஜாக் ருடால்ப் முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகியிருந்தார். மிக நல்ல, வளரும், இடதுகை ஆட்டக்காரர். சற்று கலவரத்துடனேயே ஆடினார். ஹர்பஜன் பந்துவீச்சில் வெளிவிளிம்பில் பட்டு தினேஷ் கார்த்திக்கால் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். ருடால்ப் 3, தென் ஆப்பிரிக்கா 115/4. தேநீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்கா 121/4 என்ற ஸ்கோரில் இருந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஜாக் கால்லிஸ், போட்டா டிப்பெனார் - இரண்டு பேருமே அறுவை மன்னர்கள் - தம் அணிக்கு வேறெந்தச் சேதமும் வராவண்ணம் அறுத்துத் தள்ளினர். 169/4 என்ற நிலையில் ஆட்டம் டிராவாக அறிவிக்கப்பட்டது.

இந்தியப் பந்துவீச்சாளர்களால் தடுத்தாடும் ஆட்டக்காரர்களை அவுட்டாக்க முடியாதது பெருத்த துரதிர்ஷ்டம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்போது கில்லெஸ்பி தவிர அனைவருமே ஆக்ரோஷமாக ரன்கள் பெற முயற்சிப்பர். டேமியன் மார்ட்டின் கூட. அதனால் விக்கெட் எடுக்க ஏதாவது ஒரு வாய்ப்பு வந்தவண்ணமே இருந்தது. ஆனால் இந்தத் தென் ஆப்பிரிக்க அணி தானாக எந்த விளையாட்டையும் ஜெயிக்க நினைக்கவில்லை. தோற்கக்கூடாது என்பது மட்டுமே அவர்களது ஒரே குறிக்கோள். எனவே கொல்கொத்தா ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லையென்றால் அங்கும் டிராதான்.

4 comments:

 1. அய்யோஓஓஓஓஓஒ... கிரிகெட்டு கிரிகெட்டு கிரிகெட்டு... போதும் தலீவரே.... எதினாச்சும் கலாசல் மேட்டரை அவுத்து உடு.. ரொம்ப போரடிக்குது

  By: youknowwhoiam

  ReplyDelete
 2. அய்யோஓஓஓஓஓஒ... கிரிகெட்டு கிரிகெட்டு கிரிகெட்டு... போதும் தலீவரே.... எதினாச்சும் கலாசல் மேட்டரை அவுத்து உடு.. ரொம்ப போரடிக்குது

  By: youknowwhoiamBy: youknowwhoiam

  ReplyDelete
 3. பத்ரி, உங்களுக்கு பிரச்னையில்லையென்றால் தொடர்ந்து எழுதுங்க. பகலில் வேலைக்குச் சென்று விடுவதால் நேரடி ஒளிபரப்பில் ஆட்டங்களை பார்க்க முடிவதில்லை. உங்கள் பதிவுகளைப் படித்தே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்கிறேன்.


  By: ராஜா

  ReplyDelete
 4. அட, அடுத்தவர் சொல்லி கேக்கற ஜாதியா நாம. கிரிக்கெட் தொடரும். ஆட்டம் முடிந்து இரண்டு நாளகள்் ஆனாலும், ரிப்போர்ட் வந்துகிட்டுதான் இருக்கும். ஆனா இந்தியா விளையாடற டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும்தான - இப்பொழுதைக்கு. ஒருநாள் போட்டிகள் பற்றி அதிகமா இருக்காது எதுவும்.

  ஆனா, நம்ம மத்த நண்பர்களுக்குப் பிடித்தமான சில அக்கப்போர்களையும் கவனிக்கிறேன்.

  ReplyDelete