Friday, November 05, 2004

மும்பை டெஸ்ட் - மூன்றாம் (இறுதி) நாள்

இந்தியா 104 & 205, ஆஸ்திரேலியா 203 & 93. இந்தியா 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று நான் எதிர்பார்த்த சில விஷயங்கள் இன்று நடைபெறவில்லை. டெண்டுல்கரும், லக்ஷ்மணும் தேற மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். இன்று அவர்கள் காலையில் விளையாடிய பிரமாதமான ஆட்டத்தால்தான் இந்தியா வெற்றி பெற முடிந்தது. உண்மையில் ஆட்ட நாயகர்கள் அவர்கள் இருவரும்தான். திராவிடும், காயிஃபும் தான் இந்தியாவைக் காப்பாற்றுவார்கள் என்று நினைத்திருந்தேன். மோசம் செய்யவில்லை, ஆனாலும் டெண்டுல்கர், லக்ஷ்மண் அளவுக்கு இவ்விருவரும் விளையாடவில்லை. 150 ரன்கள் கையில் இருந்தால்தான் இந்தியாவால் ஜெயிக்க முடியும் என்று நினைத்திருந்தேன், ஆனால் 106ஐக் கையில் வைத்துக்கொண்டே இந்தியா ஜெயித்து விட்டது.

இன்று காலை முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே மெக்ராத், கவுதம் கம்பீரை இரண்டாவது ஸ்லிப்பில் கிளார்க் மூலமாக கேட்ச் பிடிக்க வைத்து அவுட்டாக்கினார். கம்பீர் 1, இந்தியா 5/1. திராவிட் தான் உள்ளே வராமல் லக்ஷ்மணை அனுப்பினார். சரியான காரணம் புரியவில்லை. ஆடுகளம் மோசமாக இருப்பதால், தடுத்தாடினால் தேறாது, அடித்து ரன்களைப் பெற்றால்தான் பிழைக்க முடியும் என்று நினைத்திருப்பாரோ, என்னவோ. ஆனால் லக்ஷ்மண் மிகவும் மோசமான ஃபார்மில் இருக்கிறார் என்பதும் தெரிந்ததுதான். கடந்த 6 இன்னிங்ஸில் லக்ஷ்மண் 54 ரன்களைத்தான் மொத்தமாகச் சேர்த்துப் பெற்றிருந்தார். வந்தவுடனேயே லக்ஷ்மண் கில்லெஸ்பியின் பந்தில் ஸ்லிப் வழியாக எட்ஜ் செய்து ஒரு நான்கைப் பெற்றார், பின் அதே ஓவரில் நல்ல ஆன் டிரைவ் மூலம் ஒரு நான்கைப் பெற்றார். ஆனால் அடுத்த ஓவரிலேயே சேவாக் மெக்ராத்தின் பந்தில் கால்களை சிறிதும் நகர்த்தாமல் மட்டையைத் தூக்கி பந்தை விட முயல, பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே குத்தி உள்ளே நுழைந்து கால் காப்பில் பட்டது. லெக் ஸ்டம்பிற்கு வெளியே போயிருக்கலாம். ஆனால் இம்மாதிரியான சமயங்களில் நடுவர்கள் மட்டையாளருக்குப் பாதகமான தீர்வையே தருகிறார்கள். சேவாக் எல்.பி.டபிள்யூ 5, இந்தியா 14/2. இப்பொழுது மற்றுமொரு ஃபார்மில் இல்லாத மட்டையாளர் டெண்டுல்கர் உள்ளே வருகிறார்.

இதுதான் ஆட்டத்தின் முக்கியமான கட்டமாயிற்று. இரண்டு மட்டையாளர்கள். லக்ஷ்மண் படு மோசமாக விளையாடி வருகிறார். டெண்டுல்கரோ இரண்டு மாதங்களுக்கு மேல் கிரிக்கெட்டில் இல்லாமல் வந்த முதல் மூன்று இன்னிங்ஸில் பந்தை சரியாக அடிக்க வராமல் தடுமாறுகிறவர். எதிரணியோ, உலகின் தலை சிறந்த அணி. ஆடுகளமோ, அமெரிக்கா குண்டு போட்ட ஈராக் மாதிரி உள்ளது. பந்து எங்கு விழுந்தாலும் கண்ணி வெடி வெடிப்பது போல மண் பிய்த்துக் கொண்டு கிளம்புகிறது. ஆட்டம் ஆரம்பித்து முதல் மூன்று ஓவர்களில் இரண்டு விக்கெட் விழுந்தாகி விட்டது.

