Monday, November 29, 2004

கொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம் நாள்

தென் ஆப்பிரிக்கா 305, இந்தியா 129/1 (38.4 ஓவர்கள்) - சேவாக் 82*, திராவிட் 33*

நேற்று 6.3 ஓவர்கள் பாக்கியிருந்த நிலையில் இன்று ஆட்டம் வெறும் 6 நிமிடங்கள் முன்னால் தொடங்கியது. நேற்று மட்டுமல்ல, இனி ஒவ்வொரு நாளுமே ஆட்ட இறுதியில் நேரம் கிடைக்கப்போவதில்லை எனும்போது ஆட்டம் 9.00 மணிக்கே தொடங்க வேண்டும்.

புதிய பந்தை வைத்துக்கொண்டு ஜாகீர் கானும், இர்ஃபான் பதானும் இன்று காலை அற்புதமாகப் பந்து வீசினர். காலையில் வீசப்பட்ட மூன்றாவது ஓவரிலேயே ஜாகீர் கான் வெளியே போகும் பந்தின் மூலம் டி ப்ருயினை விக்கெட் கீப்பர் கார்த்திக் கேட்ச் பிடிக்க அவுட்டாக்கினார். டி ப்ருயின் தன் முதல் நாள் ஸ்கோரில் மாற்றமெதையும் ஏற்படுத்தவில்லை. டி ப்ருயின் 15, தென் ஆப்பிரிக்கா 230/6. தொடர்ந்து உள்ளே வந்த ஷான் போலாக் துல்லியமான வேகப்பந்து வீச்சில் மிகவும் தடுமாறினார். அடுத்த ஒரு மணி நேரம் கால்லிஸ், போலாக் இருவரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு விளையாடினர். ரன்கள் பெறுவது விளிம்பு வழியாக தர்ட்மேனில்தான் என்ற நிலைமை. கல்லியில் நின்ற சேவாக் கையருகே ஒரு கேட்ச் போனது. பல பந்துகள் கால் காப்பில் பட்டன. நடுவர்கள் ஹார்ப்பரும், டாஃபலும் எல்.பி.டபிள்யூ கொடுப்பதில்லை என்ற தீர்மானத்தில் இருந்தனர்.

ஜாகீர் கானுக்கு பதில் கங்குலி பந்துவீச வந்தார். ஏன் இப்படி வீணாக, தானே பந்துவீச வருகிறார் என்று தோன்றியது. ஆனால் கங்குலி மிகவும் துல்லியமாக ரன்கள் ஏதும் அளிக்காத வகையில் பந்துகளை ஆஃப் கட்டர்களாக வீசிக்கொண்டிருந்தார். ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ஆஃப் கட்டர்கள் போலாக் கால்காப்பில் பட்டன. இரண்டுமே அவுட்தான், ஆனால் ஹார்ப்பர் தரவில்லை. அடுத்த கங்குலி ஓவரில் கால்லிஸ் மட்டையில் பட்டு ஒரு கேட்ச் விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால் கார்த்திக் ஸ்டம்பிற்கு அருகில் இருந்ததால் அந்த கேட்சைப் பிடிக்க முடியவில்லை. கார்த்திக்கின் கைக்காப்பில் பந்து படாதிருந்தால் முதல் ஸ்லிப்பில் இருந்த திராவிட் கையில் எளிமையான கேட்ச் ஆகியிருக்கும். அடடா, இப்படி ஆகிவிட்டதே என்று கங்குலி கார்த்திக்கை சற்று பின்னால் நிற்கச் சொன்னார்.

அடுத்த பந்தைப் போல கங்குலி தன் டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை வீசியிருந்திருக்க முடியாது. ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே குத்தியது. கால்லிஸ் அப்பொழுது 121இல் இருந்தார். பந்தினால் தனக்கேதும் தொல்லை வராது என்று பந்தை விட்டுவிட, பந்து சடாரென உள்நோக்கித் திரும்பி, மிடில் ஸ்டம்பின் மேலாகத் தட்டியது. கால்லிஸ் 259 பந்துகளில் 121 ரன்கள், 12x4. தென் ஆப்பிரிக்கா 261/7. அடுத்த சில ஓவர்கள் கழித்து கும்ப்ளே வீசிய கூக்ளியை - உள்நோக்கி வந்த பந்து - சரியாகக் கவனிக்காது போலாக் முன்னதாகவே மட்டையை கால் திசை நோக்கித் திருப்பி விட, பந்து வெளி விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பில் நின்ற திராவிட் கையில் கேட்ச் ஆனது. போலாக் 18, தென் ஆப்பிரிக்கா 273/8.

அவ்வளவுதான், இனி தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் உடனடியாக முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தால், அதுதான் நடக்கவில்லை. ஜஸ்டின் ஆண்டாங், தாமி சோலிகிலே இருவரும் மேற்கொண்டு விக்கெட் கொடுக்காமல் உணவு இடைவேளை வரை அணியைக் கொண்டுசென்றனர். தென் ஆப்பிரிக்கா 289/8.

உணவு இடைவேளைக்குப் பின்னர், சிறிது சிறிதாக ரன்கள் வந்தவண்ணம் இருந்தன. 300ஐத் தாண்டியது தென் ஆப்பிரிக்கா. இப்படியே போனால் தாங்காது என்று இன்று முதல்முறையாக ஹர்பஜன் சிங் பந்துவீச அழைத்துவரப்பட்டார். முதல் பந்து! ஃபுல் டாஸ். சோலிகிலே தூக்கி அடிக்கப்போய் ஹர்பஜன் சிங்கிற்கே கேட்ச் கொடுத்தார். சோலிகிலே 15, தென் ஆப்பிரிக்கா 305/9. ஒரு பந்து விட்டு, மூன்றாவது பந்தில் - மிதந்து வந்த பந்து - எண்டினி கவர் திசையில் மேலாக அடித்து அங்கு நின்ற பதான் கையில் எளிதான கேட்ச் கொடுத்தார். எண்டினி 0, ஆண்டாங் 16*, தென் ஆப்பிரிக்கா 305 ஆல் அவுட். ஆக ஹர்பஜன் இன்று தான் வீசிய முதல் மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளைப் பெற்று, தென் ஆப்பிரிக்கா அணியை ஆல் அவுட்டாக்கினார். நேற்று நான் சொன்னது போல தென் ஆப்பிரிக்கா 300க்கருகே தன் இன்னிங்ஸை முடித்தது.

இந்தியாவிற்கு சேவாகும், கம்பீரும் ஆட்டத்தைத் தொடங்கினர். சேவாக் எப்பொழுதும் போல தடாலடியாகவே தொடங்கினார். கம்பீர் தானும் நல்ல தன்னம்பிக்கையுடன் ஆரம்பித்தார். ஆனால் 7வது ஓவரில் போலாக் பந்துவீச்சில் லெக் ஸ்டம்பில் விழுந்து நடு ஸ்டம்பிற்குச் செல்லும் பந்து கால்காப்பில் பட ஒருவழியாக ஹார்ப்பர் ஆட்டத்தின் முதலாவது எல்.பி.டபிள்யூவைக் கொடுத்தார். கம்பீர் 9, இந்தியா 17/1. திராவிட் சேவாகுடன் ஜோடி சேர்ந்தார். சேவாக் அதுவரை தர்ட்மேன் திசையில் உயரத்தூக்கி அடித்த ஒரு நான்குடன் விளையாடிக்கொண்டிருந்தார். போலாக் பந்தில் (வெவ்வேறு ஓவர்களில்), தர்ட்மேன் திசையில் ஒன்று, மிட்விக்கெட் திசையில் ஒன்று, கவர் திசையில் ஒன்று என மூன்று நான்குகளைப் பெற்றார். இதற்கிடையில் திராவிடும் எண்டினியின் ஓர் ஓவரில் இரண்டு அழகான நான்குகளைப் பெற்றார் - ஒன்று பேக்வர்ட் பாயிண்டில் ஒரு கட் ஷாட், மற்றொன்று தர்ட்மேன் வழியாக ஒரு ஸ்டியர். தேநீர் இடைவேளையின்போது இந்தியா 48/1 என்ற ஸ்கோரில் இருந்தது.

தேநீர் இடைவேளை தாண்டியதும் இந்தியாவால் வேகமாக ரன்களைப் பெற முடியவில்லை. முக்கியமாக திராவிடால் ரன்களைப் பெற முடியவில்லை. சேவாக் அவ்வப்போது நான்குகளும், சில ஒன்று, இரண்டுகளும் பெற்றுக்கொண்டிருந்தார். சேவாக் 79 பந்துகளில் தன் அரை சதத்தைப் பெற்றார். ஆண்டாங் வீசிய ஓவர் ஒன்றில் சேவாக் அவுட்டாகும் நிலைக்கு வந்தார். ஆண்டாங் டெஸ்ட் போட்டிகளில் லெக் ஸ்பின் வீசுவாராம். ஒருநாள் போட்டிகளில் ஆஃப் ஸ்பின்னாம் (!). ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிய பந்தை சேவாக் அடிக்காது விட, பந்து லேசாக உள்ளே வந்து கால்காப்பில் பட்டது. எல்.பி.டபிள்யூவுக்கான அப்பீலை நடுவர் நிராகரித்தார். திடீரென சுதாரித்துக்கொண்ட சேவாக் அடுத்த நான்கு பந்துகளையும் எல்லைக்கோட்டைத் தாண்டி அனுப்பினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெகு வெளியே சென்றது, அதை கவர் திசையில் இழுத்து அடித்தார். எல்லைக்கோட்டுக்கு அருகே நின்றுகொண்டிருக்கும் ஸ்வீப்பர் கவர் பந்துத் தடுப்பாளரால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. நான்காவது பந்து ஃபுல்டாஸ், அதை மிட்விக்கெட் திசைக்கு மேல் வளைத்து ஆறாக அடித்தார். ஐந்தாவது பந்து, அளவு அதிகமாக வீசப்பட்டது, அதை இறங்கி வந்து மிட்விக்கெட் மேல் வளைத்து அடித்தார், இம்முறை நான்குதான். ஆடிப்போன அணித்தலைவர் ஸ்மித் இரண்டு நிமிடங்கள் எடுத்துக்கொண்டு பந்துத்தடுப்பாளர்களை மாற்றி அமைத்தார். ஆண்டாங், ஆறாவது பந்தை, வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர வந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே வீசினார். இதை எதிர்பார்த்த சேவாக் அந்தப் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து பேக்வர்ட் பாயிண்ட் திசையில் நான்கடித்தார்!

இது போதாதென்று அடுத்த ஓவரின் முதல் பந்தை - போலாக் வீசியது - திராவிட் அற்புதமாக பாயிண்ட் திசையில் கட் செய்து நான்கைப் பெற்றார்.

ஸ்மித் மிகவும் தைரியமாக ஆண்டாங்கை அடுத்த ஓவரையும் வீசச் செய்தார். முதல் பந்தை சேவாக் இறங்கி வந்து லாங் ஆன் திசை மேல் அடித்து நான்கைப் பெற்றார். அடுத்த பந்தில் சேவாகிற்கு ஒரு ரன்தான். ஆனால் அதே ஓவரில் திராவிடும் மிட்விக்கெட் திசையில் அழகான ஒரு நான்கை அடித்தார். ஆக, ஆண்டாங் இரண்டு ஓவர்களில் 28 ரன்களைக் கொடுத்துவிட்டார். இந்த அமளி துமளியில் இந்தியா 100 ரன்களைத் தாண்டியிருந்தது. தொடர்ந்தும் ரன்கள் வந்தவண்ணம் இருந்தன. இதற்குள் நேரம் 4.20 ஆகியிருக்க இருட்டத் தொடங்கியது. இன்று மொத்தமாக 76.4 ஓவர்களே வீசப்பட்டிருந்தன. நடுவர்கள் வெளிச்சமின்மை காரணமாக இன்றும் ஆட்டத்தை நிறுத்தி விட்டனர்.

