மதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அருட்தந்தை ஜான் லூர்து சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். மதி பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியில் படித்தபோது அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர். இன்று காலை அவருடன் காரில் திருநெல்வேலியிலிருந்து மதுரை வரை பயணம் செய்தேன். அப்போது இயேசு சபை (ஜெசூயிட்ஸ்) பற்றிப் பேசிக்கொண்டு வந்தேன்.
1500-களில் இக்னேசியஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. ஒரு போர்வீரராக வாழ விரும்பியவர், காயம் பட்டு மருத்துவமனையில் இருந்தபோது படிக்கப் புத்தகம் கேட்டிருக்கிறார். அப்போது ‘இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை’ என்ற புத்தகம் மட்டும்தான் படிக்கக் கிடைத்துள்ளது. அந்தப் புத்தகம் அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது. அதன் விளைவாக உருவானதுதான் இயேசு சபை என்ற ‘ஆர்டர்’.
இந்தியாவில் இயேசு சபைக்கு மொத்தம் 16 வட்டங்கள் உள்ளன. தமிழக வட்டத்தினர் ஐந்து கல்லூரிகளையும் 16 பள்ளிக்கூடங்களையும் நடத்துகிறார்கள். அதில் சென்னையில் இருக்கும் லயோலா கல்லூரியும் ஒன்று.
இயேசு சபையில் பாதிரியாராக யார், எப்படிச் சேருகிறார்கள் என்று ஜான் லூர்துவிடம் கேட்டேன். சுமார் 14-15 வயதில் ஓர் இளைஞருக்கு தானாகவே இது தோன்றும்... என்றார். இறை அருளால் தாங்கள் துறவி ஆகவேண்டும் என்று தோன்றும் சிறுவர்கள், தங்கள் பெற்றோரின் அனுமதியுடன் இயேசு சபையினர் நடத்தும் முகாம்களுக்கு வருவார்களாம். அங்கே நடக்கும் வழிகாட்டுதலின்படி அவர்கள் சபையில் சேருகிறார்கள். அப்போது அவர்களுக்கு ‘நோவிஸ்’ என்று பெயர். ஓராண்டு ஆங்கிலத்தில் சிறப்புப் பயிற்சி நடைபெறுகிறது. அதன்பின் அவர்கள் தொடர்ந்து தங்கள் பள்ளி இறுதிப் படிப்பை முடித்து, கல்லூரியில் சேர்ந்து தங்களுக்கான விருப்பப் பாடத்தைப் படிக்கிறார்கள்.
கல்லூரிப் பட்டம் பெற்றபிறகு அவர்கள் தங்கள் முதல் சத்தியப் பிரமாணத்தை (First Vows) எடுத்துக்கொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு ‘ரீஜண்ட்’ என்று பெயர். இந்நிலையில் இவர்கள் ஏற்கெனவே துறவிகளாக (ப்ரீஸ்ட்) இருப்பொரிடம் ஜூனியராகச் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெறுகிறார்கள்.
அடுத்து இரண்டு ஆண்டுகள் தத்துவம் படிக்கிறார்கள். முன்னெல்லாம் மூன்று ஆண்டுகள் இருந்த இந்தப் படிப்பு, இப்போது இரண்டு ஆண்டுகள் மட்டும்தானாம். தத்துவத்தில் மேலை நாட்டுத் தத்துவங்களான நீட்ஷே, காந்த், ஹெகல், ஷோப்பனாவர் போன்றனவற்றுடன், இந்தியத் தத்துவங்களான வேதாந்தம், சமணம், புத்தம் ஆகியவையும் உண்டாம். அப்போது இவர்களுக்கு ‘பிலாசஃபர்’ என்று பெயர்.
அடுத்து நான்கு ஆண்டுகள் தியாலஜி - சமயவியல் படிக்கவேண்டும். இது கிறிதஸ்தவ சமய இயல். இதைப் படிக்கும்போது இவர்களுக்கு ‘தியலாஜியன்’ என்று பெயர்.
இதில் எந்தக் கட்டத்திலும் அவர்கள் வெளியேறலாம். இந்தப் படிப்பும் முடிந்தவுடன், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் துறவி (ஆர்டெயிண்ட் ப்ரீஸ்ட்) என்ற நிலையை அடையலாம். படிப்புடன், மனக்கட்டுப்பாடும் இருந்தால்தான் இந்நிலையில் அவர்களுக்கு துறவு அளிக்கப்படுகிறது. (ஏட்டளவில்... நிஜம் என்பது வேறாக இருக்கலாம்!)
அதன்பின் அவர்கள் ஏதாவது ஒரு பாரிஷில் உள்ள தேவாலயத்தில் ப்ரீஸ்ட் ஆக இருக்கலாம். அல்லது ஜெசூயிட் கல்வி நிலையங்களில் ஆசிரியராகச் செல்லலாம்.
***
இதுதான் நான் கேட்டுக்கொண்டதன் சுருக்கம். இதில் புரிதல் தவறு இருந்தால் அது என் தவறு மட்டுமே. சொன்னவரின் தவறு அல்ல. மறந்துவிடும் முன்னால் பதிவுக்காக இங்கே!
***
விளம்பரம்: வோல்ட்டேர் எழுதிய கேண்டீட் நாவலில் தென்னமெரிக்காவின் இயேசு சபைப் பாதிரியார்களை சாடு சாடு என்று சாடியிருப்பார். அந்த நாவலின் தமிழாக்கம் - நான் செய்தது - இங்கே. அதனை வாங்கிப் படித்து இன்புறுங்கள்!
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
4 hours ago
இதோ அந்த ஃபாதர் உங்ககிட்ட சொல்லாத சில விஷயங்கள். 1592 இல் ஏசு சபையின் முதல் மாநாடு ரோமில் நடைபெற்றது அப்போது யூதர்களின் சந்ததிகள் அவர்கள் கிறிஸ்தவர்களாகவே இருந்தாலும் கூட ஏசு சபையில் சேரக்கூடாது என விதி கொண்டு வந்தார்கள். ஏசுவே -அப்படி ஒருவர் இருந்திருக்கக் கூடிய பட்சத்தில்-ஏசுசபைக்கு விண்ணப்பித்திருந்தால் கூட அவருக்கு ஏசுசபையில் இடம் கிடைத்திருக்காது. 1923 இல் இந்த விதி மீண்டும் உறுதி செய்யப்பட்டது. ஒரு சின்ன மாற்றம் செய்யப்பட்டது. சபையில் சேருபவர்கள் ஐந்து தலைமுறைக்கு தங்கள் வம்சத்தில் யூதர்கள் எவரும் இல்லை என நிரூபிக்க வேண்டும். பிரபுக் குடும்பங்களுக்கு விலக்கு உண்டு. இந்த விதி 1923 இல் நான்கு தலைமுறைகள் என குறைக்கப் பட்டதுடன் ஆண்கள் வழி வம்சாவழியில் யூதர்கள் இல்லை என நிரூபித்தால் போதும் என 'தளர்த்தப்பட்டது'. இந்த விதி நாஸிகளால் கடன் வாங்கப்பட்டது. இத்தகைய பிறப்பின அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை மறுக்கப்படும் மற்றொரு அரசியல் இயக்கம் திராவிடர் கழகம். 1946 இல் நாஸி அரசு வீழ்ந்து யூதவெறுப்பு சர்வதேச மானுடப்பார்வையில் ஒரு குற்றமாகப் பார்க்கப்படும் காலகட்டத்தில்தான் இந்த விதி நீக்கப்பட்டது. (ஆனால் சில நேரங்களில் யூதர்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களின் பிள்ளைகள் ஏசுசபையில் 1946க்கு முன்னரே சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இவை விதி விலக்குகள் என்பதுடன் இத்தகைய யூத-கிறிஸ்தவர்களுக்கு தனி விண்ணப்ப படிவமும் நேர்முகமும் நடத்தப்பட்டது.) ஐரோப்பாவிலிருந்து வந்து தென்னமெரிக்க தீவுகள் சிலவற்றில் குடியேறிய யூதர்களையும் அங்கிருந்த பூர்விகக் குடிகளையும் "சட்டப்படி" விரட்டியடிப்பதில் பிரான்ஸு ஏசு சபை பாதிரிகள் காட்டிய தீவிரம் பிரசித்தி பெற்றது. ஏசு சபையினரின் மற்றொரு பிரசித்தி பெற்ற பங்களிப்பு அடிமை வியாபாரத்தில். குறிப்பாக அட்லாண்டிக்-ஆப்பிரிக்க அடிமை வியாபாரம் ஏசு சபையினருக்கு செல்வ செழிப்பைத் தந்தது என்றே சொல்லவேண்டும். ஏசுசபை பாதிரியாரான சங்கைக்குரிய மறைத்திரு ஆண்டானியோ வெரைரா ஏன் அடிமை வியாபாரம் தேவை அடிமைகள் தேவை என்பதை நியாயப்படுத்தி எழுதிய விளக்கம் புகழ்பெற்ற ஒன்றாகும். "மத்திய ஆப்பிரிக்காவில் பாகனிய இருளில் இருக்கும் அடிமைகளை பிரேசில் எனும் ஆண்டவனின் அருளாட்சியில் இருக்கும் கிறிஸ்தவ நாட்டுக்குக் கொண்டு வர அடிமை வியாபாரமே உதவுகிறதன்றோ" என்கிற அவரது வாதம் எண்ணி எண்ணி இறும்பூதல் அடையலாம்...இவ்வாறு உருவாக்கப்பட்ட சாம்ராஜ்ஜிய சொத்துக்களின் மேல் நின்றுகொண்டு இந்தியாவில் மாவோயிஸ்ட்களின் மனித உரிமைக்காக ஜெசூட் பாதிரியார்கள் குரல் கொடுக்கும் போது அக்குரலின் தார்மீக அறச்சீற்றம் நோக்குங்கால் நம் என்பும் மெழுகாய் உருகிறதன்றோ.... :)
ReplyDeleteஅநியாயம். ஜேசுயிட்களின் மீது பொறாமையால்தான் இப்படி எல்லாம் சொல்லுகிறீர்கள்.
ReplyDelete“திராவிடர்” என்ற இனத்தை ‘உருவாக்கிய’ எங்கள் அண்ணன் கால்ட்வெல் பாதிரி ஒரு ஜேசூய்ட் கிடையாது. இருந்தாலும் அவர் மிகப் பெரிய அடிமைப் பண்ணை நடத்தியவர் என்ற உண்மையையும், அங்கே பண்ணையில் மாடுகளுக்கு அடையாளத்திற்காக சூடு வைப்பது போல கருப்பர்களுக்கும் சூடு வைத்தார்கள் என்பது போன்ற உண்மைகளை வெளியே சொல்லாமல் மறைப்பதற்குக் காரணம் என்னவென்பதை நான் கேட்பதற்கு உங்களிடம் பதிலிருந்தால், இந்த மேடையிலே எனக்குப் பதிலளியுங்கள் என்று சவால் விடுகையிலே, எங்கள் அண்ணன் பத்ரி அவர்களுக்கு இந்த மல்ர்மாலையை மாணிக்க மாலையாக எண்ணி போர்த்துகையிலே....
பத்ரி,
ReplyDeleteநீங்கள் சொன்னதெல்லாம் சரி தான் .ஆனால் இது இயேசுசபைக்கு மட்டுமேயுள்ள பிரத்யேக முறை என்றில்லை . பாதிரியார் ஆக வேண்டுமென்றால் எந்த சபையில் (சலேசியன் சபை , பிரான்சிஸ்கன் சபை போன்ற பல்வேறு சபைகள் உள்ளன) சேர்ந்தாலும் இது போன்ற முறைகள் உள்ளன ..எந்த சபையாக இருந்தாலும் ஒருவரை குருவாக திருநிலைப்படுத்துபவர் ஆயர் (bishop) தான் . ஒவ்வொரு சபையும் பிரதானமான ஒரு செயல் நோக்கத்தை கொண்டிருக்கிறார்கள் ..இயேசு சபையைப் பொறுத்தவரை அவர்கள் பிரதானமாக கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபடிகிறார்கள் . மற்றபடி நீங்கள் சொன்ன படிப்பு முறைகள் ஓரு சில சிறிய வேறுபாடுகளோடு அனைத்து சபைக்கும் ஒன்று தான் .
சவேரியார் தான் இந்தியாவுக்கு வந்த முதல் ஜெசூட் . 150 வருடத்திருக்கு முன் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் இருந்த கல்வியை அனைவருக்கும் எடுத்து சென்றவர்கள் ஜெசுயட்கள் . இந்தியாவின் தலை சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனம் (XLRI) ஜெசுயட்களால் நடத்த படுகிறது
ReplyDelete