நிபுணர்களைப் பொய்யாக்கி, இதுபோன்ற மோசமான சூழ்நிலையிலிருந்து முற்றிலுமாக விடுபடுவோர்தான் சாம்பியன்கள். டெண்டுல்கரும், லக்ஷ்மணும் சாம்பியன்களாக விளையாடினர். அடுத்த நான்கு ஓவர்கள் இருவருமே மிகவும் சாவதானமாக விளையாடினர். அதன்பின் அடுத்தடுத்து இரண்டு ஓவர்களில், தம்மைக் கட்டியிருந்த தளைகளை உடைத்தனர். கில்லெஸ்பியின் ஓவர் ஒன்றில் டெண்டுல்கர் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளைப் பெற்றார். முதலாவது கால் திசையில் வந்த பந்தை லெக் கிளான்ஸ் செய்து ஃபைன் லெக்கிற்கு அடித்தது. அடுத்த பந்தில் தர்ட்மேன் திசையில் தட்டி நான்கைப் பெற்றார். ஆனால் இந்த இரண்டு நான்குகளை விட அகலம் அதிகமாக இருந்த பந்தை கவர் திசையில் வெட்டி ஆடி பெற்ற நான்குதான் டெண்டுல்கர் தன் இழந்த ஆட்டத்தை சிறிது சிறிதாக மீட்க முயல்கிறார் என்பதைக் காட்டியது. அந்த ஓவரில் டெண்டுல்கருக்கு 14 ரன்கள் கிடைத்தன. அதற்கடுத்த மெக்ராத் ஓவரில் லக்ஷ்மண் மூன்று நான்குகளைப் பெற்றார். முதலாவது விளிம்பில் பட்டு தர்ட்மேன் திசையில் சென்றது. அடுத்தது மிக அருமையாக கவர் திசையில் அடிக்கப்பட்டது. அதற்கடுத்தது தர்ட்மேன் திசையில், இம்முறை முழு நிதானத்துடனேயே அடிக்கப்பட்டது. இப்படியாக இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் வந்ததுமே இரண்டு மட்டையாளர்களும் ஒருவித தெளிவுடன், நம்மாலும் நன்றாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையுடன் விளையாடத் தொடங்கினர்.

லக்ஷ்மணை விட டெண்டுல்கரே அதிக நிதானத்துடனும் திறமையுடனும் விளையாடினார். லக்ஷ்மண் அவ்வப்போது சில தவறுகள் செய்தார். டெண்டுல்கரிடம் அது இல்லை. காஸ்பரோவிச் பந்துவீச வந்தார். ஆனால் ரன்கள் வருவதைத் தடுக்க முடியவில்லை, விக்கெட்டுகளும் விழவில்லை. மூன்றாம் விக்கெட் ஜோடிக்கு 50 ரன்கள் வந்தது. பாண்டிங், இப்பொழுது ஷேன் வார்ன் இல்லாததை உணர்ந்தார். நேதன் ஹவ்ரிட்ஸைப் பந்து வீச அழைத்தார். ஆனால் முதல் இன்னிங்ஸ் போலல்லாது இப்பொழுது ஹவ்ரிட்ஸை எதிர்கொண்டது இரண்டு நம்பிக்கையுடன் விளையாடும் மட்டையாளர்கள். லக்ஷ்மண் ஹவ்ரிட்ஸை புல் செய்து நான்கைப் பெற்றார். ஆனால் டெண்டுல்கர் ஹவ்ரிட்ஸைப் பயமுறுத்தும் விதமாக ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 4, 6, 4 என்று அடித்தார். முதலாவது ஷாட் இறங்கி வந்து கவர் திசையில் அடித்தது. அடுத்து, மீண்டும் இறங்கி வந்து லாங் ஆன் மேல் சிக்ஸ். அதற்கடுத்த பந்து டீப் மிட் ஆனில் எல்லைக்கோட்டுக்கு சற்று முன் விழுந்து நான்கானது. அடுத்த ஓவரில் காஸ்பரோவிச் பந்தை பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசையில் அடித்து இரண்டு ரன்களைப் பெற்றதன் மூலம் தன் அரை சதத்தை எட்டினார் டெண்டுல்கர். 62 பந்துகளில், 6x4, 1x6 என்ற கணக்கில் அடித்தது. அதற்குப் பிறகு ரன்கள் வருவது சற்று தடைப்பட்டது. மெதுவாகவே இந்தியா 100ஐத் தாண்டியது.

உணவு இடைவேளை நெருங்கும்போது டெண்டுல்கர் ஹவ்ரிட்ஸ் வீசிய பந்தை ஸ்வீப் செய்யப்போய் அதை மேல்நோக்கி அடிக்க, கிளார்க் ஓடிச்சென்று ஸ்கொயர் லெக்கில் அற்புதமான கேட்சைப் பிடித்தார். டெண்டுல்கர் 55, இந்தியா 105/3. மூன்றாவது விக்கெட் சேர்த்தது 91 ரன்கள். லக்ஷ்மணும், திராவிடும் தொடர்ந்தனர். உணவு இடைவேளைக்கு முன்னரே லக்ஷ்மண் தன் அரை சதத்தைப் பெற்றார். இடைவேளையின்போது இந்தியா 114/3, லக்ஷ்மண் 50*, திராவிட் 3*. 15 ரன்கள் முன்னணியில்.

உணவு இடைவேளைக்குப் பின்னரும், ஹவ்ரிட்ஸ் பந்துகளில் ரன்கள் சுலபமாகவே வந்தன. அடுத்தடுத்து இரண்டு நான்குகளை அடித்த திராவிட், டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்களைக் கடந்தார். ஹவ்ரிட்ஸ் ஓவரில் லக்ஷ்மண் அடுத்தடுத்து இரண்டு நான்குகளைப் பெற்றதும், மூன்றாவது பந்திலும் அதையே முயற்சி செய்யப்போய், பந்துவீச்சாளர் கையிலேயே ஒரு கேட்சைக் கொடுத்தார். அதையும் ஹவ்ரிட்ஸ் மிக அருமையாகப் பாய்ந்து பிடித்தார். லக்ஷ்மண் 69, இந்தியா 153/4. அதன்பின்னர் திராவிட், காயிஃப் இருவருமே நிதானமாகவே விளையாடி ரன்களைப் பெற்றனர். தேநீர் இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. வேறு வழியின்றி பாண்டிங் மைக்கேல் கிளார்க்கைப் பந்துவீச அழைத்தார். கிளார்க் இடதுகை சுழற்பந்து வீச்சாளர். (முரளி கார்த்திக் போல). ஆனால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் பந்துவீசுபவர். இந்த ஆடுகளத்தில் அவரைக் கொண்டுவருவதன் மூலமாவது விக்கெட்டுகளைப் பெற முடியுமா என்று பார்த்தார் பாண்டிங். அவரே கூட இனி நடக்கப்போவதைப் பற்றி கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

கிளார்க் தன் இரண்டாவது ஓவரில் திராவிடின் கையுறையில் ஒரு பந்தை உரசி, கில்கிறிஸ்ட் அதைக் கேட்ச் பிடிக்க, தன் டெஸ்ட் வாழ்க்கையின் முதல் விக்கெட்டைப் பெற்றார். திராவிட் 27, இந்தியா 182/5. தன் மூன்றாவது ஓவரில் தினேஷ் கார்த்திக் கிளார்க் பந்தை கால் திசையில் திருப்பப் போக, பந்து வெளி விளிம்பில் பட்டு சில்லி பாயிண்ட் திசை நோக்கிச் சென்றது. பாண்டிங் அனிச்சையாகக் கைகளை நகர்த்தி, பிரமாதமான கேட்ச் ஒன்றைப் பிடித்தார். தினேஷ் கார்த்திக் 4, இந்தியா 188/6. கிளார்க்கின் ஐந்தாவது ஓவர் தேநீர் இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவராக இருக்க வேண்டும். அந்த ஓவரில் கும்ப்ளே முதல் பந்தை தர்ட்மேன் திசையில் அடித்தார். இரண்டு ரன்களைப் பெற்றிருக்கலாம். ஆனால் காயிஃப் தான் மீதமுள்ள ஐந்து பந்துகளை சந்திப்பதே அணிக்குப் பாதுகாப்பு என்பதால் ஒரு ரன்னுடன் நிறுத்திக் கொண்டார். ஆனால் மூன்றாவது பந்து நேராக வீசப்பட்ட பந்து. இந்தப் பந்து ஸ்பின்னாகும் என்று நினைத்த காயிஃப் மட்டையை விலக்கி, கால்காப்பினால் ஸ்டம்ப்களுக்கு நேராகத் தடுத்தார்! எல்.பி.டபிள்யூ! காயிஃப் 25, இந்தியா 195/7. தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டது.

மீண்டும் வந்தவுடன் இரண்டாவது பந்தில், அதாவது கிளார்க்கின் ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் முதல் ஸ்லிப்பில் ஹெய்டனால் கேட்ச் பிடிக்கப்பட்டு புதிதாக உள்ளே வந்த ஹர்பஜன், வந்த வேகத்திலேயே மீண்டும் வெளியே போனார். ஹர்பஜன் 0, இந்தியா 195/8. கிளார்க் ஐந்து ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள், ஏழு ரன்களைக் கொடுத்து. தனது ஆறாவது ஓவரில் இடது கை ஆட்டக்காரர் முரளி கார்த்திக்கை பவுல்ட் ஆக்கி கிளார்க் தன் ஐந்தாவது விக்கெட்டைப் பெற்றார். இந்தப் பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து, லெக் ஸ்டம்பை நோக்கிச் சென்றது. முரளி கார்த்திக் 2. இந்தியா 199/9. தன் ஏழாவது ஓவரில் கிளார்க் ஆர்ம் பால் ஒன்றை வீச (பந்து ஸ்பின் ஆகாமல் தன் திசையை அப்படியே தொடர்வது), கால்காப்பில் பட, ஜாகீர் கான் எல்.பி.டபிள்யூ ஆனார். கான் 0, இந்தியா 205 ஆல் அவுட். கிளார்க் பந்துவீச்சு 6.2 ஓவர்கள், 9 ரன்கள், 6 விக்கெட்டுகள்!

விக்கெட் இப்பொழுது மிகவும் மோசமாகவே ஸ்பின் ஆனது. பந்தை சற்றே காற்றில் மிதக்க விட்டு எறிந்தால் பந்து விழுந்ததும் எதிர்பாராத அளவுக்கு சுழன்றது. ஆயினும் ஆஸ்திரேலியா தான் எடுக்க வேண்டிய 107 ரன்களைப் பெற்று வென்று விடும் என்றே எதிர்பார்த்தேன். ஆனால் நடந்தது பெரிய டிராமா.

ஜாகீர் கான் முதல் ஓவரில் இரண்டாவது பந்தில் லாங்கர் விளிம்பில் தட்டி தினேஷ் கார்த்திகிற்கு எளிதான கேட்ச் ஒன்றைக் கொடுத்தார். லாங்கர் 0, ஆஸ்திரேலியா 0/1. ஆனால் அடுத்து உள்ளே வந்த பாண்டிங் அடுத்தடுத்து அதே ஓவரிலேயே இரண்டு நான்குகளை அடித்தார். இரண்டாவது ஓவரை ஹர்பஜன் வீசினார். அந்த ஓவரில் ஹெய்டன் ஒரு நான்கைப் பெற, இரண்டாவது ஓவரின் கடைசியில் ஆஸ்திரேலியா 15/1 என்ற ஸ்கோரில் இருந்தது. மூன்றாவது ஓவரில் ஹெய்டனுக்கு கான் பந்தில் மற்றுமொரு நான்கு. ஓவர் முடியும்போது ஆஸ்திரேலியா 21/1. நான்காவது ஓவர் முடிவில் 24/1.

திராவிட் முரளி கார்த்திக்கைப் பந்துவீச அழைத்தார். தன் முதல் ஓவரின் முதல் பந்தில் கார்த்திக் மிடில் ஸ்டம்பிலிருந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே போகுமாறு பந்தைச் சுழற்றினார். பாண்டிங் மட்டையின் விளிம்பில் பட்டு கல்லியில் நின்ற லக்ஷ்மண் கையில் கேட்சானது. பாண்டிங் 12, ஆஸ்திரேலியா 24/2. அதே ஓவரின் கடைசிப் பந்தில் கார்த்திக் ஆர்ம் பால் ஒன்றை வீச, புதிதாக உள்ளே வந்த ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான, ஃபார்மில் உள்ள மார்ட்டின் எல்.பி.டபிள்யூ ஆனார். மார்ட்டின் 0, ஆஸ்திரேலியா 24/3. இந்த ஓர் ஓவர்தான் ஆட்டத்தின் திசையை மாற்றியது.

