Sunday, July 11, 2010

புத்தகமா, விஷப் புகையா?

கடிதத்தைப் பிரித்துப் பார்த்ததுமே எனக்கு ஒரே சந்தோஷம். ரஷ்யாவிலிருந்து பெரிய ஆர்டர் வந்திருந்தது. கொஞ்ச நஞ்சமல்ல. 50,000 பிரதிகளுக்கான ஆர்டர்.

எடுத்துச்சென்று என் சேர்மனிடம் காட்டினேன். மலர்ந்த அவரது முகம், ஒரு விநாடியில் சுருங்கிவிட்டது. இது நடக்காது என்றார். ஏன் என்றேன். அந்த அகராதி, பிரிட்டன் பதிப்பாளர் ஒருவருடையது. அவர்களுடைய இந்தியக் கிளைமூலம் குறைந்த விலைப் பதிப்பாக அச்சிட்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாள், பங்களாதேசம் ஆகிய நாடுகளில் மட்டும் விற்கிறார்கள். அதை வேறு எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யமுடியாது.

நான் போய் அந்த நிறுவனத்திடம் பேசிப்பார்க்கிறேன் என்றேன். முடிந்தால் செய் என்றார்.

அகராதி நிறுவனத்தின் இந்திய மேனேஜரிடம் சென்று ஆர்டர் பற்றிய விவரத்தைச் சொன்னேன். எந்த நாடு என்று சொல்லவில்லை. அந்நிய நாடு ஒன்றிடமிருந்து 5,000 பிரதிகளுக்கு ஆர்டர் வந்துள்ளது என்றேன். உடனடியாக, முடியாது என்று சொன்னார். இல்லை, நீங்கள் உங்கள் தலைமை அலுவலகத்துடன் பேசிவிட்டு பதில் சொல்லுங்கள் என்றேன்.

அடுத்த நாள் போனபோது, பிரிட்டனும் முடியாது என்று சொன்னதாகச் சொன்னார். இப்போது கொஞ்சமாக எண்ணிக்கையை உயர்த்தினேன். 10,000 வேண்டும் என்கிறார்கள் என்றேன். நான் இருக்கும்போதே லண்டனுக்கு போன் போடச் சொன்னேன். லண்டன் விடாக்கண்டனாக இருந்தது. வேண்டுமானால் லண்டனிலிருந்து நேரடியாக வாங்கிக்கொள்ளவேண்டியதுதானே என்றார்கள். லண்டன் விலை ஒத்துவராது; இந்திய விலைதான் வேண்டும் அவர்களுக்கு என்பதை வலியுறுத்தினேன். கணக்கு போட்டுப் பார்த்துவிட்டு, 10,000 என்றால் முடியாது என்று சொன்னார்கள்.

அதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். எடுத்த எடுப்பிலேயே நான் 50,000 என்று சொன்னால் ஆரம்பமே புஸ் என்று போயிருக்கும். அடுத்த நாள் போய், 25,000 பிரதிகள் வேண்டும் என்றால் முடியுமா என்றேன். இப்போது கணக்கெல்லாம் போட்டுப் பார்த்தவர்கள் ஓகே சொன்னார்கள். பின்னர் இரு நாள்கள் கழித்து 50,000 பிரதிகள் என்று பேசி, எங்களுக்கு நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்குமாறு செய்துகொண்டேன். இறுதியாக ஆர்டர் போடும்போதுதான் ஷிப்மெண்ட் போகவேண்டியது ரஷ்யா என்ற தகவலைக் கொடுத்தேன்.

குறிப்பிட்ட தினத்துக்குள் 50,000 பிரதிகளையும் தயார்செய்து கப்பல் வழியாக அனுப்ப அகராதி நிறுவனமே ஒப்புக்கொண்டது. கப்பலிலும் அனுப்பிவிட்டார்கள் என்ற தகவல் கிடைத்தது.

சில வாரங்கள் கழித்து ரஷ்யாவிலிருந்து டெலக்ஸ் வந்திருந்தது. நிலைமை தீவிரம்; உங்கள் கிரேட்டைத் திறக்கும்போது அதிலிருந்து கிளம்பிய ஏதோ நாற்றம் காரணமாக எங்கள் பணிப்பெண்கள் மூன்று பேர் மயங்கி விழுந்துவிட்டார்கள்; உங்கள் பார்சல்கள் அனைத்தும் குவாரண்டைனில் கிடப்பில் உள்ளது.

