மந்திர வித்தைகள் என ஓர் அரங்கத்தில் நிகழ்த்திக்காட்டுவதில் முக்கால்வாசி விஷயங்கள் ஏதேனும் வழியில் அறிவியலால் விளக்கிக் கூறக்கூடியதுதான். உதாரணமாக நேற்று யானை ஒன்றை ஸ்டேஜில் மறைய வைத்தார் ஆனந்த். ஆனால் வெளியே இருந்த சிலர் யானை ஒன்று அரங்கின் பின்னாலிருந்து வெளியே வந்தது என்றனர். அதே யானையைத்தான் தினமும், ஒவ்வொரு காட்சியிலும் பயன்படுத்துகின்றனர். ஆகவே ஸ்டேஜில் நடந்தது 'காட்சிப்பிழை'யாக மட்டும்தான் இருக்க முடியும். ஆனால் இன்னமும் சில காட்சிகளில் தன் குழுவினரிலிருந்து யாராவது ஒருவரை ஆழ்நிலைத் தூக்கத்துக்குக் கொண்டுபோய் படுக்கவைத்து நாலடி மேலே அந்த உருவத்தைக் கொண்டுபோவது (levitation), பின் திடீரென அந்த உருவத்தைக் காணாமல் போக்குவது; அரங்கில் பார்க்க வந்திருக்கும் ஒரு பெண்ணையும் ஆழ்நிலைத் தூக்கத்திற்குக் கொண்டுபோய் கத்தியின் மேல் படுக்க வைத்து, அதன் பின் கீழிருந்து அந்தக் கத்திகளையும் உருவி அந்தப் பெண்ணை அந்தரத்தில் நாலடி உயரத்தில் வெறும் காற்றில் படுக்க வைப்பது ஆகியவை ஆச்சரியம் தரத்தக்கதாகவே இருக்கின்றன.
கடைசியாக மந்திரவாதி ஆனந்தே முழு உணர்வுடன் இருந்துகொண்டே நின்ற நிலையிலே கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட ஐந்தடிக்கும் மேலாக மிதந்து போனார். மேலாக ஏதேனும் கயிறுகள் இருந்த மாதிரியே தெரியவில்லை. ஒருவேளை இருந்திருக்கலாம்.
இந்த லெவிடேஷன் விஷயத்தைச் சின்னவனாக இருந்தபோது நாகப்பட்டிணம் தெருவில் பார்த்திருக்கிறேன். சிறுவன் ஒருவனை ஆழ்நிலைத் தூக்கத்தில் ஆழ்த்தி அவனைப் படுக்கவைத்து அவன்மீது அழுக்குத் துணியைப் போர்த்தி அப்படியே அந்தத் துணி போர்த்திய உருவத்தை படுத்த நிலையிலேயே மேல்நோக்கி எழும்ப வைப்பது. இன்றும் கூட ஆச்சரியத்தை வரவழைக்கும் விஷயம் இது.
அதுதவிர எந்த மந்திரவித்தைக் காட்சியிலும் இருக்கும் சின்னச்சின்ன விஷயங்கள் இருந்தன. காலியான, பூட்டப்பட்ட கூண்டுக்குள் திடீரெனத் தோன்றும் முயல், புறாக்கள், வெறும் காற்றிலிருந்து தோன்றும் 'செயற்கைப்' பூங்கொத்துகள். இதே பூங்கொத்துகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதால் அழுக்காகிப் போயுள்ளன. இந்தப் பூங்கொத்துகளையே கையில் வைத்துக்கொண்டு மற்றொரு காட்சியில் சில பெண்கள் நடனமாடுகின்றனர். ஆனால் அதே சமயம் வியக்கத்தக்க சில காட்சிகளும் உண்டு. பெட்டியில் பார்வையாளர் ஒருவர் உள்ளே போய்ப் பார்க்கிறார். அந்தப் பெட்டியிலிருந்து வெளியே வர மேல்புறம் உள்ள ஒரு வழிதான் என்று முடிவு செய்கிறார். பின் அந்தப் பெட்டியில் கையில் விலங்கு பூட்டப்பட்ட ஓர் ஆண் தள்ளப்படுகிறார். பெட்டி இறுக்கப் பூட்டப்படுகிறது. சாவிகள் இரண்டும் பார்வையாளர் கையில். சிறிது நேரத்தில் பெட்டியைத் திறந்து பார்த்தால் உள்ளே இருப்பது கையில் விலங்கில்லாத ஒரு பெண்! அரங்கின் வெளி வாசல் வழியே கையில் விலங்குடன் இருக்கும் அந்த ஆண் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறார். (Houdini act by Harry Houdini)
அதேபோல ராபர்ட் ஹார்பின் (Robert Harbin) உருவாக்கிய Zigzag girl என்னும் காட்சிப்பிழை வித்தையில் தன் சொந்த சரக்கையும் சேர்த்து செய்து காட்டினார். அதுவும் பார்த்து வியக்கத்தக்க வண்ணம் இருந்தது.
சின்னஞ்சிறு பையனைக் (அரங்கில் என் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தவன், அவன் பெற்றோர்கள் பக்கத்தில் இருந்தனர்) கூட்டிக்கொண்டு வந்து நிற்கவைத்து அவனுக்கு ஒரு தம்ளர் பாலைக் கொடுத்து அதில் பாதியை அவன் குடித்ததும், அவனது கால்சட்டையின் ஜிப்பைக் கழற்றி, அங்கு ஒரு funnellஐ வைத்து 'அந்தப் பாலை' ஒரு வாளியில் பிடித்து அரங்கிலேயே பெருஞ்சிரிப்பை ஏற்படுத்தினார்.
பகுத்தறிவுடன் பார்த்தால், மொத்தம் மூன்று விஷயங்கள் நடக்கின்றன.
- சட்டென்று நடந்து முடிந்துவிடும் பல 'எளிமையான' வித்தைகள். இதில் மந்திரம் எதுவுமில்லை. எவ்வளவு வேகமாக அழகாகச் செய்கிறார் என்பதில்தான் இந்தத் திறமை அடங்கியுள்ளது. இதுபோன்ற பலவற்றை அவ்வப்போது செய்வதன்மூலம் பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறார். இணையத்தில் இருக்கும் சில பக்கங்களைப் படித்தே நீங்களும், நானும் கூட இதில் பலவற்றை எளிதாகச் செய்யமுடியும்.
- சில காட்சிப்பிழை (illusion) சார்ந்த வித்தைகள். இதில் மிகக் கவனத்துடன் ஈடுபட வேண்டும். இதை இணையப் பக்கங்களையோ, புத்தகங்களையோ படித்து தானாகச் செய்வது முடியாத காரியம். ஒரு மாஸ்டர் மந்திரவாதியிடம் சிஷ்யனாகச் சேர்ந்து கற்றுக்கொள்வதன் மூலம்தான் முடியும் என்று தோன்றுகிறது.
- ஆழ்நிலைத் தூக்கத்திற்கு ஒருவரைக் கொண்டுபோவதன்மூலம் லெவிடேஷன் (காற்றில் உடம்பை உயரப் பறக்க வைப்பது) செய்வது. இது வெறும் காட்சிப்பிழை என்று சில சாதனங்களின் உத்தியுடன் செய்யக்கூடிய செயலல்ல என்று தோன்றுகிறது.
மொத்தத்தில் இரண்டரை மணிநேரம் மிகவும் சந்தோஷமாகக் கழிந்தது. நீங்கள் சென்ன்னையில் இருந்தால், குழந்தைகளுடன் சென்று பாருங்கள்.
No comments:
Post a Comment