ஹெய்டனும், காடிச்சும் இணைந்து சிறிது ரன்களைப் பெற்றனர். காடிச் ஹர்பஜன் பந்தை இறங்கி வந்து அடிக்க முனைந்தவர், வெளி விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பின் மேலாகச் சென்றது. அங்கு நின்றிருந்த திராவிட் உயர எம்பி நல்ல கேட்ச் ஒன்றைப் பிடித்தார். காடிச் 4, ஆஸ்திரேலியா 33/4. ஹர்பஜன் இந்த டெஸ்டில் பெறும் முதல் விக்கெட். ஆனால் ஹெய்டன் உள்ளே இருக்கும்வரை மீதம் எடுக்க வேண்டிய மிகக்குறைந்த ரன்கள் போயே போய்விடும் என்ற பயத்திலேயே இருந்தனர் இந்திய அணி வீரர்கள். இந்நிலையில் ஹர்பஜன் வீசிய பந்தை ஸ்வீப் செய்யப்போன ஹெய்டனின் கையில் பந்து பட்டு, கால்காப்பில் பட்டு அவரை பவுல்ட் செய்தது. ஹர்பஜனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதற்கு இரு பந்துகளுக்கு முன்தான் ஹெய்டன் ஹர்பஜனைத் தூக்கி லாங் ஆஃப் மேல் அடித்து நான்கு ரன்களைப் பெற்றிருந்தார். ஹெய்டன் 24, ஆஸ்திரேலியா 48/5.

அடுத்த ஓவரில் கார்த்திக் மற்றுமொரு ஆர்ம் பால் வீச, அந்தப் பந்தை வெட்டி ஆடச் சென்ற கிளார்க் பவுல்ட் ஆனார். கிளார்க் 7, ஆஸ்திரேலியா 48/6. அவ்வளவுதானா? இந்தியா ஆட்டத்தை வென்று விட்டதா? கில்கிறிஸ்ட் அவுட்டாகாத வரை அப்படிச் சொல்ல முடியாதே?

ஆஸ்திரேலியாவின் எண்ணிக்கை 50ஐத் தொட்டது. ஆனால் கில்கிறிஸ்ட் ஹர்பஜனை அரங்கை விட்டு அடிக்க முயன்று டீப் ஸ்கொயர் லெக்கில் நின்ற டெண்டுல்கரைக் குறிபார்த்து அடித்தார். கில்கிறிஸ்ட் 3, ஆஸ்திரேலியா 58/7.

இனி ஆட்டம் நிச்சயம் இந்தியாவுக்குத்தான் என்று அனைவருமே முடிவு செய்தனர். கிரிக்கெட் என்ன அவ்வளவு எளிதா? கில்லெஸ்பியும், ஹவ்ரிட்ஸும் ஒன்று சேர்ந்து ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தனர். 60 வந்தது. 70ம் வந்தது! திராவிடுக்குப் பயமும் வந்தது. கும்ப்ளே பந்துவீச வந்தார். தன் இரண்டாவது ஓவரில் வீசிய கூக்ளியில் ஹவ்ரிட்ஸ் எல்.பி.டபிள்யூ ஆனதாக நடுவர் அலீம் தர் முடிவு செய்தார். இந்தப் பந்து ஒருவேளை லெக் ஸ்டம்பிற்கு வெளியே சென்றிருக்கலாமோ என்று தோன்றியது. ஹவ்ரிட்ஸ் 15, ஆஸ்திரேலியா 78/8. எட்டாவது விக்கெட்டுக்கு 20 ரன்களைப் பெற்றிருந்தனர். இனியாவது ஆட்டம் இந்தியாவுக்கா?

அடுத்து வந்தார் காஸ்பரோவிச். அங்கும், இங்குமாக ஓரிரு ரன்கள் வந்தவண்ணம் இருந்தன. ஆஸ்திரேலியா 80, பின் கார்த்திக் விட்ட இரண்டாவது பை நான்கு ரன்களோடு 87/8. இன்னமும் வேண்டியது 20 ரன்கள். ஏதாவது செய்து விக்கெட்டைப் பெற்றாக வேண்டும். கும்ப்ளே தன் முதல் விக்கெட்டுக்குப் பின் எதையும் எடுக்கவில்லை. கார்த்திக்கோ வெகு நேரமாக வீசுகிறார். இந்நிலையில் இன்றைய ஓவர்களும் முடிவடைந்தன. இருட்டவும் தொடங்கியிருந்தது. ஆனால் ஆட்டம் முடிவடைய இன்னும் இரண்டு விக்கெட்டுகளே பாக்கி என்னும் நிலையில் திராவிட் ஆட்டத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடுவர்களிடம் கேட்டுக் கொண்டார். கேட்டதுடன், ஹர்பஜனை கார்த்திக்குக்கு பதில் வீசவும் அழைத்தார். ஆஸ்திரேலியா 93இல் இருந்தது. தேவை 14 ரன்கள். ஹர்பஜன் தன் புது ஸ்பெல்லில் இரண்டாவது ஓவரில் வீசிய பந்து ஆஃப் ஸ்டம்பில் விழுந்து காஸ்பரோவிச் எதிர்பாராத வகையில் எழும்பி, லெக் ஸ்டம்பை நோக்கித் திரும்பியது. போகும் வழியில் கைக்காப்பில் பட்டு லெக் ஸ்லிப்பில் நின்ற திராவிடிடம் சென்றது. காஸ்பரோவிச் 7, ஆஸ்திரேலியா 93/9. முதல் இன்னிங்ஸ் போல மெக்ராத், கில்லெஸ்பியுடன் சேர்ந்து ரன்கள் பெறுவாரா?

இரண்டே பந்துகளில் ஆட்டம் முடிந்தது. மெக்ராத் டிரைவ் செய்யப்போக, பந்து வெளி விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் நிற்கும் லக்ஷ்மண் கையில் விழுந்தது. மெக்ராத் 0, ஆஸ்திரேலியா 93 ஆல் அவுட். கில்லெஸ்பி 9*.

இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்ற நிலையில் ஆஸ்திரேலியா போன்ற அணியை 100 ரன்களுக்குள் சுருட்ட இதுபோன்றதொரு ஆடுகளம், மூன்று ஸ்பின்னர்கள், லக்ஷ்மண், டெண்டுல்கர் ஆகியோரது ஆட்டம் ஆகியவை தேவைப்பட்டுள்ளது. என்னதான் ஆடுகளத்தைக் குறை சொன்னாலும், இந்த வெற்றி இந்தியாவின் சிறப்பான ஆட்டத்தால்தான் என்பதை யாரும் மறைக்க முடியாது. ஷேன் வார்ன் இல்லாததும் ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு முக்கியமான காரணம். முரளி கார்த்திக் ஆட்ட நாயகனாகவும், டேமியன் மார்ட்டின் தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியா பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் வென்றது.

இந்த வெற்றி இந்திய வீரர்களுக்கு கொஞ்சம் மன நிம்மதியைக் கொடுக்கும். ஆஸ்திரேலியாவின் திறமை இல்லாவிட்டாலும், இந்தியா அடுத்த நிலையில் உள்ள முக்கியமான அணி. இப்பொழுதைக்கு (எப்படிப்பட்ட ஆடுகளமாக இருந்தாலும்) இந்தியா மட்டும்தான் ஆஸ்திரேலியாவை சற்றாவது கஷ்டப்படுத்துகிறது என்பதும் உண்மையே. சென்னையில் மழை பெய்யாதிருந்தால், ஒருவேளை இந்தியா 2-2 என்ற கணக்கில் இந்தத் தொடரை டிரா செய்திருக்கலாம். அப்படி இருந்தாலும் ஆஸ்திரேலியாவே இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை ஆடியதாக இருக்கும்.

இந்தத் தொடரைப் பற்றியும், இந்தியாவி்ன் சில பலவீனங்களைப் பற்றியும் நிறையப் பேச வேண்டியுள்ளது. இனிவரும் நாள்களில் அதைச் செய்கிறேன்.

12 comments:

 1. வர்ணனை வழக்கம் போல சிறப்பு. இந்த ஆட்டத்தில் எனக்குப் பிடித்திருந்தது, திராவிட்டின் துணிவு. இன்றைய வழக்கமான ஓவர்களுக்குப் பிறகு, அவர், ஆட்டத்தை 'டிரா' செய்திருக்கலாம். பழைய இந்திய அணித்தலைவர்கள் அவ்வாறு செய்திருப்பர்-இன்னும் 20 ஓட்டங்கள் பாக்கி என்னும் நிலையிலும்.

  இவ்வெற்றி நிச்சயமாக நமக்கு தென்னாப்பிரிக்க அணியை சந்திக்கும் தெம்பைக் கொடுக்கும்.  By: Raj Chandra

  ReplyDelete
 2. ராஜ்: இது மூன்றாவது நாள்தான். டிரா எதுவும் செய்ய முடியாது. நாளைக் காலை வந்து ஆட்டம் முடிந்திருக்கும், அந்தக் கடைசி 30 நிமிடங்களை எடுத்துக் கொள்ளாதிருந்தால்.

  ReplyDelete
 3. ஆ...மன்னியுங்கள். வேலை மும்முரத்தில் இது எத்தனையாவது நாள் என்பதையே மறந்துவிட்டேன் :).

