Tuesday, June 29, 2010

தன்னார்வலர்கள்



தமிழ் இணைய மாநாடு சிறப்பாக நடைபெற உதவியவர்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள் தன்னார்வலர்கள். கோவை பாரதியார் பல்கலைக்கழகம், PSGR கிருஷ்ணம்மாள் கலைக் கல்லூரி மற்றும் பிற கல்லூரிகளிலிருந்து வந்திருந்தனர். மொத்தம் மூன்று குழுக்களாக இவர்கள் இருந்தனர். எல்லாவித எடுபிடி வேலைகளுக்கும் என்று ஒரு குழு. கட்டுரைகள் படைக்கப்படும் 5 அரங்கிலும் உள்ளே இருந்து உதவி செய்ய ஒரு குழு. மேடையில் ஏறி ஒவ்வோர் அமர்வின் தலைவரையும் அறிமுகப்படுத்த ஒரு குழு. (மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது அரங்குகளில் உள்ளே இருந்து உழைத்த குழு.)

ஒவ்வொரு நாள் காலையும் என் முதல் வேலை, அந்த நாள் அன்று ஒவ்வொரு அரங்கிலும் என்னென்ன அமர்வுகள் உள்ளன என்ற பட்டியலை ஒவ்வொரு அரங்குக்குமான தன்னார்வலர்கள் கையில் கொடுப்பது. பின் அந்த அரங்கில் தலைமை தாங்க உள்ளோர் பற்றிய குறிப்புகளைக் கொடுப்பது. சிறப்பு நிகழ்ச்சி என்றால் அது நிகழும்போது அறிவிப்பாளர் என்ன பேசவேண்டும் என்பதை விளக்கமாக வரி வரியாக எழுதிக்கொடுத்து, அவர்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டு, மாற்றங்களைத் தெரிவிப்பது.



பிற தன்னார்வலர்கள் பங்கேற்போருக்குப் பல விதங்களிலும் உதவி புரிந்தனர். உதவி கேட்போருக்கு உதவி செய்வது, ஏதேனும் ஆவணங்களை நகலெடுக்கக் கேட்டால் செய்துதருவது, பங்கேற்பாளர்களுக்குத் தரவேண்டிய பொருள்களை விநியோகிப்பது என்று பல வேலைகள். இவர்களில் சிலர் சுடுசொல்லால் தாக்கப்பட்டனர். பங்கேற்பவர் ஒருவரது கடுமையான வார்த்தைகளைத் தாளமாட்டாது ஒரு பெண் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டார். அவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

மேடையில் பேசிய ஒரு பெண்ணின் குரல், ஏற்ற இறக்கம், உச்சரிப்பின் தன்மை ஆகியவை மிக அருமையாக இருந்தன. இந்த மாணவர்கள் அனைவருமே முழு ஆர்வத்துடன் உழைத்தனர். நாம் சொல்லித் தருவதைச் சட்டெனப் புரிந்துகொண்டு, செயல்படுத்தினர். ஏனோ தானோவென்று நடந்துகொள்ளவில்லை. பொறுப்புடன் செயல்பட்டனர்.

நம் எதிர்கால மனித வளம் இவர்கள். இவர்களுடன் சேர்ந்து வேலை செய்ததில் எனக்கு முழு மகிழ்ச்சி.

[படங்கள்: தேவராஜன்]

6 comments:

  1. செம்மொழி மாநாட்டு பற்றி வந்த அத்தனை கட்டுரைகளிலும் இது மிக சிறப்பு,
    உழைத்தவர்களைப் பற்றிய செய்திகளைத் தாங்கிய கட்டுரை.

    ReplyDelete
  2. //இவர்களில் சிலர் சுடுசொல்லால் தாக்கப்பட்டனர். பங்கேற்பவர் ஒருவரது கடுமையான வார்த்தைகளைத் தாளமாட்டாது ஒரு பெண் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டார். அவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.//

    இது போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தன்னார்வலர்களைத் தெரிவு செய்யும்போது, ஓரளவுக்கேனும் தோல் தடித்தவர்களையே தெரிவு செய்வது அவசியம்.

    வேறு சில நிகழ்வுகளில் நான் பார்த்த தன்னார்வலர்கள் சிலர் பங்கேற்பாளர்களால் அவமானப்படுத்தப்பட்டால் அவர்களிடம் தங்கள் உணர்வுகளைக் காட்டிக்கொள்ளாமல் இந்தப் பக்கம் வந்து “அவன் கிடக்கிறான் தேவடியாப் பயல்...” என்று திட்டி ஆத்திரத்தைத் தணித்துக்கொள்வதைக் கண்டிருக்கிறேன். பெண் தன்னார்வலர்கள் அப்படிப் பேசுவார்களா என்பது தெரியவில்லை. அப்படிப் பேசினாலும் தவறில்லை.

    ReplyDelete
  3. இந்த மாநாட்டின் பயனர் சேவைத் தரம் மிகவும் மட்டமாய் இருந்ததன் காரணம், பட்டறிவில்லாத கல்லூரி மாணவர்களை முன் நிறுத்தி, எல்லோருக்கும் கை விரிக்க வைத்ததுதான் என நினைக்கிறேன். பொதுவாக எதைக் கேட்டாலும் இல்லை, இது நடக்காது, என்று ஒரு தாசில்தார் அலுவலகப் பணியாளர் போல நடந்து கொண்டது மட்டுமல்லாமல், அரசுப் பணியாளர்களுக்கே உரிய திமிர், ஏளனம், அக்கறையின்மை, அதிகாரம் இவற்றை எல்லாம் இந்த மாநாட்டில் பார்க்க முடிந்தது.

    அடையாள அட்டைக் குழப்பத்தில் தொடங்கி பயனர் உறவுநிலை எல்லாவற்றிலுமே இந்த மாநாட்டின் தரம் படு மட்டம். தன்னார்வலர்களை முன் நிறுத்துவதில் தவறில்லை. ஆனால், கல்லூரி மாணவர்களை நிறுத்தி இருக்கக் கூடாது. அப்படியே நிறுத்தினாலும், அருகில் பொறுப்பான மூத்த அலுவலர்கள் இருந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  4. Will you provide them with jobs, internships?

    ReplyDelete
  5. தன்னார்வலர்களின் பணி உண்மையில் வியக்க வைத்தது.. அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.. பாவம் அந்த மாணவர்கள்.. சரியாக யாரும் சாப்பிடக் கூட இல்லை.. அதை எல்லாம் காட்டிக் கொள்ளாமல் உழைத்தார்கள்..

    ReplyDelete
  6. // Anonymous said...இந்த மாநாட்டின் பயனர் சேவைத் தரம் மிகவும் மட்டமாய் ..
    பெயரை வெளிப்படையாகச் சொல்லவே துப்பில்லை. மாணவரைக் குறை சொல்ல எங்கிருந்து கிளம்பினீர்கள்? தானும் செய்ய மாட்டான், அடுத்தவனையும் செய்ய விட மாட்டான் என்ற அவப்பெயர் தமிழனுக்கு தேவையில்லை. கடுமையான வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete