Monday, November 22, 2004

கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம், மூன்றாம் நாள்கள்

இரண்டாம் நாள்: தென் ஆப்பிரிக்கா 459/7 (182 ஓவர்கள்) - போலாக் 31*, சோலிகிலே 5*
மூன்றாம் நாள்: தென் ஆப்பிரிக்கா 510/9 டிக்ளேர்ட், இந்தியா 185/0 (42 ஓவர்கள்) - சேவாக் 85*, கம்பீர் 85*

இரண்டாம் நாள் ஆட்டம், முதல் நாளைப் போலவே ஆமை வேகத்தில் ஊர்ந்தது. முதல் நாளில் 92 ஓவர்களில் 230 ரன்கள். இரண்டாம் நாள் 90 ஓவர்களில் 229 ரன்கள். முதல் நாள் இந்தியா நான்கு விக்கெட்டுகளைப் பெற்றது, இரண்டாம் நாள் மூன்றுதான்.

முதலில் ஆண்டிரூ ஹாலை எடுத்துக்கொள்வோம். ஏற்கனவே சில டெஸ்ட்களில் விளையாடியிருந்தாலும், இந்த டெஸ்டில் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக விளையாட வந்தார். முதல் நாள் 78* ரன்களில் இருந்து இரண்டாம் நாள் காலையில் சதமடித்தார். ஆனால் அதற்கு முன்னதாக டிப்பெனார் கங்குலி வீசிய பந்தில் விளிம்பில் தட்டி தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டிப்பெனார் 48, தென் ஆப்பிரிக்கா 241/5. அதையடுத்து தன் முதல் டெஸ்டில் விளையாடும் ஜாண்டர் டி ப்ருயின் ஹாலுடன் ஜோடி சேர்ந்து மெதுவாக ரன்கள் சேர்த்தார். உணவு இடைவேளைக்கு சற்று முன் 300ஐக் கடந்தது தென் ஆப்பிரிக்கா. மேற்கொண்டு விக்கெட் ஏதும் விழவில்லை.

உணவு இடைவேளைக்குப் பின்னர் ஹால் 150ஐத் தாண்டினார். பின் கும்ப்ளே வீசிய லெக் பிரேக்கில் (அதிசயமாக... வெறும் கூக்ளிக்களும், டாப் ஸ்பின்னர்களும் மட்டுமே வீசிக்கொண்டிருந்தார்) கால் திசையில் ஆடப்போய், பந்தை விட்டுவிட, பவுல்ட் ஆனார். கும்ப்ளேயின் ஐந்தாவது விக்கெட். ஹால் 163. இவரது முதல் சதம். இதற்கு முன் இவர் எடுத்திருந்த சர்வாதிக எண்ணிக்கை 99*. தென் ஆப்பிரிக்கா 385/6. ஹால் அடித்த சதம் தென் ஆப்பிரிக்காவிற்கெனப் பெற்ற மிக மெதுவான சதங்களில் இரண்டாவது என்ற ரெகார்ட்!

சரி, இனியாவது வாலாட்டாமல் நம் பந்துவீச்சாளர்கள் ஒட்ட நறுக்கி விடுவார்கள் என்று எதிர்பார்த்தால் அதுவும் நடைபெறவில்லை. ஷான் போலாக், டி ப்ருயின் இருவரும் சேர்ந்து சற்று விரைவாகவே ரன்களைப் பெற்றனர். டி ப்ருயின் ஹர்பஜன் பந்துவீச்சில் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்தார். ஏற்கனவே ஹர்பஜன் பந்தில் இவர் மற்றுமொரு சிக்ஸ் அடித்திருந்தார். தென் ஆப்பிரிக்கா 400ஐத் தாண்டியது. 450ஐ நெருங்கும் வேளையில், டி ப்ருயின் ஹர்பஜன் பந்துவீச்சில் நன்கு தூக்கி வீசப்பட்ட பந்தை ஆஃப் திசையில் டிரைவ் செய்யப்போய், விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பில் இருந்த திராவிடிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். டி ப்ருயின் 83. தன் முதல் இன்னிங்ஸில் சதமடிக்கத் தவறிவிட்டார். தென் ஆப்பிரிக்கா 445/7. புதிதாக உள்ளே வந்தவரும் தன் முதல் டெஸ்டில் விளையாடும் விக்கெட் கீப்பர் தாமி சோலிகிலே. இதன் பின் விக்கெட் ஏதும் விழாமல் ஆட்டம் முடியும்போது 459/7 என்ற நிலையில் இருந்தது.