  By: Raj Chandra

  ReplyDelete
 4. காடிச்சின் கேட்ச் திராவிடின் இடுப்பளவே வந்தது. அது நல்ல ஆனால் சர்வதேச அளவில் பிடிக்கவேண்டிய கேட்ச்.

  ReplyDelete
 5. பத்ரி, மிக அருமையாக எழுதி வருகிறீர்கள். உங்கள் எழுத்துக்கள் ஆட்டத்தை மீண்டும் ஒரு முறை கண் முன் நிறுத்துகிறது.

  ஆடுகளம் மிக மோசமாக இருந்தது. என்றாலும், இருவருக்கும் பொது எனும்போது அதை மட்டும் குறைகூறி பயனில்லை.

  ஆடுகளத்தின் தன்மை முன்கூட்டியே முடிவு செய்யப்படுகிறதா? ஆடுகளம் தயார் செய்யப்படுவதில் கேப்டன்/டீம் மேனேஜ்மெண்டுக்கும் பங்கு இருக்கிறதா?

  இதற்கு முன்பு ஒரு முறை மே.இ.தீவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையேயான ஆட்டம், மோசமான ஆடுகளம் காரணமாக சில ஓவர்கள் மட்டும் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட ஞாபகம் வருகிறது.

  By: ராஜா

  ReplyDelete
 6. /ஆடுகளம் தயார் செய்யப்படுவதில் கேப்டன்/டீம் மேனேஜ்மெண்டுக்கும் பங்கு இருக்கிறதா?/
  அதாவது அவர்கள் விருப்பப்படி தான் ஆடுகளத்தின் தன்மை நிர்ணயிக்கப்படுகிறதா என்ற அர்த்ததில் கேட்டேன்.

  By: ராஜா

  ReplyDelete
 7. பத்ரி,

  உங்கள் விவரிப்பில் இந்திய வெற்றியை பார்க்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அது நிறைவேறி விட்டது.

  ஆடுகளத்தை பாண்டிங் சற்று அதிகமாகவே குறை சொன்னதாகப் பட்டது. வென்றிருந்தால் வேறு மாதிரி பேசியிருக்கக் கூடும்.

  107 என்பது ஆஸ்திரேலியர்களின் திறமைக்கு சவால் விடும் இலக்கல்ல. கிளார்க்கை முன்னதாக பந்து வீச அழைக்காதது பாண்டிங் கோட்டை விட்ட அம்சம். இதற்கு முன்பு டெண்டுல்கரை ஒருநாள் போட்டி ஒன்றில் கிளார்க் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

  ராகுல் திராவிட் கும்ப்ளேக்கு முன்பாக கார்த்திக்கை பந்து வீச வைத்தது புத்திசாலித்தனம். மூன்று ஸ்பின்னர்கள் இல்லாத பட்சத்தில் வெண்றிருக்க முடியாது.

  வாழ்த்துக்கள்.

  அன்புடன்

  ReplyDelete
 8. ராஜா: ஆடுகளத்தின் தன்மை தீர்மானிக்கப்படுவதில் அணி நிர்வாகம் ஓரளவுக்கு பங்கு வகிக்கிறது. ஆனால் அணி நிர்வாகம் எது கேட்டாலும் அது நடக்கும் என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக மும்பையில் பெர்த் போன்றதொரு ஆடுகளம் வேண்டுமென்றால் அதைக் கேட்டவுடன் எப்படிக் கொடுப்பது? அதற்கு பல மாத காலம் வேலை செய்யவேண்டும். சரியான மண் தேவை. சரியான புல் தேவை.

  ஆனால் ஆடுகளத்தில் பிளவுகள் வேண்டும் என்று அணி நிர்வாகம் கேட்டால் அதனை வேகமாக உருவாக்கலாம். முதலில் மேலே உள்ள புல் எல்லாவற்றையும் ஒட்ட வெட்ட வேண்டும். பின் தண்ணீர் பாய்ச்சுவதை மொத்தமாக நிறுத்திவிட வேண்டும். நாலைந்து நாள்கள் சூரியன் அடித்துத் தள்ளினால், மேற்பரப்பு காய்ந்து போய், சிறு சிறு பிளவுகள் உருவாகும். ஆட்டம் தொடரத் தொடர, மேல்தரை உடைந்து நொறுங்கி, நாம் மும்பையில் பார்த்த ஆடுகளம் கிடைக்கும்.

  நாக்பூரில் தான் எதிர்பார்த்த ஆடுகளம் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் கங்குலி கோபம் கொண்டு வேண்டுமென்றே ஆடவில்லை, காயம் என்பதெல்லாம் பொய் என்றமாதிரியான செய்தி வெளியே கசிந்தது. அதைச் சரிக்கட்ட இந்திய அணி நிர்வாகம் கண்ட கண்ட மெடிகல் ரிப்போர்டுகளைக் காட்ட வேண்டியிருந்தது.

  முடிந்தவரை தமக்கு சாதகமான ஆடுகளத்தையே எல்லா அணித்தலைவர்களும் விரும்புகின்றனர். வடேகர் (கோச்), அசாருத்தீன் (கேப்டன்) காலத்தில் எல்லாமே மும்பை ஆடுகளத் தரத்தில் இருந்தன. அப்பொழுதெல்லாம் கும்ப்ளே, சவுஹான், ராஜு போன்ற ஸ்பின்னர்கள் நான்கு நாள்களுக்குள் எதிரணியைச் சுருட்டி விடுவர்.

  ReplyDelete
 9. ராஜ்குமார்: கும்ப்ளே - கார்த்திக் இருவரில் யாரை அடுத்த போட்டியில் நீக்குவது? நான் சில நாள்களாகவே கும்ப்ளே ஓய்வு பெற வேண்டுமென்றும், கார்த்திக் அந்த இடத்தை நிரப்ப வேண்டுமென்றும் சொல்லிக்கொண்டு வருகிறேன்.

  ஆனால் கங்குலிக்கு கார்த்திக் மீது நம்பிக்கை குறைவு. ஒரு திராவிடால்தான் கார்த்திக்கிற்கு அதிக நம்பிக்கை தர முடிந்தது. மேலும் இந்த ஆடுகளம் சுழற்பந்துக்கு ஆதரவானது. கும்ப்ளேதான் பந்தைச் சுழற்றுபவர் இல்லையே:-) அவர் வீசுவது பெரும்பாலும் டாப் ஸ்பின்னர்களும், கூக்ளிக்களும்தானே? பிளிப்பர் கூட இப்பொழுது காணோம்.

  முரளி கார்த்திக் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுக்கொண்ட போது பேசியதில், தனக்கு ஸ்பின் அதிகமாக வரும் ஆடுகளங்களில் பந்துவீசப் பிடிக்காது என்று சொன்னார். யாராவது கவனித்தீர்களா?

  ReplyDelete
 10. டெஸ்ட் - Testing

  By: test

  ReplyDelete
 11. please remove my above comment, posted by mistake...sorry for the trouble

  By: murali

  ReplyDelete
 12. பத்ரி, முரளி கார்த்திகின் பேட்டி வித்தியாசமாக இருந்தது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் பந்துவீச தனக்கு விருப்பமில்லை என அவர் கூறியது ஏன் என புரியவில்லை.

  அவர் கூறிய கருத்துகளில் "ஒவ்வொறு ஆடுகளங்களும் ஒவ்வொருவருக்கு சாதகமாக இருக்கும். சிலது வேகப்பந்து வீச்சளர்களுக்கும், சிலது மட்டையாளர்களுக்கும் சாதகமாக இருக்கும். அதுபோல, இந்த ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது. இதில் ஏதும் தவறில்லை" என்ற அவரின் கருத்து வெகுஇயல்பாக இருந்தது.

  கும்ப்ளே இந்த தொடரிலேயே அதிக (27) விக்கெட்டுகளை சாய்த்தவர். என்வே அவரை நீக்குவது அவ்வளவு சுலபமில்லை. முரளி கார்த்திக் அவர் இடத்தைப்பிடிப்பது இப்போதைக்கு சற்று கடினம் என்றே நினைக்கிறேன் (டெஸ்ட் ஆட்டங்களில்). ஒருநாள் டீமில் இப்பொதைக்கு அவருக்கு இடமிருக்காது. சுழற்பந்துக்கு தோதான ஆடுகளங்களில் அவரால் மூன்றாவது ஸ்பின்னராகத்தான் இடம்பிடிக்க முடியும். . இனிமேல், கும்ப்ளே, ஹர்பஜன் இருவரும் தங்கள் இடத்தை "granted" ஆக எடுத்துக்கொள்ள முடியாது. இது நம் அணியின் பலத்தையே குறிக்கிறது. நம் அணியிடம் உள்ள முக்கிய குறைபாடு " lack of bench strength". ஓரளவுக்கு திறமையான துவக்க ஆட்டக்காரர் நம் அணியின் உடனடித் தேவை.

  நம் அணியின் பலவீனங்களை பற்றிய உங்கள் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  By: Ravikumar

  ReplyDelete