Saturday, July 17, 2010

தமிழா? ஆங்கிலமா?

நேற்று ஒரு மாநகரத்தின் இரு மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்களுடன் கலந்துரையாடினேன். [பள்ளிகளின் பெயர்கள், விவரங்கள் வேண்டாம்.]

முதல் பள்ளி நகருக்குள் உள்ளது. நல்ல பெயர் எடுத்த பள்ளி. நல்ல வசதிகள். பள்ளியில் ‘கிளப்’ தொடக்கவிழாவுக்காக அழைத்திருந்தனர். தமிழில் பேசவேண்டுமா, ஆங்கிலத்தில் பேசவேண்டுமா என்று கேட்டேன். ‘ஆங்கிலம்’ என்று ஏகோபித்த குரலில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டனர். சரி, அவர்கள் விதி என்று முடிந்தவரை எளிமையான சொற்கள், முடிந்தவரை மெதுவாக என்று ஆங்கிலத்தில் உரையாடினேன். பொதுவான விஷயங்கள்தான். 9, 11 வகுப்பு மாணவர்கள். எனவே மேற்படிப்பு, ஆராய்ச்சி, என்னவெல்லாம் படித்தால் என்ன சாதிக்கலாம் போன்றவை.

பெண்கள் கவனித்துக் கேட்டனர். ஆனால் ஆண்கள் பகுதியில் நிறையவே சலசலப்பு. என்னடா, நம்மை இப்படிக் கொண்டுவந்து மதிய நேரத்தில் ஒர் ஆசாமி பிளேடு போடுகிறாரே என்று நினைத்தார்களோ என்னவோ. மற்றொருபக்கம் ஆங்கிலம் சரியாகப் புரியாததும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக மொழிகள் பற்றி பேச்சை ஆரம்பித்தேன். கல்லூரியில் (ஐ.ஐ.டி) ஆங்கிலம் பேசத் தெரியாமல் நான் தடுமாறியது; அதனால் நண்பர்களைப் பெறமுடியாமல் சில மாதங்கள் திண்டாடியது; மொழியின் முக்கியத்துவம்; நன்கு பேசத் தெரிதல், நன்கு எழுதத் தெரிதல், படித்துப் புரிந்துகொள்ளல் போன்ற மென்திறன்கள் எனப் பலவற்றைப் பற்றி (ஆங்கிலத்தில்தான்) பேசினேன். ஆங்கிலமும் நன்கு தெரிந்துகொள்ளவேண்டும், தமிழிலும் நல்ல திறமை வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.

கேள்வி பதில் நேரத்தில் மாணவிகள் ஆர்வத்துடன் கேள்வி கேட்க முற்பட்டனர். உடைந்த ஆங்கிலம்தான். அதற்கிடையே பள்ளி முதல்வர், கேள்விகளைத் தமிழிலும் கேட்கலாம் என்று அனுமதித்தார். ஆனாலும் பிள்ளைகள் ஆங்கிலத்திலேயே (தட்டுத் தடுமாறி) கேள்விகளைக் கேட்டனர். நான் பதில்களை தமிழில் தர ஆரம்பித்தேன். ஆனாலும் கேள்விகள் ஆங்கிலத்தில்தான் வந்தன. ஆண்கள் பகுதியில் இருந்து கேள்விகளே வரவில்லை. ஆசிரியர்கள் தூண்டத் தூண்ட அவர்கள் தலையை வேகமாக கால்களுக்கு இடையில் புதைத்துக்கொண்டனர். ஐஐடிக்கும் பிற பொறியியல் கல்லூரிகளுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு பெண் கேட்டார். மற்றொரு பெண், அமெரிக்காவில் போய்ப் படிக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்.

***

மதியம் வேறொரு பள்ளி. இது ஊருக்கு வெளியே நல்ல தொலைவில் இருந்தது. பெரும்பாலும் வேளாண்மைத் தொழில் செய்வோரின் பிள்ளைகள்தான் அங்கு படிக்கிறார்கள் என்றார் முதல்வர். ஆடம்பரம் இல்லாமல்தான் நிகழ்ச்சி ஆரம்பித்தது. மின் வெட்டு காரணமாக மைக் இல்லை. 9, 10, 11, 12 வகுப்பு மாணவர்கள். இங்கும், தமிழில் பேசவா, ஆங்கிலத்தில் பேசவா என்று கேட்டேன். ஆங்கிலம் என்றனர் பிள்ளைகள் ஜோராக. ஒருசில குரல்கள் தமிழ் என்று அமிழ்ந்து ஒலித்தன. நீங்கள் என்ன சொன்னாலும் சரி, தமிழில்தான் பேசப்போகிறேன் என்றேன். சில கதைகளுடன் ஆரம்பித்தேன். இங்கும் காலையில் நடந்த பல்லவிதான். ஆனால் நிறையக் கதைகள் சொன்னேன். மிகுந்த ஆர்வத்துடன் கேட்டனர். அமைதியாக இருந்தனர்.

