Thursday, July 01, 2010

தமிழ் இணைய மாநாடும் தமிழ் வலைப்பதிவர்களும்

தமிழ் இணைய மாநாட்டில் நடந்த பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் மற்றுமொரு குழப்பம், தமிழ் வலைப்பதிவர் சிலர் தாங்கள் அவமதிக்கப்பட்டதாக நினைத்துப் பொங்கி எழுந்தது.

என் பார்வையில் அந்த வரலாற்றைப் பதிந்துவைக்கிறேன்.

மாநாட்டுக்கான கட்டுரைகளை ஏற்பது, மறுப்பது; அமர்வுகளை உருவாக்குவது; அமர்வுகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது; யாரை எந்த அமர்வில் பேசவைப்பது, எந்த வரிசையில் பேசவைப்பது என்று முடிவு செய்வது; மாநாட்டுக் கட்டுரைகள் அடங்கிய மலரில் எந்தக் கட்டுரைகள் எந்த வரிசையில் வரவேண்டும் என்று தீர்மானிப்பது - அனைத்தும் பேராசிரியர் வாசு அரங்கநாதனின் தலைமையின்கீழ் இருந்த ஒரு குழுவின் பொறுப்பு. வாசு, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர். (நான் அந்தக் குழுவில் இல்லை.)

கட்டுரைகள் தீர்மானிக்கப்பட்டு அமர்வுகளும் முடிவாயின. அந்த நேரத்தில் நான்கு அரங்குகளில் ஒரே நேரத்தில் நான்கு அமர்வுகள் நடைபெறும் என்று முடிவாகியிருக்கிறது. ஆனால் ஐந்தாவது ஓர் அரங்கு கிடைக்கும் என்றும் அந்த அரங்கில்தான் முகப்பரங்கச் சொற்பொழிவுகள் நடக்கும் என்றும் கடைசியில் முடிவாகியுள்ளது. முகப்பரங்கத்தில் பேச சில முக்கியஸ்தர்கள் பிரத்யேகமாக அழைக்கப்பட்டிருந்தனர். முகப்பரங்கச் சொற்பொழிவுக்குப் பின் அந்த அரங்கத்தின் என்ன செய்வது என்று யாரும் ஆரம்பத்தில் யோசிக்கவில்லை.

பின்னர் அந்த யோசனை திடீரென வர, உத்தமம் உறுப்பினர்கள் சிலர் இதுகுறித்து விவாதித்துள்ளனர். (அதில் நான் இல்லை.) முடிவான தீர்மானங்கள் ஏதும் இல்லாத நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ என்பவரிடமும் உத்தமம் நிர்வாகி ஒருவர் இதுபற்றிப் பேசியிருக்கிறார். அவர்களுக்கு இடையில் என்ன பேச்சு நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஃபெர்னாண்டோ, முகப்பரங்கத்தில் யாரைக் கொண்டு என்ன செய்வது என்பதுபற்றி விரிவாகத் திட்டமிட்டு, வலைப்பதிவர்கள் பலரைக் கலந்தாலோசித்து, ஒரு முழு நிகழ்வையே முடிவு செய்துள்ளார்.

இறுதிவரை, இந்த முடிவுபற்றி உத்தமம் அமைப்புக்குத் தகவல் ஏதும் செல்லவில்லை.

எனவே இந்த வலைப்பதிவர்களுக்கான அழைப்பிதழ், அடையாள அட்டை, தங்குமிடம் ஆகியவை எதுவும் முடிவாகவில்லை. (ஆனால் அடையாள அட்டைதான் பெரும் குழப்பம் என்றாகிவிட்டது என்று ஏற்கெனவே எழுதியிருந்தேன்.)

மாநாடு தொடங்கும்போது வாசுவுக்கு உதவியாளராக நான் போய்ச் சேர்ந்தேன். அவர் உருவாக்கிய மாநாட்டு நிகழ்ச்சி நிரலை வைத்துக்கொண்டு, அதில் தேவைப்படும் மாற்றங்களை அவரது மேற்பார்வையின்கீழ் செய்துதருவது; ஒவ்வொரு அரங்கத்தின் முன்னும் உள்ள கணினித் திரையில் அடுத்தடுத்து என்ன நிகழ்வுகள் நடக்கும் என்ற தகவலை அளிப்பது ஆகியவை என் வேலைகள்.

24 ஜூன் அன்று தமிழ் இணைய மாநாடு தொடங்கி மாலை நேரத்தில் சஞ்சய் காந்தி, ஓசை செல்லா இருவரும் என்னிடம் வந்தனர். ‘உத்தமம் அமைப்பு தமிழ் வலைப்பதிவாளர்களை அவமதிக்கிறது’ என்று கோபத்துடன் சொன்ன ஓசை செல்லா, இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் பேசப்போவதாகச் சொன்னார். எனக்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. எதுவாக இருந்தாலும் வெங்கட்டிடமோ அல்லது வாசுவிடமோ பேசுமாறு கேட்டுக்கொண்டது ஞாபகம் இருக்கிறது. வெங்கட்தான் உத்தமத்தின் தலைவர்.

வாசு, வெங்கட் இருவருக்கும் இது பற்றி ஒன்றும் தெரியவில்லை. இதற்கிடையே மதுமிதா, திலகபாமா இருவரும் என்னிடம் பேசினர். அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக விவரங்களைத் திரட்டினேன். ஓரளவுக்குத் தகவல் திரட்டியபின் பிரச்னை என்ன என்று கொஞ்சமாகப் புரிந்தது. இதற்கிடையில் வலைப்பதிவர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளனர். அவரும் வெங்கட்டுக்குத் தகவல் தெரிவித்தார்.

பின் வாசுவின் அனுமதியுடன் நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்களைச் செய்து, முகப்பரங்கில் இரு நாள்களில் சுமார் 5 மணி நேரம் இடம் கிடைக்குமாறு செய்தேன். அதற்குள்ளாக தினமலர் பத்திரிகைக்குத் தகவல் அளிக்கப்பட்டு அடுத்த நாள் அவர்கள் மகிழ்ச்சியுடன், இணைய மாநாட்டில் குழப்பம் என்று செய்தி எழுதிவிட்டனர்.

முதல் நாள் மாலையிலேயே சஞ்சய் காந்திக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அடுத்த இரு நாள்களும் மாலை வேளையில் வலைப்பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. கலந்துகொண்ட வலைப்பதிவர்கள் அனைவருக்கும் மாநாட்டு மலரும் தரப்பட்டது.

இந்தப் பிரச்னையை வலைப்பதிவர்கள் அமைதியுடன் எதிர்கொண்டிருக்கலாம். உணர்ச்சிவசப்படுவதால் பிரச்னைகள் தீரப்போவதில்லை. எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்துபவர்கள், யாரையும் அவமதிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் நடந்துகொள்ளமாட்டார்கள்.

இங்கு முக்கியமான பாடம், உத்தமம் நிர்வாகக்குழுவினர் அடுத்த ஆண்டுகளில் என்ன செய்யக்கூடாது, எதைச் சரியாகச் செய்யவேண்டும் என்பதை institutionalise செய்யவேண்டும் என்பதே. நிர்வாகக் குழுவிலோ, மாநாட்டுக் குழுவிலோ மாற்றங்கள் இருந்தாலும் ஒரு அமைப்புக்கு என்று தனியான மெமரி தேவை.

9 comments:

  1. உத்தமம் நிர்வாகிகள் சரியான ‘முட்டைத் தலையர்கள்’ என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் உள்ள அடி முட்டாளுக்குக்கூட கருணாநிதி மொழியின் பெயரால் அரசுச் செலவில் நடத்தும் கட்சி மாநாட்டில் பங்குபெற்றால் என்னென்ன இடர்பாடுகளும், அவமானங்களும் நேரும் என்பது தெரியும். உத்தமம் நிர்வாகிகளுக்கு இது புரியவில்லையா அல்லது நிர்ப்பந்திக்கப்பட்டனரா அல்லது செலவு மிச்சம் என்பதால் ஒப்புக்கொண்டனரா என்பது குறித்தும் உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
  2. என்னால் நம்ப முடியவில்லை.

    ஒரு வலைப்பதிவாரான வெங்கட் உத்தமத்தின் தலைவராக வரமுடியும்போது, தலைவராக இருந்து இணைய மாநாட்டை நடத்தும்போது வலைப்பதிவர்கள் புறப்பணிக்கப்பட்டார்களா ?


    ஒருவேளை வெங்கட்டைப்போல் வலைப்பதிவில் பெரும்பான்மைப் பதிவுகள் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் அனுமதிக்கப்பட்டிருப்பார்களாக்கும்.

    ReplyDelete
  3. //அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ என்பவரிடமும் உத்தமம் நிர்வாகி ஒருவர் இதுபற்றிப் பேசியிருக்கிறார்//

    யாரோ ஒரு நிர்வாகி என்று சொல்லி எல்லாம் தப்பிக்க முடியாது.. அவட் பெயர் மணியம். உத்தமத்தின் செயல் இயக்குநர். தலைவருக்கு அடுத்த நிலை அதிகாரம் கொண்டவர் என நினைக்கிறேன். உத்தமம் இணையதளத்திலும் அவர் பெயர் தான் பிரதானமாக இடம் பெற்றிருக்கிறது.

    //எனவே இந்த வலைப்பதிவர்களுக்கான அழைப்பிதழ், அடையாள அட்டை, தங்குமிடம் ஆகியவை எதுவும் முடிவாகவில்லை. (ஆனால் அடையாள அட்டைதான் பெரும் குழப்பம் என்றாகிவிட்டது என்று ஏற்கெனவே எழுதியிருந்தேன்.)//

    நான் உட்பட பல பதிவர்களிடமும் அடையாள அட்டை இருந்தது என்பதை மறந்திருக்க மாட்டிர்கள் என நினைக்கிறேன்.

    //24 ஜூன் அன்று தமிழ் இணைய மாநாடு தொடங்கி மாலை நேரத்தில் சஞ்சய் காந்தி, ஓசை செல்லா இருவரும் என்னிடம் வந்தனர்.//

    தவறான தகவல். நான் மட்டுமே வந்து வெங்கட்டிடம் பேசினேன். அருகில் இருந்த கணிப்பொறியில் நீங்கள் எதோ செய்துக் கொண்டிருந்தீர்கள். உங்களிடம் எதுவும் முறையிடவில்லை. அமைச்சரிடம் நாங்கள் பேசிய பிறகு தான் நீங்கள் காட்சியிலேயே வருகிறீர்கள்.

    //பின் வாசுவின் அனுமதியுடன் நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்களைச் செய்து, முகப்பரங்கில் இரு நாள்களில் சுமார் 5 மணி நேரம் இடம் கிடைக்குமாறு செய்தேன். //

    இங்கு நீங்கள் எழுதும் வரை இது எனக்குத் தெரியாது. வெங்கட் தானே நேரம் ஒதுக்கியதாகத்தான் என்னிடம் சொன்னார்.

    //அதற்குள்ளாக தினமலர் பத்திரிகைக்குத் தகவல் அளிக்கப்பட்டு அடுத்த நாள் அவர்கள் மகிழ்ச்சியுடன், இணைய மாநாட்டில் குழப்பம் என்று செய்தி எழுதிவிட்டனர்.//

    தகவல் அளித்தவரைத்தான் நானும் தேடிட்டு இருக்கேன். தெரிஞ்சா சொல்லுங்க. அடுத்த நாள் காலையில் நானும் வெங்கட்டும் பேசிக் கொண்டிருக்கும் போது தினமலர் ரிப்போர்ட்டர் என ஒருவர் அறிமுகப் படுத்திக் கொண்டார். அந்த தவறான செய்திக்காக நான் கேள்வி எழுப்பினேன். யாரைக் கேட்டு அந்த தவறான செய்தியை வெளியிட்டீர்கள் என்றதற்கு மறுப்புக் கடிதம் அனுப்புங்கள் என்றார். தினமலர் லட்சணம் தெரிந்தும் நாம் மறுப்புக் கடிதம் அனுப்பிக் கொண்டிருக்க முடியாது. அதன் தொடர்ச்சியாக இருவருக்கும் தகறாரு வரும் சூழல் ஏற்பட்டது. அருகில் இருந்த வெங்கட்டிடம் நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். அந்த செய்தியை வெளியிட்டது வேறு நிருபராம்.

    //எதுவாக இருந்தாலும் வெங்கட்டிடமோ அல்லது வாசுவிடமோ பேசுமாறு கேட்டுக்கொண்டது ஞாபகம் இருக்கிறது. வெங்கட்தான் உத்தமத்தின் தலைவர்.//

    வாசுவின் பெயரைக் கூட அப்போது யாரும் உச்சரிக்கவில்லை. நான் ஆரம்பத்திலேயே வெங்கட்டிடம் பேசிய போது உங்களை அழைத்த மணியத்திடமே பேசிக் கொள்ளுங்கள் என்றார். இதை சொல்லி மணியத்திடம் கேட்ட போது தான் பல விஷயங்கள் வெளிவந்தன. இவர்களின் அரசியலுக்கு நாங்கள் ஊறுகாய் ஆக முடியாது என்பதால் தான் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

    //இந்தப் பிரச்னையை வலைப்பதிவர்கள் அமைதியுடன் எதிர்கொண்டிருக்கலாம்.//

    அங்கே வலைப்பதிவர்களால் என்ன விதத்தில் அமைதிக் கெட்டது என்பதை தாங்கள் சொனனல் நானும் தெரிந்துக் கொள்வேன். இதைத்தானே தினமலரும் செய்தி வெளியிட்டது. அதற்கும் உங்கள் வரிகளுக்கும் என்ன வித்தியாசம்?


    எல்லாம் சுமூகமாக முடிந்ததால் எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். வலைப்பதிவர்கள் அமைதியுடன் எதிர்கொள்ளவில்லை என்ற அளவில் பலர் மனதில் பதிய வைக்கும் முயற்சியில் நீங்கள் இருப்பதாகத் தெரிகிறது. விவரமாகவே நடந்தது என்ன என்பதை எழுதுகிறேன்.


    5 மணி நேரம் அனுமதி அளித்த பத்ரிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  4. //கலந்துகொண்ட வலைப்பதிவர்கள் அனைவருக்கும் மாநாட்டு மலரும் தரப்பட்டது.//

    6 பேருக்கு மட்டும் வெங்கட் கொடுத்தார்..

    ReplyDelete
  5. தமிழ் மாநாட்டின் சொதப்பல்கள், நல்ல விசயங்கள் என்று எதற்குமே பாரபட்சமாக இல்லாமல் பதிவு செய்யும் ஒரே ஆள் நீங்க தான் என்று நினைக்கிறேன்...

    இதே ரேஞ்சில் எழுதினீங்கன்னா, அதுவும் சிங்கத்தின் குகையிலேயே ஒக்காந்துகிட்டு (சென்னையில்) எழுதுனா விட்டுக்கு ஆட்டோ வந்துரப்போவுதுங்க...பாத்து இருந்துக்குங்க.

    ReplyDelete
  6. @வஜ்ரா -

    --- சிங்கத்தின் குகையிலேயே ஒக்காந்துகிட்டு (சென்னையில்) :

    Badri lives at Gopaalapuram :)

    Badri Sir ! - If you find this comment as breaching your security constraints(physical, i mean :) ), please delete.


    Regards,
    Venkat

    ReplyDelete
  7. @வஜ்ரா
    இதே ரேஞ்சில் எழுதினீங்கன்னா, அதுவும் சிங்கத்தின் குகையிலேயே ஒக்காந்துகிட்டு (சென்னையில்) எழுதுனா விட்டுக்கு ஆட்டோ வந்துரப்போவுதுங்க...பாத்து இருந்துக்குங்க

    @Venkat
    Badri lives at Gopaalapuram :)

    Badri Sir ! - If you find this comment as breaching your security constraints(physical, i mean :) ), please delete.
    ----

    நாராயணா, இந்த கொசுத் தொல்லைய தாங்க முடியலடா.

    கலைஞருக்கு எதிராக அதர்மம் நடக்கும்போதெல்லாம் பிரசன்னமாவார் அவதாரப் புருஷர் யுவகிருஷ்ணர் என்று பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. அட கலைஞரா, தளபதியா, அஞ்சாநெஞ்சரா அல்லது பத்ரி சாரா, பாரா சாரா, மாலன் சாரா, அந்துமணி சாரா என்பதில் தான் conflict of interest. இங்கு ரீங்காரமிடும் கொசுக்களை விரட்டகூட இந்த பக்கம் தோன்றமாட்டாரோ லக்கி கிருஷ்ணர்?

    ReplyDelete
  8. பத்ரி,
    எது எப்படியோ போகட்டும். நாங்கள்/நீங்களும்தான் வலைப்பதிவர்கள் என்ற முறையில் சீரிளமைத்தமிழ் இணையத்தில் ஒலிக்க தமிழில் எவ்வளவோ முயற்சி எடுத்து அதை நடத்திக்கொண்டிருக்கிறோம். நான் ஒன்றும் தவறாக எதையும் செய்ததாக நினைவில்லை. அழைக்கப்பட்டோம், வந்தோம். அழைத்தவருக்கு அந்த அதிகாரம் இருக்கிறதா, இல்லையென்றால் அவரையல்லவா கேட்டிருக்கவேண்டும். இன்பிட்டின் இன்ஃபைட்டை மறைக்க வலைப்பதிவர்களை தாங்கள் ஒரு ச்தவீதம் கூட இழுப்பதை நாங்கள்/நான் விரும்பவில்லை. சீக்கிரம் இதைப்பற்றிய பதிவை நான் நிச்சயம் எழுதுவேன். அதுவரை இந்த மாநாடு பற்றி ஒரு நல்ல விsஅயம்... இங்கே க்ளிக்குங்க

    Osai Chella ( facing some probs in Logging in )

    ReplyDelete
  9. # Simple and Clear message
    # Truth

    Your blog is impressive

    My best Wishes

    Thiagu, Salem

    ReplyDelete