Tuesday, May 02, 2006

அஇஅதிமுக vs திமுக விளம்பரங்கள்

அஇஅதிமுக, திமுக இரண்டும் தத்தம் தொலைக்காட்சிகளில் நிறைய விளம்பரங்களைக் காண்பித்து வருகின்றனர்.

வாக்கு சேகரிப்பதில் இது ஏற்கெனவே பழக்கப்பட்ட ஓர் உத்தி. ஆனால் திமுகவின் விளம்பரங்கள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன. அது சொல்லும் கருத்து நமக்கு ஏற்புடையதா, இல்லையா என்பதைப்பற்றி நான் பேசப்போவதில்லை. ஆனால் நறுக்கென்று ஒரு செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கிறதா, அதன்மூலம் மக்கள் மனத்தைக் கவர்கிறதா என்பதுதான் கேள்வி.

திமுக விளம்பரங்களின் அமைப்பு இவ்வாறு உள்ளது:
  1. முதலில் மக்கள் மனத்தில் இருக்கும் ஓர் ஆதங்கம் - மக்கள் வாயிலாகவே வெளிப்படுகிறது. இது திமுகவின் தேர்தல் அறிக்கையை ஒட்டி - "அரிசி விலைக்குறைப்பு", "இலவச கலர் டிவி", "கேஸ் அடுப்பு" ஆகியவற்றை மக்கள் கேட்பதாக உள்ளது.
  2. அடுத்த காட்சியில் "திமுகவுக்கு ஓட்டு போடுங்க, நீங்க நினைக்கறது நடக்கும்" என்பதாக ஒருவர் சொல்வது போல் உள்ளது. இந்த இரு காட்சிகளுக்கும் இடையே உதய சூரியன் சின்னம் முழுத்திரையில் கண நேரத்துக்கு விரிவாகக் காட்சியளிக்கிறது.
  3. மூன்றாவது காட்சியில் நம்பிக்கை - "கலைஞர் சொல்றதைத்தான் செய்வாரு, செய்றதைத்தான் சொல்வாரு" என்று ஒரு சிறு பெண் சொல்வதாக வருகிறது.
மொத்தத்தில் 15 விநாடிகளுக்குள் அடங்குவதாக உள்ளன இந்த விளம்பரங்கள்.

ஆனால் அஇஅதிமுக விளம்பரங்கள் ஒரு குறிப்பிட்ட வரைமுறைக்குள் வருவதாக இல்லை. ஒரு விளம்பரத்தில் அம்மா ஆட்சியின் சாதனைகள் என்று பல விஷயங்கள் வருகின்றன. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கு மேல் செல்லும் இந்த விளம்பரத்தைப் பாதியில் பார்ப்பவர்களுக்கு இது என்ன விளம்பரம் என்று தெரியாது. கடைசியில் ஜெயலலிதா ஆட்சிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும் ஒலித்துண்டு ஒலிக்கிறது. மற்றுமொரு விளம்பரத்தில் மாபெரும் அண்ணா படத்துக்கு முன்னால் எம்.ஜி.ஆர் நின்று ஏதோ சொல்கிறார். என்ன சொல்கிறார் என்பது ஆடியோவில் தெளிவாகக் கேட்கவில்லை. மற்றுமொரு விளம்பரத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அழுகிறார். "அம்மா"வைப் புகழ்கிறார் ஆனால் அதையும் ஒரேயடியாக அழுதுகொண்டே புகழ்வதால் அவர் சந்தோஷப்படுகிறாரா, வருத்தப்படுகிறாரா என்றே தெரியவில்லை.

மொத்தத்தில் அஇஅதிமுக நல்ல professionalகளை வேலைக்கு எடுத்துக்கொள்வது நல்லது.

இதற்கிடையில் ராஜ் டிவியில் (மட்டும்) விஜயகாந்த் கட்சியின் விளம்பரம் ஒன்று கண்ணில் பட்டது. இதுவும் படுமோசமாக எடிட் செய்யப்பட்டு, என்ன message என்பதே தெரியாத வண்ணம் இருந்தது. விஜயகாந்த் ஊழலுக்கு எதிரி என்பதுபோலச் சென்றது இந்த விளம்பரம்.

தொலைக்காட்சி மீடியாவை முழுவதுமாகப் புரிந்துகொண்டிருப்பது திமுக மட்டும்தானோ என்று தோன்றுகிறது.

18 comments:

  1. படு கேவலமான அந்த ஓசி விளம்பரத்திலா ப்ரொபொஷனல் டச்?! தேவுடா...தேவுடா!

    ReplyDelete
  2. உண்மைதான் பத்ரி...அ.தி.மு.க வின் விளம்பரத்தைவிட தி.மு.க வின் விளம்பரம் நன்றாகவே உள்ளது...அதற்கு காரணம் கண்டிப்பாக சன் டிவியாகவே இருக்கும் விளம்பரத்தில் அவர்கள் கெட்டிக்காரர்கள்..."சூரியன் FM"யின் "கேளுங்க...கேளுங்க...கேட்டுக் கொண்டே இருங்க" குங்குமத்தின் "புதுசு...கண்ணா...புதுசு..." "தமிழ்முரசு"வின் "சும்மா நச்சுன்னு இருக்கு..." "தினகரன்" னின் "ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்" எல்லாம் சரியான உதாரணங்கள்...மக்கள் முகத்தில் அடிக்கும் வண்ணம் எதுவும் தேர்ந்தெடுக்காததும் அவர்களின் சிறப்பு...

    பொறுங்கள் 'கலைஞர்' கைது 'எஸ்மா' 'டெஸ்மா' பாய்ச்சல் எல்லாம் கடைசி நேரத்தில் விளம்பரமாய் தாக்கும் என கணிப்பு பார்க்கலாம்

    ReplyDelete
  3. thats a good observation. SUN tv is playing major role in their election campaign

    ReplyDelete
  4. பத்ரி, நீங்கள் சொல்லியிருப்பது போல் தி.மு.க. விளம்பரங்கள் - catchy and to the point. ஆனாலும் அந்தச் சிறுமி கடைசியில் சொல்லும் வசனம் கொஞ்சம் ஓவராக இருக்கிறது. வாக்குரிமை இருக்கும் வயதுடைய யாரையாவது அதைச் சொல்லப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  5. தி.மு.க விளம்பரங்கள் பற்றி இன்னும் ஒரு கருத்து: பேசும் இருவருமே.. அந்த இளைஞரும் சரி, சின்னப் பெண்ணும் சரி, ஒரு நம்பிக்கை அளிக்கும் முகங்களாக இருக்கிறார்கள். நாம் தினசரி பார்க்கும் நம்பிக்கை தரும் முகங்கள், அந்த விளம்பரத்தை இன்னும் தெளிவாகவும், ஆர்வம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

    விஜய் டிவியில் வரும் தே.மு.தி.க விளம்பரங்களை விட்டு விட்டீர்களே..

    ReplyDelete
  6. தம்பி பத்ரி,
    உனக்கு ஒரு கேடயம் குடுக்கலாம்னு நெனைக்கிறேன்! ஏன்னு கேக்குறியா? இந்த கண்றாவி புடுச்ச விளம்பரங்க ரெண்டையும் பொறுமையாப் பார்த்து, ஒப்பிட்டு பார்த்து வலையில் எழுதுனதுக்காக...
    எங்க வீட்டுல ரெண்டு சேனல்ல எதுல தேர்தல் விளம்பரம் வந்தாலும் அதிரடியா ஆப் பண்ணிருவோம்.... அதுலையும் சாப்பிடும் போது அ.தி.மு.க ரெண்டு வெரல காமிச்சா!!! உவ்வே......

    ReplyDelete
  7. The ad for vijayakanth is funny.It invokes images of Periyar,Anna,Ambedkar and Kamaraj
    and says Vijayakant is the embodiment of all of them.Thank god
    they left out Gandhi,Nehru and Indira Gandhi.The problem with the ad for ADMK is it lacks focus and is too long.

    ReplyDelete
  8. //
    வாக்குரிமை இருக்கும் வயதுடைய யாரையாவது அதைச் சொல்லப் பயன்படுத்தியிருக்கலாம்
    //

    சிறுமி சொல்வதும், சொல்லும் விதமும் தான் இந்த விளம்பரத்திற்கு என்றில்லாமல் பல விளம்பரங்களுக்கு இன்னும் அழகை கொடுக்கிறது. பெரியவர்கள் சொல்வதைக் காட்டிலும் குழந்தைகள் சொல்வது பலரை கவரும்

    ReplyDelete
  9. MGR இல்லாத கருப்பு MGR விளம்பரமா. அண்ணன் SK எங்கப்பா? கொஞ்சம் இதை கவனிக்கக் கூடாதா? ஓ, அவரு கட்சியில அவரத் தவிர வேற நடிகர் இருக்கக் கூடாதில்ல...

    பத்ரி, நல்ல ஒப்பீடு.

    ReplyDelete
  10. /சிறுமி கடைசியில் சொல்லும் வசனம் கொஞ்சம் ஓவராக இருக்கிறது. வாக்குரிமை இருக்கும் வயதுடைய யாரையாவது அதைச் சொல்லப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது என் எண்ணம். //

    கலைஞர், சொன்னதை செய்ததில், இந்த சிறுமி எதைப்பார்த்திருக்கும்.

    ReplyDelete
  11. "திமுக-வுக்கு ஓட்டுப்போடுங்கள், உடனே உங்களுக்கு வேலை கிடைக்கும்".

    "திமுக-விற்கு ஓட்டுபோட்டுவிட்டு வேலை கிடைக்கவில்லையென்றால், கோபலாபுரம் கலைஞர் வீட்டை முற்றுகை இடலாம்" என்று எதுவும் சொல்லப்படவில்லையே?

    ReplyDelete
  12. தமிழ் சசி said...
    //சிறுமி சொல்வதும், சொல்லும் விதமும் தான் இந்த விளம்பரத்திற்கு என்றில்லாமல் பல விளம்பரங்களுக்கு இன்னும் அழகை கொடுக்கிறது. பெரியவர்கள் சொல்வதைக் காட்டிலும் குழந்தைகள் சொல்வது பலரை கவரும்
    //

    குழந்தைகள் நிறைய விளம்பரங்களில் வந்தாலும் அவற்றில் மிகப் பெரும்பாலும் அவர்களும் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் அல்லது ஈடுபடக்கூடிய செயல்கள் பற்றியதாய் இருக்கும். My point is what does that 7-8 year old girl know about the issues that are being discussed. Especially the way she "confirms" that Kalaignar would do whatever he has promised.. What is her locus standi in saying that?

    ReplyDelete
  13. நான் சொல்லிப்பாத்தேனுங்க, கிரு-ஷ்ணா!

    அம்மாவும், பெரியய்யாவும் தோத்துருவாங்க, அடுத்த வாரம்,

    அப்புறமா, நாம ஜெயிச்சதும், அண்ணாவையும், MGற் ஐயும் சேத்துக்கலாம்னு சொல்லிட்டாரு!

    இப்போ, சந்தோசம்தானே!

    :-)

    ReplyDelete
  14. //தமிழ் சசி Tue May 02, 04:49:47 PM IST மணிக்குச் சொன்னது:

    சிறுமி சொல்வதும், சொல்லும் விதமும் தான் இந்த விளம்பரத்திற்கு என்றில்லாமல் பல விளம்பரங்களுக்கு இன்னும் அழகை கொடுக்கிறது. பெரியவர்கள் சொல்வதைக் காட்டிலும் குழந்தைகள் சொல்வது பலரை கவரும் //

    இதே இதே இதுதான் நேற்றைய/இன்றைய தமிழ் நாட்டின் நிலைமை. எதை யார் சொல்ல வேண்டும் என்ற உண்மையான காரணம் யாருக்கு வேண்டும்?

    இதுபோல் எது (சன் விளம்பரம்/ M.G.R ன் சிகப்பு / ஜெயலலிதாவின் சிகப்பு/ கலைஞரின் தமிழ் / அண்ணாவின் பேச்சு/விஜயகாந்தின் வசனம்/...) பலரைக் கவர்கிறதோ அதுதான் நல்லது என்று நினைக்கும் மக்கள் இருக்கும் வரை நாம் இப்படியேதான் இருப்போம்.

    இது போல சில குழந்தைகளை வீதிக்கு அழைத்து வந்து யாரேனும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினால் "ஆகா நல்ல யுக்தி" என்று கூட சிலர் ஆதரவு தரலாம்.

    குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள்.

    ReplyDelete
  15. மீனாக்ஸ்,

    விளம்பரங்களுக்கு யதார்த்தம் தேவையில்லை என்று தான் "நான்" நினைக்கிறேன். விளம்பர தொழில்முறையைச் சார்ந்து இருக்கும் உங்களுக்கு இது குறித்து வேறு எண்ணங்கள் இருக்கலாம்.

    ஆனால் ஒரு சாதாரண பார்வையாளனாக ஒரு விளம்பரம் நளினமாக, அழகாக சொல்லப்பட்டால் தான் என்னைக் கவரும். விளம்பரங்களுக்கு லாஜிக் தேவையில்லை. எத்தனையோ விளம்பரங்கள் எந்த லாஜிக்கும் இல்லாமல் தான் வெளிவருகின்றன. சில லாஜிக்கற்ற விளம்பரங்கள் சிரிக்க வைக்கும். சில விளம்பரங்கள் மனதில் பதியும்.

    அந்த வகையில் குழந்தைகளை கொண்டு வரும் விளம்பரங்கள் எளிதில் பார்ப்பவரை கவரும் என்ற வகையில் தான் நான் என்னுடைய கருத்தை கூறினேன்.

    நன்றி

    ReplyDelete
  16. ஸார், நம் எல்லோருக்குமே தெரிஞ்ச விஷயந்தான்...சன் தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சிச் சேனல்களைவிட முன்னணியில் இருப்பதற்கு professionalismதான் காரணம். சன் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இது பரிமளிக்கிறது. திமுக விளம்பரத்திலும் இதனைக் காண்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

    தவிர, நல்ல விஷயங்களை யார் கூறினாலும், கேட்டு நடக்கும் சுபாவம் சன் தொலைக்காட்சியகத்தாரிடம் இருப்பதாக நம்புகிறேன்.

    இதையெல்லாம், அம்மவிடம் காண முடியுமா...?

    இது ஒரு புறமிருக்கட்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் BJP மற்றும் காங்கிரசாரின் தேர்தல் விளம்பரங்கள் நியாபகமிருக்கிறதா?
    பாஜகவின் விளம்பரத்தில் மட்டுமே ஒளிர்ந்தது இந்தியா ...... நினைவிருக்குமென நினைக்கிறேன்.

    வெங்கடேஷ் வரதராஜன்,
    ரியாத்.

    ReplyDelete
  17. //பாஜகவின் விளம்பரத்தில் மட்டுமே ஒளிர்ந்தது இந்தியா ...... நினைவிருக்குமென நினைக்கிறேன்//

    வெங்கடேஷ்,

    ஜெயா தொலைக்காட்சி விளம்பரத்திலும் "ஒளிர்கிறது தமிழகம்" என்ற வாசகம் வந்தது. இந்த முறை அதிமுக ஜெயிக்காவிட்டால் இனி ஒருவரும் "ஒளிர்கிறது" என்ற பொய்யைச் சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன் :-).

    ReplyDelete
  18. ஒரு விஷயம் இங்கே சொல்ல வேண்டும்.

    போன தடவை 2001 தேர்தலின் போது திமுக சன் டிவியில் ஒளிபரப்பிய "தமிழா தமிழா இது நமக்கு வசந்த காலம்" என்ற விளம்பரம் இப்போது வந்தவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டது. ஆனாலும் திமுகவுக்கு அதனால் கிடைத்த பலம் ஒரு மண்ணும் இல்லை. அதே சமயத்தில் திரும்ப திரும்ப ராஜீவ் கொலையை வைத்து அதிமுக பாடாவதி விளம்பரத்தைக் காட்டியது (அட... இப்போ காட்டிய அதே டெக்னிக்) அதிமுக வென்றது.

    எனவே இந்த விளம்பரங்கள் என்னதான் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அவை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் என்றெல்லாம் நான் நம்பவில்லை. கூட்டணி, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என்று பலது ஒன்றாக நன்றாக அமைந்தால் இந்த விளம்பரங்கள் கிரியா ஊக்கியாக செயல்படும் என்பதை நான் மறுக்கவில்லை.

    எனிவே... நன்றாக அலசி இருக்கிறீர்கள் ஐயா, பாராட்டுகள்!

    ReplyDelete