மூன்றாவது நாள் காலை பனிமூட்டத்தால் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர்தான் ஆட்டமே ஆரம்பித்தது! வெகு சீக்கிரத்திலேயே சோலிகிலே கும்ப்ளேயின் நேரான, வேகமான பந்தில் பின்காலில் சென்று தடுத்தாட முற்பட்டு, ஏமாந்து எல்.பி.டபிள்யூ ஆனார். சோலிகிலே 9, தென் ஆப்பிரிக்கா 467/8. ஆனால் தொடர்ந்து உள்ளே வந்த இடதுகை ஆட்டக்காரர் ராபின் பீட்டர்சன், போலாக்குடன் ஜோடி சேர்ந்து பந்தை விளாச ஆரம்பித்தார். 24 பந்துகளில் 3x4, 1x6 என்ற கணக்கில் கிடுகிடுவென 34 ரன்களைப் பெற்றார் பீட்டர்சன். அணியின் எண்ணிக்கை 500ஐத் தாண்டியது. பின் ஹர்பஜன் லெக் ஸ்டம்பில் வீசிய பந்தைச் சுழற்றி அடிக்க முனைந்து பவுல்ட் ஆனார். போலாக் 44*இல் ஆட்டமிழக்காமல் இருந்தார். எண்டினி விளையாட வரவில்லை. ஸ்மித் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். தென் ஆப்பிரிக்கா 510/9 டிக்ளேர்ட்.

-*-

விரேந்தர் சேவாகும், கவுதம் கம்பீரும் இந்தியாவின் ஆட்டத்தைத் தொடங்கினர். தென் ஆப்பிரிக்காவின் ஆட்டம் போலில்லாமல் இந்தியாவின் ஆட்டம் படு ஜோராகச் சென்றது. சேவாக் மட்டைய சுழற்றி சுழற்றி அடித்தார். அவுட்டாவதைப் பற்றிய துளிக்கவலையும் இன்றி விளையாடினார். பந்துகள் தர்ட்மேன் திசையில் பறந்தன. கம்பீரும் சேவாகிற்கு இணையாக ரன்களைப் பெற்றார்.

போலாக் இரண்டு மட்டையாளர்களையும் சிறிது சிரமப்படுத்தினார். பத்து ஓவர்களில் இந்தியா 25/0 என்றுதான் இருந்தது. ஆனால் அதற்கடுத்து ரன்கள் சரசரவென வர ஆரம்பித்தன. தேநீர் இடைவேளையின் போது 22 ஓவர்களில் இந்தியா 80 ரன்கள் பெற்றிருந்தது. கம்பீர் 39*, சேவாக் 34*. தேநீர் இடைவேளைக்குப் பிறகும் ரன் எடுக்கும் கதி அதிகமாகிக் கொண்டுதான் இருந்தது. இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பீட்டர்சன் வீசும் பந்துகளை சேவாக் அடிக்க கஷ்டப்பட்டார். இந்தப் பந்துகள் முரளி கார்த்திக் வீசுவது போல வலதுகை ஆட்டக்காரரில் லெக் ஸ்டம்பிற்கு வெளியே குத்தி உள்ளே வந்துகொண்டிருந்தது. இதனால் கால் காப்பையே கேடயமாக வைக்க வேண்டியிருந்தது. ஆனால் இடதுகை மட்டையாளர் கம்பீருக்கு இந்த மாதிரிப் பந்துகளை எதிர்கொள்வதில் சிரமமேயில்லை. இறங்கி வந்து லாங்-ஆன் திசையில் கம்பீர் பீட்டர்சனை சிக்ஸ் அடித்தார். அதன்மூலம் தன் டெஸ்ட் வாழ்க்கையில் முதல் அரை சதத்தையும் பெற்றார். அத்துடன் அணியின் நூறையும் பெற்றுத்தந்தார்.

அடுத்த பீட்டர்சன் ஓவரில் சேவாக் ஸ்டம்பிற்கு முன் வந்த பந்தை கவரில் ஒரு நான்கடித்தார். பின் கம்பீரும் அதெ ஓவரில் மிட்விக்கெட் திசையில் நான்கடித்தார். ஓவரின் கடைசிப்பந்தில் சேவாக் கால் திசைக்கு வெளியே விழுந்த பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து நான்கைப் பெற்று தன் அரை சதத்தையும் தாண்டினார்.

வேகப்பந்து வீச்சாளர்கள் போலாக், எண்டினி, ஹால் ஆகியோர் தொடர்ச்சியாக உதைபட்டனர். 33வது ஓவரில் 150 வந்தது. கம்பீர், சேவாக் இருவரும் அடுத்த சில நிமிடங்களில், சேர்ந்தே 75ஐத் தொட்டனர். இருவரும் 85* இல் இருக்கும் போது, - 4.40 மணியளவில் - மீண்டும் பனிமூட்டம் சூழ, வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் தடைசெய்யப்பட்டது. இந்தியா 42ஏ ஓவர்களில் 185/0 என்ற எண்ணிக்கையைப் பெற்றிருந்தது.

காசு கொடுத்து ஆட்டம் பார்க்க வந்திருந்த சிலர் இன்று சற்றே சந்தோஷத்துடன் வீட்டுக்குப் போயிருப்பார்கள்.

4 comments:

 1. ¦Ã¡õÀ ¿¡û ¸Æ¢îÍ þýÉ¢ìÌ ¿øÄ ¬ð¼õ À¡÷ò§¾ý. þó¾ ¦¸ª¾õ ¸õÀ£¨Ã ¿õÀÄ¡õ §À¡Ä¢Õ츢ȧ¾? ¦Àªñ¼Ã¢ ±øÄ¡õ ±ýÉ «º¡ø𼡸 «Ê츢ȡ÷? («Ð Àò¾¡§¾¡?) §Àº¡Áø §º¡ôá¨Å ¸ÆðÊ ¯ðÎðÎ, þŨç À÷ÁÉñ¼¡ ¦Å¸¢ð¼¡ø ±ýÉ? -prakash

  By: prakash

  ReplyDelete
 2. சேவாக் - கம்பீர் நல்ல துவக்க ஜோடியாக தெரிகிறது. இடது கை, வலது கை ஆட்டக்காரர்கள் வேறு. கம்பீர் பாசிடிவாக ஆடுகிறார். இந்த ஜோடியாவது நிலைக்கும் என்று நம்புவோமாக.

  பிட்ச், பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருக்கிறது. இதிலாவது நம் டெண்டுல்கர் உள்ளிட்ட நட்சத்திர ஆட்டக்காரர்கள் சோபிக்கிறார்களா என்று பார்க்கலாம்.

  By: ராஜா

  ReplyDelete
 3. எனக்கு கம்பீர் மீது இன்னமும் நம்பிக்கை வரவில்லை. உள்ளூர் ஆட்டங்களில் அதிரடியாக ரன்கள் பெறுபவர். "A" ஆட்டங்களில் பாகிஸ்தான் A, கென்யா போன்றவற்றுக்கு எதிராக ரன்கள் பெற்றுள்ளார். இப்பொழுதைய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, இதுபோன்ற செத்த பாம்பு ஆடுகளத்தில் என்னவேண்டுமானாலும் செய்யலாம்.

  ஒருமுறையேனும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து போய், அங்குள்ள ஆடுகளங்களில் பந்து எழும்பி வரும்போதோ, அல்லது அங்கும் இங்கும் நகரும்போதோ, அதைச் சமாளித்தால்தான் உண்டு.

  இந்தியாவிற்காக கிரிக்கெட் விளையாடியதிலேயே மிக மோசமான டெக்னிக்குடன், மிக அதிகமாக சாதித்துள்ளது என்றால் அது சேவாக்தான். பலமுறை அவர் அடிக்கும் தடுப்பாட்ட ஷாட்கள் எல்லாம், கோல்ஃப் விளையாடுவதை நினைவூட்டும். மட்டை உடம்பை விட்டுத் தள்ளியிருக்கும். கோல்ஃப் புட்டிங் போல மட்டையால் பந்தை பந்துவீச்சாளர் இருக்கும் திசை நோக்கி தடுத்தாடுவார்! சில சமயம் அப்படியே நான்கும் அடித்து விடுவார்!

  சேவாக் தொடக்க ஆட்டக்காரராக விளையாடத் தொடங்கிய பின் அவர் விளையாடும் எட்டாவது டெஸ்ட் போட்டித் தொடர் இது. இதற்கு முந்தைய ஏழு தொடர்களில், ஆறில் ஒரு சதமாவது அடித்து விட்டார். அவர் சதமடிக்க விட்ட தொடர் நியூசிலாந்தில் பச்சைப்புல் கம்பளத்தில் (drop-in pitches) நடந்த இரண்டு டெஸ்ட்கள். இப்பொழுது 85*இல் இருக்கிறார். இன்று சதம் நிச்சயம் வந்துவிடும்! திராவிட், டெண்டுல்கர் ஆகியோர் கூட கடந்த ஏழு போட்டித்தொடர்களில் இப்படியான consistent formஇல் இருந்ததில்லை.

  கம்பீரும் இப்படி விளையாடுவாரா என்று பார்க்க வேண்டும். மற்றபடி சேவாகை விட கம்பீரிடம் உள்ள டெக்னிக் தேவலாம் என்றாலும் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வரும் பந்துகளைச் சந்திப்பதில் தடுமாறுகிறார். லெக் ஸ்டம்பிற்கு வெளியே ஆனால் காலை உரசிக்கொண்டு போகும் பந்துகளை, கண்களை மூடிக்கொண்டு அடிக்கிறார் - கவனம் தேவை. நேற்று சோலிகிலே கையில் கால் திசையில் ஒரு கேட்ச் போயிருக்கும்.

  கம்பீரை இன்னமும் சில ஆட்டங்களில் தொடக்க ஆட்டக்காரராகப் பயன்படுத்திப் பார்த்தபின்னர்தான் முடிவு செய்யவேண்டும்.

  ReplyDelete
 4. Badri,
  check this cartoon i did in my blog.
  http://srikanthd.blogspot.com/

  SA=Sema Aruvai
  :)

  ReplyDelete