Sunday, November 21, 2004

கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்

தென் ஆப்பிரிக்கா 230/4 (92 ஓவர்கள்) - ஹால் 78*, டிப்பெனார் 46*

இந்தியா-ஆஸ்திரேலியா அதிரடி ஆட்டங்களைப் பார்த்தபின்னர் தூங்க வைக்கக்கூடிய டெஸ்ட் ஆட்டம் நேற்று கான்பூரில் நடந்தது. இங்கும் கங்குலி டாஸ் தோற்றார். முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார் கிராம் ஸ்மித். மும்பை டெஸ்டுக்குப் பிறகு இந்தியா தன் ஃபார்முலா இனி 3 சுழற்பந்து வீச்சாளர்கள், ஒப்புக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்று முடிவு செய்திருந்தது. ஜாகீர் கான் உயிரை விட்டு வீசினாலும் பந்து எழும்பவே இல்லை கான்பூர் ஆடுகளத்தில். மறுமுனையில் கங்குலி பந்துவீசுவதைப் பார்க்கவே கேவலமாக இருந்தது.

தென் ஆப்பிரிக்கா, கிப்ஸ் இல்லாத காரணத்தால் இதுவரை தொடக்க ஆட்டத்தில் பயன்படுத்தாத ஆண்டிரூ ஹாலை தொடக்க ஆட்டக்காரராக அனுப்பியிருந்தனர். ஸ்மித், ஹால் இருவரும் தட்டுத்தடுமாறி ஆடினர். ஆனால் கங்குலியின் மிதவேக 'கழுதை விட்டை' (Donkey drops!) பந்துகள் கிடைத்த சந்தோஷத்தில் அவ்வப்போது நான்கு ரன்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர். கங்குலி 4-0-21-0 என்று பந்துவீசிய நிலையில் கும்ப்ளேயைப் பந்துவீச அழைத்தார். அதன்பின் ஹர்பஜன்.

ஆனால் முதல் வேளையில் விக்கெட்டே விழாதோ என்ற நிலையில் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் விளையாடிக்கொண்டு இருந்தனர். ஸ்மித் சுழற்பந்து வீச்சை சரியாகவே சமாளித்தார். ஆனால் ஹால் - பழக்கமில்லாத காரணத்தால் - மிகவும் தடுமாறினார். திடீரென, ஆட்டத்தின் போக்குக்கு எதிராக கும்ப்ளே பந்துவீச்சில், ஸ்மித் முன்வந்து தடுத்தாடிய பந்து உருண்டோடி, ஸ்டம்பில் விழுந்தது. தென் ஆப்பிரிக்கா 61/1, ஸ்மித் 37. புதிதாக உள்ளே வந்தவர் மார்ட்டின் வான் யார்ஸ்வெல்ட். இவரும் நல்ல சுழற்பந்தை முன்னே பின்னே சந்தித்து அறியாதவர். கும்ப்ளே வீசிய வேகமான பந்து ஒன்றைப் பின்காலில் சென்று விளையாடப் போய் விட்டுவிட, அது கால்காப்பில் பட்டது. எல்.பி.டபிள்யூ. தென் ஆப்பிரிக்கா 69/2. வான் யார்ஸ்வெல்ட் 2.

ஜாக் கால்லிஸ் அனுபவம் வாய்ந்த விளையாட்டு வீரர். மறுமுனையில் ஹால் நான் அவுட்டாகவே போவதில்லை என்று தடுத்தாடிக் கொண்டிருக்க, கால்லிஸ் நிதானமாக விளையாடினார். உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்கா 80/2 என்ற கணக்கில் இருந்தது.

கார்த்திக் சரியாகவே பந்துவீசவில்லை. விக்கெட் எடுக்கவேண்டும் என்ற நினைப்பிலே அவர் பந்துவீசியதாகத் தெரியவில்லை. வீசும் கை விக்கெட்டின் மேல்வர, லெக் ஸ்டம்பிற்கு வெளியே பந்துவீசி அதை உள்ளே கொண்டுவந்தால் கால்களாலேயே ஒரு மட்டையாளர் தடுத்துக் கொண்டிருக்கலாம். எல்.பி.டபிள்யூவும் கிடைக்காது. என்னவோ, கார்த்திக் இப்படியான நெகடிவ் லைனில்தான் அதிகமாகப் பந்துவீசிக் கொண்டிருந்தார். ஹர்பஜன் நன்றாகவே வீசினார், ஆனால் விக்கெட் பெறவில்லை.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஹால், கால்லிஸ் இருவரும் மிகவும் மெதுவாக விளையாடினர். கால்லிஸ் விளையாட்டே மெதுவாகத்தான் இருக்கும். ஹால் அவரைவிட ஆமையாக இருந்தார். இரண்டாவது வேளையிலும் இனி விக்கெட்டே விழாதோ என்ற நிலையில் பார்வையாளர்கள் அனைவரும் தூங்கிப்போயிருக்க, திடீரென கும்ப்ளே வீசிய பந்தை ஸ்வீப் செய்யப்போன கால்லிஸ் பந்தை விட்டுவிட, பந்து கால்காப்பில் பட்டது. இதுவும் எல்.பி.டபிள்யூ என்று நடுவரால் முடிவு செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்கா 154/3, கால்லிஸ் 108 பந்துகளில் 37. அடுத்து விளையாட வந்தவர் தென் ஆப்பிரிக்காவின் இளைய நம்பிக்கை நட்சத்திரம் ஜாக் ருடால்ப். ஆனால் முதல் பந்திலேயே சரியாகத் தடுத்தாடாததால், ஸ்மித் போலவே பந்து பேட்டில் பட்டதும் உருண்டு ஸ்டம்பில் போய் விழுந்து அவுட்டானார். தென் ஆப்பிரிக்கா 153/4, ருடால்ப் 0. புதிதாக உள்ளே வந்தவர் போத்தா டிப்பெனார்.

இதற்கு சற்று முன்னரேயே ஹால் தனது அரை சதத்தை எட்டியிருந்தார்.

தேநீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்கா 153/4 என்றே இருந்தது.

டிப்பெனார், கால்லிஸ் போன்றே மிகவும் பொறுமையாக ரன் எடுப்பவர். அவசரமே படமாட்டார். டிப்பெனார், ஹால் இருவருமே தேநீர் இடைவேளைக்குப் பிறகு தடுத்தாடுவதே நோக்கமாக விளையாடினர். கும்ப்ளேயும் அவ்வப்போது பந்துகளை லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே வீசினார். இதனால் தினேஷ் கார்த்திக்கின் நிலைமை மோசமானது. (9 பைகள்). முரளி கார்த்திக் (6), ஜாகீர் கானுடன் (5) போட்டி போட்டுக்கொண்டு நோபால் வீசிக்கொண்டிருந்தார். ஒரு ஸ்பின்னருக்கு இந்த அளவுக்கு பந்து வீசுவதில் கட்டுப்பாடு இல்லையென்றால் கஷ்டம்தான். கடைசி வேளையில் ஹால் எடுத்தது 21 ரன்கள்தான். டிப்பெனார் 46 ரன்கள் பெற்றார். ஆக மொத்தம் 274 பந்துகளில் ஹால் 78 ரன்கள் எடுத்துள்ளார். இன்றும் டார்ச்சர் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன்.

தென் ஆப்பிரிக்காவில் நன்றாக அடித்து ஆடக்கூடியவர்கள் அணித்தலைவர் ஸ்மித், ருடால்ப், அதற்கடுத்து ஷான் பொலாக் தான். இந்தியா தைரியமாக நல்ல ஆடுகளம் (அதாவது நன்றாக வேகப்பந்து வீசலாம், இரண்டு நாள்களில் நல்ல ஸ்பின்னும் எடுக்கும்), இரண்டு ஸ்பின்னர்கள், இரண்டு நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் என்று போயிருந்தால் அருமையாக விளையாடி இந்த ஆட்டத்தை வென்றிருக்கலாம்.

எவ்வளவுதான் போரடித்தாலும் மற்ற நான்கு நாள் ஆட்டங்களையும் விவரித்து எழுதுவேன்.

2 comments:

 1. / எவ்வளவுதான் போரடித்தாலும் மற்ற நான்கு நாள் ஆட்டங்களையும் விவரித்து எழுதுவேன்/

  அவசியம் எழுதுங்கள். ஆட்டத்தைவிட நீங்கள் எழுதுவது விறுவிறுப்பாக இருக்கிறது.

  By: ராஜா

  ReplyDelete
 2. மிக தண்டமான ஆட்டம் இரண்டாவது நாளும் தொடர்ந்தது. இதைப் போன்ற வெட்டியான ஆட்டத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. இவர்களை நம்பி ரெண்டு நாள் விடுமுறையும் வேஸ்டாய்ப் போனது. :-((

  By: Meenaks

  ReplyDelete