இந்தியா என்ன செய்யவேண்டும்? இந்தியாவுக்கு சேவாக் ஒருவர்தான் அதிரடியாக விளையாடுகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு ஜெயிக்க வாய்ப்புகள் குறைவு. இந்தியா நாளை முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டும். நான்காவது நாளும் பேட்டிங் செய்ய வேண்டும். நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு அடுத்து ஒரு மணி நேரமாவது விளையாடி, 520-570 ரன்கள் வரை பெற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்தால் இந்தியா ஜெயிக்க நிறைய வாய்ப்பு. அதற்கு திராவிட், டெண்டுல்கர், கங்குலி, லக்ஷ்மண் என அனைவரும் சேர்ந்து ரன்கள் பெற வேண்டும்.

4 comments:

 1. நீங்கள் முடிந்த வரை தமிழில் எழுதுவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். "நான்குகள்" என்பதற்கு பதில் "நான்கடிகள்" என்று மாற்றிச் சொன்னால் என்ன? ஆறுகளை ஆறடிகள் என்றும் மாற்றினால்? என்பதை "ஆறடி அடித்தார்" என்றும் என்பதை "மூன்று நான்கடிகள் இருந்தன" என்றும் சொல்ல முடியும்.

  ReplyDelete
 2. நீங்கள் முடிந்த வரை தமிழில் எழுதுவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். "நான்குகள்" என்பதற்கு பதில் "நான்கடிகள்" என்று மாற்றிச் சொன்னால் என்ன? ஆறுகளை ஆறடிகள் என்றும் மாற்றினால்? He hit a sixer என்பதை "ஆறடி அடித்தார்" என்றும் his innings had three fours என்பதை "மூன்று நான்கடிகள் இருந்தன" என்றும் சொல்ல முடியும்.

  ReplyDelete
 3. ஸ்ரீகாந்த், நான்கடிகள் என்றால் Four Feet என்ற அர்த்தம் வராதா? தமிழ் அப்படியே இருக்கட்டும் :-)

  ReplyDelete
 4. நான்கடி, ஆறடி என்பது பற்றி நான் இன்னமும் யோசிக்கவேண்டும். இப்பொழுதைக்கு நான்கு, ஆறு என்றே எழுதப்போகிறேன். ஆங்கிலத்தில் எல்லைக்கோட்டைக் கடந்து செல்லுமாறு அடிப்பதற்கே "boundary" என்று சொல்கிறார்கள். "அருமையாக அடித்தார், எல்லைக்கோடுதான்" என்று தமிழிலும் சொல்லலாம் என்றே நினைக்கிறேன். எல்லைக்கோட்டடி - எல்லைக்கோட்டைத் தாண்டுமாறு அடிப்பது என்பதற்கு 'அடி' என்பதைச் சேர்க்க வேண்டுமா? தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

  கிரிக்கெட்டுக்கான தமிழ்மொழி விரிவடைய வேண்டும் (பிற கலைகள், விளையாட்டுக்கும்தான்). பந்துத் தடுப்பு இடங்களுக்கான பெயர்கள், குறிப்பிட்ட ஷாட்களின் பெயர்கள், பந்துவீசும் முறைக்கான பெயர்கள் என பலவும் உருவாக்கப்பட வேண்டும்.

  முயற்சி செய்வோமே?

  ReplyDelete