Thursday, January 28, 2010

மாமல்லை - 1

சென்ற வாரம் ஒரு மூன்று நாள்கள் மாமல்லபுரத்தில் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தோம். தேர்ந்த ஐந்து ஆசிரியர்கள். ஆர்வமுள்ள 18 மாணவர்கள்.

பேரா. சுவாமிநாதன் கடந்த சில ஆண்டுகளாகவே மாமல்லபுரம் பற்றி நிறையப் பேசி வந்திருக்கிறார். உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட இந்த இடத்தை இந்தியர்கள், முக்கியமாக தமிழர்கள் சிறிதும் புரிந்துகொள்வதில்லையே என்பது அவரது ஆதங்கம். ஏதோ போனோமா, வந்தோமா, நான்கு படங்களை எடுத்துக்கொண்டோமா என்பதிலேயே அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாழ்க்கை கழிந்துவிடுகிறது. வேறு சிலர் தனிமையை விரும்பி ஜோடிகளாக அங்கே சென்று மரத்துக்குப் பின்னும் புதருக்குள்ளேயும் மறைந்து கொஞ்சுகிறார்கள்.

இப்படி சும்மா அங்கலாய்த்துக்கொண்டிருந்தால் போதாது. நிஜமாகவே மாமல்லபுரத்தில் என்னதான் உள்ளது? ஏன் அதை நாம் புகழ்ந்து தள்ளவேண்டும்? இதற்கான பதில் எளிதாக ஒரு வரியில் சொல்லிவிட முடியாதது.

ஆர்வமுள்ள சிலருக்கு மாமல்லபுரத்தில் பொதிந்துகிடக்கும் கலை மேன்மைகளைக் காண்பிக்க விரும்பிய சுவாமிநாதனுடன் சேர்ந்துகொண்டவர்கள் சிலர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பாலுசாமி. சென்னை ஓவியக் கல்லூரியின் பேரா. சிவராமகிருஷ்ணன். பாரம்பரிய ஸ்தபதிகளான கும்பகோணத்தைச் சேர்ந்த உமாபதி, அவரது அண்ணன் வேழிநாதன்.


பாலுசாமி சமீபத்தில் மாமல்லபுரத்தின் ‘பெருந்தவம்’ புடைப்புச் சிற்பம் பற்றி ஓர் அற்புதமான புத்தகத்தை எழுதியுள்ளார். ‘அர்ச்சுனன் தபசு’ என்ற பெயரில் இது காலச்சுவடு வெளியிட்ட புத்தகமாக வெளியாகியுள்ளது. தமிழில் மாமல்லபுரம் பற்றி எழுதப்பட்ட மிக முக்கியமான ஆராய்ச்சி நூல் இது. (இதைப்பற்றி பின்னர் எழுதுகிறேன்.) மாமல்லபுரத்தைப் பற்றி தீவிரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள பாலுசாமி ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம்.

சிவராமகிருஷ்ணன் ஓவிய ஆசிரியர். சிற்பங்களில் மறைந்துகிடக்கும் வடிவ அழகை அற்புதமாக விளக்கக்கூடியவர். அமைதியானவர். கையில் தாள், பென்சிலுடன் வந்த இவர் ஆங்காங்கே பல்லவர் காலச் சிற்பங்கள், மண்டபங்கள், ரதங்களை ஓரிரு கோடுகளால் வரைந்துகாட்டி அதன் நுட்பங்களை அற்புதமாக விளக்கினார்.

உமாபதியும் வேழிநாதனும் பாரம்பரியச் சிற்பிகள், கோயில் கட்டுபவர்கள். வேதம் முதற்கொண்டு சில்ப சாஸ்திரங்களைக் கரைகண்டவர்கள். இந்த நூல்களில் பல அவர்களது குடும்பத்துக்குள் சாதிக்குள் (விஸ்வகர்மா) மட்டுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளவை. அவர்கள் பாரம்பரியப் பின்னணியில் சிற்பங்களின் சில ரகஸ்யங்களைப் பற்றிப் பேசினார்கள். ஆனால் முழுவதுமாக ரகஸ்யங்களை வெளிவிடவில்லை.

***

மகேந்திரவர்மனுக்கு அடுத்துவந்த நரசிம்மவர்மன் காலத்தில் தொடங்கப்பட்ட மாமல்லை, அடுத்து நரசிம்மனின் பேரம் பரமேஸ்வரன், அவனது மகன் ராஜசிம்மன் ஆகியோர் காலத்தில் தொடரப்பட்டு அத்தோடு நிறுத்தப்பட்டது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். மகேந்திரவர்மன் காலத்தில் தொடங்கப்பட்ட குடைவரைக் கோயில்களை நரசிம்மன் முன்னெடுத்துச் சென்றான்.

அரசர்கள் என்று நாம் சொன்னாலும் வேலையைச் செய்ததென்னவோ சிற்பிகள். அவர்களைப் பற்றி நமக்கு அதிகமாகத் தெரிவதில்லை.

மாமல்லையில் என்னவெல்லாம் உள்ளன?

1. மண்டபம் (Caves) எனப்படும் குன்றை (ஒற்றைப் பாறையை) முன்பக்கமிருந்து குடைந்து செய்யப்பட்ட கோவில்கள். இவற்றில் மேல் விமானம் ஆகியவை அவ்வளவு விரிவானவையாக இருக்கா.

2. ரதம் (Monoliths or Rathas) எனப்படும், ஒற்றைப் பாறையில் மேலிருந்து குடையப்பட்டு உருவாக்கப்படும் கோவில்கள். இவற்றில் மிக அருமையான விமானம் காணப்படும்.

3. கட்டுமானக் கோயில்கள் (Structural Temples). ஒற்றைப் பாறை என்னும் நிலையைத் தாண்டி, அடித்தளம் ஒரு பாறையிலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் வெட்டப்பட்டு மேலே நிறுத்தப்பட்ட சில பாறைகளாலும் உருவான கோயில்கள்.

4. புடைப்புச் சிற்பங்கள் (Open-air Bas Reliefs). பட்டையான பாறை முகப்பை எடுத்துக்கொண்டு அதில் மாபெரும் சிற்பக் காட்சியை உருவாக்குதல்.

இவற்றில் மண்டபங்கள் மகேந்திரவர்மன் காலத்திலேயே உருவாக்கப்பட்டன. பல்லாவரம், மண்டகப்பட்டு, தளவானூர், மாமண்டூர், சீயமங்கலம், குரங்கணில்முட்டம், திருச்சிராப்பள்ளி எனப் பல இடங்களில் மகேந்திரன் காலத்தில் குன்றைக் குடைந்து கோவில்கள் உருவாக்கப்பட்டன. இந்தக் கோவில்களில் கர்ப்பக்கிருகம், முன் மண்டபங்கள் (அர்த்த மண்டபம், மகா மண்டபம்), சாதாரண தூண்களில் தொடங்கி, வேலைப்பாடுள்ள அற்புதமான தூண்கள், துவாரபாலர் சிற்பங்கள், சுவற்றில் காணப்படும் அற்புதமான வேலைப்பாடுள்ள சிற்பங்கள் எனப் பலவும் உண்டு. ஒரு, மூன்று அல்லது ஐந்து கர்ப்பகிருகங்கள் ஒரே கோயிலில் இருக்கலாம்.

நரசிம்மனும் பல மண்டபங்களைக் கட்டுவித்துள்ளான். ஆனால் நரசிம்மன் காலத்தில்தான் ரதங்கள் உருவாக்கப்பட்டன. ராஜசிம்மன்தான் கட்டுமானக் கோயில்களைக் கட்டினான். புடைப்புச் சிற்பங்கள் நரசிம்மன் காலம் தொட்டே உருவாகியிருக்கக்கூடும். ராஜசிம்மன் காலம்வரை தொடர்ந்தது.

இவையெல்லாம் வெறும் புள்ளிவிவரங்கள். ஆனால் மாமல்லையின் அற்புதத்தை புள்ளிவிவரங்களால் காண்பித்துவிடமுடியாது.

ஒரு சிறு அற்புதத்தைக் கையில் எடுப்போம்.

மஹிஷாசுரமர்த்தினி மண்டபம். அதில் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். இரு சுவர்களிலும் இரு அற்புதமான புடைப்புச் சிற்பங்கள். ஒன்று மஹிஷனை தேவி வதம் செய்ய எத்தனிக்கும் காட்சி. மற்றொன்று அனந்தசயனத்தில் விஷ்ணு படுத்திருக்க, மதுவும் கைடபனும் விஷ்ணுவைத் தாக்க முயற்சி செய்ய, ஆதிசேஷன் அவர்களை நோக்கி விஷம் கக்கும் அனலை வீச, அந்த அனல் தாங்காமல் அசுரர்கள் திரும்பி ஓட யத்தனிக்கும் காட்சி.

பாலுசாமி மஹிஷாசுரமர்த்தினி சிற்பத்தின்முன் நிற்கிறார். விளக்குகிறார்.


சிற்பக் காட்சியில் ஒருவித சமநிலை தென்படுகிறது. ஒரு பக்கம் மஹிஷன், மாபெரும் உருவமாக. மறுபக்கம் சுவற்றிலிருந்து வெளியே முப்பரிமாணத்தில் வருவதுபோன்ற சிங்கம், சிங்கத்தின் மேல் தேவி. எட்டு கைகளுடன். அனைத்துக் கைகளிலும் ஆயுதங்கள். ஒன்றில் வில் வளைத்து நாண் ஏற்றத் தயாராக. மற்றொன்று தோளில் அம்பறாத் தூணியிலிருந்து அம்பை உருவுகிறது. ஒரு கையில் வாள். ஒரு கையில் கேடயம். ஒரு கையில் பிரயோகச் சக்கரம். இப்படி. மஹிஷன் ஒரு காலைப் பின்னுக்குத் தள்ளி ஓடப் பார்க்கிறானோ? ஆனால் அவன் இன்னமும் தோற்கவில்லை. அவன் தலைமீது குடை இன்னமும் இருக்கிறது. அவன் தலையில் மகுடன் இன்னமும் இருக்கிறது. தேவியைச் சுற்றிலும் கணங்கள். ஒவ்வொன்றும் சற்றே வித்தியாசமாகக் காணப்படுகின்றன. அசுரனைச் சுற்றி அவனது படைகள். அனைவர் முகத்திலும் கலக்கம். தோல்வியின் பயம்.

சிற்பிக்கு என்ன தைரியம் இருந்தால் சிற்பத்தின் மையத்தில் தலைகீழாகத் தொங்கும் மொட்டைத் தலையை வரைந்திருப்பான்? தனது சிற்பத்தின்மீது அத்தனை நம்பிக்கை. முகத்தில் என்னென்னவோ உணர்ச்சிகளைக் காண்பிக்கலாம். ஆனால் மொட்டைத்தலையில்? இருந்தும் அதனை நடு மையத்தில் வைத்திருக்கிறான்.

தேவி மகாத்மியத்தில் இந்தக் காட்சி வருகிறது.

பாலுசாமி தொடர்கிறார். சிற்பத்தின் ஒவ்வொரு சிடுக்குகளும் புரிய ஆரம்பிக்கின்றன. சிவராமகிருஷ்ணன் வளைவுகளையும் கோடுகளையும் விளக்குகிறார். பார்ப்போர் அனைவரும் எப்படி தேவியிலிருந்து மஹிஷனுக்கும் மஹிஷனிலிருந்து தேவிக்குமாக மையத்தை நோக்கி மீண்டும் மீண்டும் பார்வையைத் திருப்பியபடியே இருப்பார்கள் என்று விளக்குகிறார். இந்தச் சிற்பத்தில் எந்தக் கோடியிலிருந்து தொடங்கினாலும் பார்வை மையத்தை நோக்கியே வருமாம்.

இப்படி மாறி மாறி ஒவ்வொரு சிற்பமாக, ஒவ்வொரு மண்டபமாக, ஒவ்வொரு ரதமாக, கடற்கரைக் கோயிலின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று பார்க்கிறோம்.

(தொடரும்)

4 comments:

  1. ஆர்வத்தை மிகவும் தூண்டும் பதிவு. இன்னும் விவரங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  2. நல்ல அறிமுகம், பத்ரி.நன்றி.அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.
    ஹம்பியில் இருக்கும் உக்ர நரஸிம்மர் சிற்பத்தைப் பார்த்திருக்கிறேன்.அங்கிருந்த ஒரு நபர் அச்சிற்பம் தனித்துவம் வாய்ந்தது என்றார்.அதைப் பற்றி பேராசிரியர் பாலுசாமியிடம் கேட்டுச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  3. if you have a camcorder, you can record and post, while balusamy is explaining..

    thx

    ReplyDelete
  4. படிக்கும் போதே காட்சிகளை மனத்திரையில் கண்ணுற்றேன். பல தடவை மாமல்லபுரம் சென்று இருந்தாலும் இதை படித்து பார்த்த பின்பு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இன்னும் பல சிற்பங்களை பற்றி விரிவான விளக்கங்களை கொடுத்தல் நன்றாக இருக்கும்.

    எங்கள் வந்தவாசிக்கு அருகில் இருக்கும் சீய மங்களம் குகை கோயில் பற்றி ஏதேனும் தகவல் தெரியுமா பத்ரி?

    ReplyDelete