பின்னர் கேள்வி நேரம் ஆரம்பித்தது. தமிழ் என்பதால் பயம் இல்லாமல் பேசினார்கள். விஞ்ஞானி என்றால் என்ன தோற்றம் உங்கள் மனக்கண்ணில் வருகிறது என்ற கேள்வியில் ஆரம்பித்தேன். ஆண்கள், பெண்கள் இருவருமே, ஒரு கோட் போட்ட ஆண், தடிக் கண்ணாடி, வெள்ளைப் பரட்டைத் தலை என்ற ரீதியில்தான் பதில் சொன்னார்கள். பின் அங்கிருந்து, ஏன் விஞ்ஞானி என்றால் பெண் உருவம் மனத்தில் தோன்றுவதில்லை என்று தூண்டினேன். அப்படியே அறிவியல் பற்றிப் பேச ஆரம்பித்தோம்.

ஒரு பையன் எழுந்திருந்து, ‘பிளாக்ஹோல் என்பது நிஜமாகவே உள்ளதா?’ என்று கேட்டான். அங்கிருந்து கிராவிடி, பிளாக்ஹோல், நட்சத்திரங்கள், அணுச்சேர்க்கை, கிராவிடி எப்படி ஒளியை வளைக்கிறது, ஏன் பிளாக்ஹோல் என்ற பெயர் வந்தது போன்றவற்றைப் பற்றி உரையாடல் நடந்தது. அதிர்ச்சியான பல விஷயங்களைக் கேட்டு மாணவர்கள் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர். மற்றொரு மாணவர் எரிமலையிலிருந்து எப்படி கொதிக்கும் குழம்பு வெளியே வருகிறது என்று கேட்டார். ஒரு மாணவி, பூமி அழிந்துவிடுமா என்று கேட்டார். பிக் பேங் கோட்பாடு பற்றி விளக்கினேன். சூரியன் ஒரு கட்டத்தில் செயல் இழக்கத்தான் போகிறது; நாமாகவே அதற்குள் பூமியை (அதாவது உயிர்களை) அழித்திருக்காவிட்டால், ஒரு கட்டத்தில் பூமி, பிற சூரியக் குடும்பக் கோள்கள் அனைத்தும் சூரியனால் விழுங்கப்பெற்றுவிடும் என்று விளக்கினேன்.

இப்படியே நேரம் போனதே தெரியாமல் இரண்டு மணிநேரம் பேசியிருப்போம். மாணவர்கள் அனைவருமே ஆர்வத்தோடு பங்குகொண்டனர். அப்போது கரடிபோல் உள்ளே நுழைந்த ஆசிரியை ஒருவர், பஸ் கிளம்பிவிடும் என்றும் அதில் வீட்டுக்குச் செல்பவர்கள் உடனே கிளம்பிவிடுவது அவர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் விளக்கினார். வருத்தத்தோடு சில மாணவர்கள் வெளியேற, மீண்டும் உரையாடல் தொடர்ந்தது.

அதன்பிறகு நான் களைத்து உட்கார, கல்லூரி முதல்வர் மெதுவாக மாடி ஏறிவந்து நன்றி சொல்ல, கூட்டம் கலைந்தது.


I rest my case, your honour!

17 comments:

  1. பல பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். யாராவது தமிழில் பேசினால் "Miss, Murugan talks in Tamil miss!" என்பது போல கோள் சொல்லும்படி மழலையர் வகுப்பிலேயே பழக்கப்படுகிறார்கள். இந்த அராஜகத்தையும், அடி முட்டாள்தனத்தையும், வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

    ஒரு மிகப்பிரபல நிறுவனம் வெளியிட்டு, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் பயன்படுத்தப்படும் கணினிப் பாடப் புத்தகத்தில் இப்படி ஒரு பயிற்சி வினா உள்ளது (ஆங்கிலத்தில் தான்) --

    மாணவர்களுக்கு கல்விப்பாடப் பிரிவை ஒதுக்க ஒரு பேசிக் நிரல் எழுதுக. 60 சதவீத்த்துக்கு மேல் மதிப்பெண் - அறிவியல் பிரிவு; 50 - 60 என்றால் வணிகவியல்; 50 - க்குக் கீழே கலை (ஹியுமானிட்டீஸ் )

    இதன் அபத்தம் அதை எழுதிய ஆசிரியருக்கோ, எடிட் செய்த புண்ணியவானுக்கோ புலப்படவில்லை.

    கல்வி பற்றிய நம் கோணல் பார்வையை ஒரே கேள்வியில் வெளிச்சம் போட்டுக் காட்டியதர்க்காக நாம் நன்றி சொல்ல்லாம்.

    ReplyDelete
  2. நான் படித்தது முழுக்க ஆங்கில வழியத்தில் தான் என்றாலும் ஆசிரியர்கள் தமிழில் ஒரு முறை விளக்கிச் சொன்னால் தான் நாங்கள் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்வோம்.

    முக்கியமான கட்டுரை. நன்றி பத்ரி.

    ReplyDelete
  3. //இப்படியே நேரம் போனதே தெரியாமல் இரண்டு மணிநேரம் பேசியிருப்போம். மாணவர்கள் அனைவருமே ஆர்வத்தோடு பங்குகொண்டனர். அப்பொது கரடிபோல் உள்ளே நுழைந்த ஆசிரியை ஒருவர், பஸ் கிளம்பிவிடும் என்றும் //

    சில நேரங்களில் இப்படித்தான் ஆகிப் போகிறது. ஒருமுறை மதன் தன் கேள்வி பதில் பகுதியில் இதே போல் சொன்னது நினைவுக்கு வருகிறது. யானியின் இந்திய வருகை, தாஜ்மஹாலில் அவர் அளித்த இசை விருந்து தூர்தர்ஷனில் நேரிடையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இசை உச்சத்தை அடையும் நிலையில், 'செய்திகளுக்குப் பிறகு" யானி நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடரும் என்றது தூர்தர்ஷன்.

    "சில நேரங்களில் சில தடைகள்"

    ReplyDelete
  4. நான் படித்த பள்ளியில் (Petit Seminaire,Pondicherry) ஆங்கில `தலைவர்கள்` இருந்தனர்.கிட்டத்தட்ட ஒரு ரகசிய குழு போல் செயல்படுவார்கள். நாங்கள் பேசும் ஒவ்வொரு தமிழ் வாக்கியத்துக்கும் ஒரு நோட்டில் பெயர் எழுதிவைத்து 50 பைசா வசூலிப்பார்கள். ஒட்டுமொத்தமாக ஒரு தொகை சேர்ந்தவுடன் எங்களை அடிக்க பிரம்பு வாங்குவார்கள்(கையில் மட்டும் அடிக்க வேண்டுமென எழுதப்படாத ரூல். ஐம்பது வருடங்களுக்கு முன், பிருஷ்டத்தில் விழுமாம்!!). இப்படி ஆங்கில எதிர்ப்பு போராட்டத்துக்காக தடியடி வாங்குவதில் பலரும் கூட்டாக செயல்படுவோம்!

    குறிப்பாக எங்கள் மத்தியில் பேச வரும் நிபுணர்களை தமிழில் பேச வற்புறுத்துக்கூடாது என்பதில் பள்ளி மிகவும் கண்டிப்பு. அதையும் மீறி கோரிக்கை வைக்கும் மாணவர்களை Retention எனும் ஸ்பெஷல் வகுப்பில் `அன்புடன்` கவனிப்பார்கள்.

    80களின் இறுதியில் இது மாறியது.

    ReplyDelete
  5. 12ஆம் வகுப்பு வரை நான் படித்தது முழுக்க தமிழ் வழிக்கல்வியில்தான். இன்ஜினியரிங் சேர்ந்தபோது முதல்நாள் வகுப்புக்குவந்த ஆசிரியர்கள் அனைவருமே தமிழ் மீடியம் ஸ்டுண்ட்ஸ் raise your hands என்ற போது ஒரு ஏழெட்டுப்பேர் எழுந்தோம்...மேலும் கீழும் பார்த்த ஆசிரியர் ஒன்றும் சொல்லாமல் ஏற இறங்கப் பார்த்துவிட்டு உட்காரச்சொல்லிவிட்டார். கூட இருந்த மாணவர்கள் பார்த்த பார்வையில் இருந்தது ஏளனமா,பரிதாபமா என்று அப்போது புரிந்துகொள்ள இயலவில்லை. இந்த அனுபவங்களை ஒரு தொடராகவே எழுதலாம் :).நான்காம் ஆண்டு படித்துமுடித்துபோது வகுப்பில் அதிகமதிப்பெண்கள் வாங்கியது தமிழ்வழிக்கல்வியில் படித்த மாணவிதான்.

    சில பாடங்களில் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்கும் பகுதிகளைச் சொல்லிக்கொடுக்கும்போது எந்த ஆசிரியாரக இருந்தாலும் அனிச்சைசெயலைப்போல தமிழுக்குத்தாவிவிடுவதைக் கண்டிருக்கிறேன்.

    ஆங்கிலத்தைப் பிழையின்றி எழுதவும்/பேசவும் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். பாடங்கள் படிப்பது தான் சிந்திக்கும் மொழியில் இருப்பது நல்லது.

    ReplyDelete
  6. Sir,
    Its a farce that is happening in our school system.

    As You had mentioned in one of your posts, all that is needed in schools is - To teach students to think,to question,to form an opinion on issues happening around them and to express their opinions - all in both the languages - tamil and english. This isnt happening at all.

    Pleas continue your service of " OOKKI" - Fellow , to guide students out of the darkness.

    All students have to come out like "Aamir Khan - Ryan" of 3 idiots; But they are coming out as "Chatur Ramalingam" of 3 idiots. The Parents who watched the movie,actually,laughed at themselves.the author of the book succeeded with the "vaazhapazhathil oosi" technique.

    Its not that the students are putting in the efforts - They are spending enough "man-hours" of effort - just that the effort is not channelled.

    The students who are hiding their heads between the legs, must be shaken up and made to take the world with confidence

    Respectfully,
    venkat

    ReplyDelete
  7. நீங்கள் ஒரு இளைய கலாமாக எனக்கு தெரிகிறீர்கள்!!!

    ReplyDelete
  8. @ Gopalan Ramasubbu

    //தமிழ் மீடியம் ஸ்டுண்ட்ஸ் raise your hands என்ற போது ஒரு ஏழெட்டுப்பேர் எழுந்தோம்//

    எனக்கு இந்த அனுபவம் பணியிடத்திலேயே கம்யூனிகேஷன் கிளாஸ் ஒன்றில் நிகழ்ந்தது என்றால் நம்ப முடிகிறதா உங்களால்? மட்டம் தட்டுபவர்களும் ஏளனப் பார்வை பார்ப்பவர்களும் எங்கும் இருக்கிறார்கள். அவர்கள் புறந்தள்ளப்பட வேண்டியவர்கள்.

    ReplyDelete
  9. Badri,

    Iphone development? is that still open.
    my friends do it on thier offhrs here in US..

    -Nthan

    ReplyDelete
  10. உங்கள் அனுபவங்கள் வெகு சுவாரசியம். நான் படிக்கும்போதெல்லாம் இப்படி கலந்துரையாடல் எதுவும் நடந்ததில்லை. நிறைய தவற விட்டிருக்கேன் :(

    உங்கள் Auto biographyயை இப்பவே தொகுக்க தொடங்கிடுங்க (இது கொஞ்சம் ஓவரோ?) :)

    ReplyDelete
  11. இன்று காலை இதே அனுபவம் எனக்கும் ஏற்பட்டது ..ஒரு கிராம ஆங்கில பள்ளியின் literary association க்கு தலைமை தாங்க அழைத்து இருந்தனர் ..பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் எந்த மொழியில் பேச என கேட்ட போது ஆங்கிலம் என்றார் ..ஆனால் நான் தமிழில் தான் பேசினேன் ...நடு நடுவே சிறிது ஆங்கிலம் ..நீங்கள் கூறியபடி அப்போது தான் மாணவ மாணவிகள் நன்கு உரையாடலில் பங்குபெற்றார்கள் ...அவர்கள் திறமை மிகவும் சந்தோஷமாயிருந்தது ..

    ReplyDelete
  12. தாய் மொழிக்கல்வியின் அவசியம் உணர்ந்து சமச்சீர் கல்வி கொண்டு வந்த அரசு ,பள்ளிகள் மாறமல் இருப்பதை உணரவேண்டும். நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. //

    All students have to come out like "Aamir Khan - Ryan" of 3 idiots; But they are coming out as "Chatur Ramalingam" of 3 idiots.
    //

    இதில் நீங்களும் தான் சேர்த்தி என்று நினைக்கிறேன். வெங்கட். இப்படிப்பட்ட பதிவுகளில் இங்கிலீஸ் புலமையை வெளிக்காட்ட வேண்டிய அவசியமே இல்லை.

    ReplyDelete
  14. மதுரை சரவணன்: அரசு கொண்டுவந்துள்ள சமச்சீர் கல்விக்கும் தாய்வழிக் கல்விக்கும் என்ன தொடர்பு? நான் அறிந்தவரையில் ஒன்றும் இல்லை. இன்றுகூட செய்தித்தாளில் பார்த்தேன். நிதி அமைச்சர் அன்பழகன் மெட்ரிக் பள்ளிகளிடம் இறைஞ்சியுள்ளார்: ஆங்கிலம் முக்கியம்தான்; அத்துடன் கூடவே தமிழையும் சொல்லிக்கொடுங்கள் என்று.

    உண்மையில் மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே கற்றுக்கொடுப்பதில் எனக்கு ஒரு பிரச்னையும் கிடையாது. ஆனால் அங்கு படிப்பவர்கள், அங்கு பாடம் சொல்லித்தருபவர்கள் என அனைவருக்கும் ஆங்கிலம் அந்நியம். அதனால் அரைகுறை ஆங்கிலத்தில் பாடம் நடத்தி, பாடம் படிக்கிறார்கள். இதனால் குழந்தைகள் எதையும் புரிந்துகொள்வதில்லை; கேள்விகள் கேட்பதும் இல்லை. எனவே கற்றுக்கொள்ளுதல் என்பதே ஒருவித சித்ரவதை என்றாகிவிடுகிறது.

    அதைத்தான் நான் எதிர்க்கிறேன்; ஆங்கில வழிக் கல்வியை அல்ல. தமிழகத்தில் 90% பள்ளிகளின் உண்மையான தேவை: தமிழ் வழிக் கல்வி + நல்ல, தரமான ஆங்கில மொழிக் கல்வி. பிள்ளைகள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவேண்டும்; ஆங்கிலத்தில் எழுதவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு 10-12 ஆண்டுகள் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கவேண்டும். இடைப்பட்ட காலத்தில் அதே ஆங்கிலத்தில் அறிவியலையும் சமூகவியலையும் பொருளாதாரத்தையும் கற்றுக்கொடுத்தால் நிலைமை மோசம் ஆகிவிடுகிறதல்லவா?

    ஒரு கட்டத்தில் ஆங்கிலத் திறமை நன்கு வந்தவுடன் அவர்களால் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சரளமாகப் பயிலமுடியும். அப்போது அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, கல்லூரியில் ஆங்கிலம் விரும்புபவர்கள் அந்த வழியிலும், தமிழ் விரும்புபவர்கள் அந்த வழியிலும் பாடம் கற்கலாம். அந்த முறையையே நாம் கொண்டுவரவேண்டும்.

    ReplyDelete
  15. அறிவியல் பற்றி மாணவர்களிடையே பேசும்போது நமது மூட நம்பிக்கைகளைப் பற்றியும், அவற்றிற்குக் காரணமான இந்து மதத்தை ஒழிப்பது பற்றியும் தவறாமல் சொல்லியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதையும் இனி உங்கள் பதிவுகளில் மறக்காமல் குறிப்பிட்டுவிடுங்கள்.

    ReplyDelete
  16. நல்ல பணி. தொடர்ந்து செய்யுங்கள். நன்றி.

    ReplyDelete
  17. "அறிவியல் பற்றி மாணவர்களிடையே பேசும்போது நமது மூட நம்பிக்கைகளைப் பற்றியும், அவற்றிற்குக் காரணமான இந்து மதத்தை ஒழிப்பது பற்றியும் தவறாமல் சொல்லியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்."

    My tamil converter is not working, I hate to see such a specific religious comment, when u say "மூட நம்பிக்கை", its in all religion not only to specific a religion.. Then u people call urself as "secular people"

    I would be happy to see it if mentioned like religious "மூட நம்பிக்கை", rather than ur specific..

    ReplyDelete