இது என்னடா பிரச்னை என்று ஆடிப்போய்விட்டேன். உடனடியாக டெலக்ஸை எடுத்துக்கொண்டு சேர்மனிடம் விரைந்தேன். தம்பி, நீ பிரச்னையைச் சரி செய்யவில்லை என்றால், உனக்கு வேலை இல்லை என்பதை ஞாபகம் வைத்துக்கொள் என்று அன்புடன் சொன்னார். நேராக அகராதி நிறுவன இந்திய மேனேஜரிடம் சென்றேன். அவரிடம், அய்யா, நாம் இந்தப் பிரச்னையை நேர் செய்யவில்லை என்றால் எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் வேலை போய்விடும் என்றேன்.

எங்கே புத்தகங்களை அச்சடித்தார் என்று கேட்டேன். கொல்கத்தாவில் உள்ள சரசுவதி பிரிண்டர்ஸ் என்ற உயர்தர நிறுவனத்தில்தான் என்றார். நேராக கொல்கத்தா சென்றேன். அங்கே பிரிண்டர்களிடம் பேசியதில், அவர்கள் தாங்கள் வேலை செய்த அச்சு இயந்திரங்கள், பயன்படுத்திய இங்க் ஆகியவற்றைக் காட்டினார்கள். அவற்றில் ஏதும் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. கொஞ்ச நேரம் கழித்து எங்கே பைண்டிங் செய்தார்கள் என்று கேட்டேன். 50,000 பிரதிகள் என்பதால் பத்து பேரிடம் பிரித்துக் கொடுத்து பைண்டிங் செய்ததாகவும், செய்த இடம் எந்தத் தெருவில் உள்ளது என்பதையும் சொன்னார்கள்.

நேராக அங்கே விரைந்தேன். விஷயம் என்ன என்பது ஓரளவுக்குப் புரிந்துவிட்டது. கொல்கத்தாவில் அது அடைமழை நேரம். பைண்டிங் செய்ததும் காயவைக்கவேண்டும். ஆனால் ஆர்டரை அனுப்ப நேரம் இல்லாது போயிருக்கும். எனவே காயாத புத்தகங்களை அப்படியே வைத்துக் கட்டி அனுப்பியிருப்பார்கள். விசாரித்தபோது, அதுதான் நடந்துள்ளது என்பது தெரிந்துபோனது.

ஈரமான பைண்டிங் கொண்ட 50,000 புத்தகங்கள் ஒரு கிரேட்டில். அவை கொஞ்சம் கொஞ்சமாகக் காயும்போது, அவற்றிலிருந்து கிளம்பும் ஒருவித வாயு சேர்ந்துபோய், கிரேட்டைத் திறக்கும்போது பிரச்னை ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனாலும் அதில்போய் மயங்கி விழும் அளவுக்கு ரஷ்யப் பெண்கள் அவ்வளவு மென்மையானவர்களா என்பதில் எனக்குச் சந்தேகம்.

எந்தப் பசையைப் பயன்படுத்தினார்கள் என்று கேட்டேன். ஃபெவிகால் நிறுவனத்துடையது என்றார்கள். நேராக அந்தப் பசையை வாங்கிக்கொண்டு தேசிய வேதியியல் பரிசோதனைச் சாலைக்கு வந்து அவர்களிடம் கொடுத்து நடந்ததைச் சொல்லி, அதனைச் சோதனை செய்து ஒரு சான்றிதழ் தருமாறு கேட்டுக்கொண்டேன். இந்தப் பசையில் உயிரை மாய்க்கும் ஒன்றும் இல்லை என்று எழுதிக்கொடுத்தார்கள்.

அந்தச் சான்றிதழுடன் நேராக ரஷ்யா சென்றேன். ஒடெஸா என்ற துறைமுகத்தில்தான் அகராதிகள் கிடந்தன. அங்கே போய் சான்றிதழைக் கொடுத்தாலும் அங்குள்ள அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். வேண்டுமானால் நீயே திறந்துகொள் என்று கடைசியாக அனுமதி கொடுத்தனர். என்னுடன்கூட யாரும் வரவில்லை. உயிரெல்லாம் போகாது என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. இதற்குள் புத்தகங்கள் அங்கு இருந்து மேலும் பல வாரங்கள் ஆகிவிட்டன. எனவே நான் போய்த் திறந்தபோது ஒரு பிரச்னையும் இல்லை. நான் உயிருடன் இருப்பதைப் பார்த்த பின்னரே சில ரஷ்யர்கள் அருகில் வந்தனர்.

பின் ஒரு பிரச்னையும் இல்லாமல் புத்தகங்களை பார்ட்டியிடம் கொடுக்கமுடிந்தது. அதற்கான பணமும் வந்துசேர்ந்தது. என் வேலையும் பிழைத்தது.

ஒரு ஆர்டர் கிடைத்தால் மட்டும் போதாது. ஒரு விற்பனையாளன் அந்த ஆர்டர் பத்திரமாக கஸ்டமர் கைக்குச் சேரும்வரை அதைப் பின்தொடரவேண்டும். அதேபோல எந்த சிக்கல் வந்தாலும் அதைச் சரி செய்யத் தெரிந்திருக்கவேண்டும்.

=======

மேலே தன்மையில் நான் விவரித்த சம்பவம், சுகுமார் தாஸ், USB Publishers and Distributors நிறுவனத்தில் வேலை செய்தபோது நடந்ததாகச் சொன்னது.

அத்தனை ஆர்டர்களும் உனக்குத்தான்!

9 comments:

  1. தன்னம்பிக்கை தொடர் அடுத்த புத்தகம் தயார்

    ReplyDelete
  2. நல்ல நிர்வாகப் பாடம்! என் அலுவலகத்தில் பகிர உகந்தது.
    நன்றி பத்ரி அவர்களுக்கு!

    ReplyDelete
  3. ஆர்டர் எடுத்தவுடன் நம் வேலை முடிந்தது என நினைக்கும் மனப்பான்மை கொண்ட நம் ஆட்கள் இதை கண்டிப்பாக படிக்க வேண்டும் .

    ReplyDelete
  4. //எந்தப் பசையைப் பயன்படுத்தினார்கள் என்று கேட்டேன். ஃபெவிகால் நிறுவனத்துடையது என்றார்கள். நேராக அந்தப் பசையை வாங்கிக்கொண்டு தேசிய வேதியியல் பரிசோதனைச் சாலைக்கு வந்து அவர்களிடம் கொடுத்து நடந்ததைச் சொல்லி, அதனைச் சோதனை செய்து ஒரு சான்றிதழ் தருமாறு கேட்டுக்கொண்டேன். இந்தப் பசையில் உயிரை மாய்க்கும் ஒன்றும் இல்லை என்று எழுதிக்கொடுத்தார்கள்.
    //

    Excellent !!

    ReplyDelete
  5. //உங்கள் கிரேட்டைத் திறக்கும்போது அதிலிருந்து கிளம்பிய ஏதோ நாற்றம் காரணமாக எங்கள் பணிப்பெண்கள் மூன்று பேர் மயங்கி விழுந்துவிட்டார்கள்; //

    அகராதியைப் படிக்க முயன்று மயங்கி விழுந்தவர்கள் எத்தனை பேரோ?

    ReplyDelete
  6. பதிப்பாளர் சில சமயம் துப்பறிவாளரனாகவும் இருக்க வேண்டுமோ! கடைசிப் பாராவில் follow என்பதைப் பின்தொடர என மொழிபெயர்த்திருக்கலாம். நீங்கள் ஒரு மதத்தைப் பின்பற்றுகிறீர்கள், முன்னே செல்லும் காரைப் பின்தொடர்கிறீர்கள். ஆங்கிலத்தில் இரண்டும் follow தான்.

    ReplyDelete
  7. அனான்: மாற்றம் செய்துவிட்டேன்.

    ReplyDelete
  8. செம்ம த்ரில்லிங்.ஜெப்ப்ரி ஆர்ச்சரின் கதைபோல மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.அவரை பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete