Sunday, June 06, 2010

இந்திரா பார்த்தசாரதி சிறுகதை வெளியீடு நிகழ்ச்சி

சற்று முன்னர்தான் முடிவடைந்தது. அரங்கில் குறைந்தது 350 பேராவது இருந்திருப்பார்கள்.

எஸ்.ஆர்.மது ஆங்கிலத்தில் அறிமுகம் செய்ய, அடுத்து புத்தக வெளியீடு. சாரி புத்தகத்தை வெளியிட, நடிகர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிவக்குமார் பேசினார். இந்திரா பார்த்தசாரதியின் ‘உச்சி வெயில்’ என்ற கதை இயக்குனர் சேது மாதவனால் ‘மறுபக்கம்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டபோது அதில் நாயகனாக நடித்தவர் சிவக்குமார். அது சார்ந்த தன் ஞாபகங்களைப் பற்றிப் பேசியவர், தனது இன்றைய விருப்பமான கம்பராமாயணம் பற்றிப் பேசி, தனது கம்பராமாயணச் சொற்பொழிவுகளை இ.பா மிகவும் ரசித்ததைச் சுட்டிக்காட்டி, முடித்துக்கொண்டார்.

அடுத்து திருப்பூர் கிருஷ்ணன், சுஜாதா விஜயராகவன், குடந்தை கீதப்பிரியன், ராமசாமி சுதர்சன் ஆகியோர் இ.பா எழுதியிருந்த கதைகளிலிருந்து ஆளுக்கு ஒன்றைத் தேர்ந்தெடுத்துச் சொன்னார்கள்.

ஆரம்பித்து வைத்த திருப்பூர் கிருஷ்ணனின் பெர்ஃபார்மன்ஸை அடுத்து வந்த யாராலும் நெருங்கமுடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ‘இவர்களே, அவர்களே’ என்று நேரத்தை வீணடிக்கவில்லை. கதையின் தலைப்பைச் சொன்னார் (பதி, பசி, பாசம்). கதையை குரல் மாடுலேஷனில் பிரமாதமாகச் சொன்னார். அவர் கையில் குறிப்புகள் ஏதும் இல்லை. அதற்குத் தேவையும் இருந்திருக்காது. திருப்பூர் கிருஷ்ணன், இ.பாவின் எழுத்துகளை ஆராய்ச்சி செய்து பிஎச்.டி பட்டம் பெற்றவர். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்புகளுக்குத் தேவையான முந்தைய வெளியீடுகளை திருப்பூர் கிருஷ்ணனிடமிருந்தும் ரோஜா முத்தையா நூலகத்திலிருந்துமே பெற்றோம்.

அடுத்து சுஜாதா விஜயராகவன் சொன்ன கதை. இ.பாவின் சொந்தக் கதை. தன் நான்கு வயதுப் பேத்தியின் நாய் பொம்மையைத் தொலைத்துவிட்ட ஒரு தாத்தா படும் பாடு. கடைசியில் தாத்தா அங்கும் இங்கும் சுற்றி மற்றொரு நண்பரின் பேத்தி வைத்து விளையாடிய பொம்மையை வாங்கிக் கொண்டுவந்து வைத்துவிட்டு தப்பித்துவிட்டோம் என்று நினைக்கும்போது முடிவு எதிராபாரா திருப்பம் ஆகிறது.

குடந்தை கீதப்பிரியன் படித்த ‘குருதட்சிணை’ என்ற கதையும் இ.பாவின் சொந்தக் கதைதான் என்று தோன்றியது. இறுதியாக சுதர்சன் சற்றே அதிகமாக நேரம் எடுத்துக்கொண்டு அஸ்வத்தாமா என்ற கதையைப் பற்றி கிட்டத்தட்ட ஓர் ஆய்வையே செய்துவிட்டார்.

இ.பா ஏற்புரையில், இது தன் புத்தகங்களுக்காக நடத்தப்படும் இரண்டாவது வெளியீட்டு விழா என்றார். முதலாவது 1968-ல் அவரது முதல் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவாம். ஆனால் சில ஆண்டுகளுக்குமுன் மித்ர வெளியீடாக வந்த ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ நாவல் ஒரு மாபெரும் விழாவில் பல புத்தகங்களுட்ன சேர்ந்து வெளியிடப்பட்ட நிகழ்ச்சி பற்றி எனக்குத் தெரியும்.

விழா சரியாக 9.30-க்குத் தொடங்கி, 11.00 மணிக்கு கண்ணன் நன்றி கூற, முடிவுற்றது.

அடுத்து மக்கள் வரிசையில் நின்று புத்தகங்களை வாங்கி, இந்திரா பார்த்தசாரதியிடம் கையெழுத்து பெற்றனர். இ.பாவே அசந்து போய்விட்டார். மொத்தம் 150 பிரதிகளைத்தான் அரங்குக்குக் கொண்டுவந்திருந்தோம். அனைத்தும் தீர்ந்துபோக, மேலும் பலர் ‘புக்கிங்’ செய்துவிட்டுப் போயுள்ளார்கள்.

[விழா தொடர்பாக இணையத்தில் சில அன்பர்கள், அன்பான கருத்துகளைச் சொல்லியுள்ளனர். என் பதிவில் ஒருவர், இது எழுத்தாளரைக் கேவலப்படுத்துகிறது என்று சொல்லியுள்ளார். நான் கேட்டுக்கொண்டது இரண்டுதான்: சரியான நேரத்துக்கு வாருங்கள். முன்னதாகச் சொல்லிவிட்டு வாருங்கள்.

வெளிநாடுகளில் வெஸ்டெர்ன் கிளாசிகல் கான்சர்ட்டுகள் சிலவற்றுக்கு நான் போயிருக்கிறேன். நீங்கள் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்தாலும் சரி, கான்சர்ட் ஆரம்பிக்கும்போது இருக்கையில் அமரவில்லை என்றால் அடுத்த இடைவேளையின்போதுதான் உள்ளே நுழைய அனுமதிப்பார்கள்.

மற்றபடி இது கிழக்கு பதிப்பகம் மட்டும் தனியாக நடத்தும் நிகழ்ச்சி அல்ல. மற்றொரு அமைப்புதான் முன்னின்று நடத்தியது. அவர்களுக்கென்று சில சட்டதிட்டங்கள் உள்ளன. அதனால்தான் அவற்றைக் குறிப்பிட்டேன். மற்றபடி விழாவுக்கு வந்திருந்த கிழக்கு பதிப்பக வாசகர்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.]

15 comments:

  1. பத்ரி!
    சுஜாதா விஜயராகவனின் கதை சொல்லலும் உண்மையில் அற்புதம். இருவருமே நிச்சயம் a class apart! ரூ.150க்கு இரண்டு புத்தகங்கள் என்பது அருமையானதொரு சலுகை - கலெக்டர் ஸ்பெஷல்களைத் தேடிச் சேகரிப்போர்களுக்கு! சுஜாதா விஜயராகவன் சொன்ன அந்த 'நாயகன்' (ஸ்பாட்டி) கதையை அம்மாவிற்க்கு வாசித்துக் காண்பித்தேன். சிரிப்பினூடே ரசித்தார்கள். நிகழ்ச்சிக்கு நன்றி (நபநப :-))

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  2. திருப்பூர் கிருஷ்ணனின் குரலில் சிறுகதையை இன்னும் சுருக்கி அவருடைய குறல் எற்ற இரக்கம் மிகவும் அருமையாக இருந்தது ஆடியோ புத்தகமாக வெளியிட்டால் குரல் கொடுக்க திருப்பூர் கிருஷ்ணன் சரியான தேர்வாக இருப்பார்
    மேலும் விழாவில் சிறு சிறு சங்கடம் ஏற்பட்டதற்க்கு தாங்கள் மன்னிப்பும் கேட்டிர்கள் நன்று.அதை நான் பொருட்படுத்தவில்லை முதலில் இது கிழக்கின் விழா என்று நினைத்தேன்

    விழாவில் அனுமதி மறுக்கபடலாம் என்று வந்த வாசகர் ஒருவர் ஹரன்பிரசன்ன தனக்கு அனுப்பிய மின் அஞ்சலை பிரதி எடுத்து வந்து இருந்தார்

    ReplyDelete
  3. /நான் கேட்டுக்கொண்டது இரண்டுதான்: சரியான நேரத்துக்கு வாருங்கள். முன்னதாகச் சொல்லிவிட்டு வாருங்கள் /

    உள்ளே வந்துவிட்டால் பிறகு வெளியே செல்ல இயலாது, அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி மாதிரி வேறு விஷயங்களும் சொல்லியிருந்தீர்கள்.

    ReplyDelete
  4. விழாவிற்கு நாங்களும் வந்திருந்தோம். சாரி மிகவும் கண்டிப்புப் பேர்வழி என்பது டேக் மையத்துக்கு முதல் தடவை வருபவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால் சரியான நேரத்துக்கு வருகை தரவேண்டும் என்ற அறிவிப்பு தேவைதான்.
    விழா கச்சிதமாகத் தொடங்கி, தொய்வு இல்லாமல் நிறைவேறியது.
    திருப்பூர் கிருஷ்ணன் ஒரு அற்புதமான கதைசொல்லி என்பதை இன்றுதான் பார்த்தோம். இ.பா.வின் நன்றி உரை இனிதாக அமைந்தது.
    வாழ்த்துக்கள் பத்ரி

    ReplyDelete
  5. Badri, from what I could read, the function seemed to have been well planned, organised and executed. Congratulations!

    It is sad to hear an organiser apologise for expecting from audience the basic courtesy of punctuality, RSVP and non-disruption during the program (caused by people coming in late and leaving in the middle).

    I think as a society we don't value ourselves, our writers/speakers and our own time. Perhaps you should, to release the book, have invited a movie/TV celebrity who would have come one hour late and left half way through the event. And thrown in speakers whose lack of preparation never stops them from speaking confident nonsense on stage.

    Then perhaps we would have ambled in at our own convenience, comfortable in the knowledge that we don't expect to hear anything useful and fully expect to waste a Sunday morning.

    ReplyDelete
  6. அன்பின் பத்ரி
    வணக்கம்
    எனக்கு விவரம் தெரியாமல் போயிற்று..
    எனக்கு சலுகை விலையில் புத்தகங்கள் கிடைக்குமா?
    தெரிவிக்கவும்
    நன்றி
    அன்புடன்
    T V Radhakrishnan
    tvrk.blogspot.com

    ReplyDelete
  7. திருப்பூர் கிருஷ்ணன் சொல்லிய கதை வாய்ப்பே இல்லை பத்ரி...

    இபா தான் எழுதிய கதையை விட திருப்பூர் கிருஷ்ணனின் குரலில் கேட்டது அருமையாக இருந்தது என்றார். ஏதோ அதிகமாகப் புகழ்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். உண்மையில் வீட்டிற்கு வந்ததும் அந்தக் கதையைப் வாசித்துப் பார்த்தேன். இபா சொல்லியது முற்றிலும் உண்மை.


    மற்றபடி விழா அருமை. சலுகைப் புத்தகத்திற்கு நன்றி...

    ReplyDelete
  8. ராமதுரை எழுதியது
    நிகழ்ச்சிக்கு நான் வரவில்லை. திருப்பூர் கிருஷ்ணன் அற்புதமாகக் கதை சொனனார் என்பதை அறிந்தேன். கதை எழுதுவது வேறு. கதை சொல்வது வேறு. இதை விட கதை வாசிப்பது முற்றிலும் வேறு. கதை சொல்வதும் கதை வாசிப்பதும் தனிக் கலை.பலருக்கும் இதில் அடங்கிய நுட்பங்கள் தெரியாது. மேலை நாட்டில் கதை வாசிப்பதை பெரிதும் ஊக்குவிக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மன்காரர் கத்தெ இன்ஸ்டிடியூட்டில் ஜெர்மன் கதை வாசித்தார். அந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது.மிக மங்கிய விளக்கொளியில் அவர் அருவம் போல இருக்க அவரது குரல் மட்டும் காற்றில் மிதந்து வந்து எங்களை ஆட்கொண்டது.மீண்டும் கூறுகிறேன். கதை சொல்வதற்கும் கதை வாசிப்பதற்கும் தனித் திறன் தேவை. நீங்கள் ( திரு பத்ரி) இதை இரண்டையும் ஊக்குவிப்பது நல்லது.

    ReplyDelete
  9. அன்புள்ள பத்ரி

    'அல்சேஷன் வந்த தமிழ்க் கூட்டம்' கதை எழுதியவர் இ.பா. அவருடைய புத்தக வெளியீட்டு விழாவுக்கு ராமசேஷனோ, ராபர்ட்ஸனோ ஐந்து நிமிடம் தாமதமாக வந்தாலோ, நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு அழைப்பிதழ் இன்றி வருகை புரிந்தாலோ, கதவைச் சாததடி என்று பாடி விரட்ட முடியாது சாரி அண்ட் கோ.

    எழுத்தாளனும் பதிப்பாளரும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் இலக்கிய விழாவை எப்படி நடத்துவது என்பது.

    நீங்கள் குறிப்பிட்ட 'பல புத்தகங்களோடு இ.பாவின் கிருஷ்ணா கிருஷ்ணாவும் வெளியான விழா' எஸ்.பொ 2005 ஜனவரியில் நடத்தியது. நான் தான் புத்தகத்தை வெளியிட்டவன். அந்த விழாவில் அத்தனை புத்தகங்களையும், எழுதியவர்களையும் வந்தவர்களையும் நன்றாகவே கௌரவித்தார்கள். பிட்டி தியாகராஜா அரங்கின் கதவுகள் அடைக்கப்ப்படவில்லை. நண்பர் தமிழச்சி தங்கபாண்டியனின் நிகழ்ச்சி அமைப்பு அது.

    அன்புடன்
    இரா.மு

    ReplyDelete
  10. ரெஜிமெண்டலைஸ் செய்து இலக்கியம் வளர்க்க முடியுமா என்பது சந்தேகமே.

    கூட்டத்தில் நீரழிவு நோய் உள்ளவர்கள் யாரும் இல்லை என நம்புகிறேன். Bladder நிறைந்து வெளியேற்ற முடியாமல் மணிக்கணக்கில் உட்கார்கிற் சித்திரவதையை இலக்கிய ஆர்வத்துக்காகப் பொறுத்துக் கொண்டால் அந்த அபூர்வ மனிதர்கள் ஆராதிக்கப்பட வேண்டியவர்கள்.

    வெள்ளைக்காரனே நூல் பிடித்த மாதிரி ஒழுங்காகத் திட்டமிட்டு நடத்தப்படும் conference களில் நம்பிக்கை இழந்து நெகிழ்ச்சி கொண்ட வடிவமான unconference முறைக்கு மாறிக் கொண்டிருக்கும் நேரம் இது. நான் கலந்து கொண்ட ஒரு unconference-இல் அ.இ.கா.க காரியக் கமிட்டி கூட்டம் போல் திண்டு தலையணை .. பேசுகிற யாராவது மொக்கையாக போட்டுத் தள்ளினால் அவர்கள் மேல் எறிந்து உட்கார வைக்க ரப்பர் பந்துகள் இப்படி கோலாகலமான சூழல். கனிமொழி கூட கலந்து கொண்ட டைடல் பார்க் கூட்டம் அது. ஒரு மணி நேரமே நடந்த அந்தக் கூட்டத்தில் முடிவான விஷயங்களை ஒரு வாரம் முழுக்க கான்பரன்ஸ் நடத்தினாலும் எட்ட முடியாது.

    கிழக்கின் அடுத்த கூட்டத்தை unconference ஆக நடத்திப் பார்க்கலாம்-கதவு மட்ட மல்லாக்கத் திறந்த் அரங்கில்.

    பேச்சு சுதந்திரத்தோடு கேட்கும் சுதந்திரத்தையும் மதிக்கலாம்.

    ReplyDelete
  11. முருகன்: அரங்கின் உள்ளேயே ஆண்கள், பெண்கள் இருவருக்குமான தனித்தனி கழிவறைகள் இருக்கின்றன.

    ஆனால், unconference வழியில் புத்தக வெளியிடு நிகழ்ச்சியைச் செய்வதில் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. சொல்லப்போனால் கிட்டத்தட்ட அந்த மாதிரிதான் அனைத்து புத்தக வெளியிட்டு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

    ReplyDelete
  12. //கிழக்கின் அடுத்த கூட்டத்தை unconference ஆக நடத்திப் பார்க்கலாம்-கதவு மட்ட மல்லாக்கத் திறந்த் அரங்கில். //

    :)))

    ReplyDelete
  13. தாமதமாக வந்ததால் அரங்கினுள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. புத்தகத்துக்கு மட்டும் பதிவு செய்து திரும்பினேன். புத்தகம் நேற்று வந்து சேர்ந்தது. மிக்க நன்றி!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  14. திரு சாரியின் கட்டுபாடும் கட்டளைகளும் பாராட்டுக்கும் புகழுக்கும் தகுந்தவை. மற்றவர்களும் இதை பின் பற்றலாம். அனானி சொல்வதை ஆதரிக்கிறேன். டேக் செண்டரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு இந்த ஒழுக்கம் சரியாகவே தெரிகிறது. பாராளுமன்றம், சட்டசபைகள், ஊராட்சிகள் இப்படி நடப்பின், நன்றாயிருக்கும். ஆனால், வீட்டுக்கு வீடு வாசப்படி. இப்படி தான் எல்லா இயக்கங்களும் நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை. பேச்சாளர் கொஞ்சம் பேசினால் போதும், எங்கள் விமர்சன மழைக்கு வாய்ப்பு வேண்டும் என்பது வாச்கர்களின் ஒரு பரிமாணம் :-) - ர. கோபு

    ReplyDelete
  15. //ரெஜிமெண்டலைஸ் செய்து இலக்கியம் வளர்க்க முடியுமா என்பது சந்தேகமே.//
    இரா.முருகன் மற்றும் இச்சட்டதிட்டங்களை இடது கையால் புறந்தள்ளுபவர்களுக்கு ஜெயமோகனின் இலக்கிய கூட்டம் பற்றிய இடுகை பரிந்துரைக்கப்படுகிறது!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete