Sunday, November 28, 2004

H4 விசாவில் அமெரிக்கா போகும் இந்தியப்பெண்கள் கதி

இன்றைய 'தி ஹிந்து' துணையிதழில் H4 விசாவில் அமெரிக்கா போய் தன் கணவன், அவன் குடும்பத்தாரிடம் மாட்டும் பெண்களின் நிலை பற்றிய கட்டுரை ஒன்று வந்துள்ளது.

இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது, ஒரு வருடத்திற்கு முன்னர் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் மகன், மருமகள் தொடர்பாக நடந்த வழக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

சேதுபதி ராமலிங்கத்தின் மகன் ராஜவேல் சேதுபதி என்பவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார். (H1B விசாவாக இருக்கும் என நினைக்கிறேன்.) இவர் மணமுடித்த சங்கீதா என்னும் பெண்ணை தன் பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு ராஜவேல் அமெரிக்கா சென்றுவிட்டார். வரதட்சணை தராவிட்டால் மகனோடு சேர விடமாட்டோம் என்று துணைவேந்தர் குடும்பம் சங்கீதாவை அச்சுறுத்தியதாகவும், முறைதவறி நடந்துகொள்ள முயற்சி செய்ததாகவும் சங்கீதா வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம் முன்னர் வந்தது.

அவரது அறிவுரையின்படி ராஜவேல் சங்கீதாவை அமெரிக்காவுக்கு அழைத்துக்கொண்டு செல்ல முடிவு செய்தார். ஆனால் விசா கிடைப்பதில் தாமதமானதாகச் சொல்லப்படுகிறது. [இது எனக்கு சற்றே குழப்பம் தருவதாக உள்ளது. H1B விசா வைத்துள்ளவர்களுக்கு மனைவியை/கணவனை அழைத்துவரக் கிடைக்கும் H4 விசாவில் எந்தத் தாமதமும் ஆவதில்லை அல்லவா? பின் ஏன் வருடக்கணக்காக ராஜவேல் இந்த விசா கிடைப்பதைத் தள்ளி வைக்கப் பார்க்கிறார் என்று புரியவில்லை.]

இந்நிலையில் சங்கீதா தனியாக பெண்கள் விடுதி ஒன்றில் தங்கவும், அதற்கான செலவுகளை ராஜவேல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கற்பகவிநாயகம் உத்தரவிட்டிருந்தார்.

சங்கீதாவுக்கு விசா கிடைப்பதில் ஆன தாமதம் தொடர்பாக நீதிபதி ராஜவேலை அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து நீதிமன்றத்தில் ஆஜராகச் சொன்னாராம். ஆனால் இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தடை செய்தது. அதற்குப்பின்னர் இந்த வழக்கில் என்ன ஆனது என்று தெரியவில்லை.

இப்படியே சங்கீதா அமெரிக்கா சென்றாலும், ஷிவாலி ஷா எழுதியுள்ள கட்டுரையைப் படித்தால் சங்கீதாவுக்கு அங்கே நிம்மதி கிடைக்குமா என்பது தெரியவில்லை. பழிவாங்கும் நோக்குள்ள கணவனிடம் மாட்டினால் அமெரிக்காவில் சரியான சட்டபூர்வமான குடிபுகல் அனுமதியில்லாத நிலையில் வீட்டோடு அடைபட்ட அடிமையாக மட்டும்தான் இருக்க முடியும். இதற்கு பதில் இந்தியாவிலேயே இருந்துவிடுதல் நலம். விவாகரத்து பெறுவதன்மூலம், ஜீவனாம்சம் பெறவாவது வழியுண்டு.

தீர விசாரிக்காமல், அமெரிக்க மாப்பிள்ளை கிடைக்கிறான் என்று ஒருமாத காலத்தில் நடக்கும் அவசர அடித் திருமணங்களில் இந்தியப் பெண்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது. இந்த விகாரங்கள் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த, நன்கு படித்த, நல்ல வேலையில் உள்ள இளைஞர்களால் செய்யப்படுகிறது என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது.

இந்த பிரச்னைகளுக்கு மற்றுமொரு பக்கமும் உள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் டாக்டர் ஜெயகிருஷ்ண அம்பாடி, அவரது அண்ணன், பெற்றோர் ஆகியோர் மீது வரதட்சணை வழக்கு ஒன்று நடைபெற்றது. இது அந்த நேரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு. ஜெயகிருஷ்ணா மிகக்குறைந்த வயதிலேயே - 17 வயது - அமெரிக்காவில் MD படிப்பை நிறைவு செய்தவர். இவர் இந்தியா வந்து மணம் செய்துகொண்ட அர்ச்சனா என்னும் பெண், இந்தியா வந்து அம்பாடி குடும்பத்தினர் மீது வரதட்சணை வழக்குத் தொடுத்தார். அந்த நேரத்தில் அமெரிக்கக் குடிமகன்களாகிய இந்தக் குடும்பத்தினர் இந்தியா வந்திருந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டனர். பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 3 1/2 வருடங்கள் நடந்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பொய்யான வழக்கு என்று தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அர்ச்சனாவின் தந்தை USD 500,000 கொடுத்தால் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக தொலைபேசியில் பேசியது ஆதாரமாகக் காட்டப்பட்டது. இதுபற்றிய முழு விவரங்களும் இங்கே உள்ளது.

இம்மாதிரி ஓரிரண்டு விஷயங்களில் பெண்கள் பக்கம் தவறிருந்தாலும் பெரும்பாலும் பாதிப்புக்கு உள்ளாவது பெண்கள்தான்.

4 comments:

  1. // H1B விசா வைத்துள்ளவர்களுக்கு மனைவியை/கணவனை அழைத்துவரக் கிடைக்கும் H4 விசாவில் எந்தத் தாமதமும் ஆவதில்லை அல்லவா? //

    இப்போது நிலைமை அப்படி இல்லை. என் மனைவி ஒரு வருடமாக காரணமே இல்லாமல் அலைக்கழிக்கப் பட்டிருக்கிறார். இவ்வளவுக்கும் ஏற்கெனவே விசா இருந்தது. புதுப்பிக்கும் போது இவ்வளவு பிரச்சனை. அவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்று என் கம்பெனி அட்டார்னியே குழம்பிப் போயுள்ளார். எனக்குத் தெரிந்து இது போல பல நண்பர்கள் உள்ளார்கள்.

    இன்னொரு விநோதமான கேஸ். நண்பர் ஒருவர் ஒரு மாத விடுப்பில் சென்று மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு H4 விண்ணப்பித்தார். குழந்தைகள் இங்கே அமெரிக்காவில்தான் படித்து வருகிறார்கள். அவர்களில் மனைவி மற்றும் பெரிய பையனுக்கு விசா கிடைத்து விட்டது. ஏழு வயதுப் பையன் ஒருவனை மட்டும் பர்சனல் இன்ட்டர்வியூக்கு கூப்பிட்டிருக்கிறார்கள். அதனால் அவர் மட்டும் திரும்பி வர வேண்டியதாகப் போயிற்று. சின்னப் பையனுக்கு அப்பாயின்ட்மென்ட் இரண்டு மாதம் கழித்துத்தான் கிடைத்திருக்கிறது.

    டிராப் பாக்ஸ் சிஸ்டம் இப்போது இல்லை என்பதும் தாமதத்துக்கு முக்கியமான காரணம். இன்றைக்கு முயற்சி செய்தால் இரண்டு மாதங்கள் கழித்துத்தான் அப்பாயின்மென்ட் கிடைக்கிறது.

    ராஜவேல் சேதுபதி, ஜெயகிருஷ்ணா போன்றவர்களுக்கு ஆதரவாக இதை நான் எழுதவில்லை. H4 கிடைப்பதிலும் பலருக்கு சிக்கல் உள்ளது என்பதைத் தெரிவிக்கவே எழுதியுள்ளேன்.

    ReplyDelete
  2. 9/11 பிறகு "Additional Administrative Processing" என்கிற பெயரில் அமெரிக்க துதரகம் அடிக்கும் கூத்துக்கு அளவேயில்லாமல் போய் விட்டது. கடந்த மூன்று மாத காலமாக என் துணைவி H4 விசாவிற்காக காத்துகொண்டிருக்கிறார். அவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்பதை தெரிவிப்பதில்லை.

    ReplyDelete
  3. நான் அமெரிக்க ஆதரவாளந்தான். இருப்பினும் விஸா கொடுக்க அமெரிக்கர் செய்யும் கூத்துக்கு அளவே இல்லை.

    அவர்களை விட அதிகமாக அமெரிக்கத் தூதரகங்களில் வேலை செய்யும் இந்தியர்கள் செய்யும் ரவுஸைக் கேட்கவே வேண்டாம்.

    டில்லியிலும் சென்னையிலும் அமெரிக்கத் தூதரகங்கள் முன் கோட்டு, ஸூட்டு போட்டவர்கள் பிச்சைக்காரர்கள் போல் நிற்கின்றனர். அதைப் பார்த்து அவமானப்படுவதை விட என்னச் செய்ய முடியும் நம்மால்?

    டோக்கன் முறையைக் கொண்டு வந்து ஒரு நாளைக்கு இவ்வளவு பேர் என்று நிர்ணயித்து அவர்களை மட்டும் உள்ளே அழைத்து அமர வைத்தால் அமெரிக்கருக்கு ஏதாவது கேடு வந்து விடுமா என்ன?

    நம்மவர்களையும் சொல்ல வேண்டும். வெட்கம் கெட்டுப் போய் நிற்பதால்தான் இந்தியர்கள் என்றாலே எல்லோருக்கும் இளப்பம் ஆகி விட்டது.

    By: DonduBy: Dondu

    ReplyDelete
  4. திருத்தம்: 17 வயதிலேயே மருத்துவராக தேர்ச்சி பெற்றது பாலமுரளி, அவர் அண்ணன் ஜெயகிரிஷ்ணா அல்ல. ;)

    http://www.hindunet.org/alt_hindu/1995_May_2/msg00038.html

    ReplyDelete