Thursday, July 01, 2010

தமிழ் இணைய மாநாடு - அனுமதிச் சீட்டுப் பிரச்னை

தமிழ் இணைய மாநாடு செம்மொழி மாநாட்டோடு இணைந்து நடத்தப்பட்டதில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்னையே லாஜிஸ்டிக்ஸ்தான். உத்தமம் அமைப்பு (INFITT) இந்த மாநாட்டை மேலும் சிறப்பாக நடத்தியிருக்கலாம் என்று சிலர் கருத்து சொன்னார்கள்.

அது எப்போதுமே உண்மைதான். இந்த மாநாட்டைப் பொருத்தவரை எனக்குப் பல குறைபாடுகள் தெரிந்தன. மாநாட்டுக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்தது முதற்கொண்டு அரங்கில் மாநாட்டின் வெவ்வேறு அமர்வுகளை நடத்தியதிலிருந்து வந்திருந்தோருக்கு கட்டுரைத் தொகுப்பைக் கையில் முன்னமேயே கொடுப்பதிலிருந்து பலவற்றையும் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.

ஏன் செய்யவில்லை?

முதலாவது, இதுபோன்ற மாநாடுகளை நடத்துவதில் அனுபவம் இல்லாமை. இரண்டாவது முதல் நாள் ஏற்பட்ட அனுமதிச் சீட்டு, தங்குமிடம் தொடர்பான குழப்பங்கள், அவற்றைச் சரி செய்வதிலேயே முக்கிய நிர்வாகத்தினர் நேரம் செலவிட்டமை. மூன்றாவது, செம்மொழி மாநாடு தொடர்பாக கட்சி முதல் ஆட்சிவரை செய்யப்பட்ட கடுமையான பிரசாரத்தால் கோவையில் வந்து இறங்கிய குடியரசுத் தலைவர், அமைச்சர் பெருமக்கள் முதல் சாதாரணத் தொண்டர் வரையிலான வரலாறு காணாத கூட்டம்.

மிகப்பெரிய குழப்பம் நடைபெற்றது அனுமதிச் சீட்டில்தான். இதற்கு முந்தைய எந்த தமிழ் இணைய மாநாட்டிலும் அனுமதிச் சீட்டு என்பது பெயரளவுக்கு, ஒருவரை அடையாளம் காணமட்டுமே என்று இருந்தது. ஆனால் இந்த மாநாட்டில் யாரிடம் என்ன அடையாளச் சீட்டு உள்ளது என்பதைப் பொருத்தே நீங்கள் எந்த இடத்துக்குச் செல்லலாம் என்பதை காவலர்கள் முடிவுசெய்வார்கள். மொத்தம் ஏழெட்டு விஷயங்கள் நடைபெற்றன.
 1. பொதுமேடை ஒன்றில் பேச்சுகளும் புகழாரங்களும்
 2. 22 அரங்குகளில் செம்மொழி மாநாடு தொடர்பான அமர்வுகள்
 3. 5 அரங்குகள் தமிழ் இணைய மாநாடு தொடர்பான அமர்வுகள்
 4. தமிழ் இணையக் கண்காட்சி
 5. செம்மொழி கண்காட்சி
 6. மாநாட்டு அமர்வாளர்களுக்கு மட்டுமான இலவச சாப்பாட்டு இடம்
 7. கண்காட்சிகள், பொதுமேடைக்கு வரும் மக்களுக்கான காசு கொடுத்துச் சாப்பிடும் இடம்
 8. கொஞ்சம் தள்ளி எதிர்ப்பக்கம் புத்தகக் கண்காட்சி

முதலில் செய்யப்பட்ட ஏற்பாட்டின்படி, பொதுமக்கள் யாரும் 22+5 அரங்குகள் இருக்கும் இடத்துக்கு வரவே முடியாது. அப்படி அவர்கள் வராமல் இருந்திருந்தால், நடைபெற்ற அசிங்கங்களில் கொஞ்சம் குறைந்திருக்கும்; மாநாட்டுப் பங்கேற்பாளர்கள் மட்டுமே அசிங்கங்களில் ஈடுபட்டிருப்பர். ஆனால் அனுமதிச் சீட்டு குளறுபடி காரணமாக ஒரு கட்டத்தில் யார் வேண்டுமானாலும் அப்படி இப்படி நழுவி, அல்லது சில அதிகாரங்களைப் பயன்படுத்தி தாற்காலிக அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி மாநாட்டு அமர்வுகள் நடக்கும் இடத்துக்குப் போகமுடியும் என்ற நிலை ஏற்பட்டது.

மறுபக்கம், ஆரம்பம் முதற்கொண்டே உத்தமம் சார்பில், இணைய மாநாட்டு அமர்வுகளில் யார் வரலாம் என்பது பற்றி அரசுடன் பேசினார்கள். (நான் அந்தக் குழுக்களில் இல்லை; நான் ஒரு சாதாரண தன்னார்வலர்தான் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.) ஆனால் அரசுத் தரப்பில் தெளிவாக ஒன்றைச் சொல்லிவிட்டார்கள். செம்மொழி மாநாட்டுக்கு வருகை தரும் 1,000 சொச்சம் பேர்கள் யாரும் தமிழ் இணைய மாநாட்டுக்கு வர விரும்பினால் அவர்களைத் தடுத்து நிறுத்தக்கூடாது. இந்த ஆணைக்குப் பிறகு தமிழ் இணைய மாநாட்டின் ஏற்பாட்டாளர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அங்கிருந்து இங்கு வந்து எனக்கும் ஒரு பை கொடு, பூ கொடு, பழம் கொடு என்று கேட்டால் என்னதான் செய்யமுடியும்?

தமிழ் இணைய மாநாட்டுக்கு என்று பதிவு செய்து வந்த 450 பேருடைய தேவைகளை மட்டும் கவனித்துக்கொள்வதுதான் உத்தமம் நிர்வாகிகளின் வேலை. ஆனால் அந்த வேலை மிகவும் கடினமாக ஆகிவிட்டது. இந்த அத்தனை பேருக்கும் அடையாள அட்டை தயாராகவே இல்லை. அடையாள அட்டை தயார் செய்வது கோவை கலெக்டர் கீழ் இயங்கும் ஒரு நிறுவனத்தின் வேலை. ஆனால் அவர்கள் அடையாள அட்டையைத் தயார் செய்யும்போதெல்லாம் பிற அதிகாரவர்க்கத்தினர் உள்ளே நுழைந்து தங்களுக்கு வேண்டிய அடையாள அட்டைகளை உருவாக்கி எடுத்துக்கொண்டு போனார்கள்.

கடைசியில் உத்தமம் தன்னார்வலர் தேவராஜன் என்பவர் இரவு முழுவதும் அந்த அலுவலகத்தில் வேலை செய்து தமிழ் இணைய மாநாட்டுக்கு வந்தவர்களுக்கான அடையாள அட்டையைத் தயார் செய்யவேண்டியதாயிற்று. கடைசிவரை ஒருசிலருக்கு அடையாள அட்டை கிடைக்கவில்லை. வேறு பலருக்கு இரண்டு, மூன்று அடையாள அட்டைகள் கிடைத்தன.

தமிழ் இணைய மாநாட்டுக்கு வந்த 450 பேருக்கும் இடம் ஒதுக்கியாயிற்று என்று கோவை கலெக்டர் தரப்பிலிருந்து தகவல் வந்திருந்தது. ஆனால் கலெக்டருக்கே தெரியாமல் கீழ்மட்ட ஜித்து விளையாட்டு அலுவலகர்கள் சுமார் 80 அறைகளைச் சுருட்டி அவற்றை வேறு ஆசாமிகளுக்கு ஒதுக்கிவிட்டனர். கடைசியில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தலையிட்டும்கூட அறைகள் கிடைக்கவில்லை. போனது போனதுதான். எனவே மாநாட்டுக்கு வந்திருந்தவர்களுக்கு எப்படியாவது அடையாள அட்டையையும் தங்குமிடத்தையும் ஏற்பாடு செய்யவேண்டியது நிர்வாகிகள் வேலையாகிப்போனது. அதேபோல தமிழ் இணைய மாநாட்டுக்குக் கொடுப்பதாகச் சொன்ன கார்களும் பஸ்களும் (மாநாட்டுக்கு வந்தவர்களை தங்குமிடத்திலிருந்து மாநாட்டுக்கு அழைத்துவந்து, திரும்ப அனுப்ப) வாக்குக் கொடுத்த அளவைவிடக் குறைவாகவே கிடைத்தன. அங்கும் நிர்வாகிகள் தடுமாற வேண்டியதாயிற்று.

இதனால் மாநாட்டில் கலந்துகொண்ட பலரும் உத்தமம் நிர்வாகிகளைக் குறை சொன்னார்கள். Unprofessional என்பது கடுமை குறைவான வார்த்தை. அங்கிருந்து நாலாபக்கமும் வார்த்தைகள் பறந்தன. உத்தமம் நிர்வாகிகள் லாயக்கற்றவர்கள் என்பதுதான் பலரது கருத்தாக இருந்தது. ஆனால் எவ்வளவு கடுமையான பணி அழுத்தத்தில் அவர்கள் வேலை செய்தனர் என்பது அருகிலிருந்து பார்த்த எனக்குத்தான் தெரியும்.

சென்னையில் நடந்த மாநாடு அவ்வளவு சூப்பராக இருந்தது என்றார் ஒரு அனானி. ஆமாம். அது தாஜ் கொரமாண்டல் ஓட்டலில் பொதுமக்கள் யாரும் நுழையாமல் (பொதுமக்களுக்குத் தெரியவே தெரியாது) இருந்ததால் அற்புதமாக நடந்தது.

செம்மொழி மாநாட்டுடன் இல்லாமல், அரசியல் கூட்டங்கள் நடந்த இடத்தில் இல்லாமல் தனிப்பட்ட இடத்தில் தமிழ் இணைய மாநாடு நடந்திருந்தால் இதுபோன்ற எந்த சிக்கலும் நடந்திருக்காது. ஆனால் பலருக்கும் இந்த மாநாடு பற்றி தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது.

7 comments:

 1. ”ஆனால் பலருக்கும் இந்த மாநாடு பற்றி தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது” - பாஸ், என்ன பாஸ் காமெடி பண்றீங்க? இப்ப மட்டும் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கா என்ன? நடந்தது வெறும் ’கலைஞர்’ன் செம்மொழி மாநாடு தான் அப்பிடீன்னு எல்லாரும் நெனைச்சிக்கிட்டு இருக்கோம். நீங்க, “இதெல்லாம் அரம்பத்துல இருந்தே நாங்க அறிவிச்சுக்கிட்டு தான் இருக்கோம்” அப்பிடீன்னு சொன்னீங்கன்னா, சாரி பாஸ்; இப்போதான் எனக்கெல்லாம் தெரியும் (”என்ன கொறஞ்சு போச்சு”ன்னு நீங்க கேக்கலாம். தப்பேயில்லை).

  ReplyDelete
 2. பத்ரி உள்ளும் புறமும் நடந்த நிகழ்வுகளை இப்படி சிறு சிறு இடுகை போல் தொடர்ந்து கொண்டே வாருங்கள். பத்திரிக்கைகளில் படித்த லாவணிகளுக்கும் உங்கள் இடுகையில் உள்ள விசயங்களையும் ஓப்பீட்டளவில் பார்க்க பலருக்கும் உதவியாய் இருக்கும்.

  ReplyDelete
 3. பத்ரி,

  ஏற்கனவே எட்டு இணைய மாநாடுகளை நடத்திய பின்னும் “அனுபவம்” இல்லை என்று சொல்வது பொருந்தாது. அனுபவம் உள்ள ஆட்களை உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவினரும் உத்தமமும் பயன்படுத்தத் தவறி விட்டார்கள்.

  உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவினருக்கு ஆலோசனை தருவது முதல், பதிவு செய்வது முதல் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒவ்வொரு பொறுப்பாளரை நியமித்து அவற்றைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.

  இந்த மாநாட்டில் பேராளர்கள் உத்தமத்தோடு தொடர்பு கொள்ளக்கூட ஓர் இடம் இல்லை. இத்தனை பேர் வந்தார்கள். அவர்களை உத்தமத்தில் உறுப்பினராக்கக் கூட முயலவில்லை. மிகப் பெரிய தலைவர்களும், அமைச்சர்களும், அதிகாரிகளும் உலவும்போது அவர்களுக்குத் துணையாகச் செல்லும் கடமை சிலருக்கு இருந்தாலும், மாநாட்டை முறையாக நடத்தும் பொறுப்பு யாரிடம் இருந்தது என்று தெரியவில்லை.

  முகப்பு அரங்கம் பற்றிய புரிதல் கூட ஏற்பாட்டாளர்களுக்கு இல்லை. முகப்பு அரங்கத்தில் பேராளர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். ஆனால், அந்தப் பேச்சு முடிந்தவுடன், அதில் ஏதும் நடக்காது. இல்லாவிட்டால், ஆய்வரங்கங்களில் கூட்டம் குறைந்து போய் விடும்.

  இந்த மாநாட்டில் நடந்த பல குழப்பங்களை முறையான ஏற்பாடுகள் செய்திருந்தால் தவிர்த்திருக்கலாம். அது மட்டும் அல்ல, இவ்வளவு கூட்டம், அதிலும், மொழி பற்றிய ஆர்வம் உள்ள கூட்டம், இணையம் பற்றித் தெரிந்து கொள்ள வந்த கூட்டம், உத்தமத்தால் கனவிலும் கூட்ட முடியாத கூட்டம் வந்த போது, அவர்களுக்கு இணையத்தின் பயன்பாடுகளை விளக்கி விளம்பரப் படுத்தும் வாய்ப்பைத் தவற விட்டாயிற்றே!

  உத்தமம் தன் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து இந்த மாநாட்டை மெருகேற்றியிருக்கலாம். ஆனால், உத்தமத்தின் உட்பிளவுகள் பற்றிய ஐயங்கள், ஒற்றுமையின்மை, அனுபவம் உள்ளவர்களைப் பயன்படுத்திக் கொள்வதில் தயக்கம், பிழைகளை ஏற்றுக் கொள்வதிலும் களைவதிலும் தயக்கம், அதிகாரிகள்/அமைச்சர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம், இப்படி எவ்வளவோ சொல்லலாம்.

  ஆனால், அடிப்படையில், இப்படிப் பட்ட மாநாடு நடத்துவது ஒன்றும் அவ்வளவு சரவல் அல்ல.

  மணி மு. மணிவண்ணன்

  ReplyDelete
 4. பத்ரி, செம்மொழி மாநாடு பற்றிய தங்கள் பதிவுகள் மிகவும் துல்லியமாக உள்ளன. லாஜிஸ்டிக்ஸ் நம் நாட்டில் என்றுமே பிரச்னை தான். தொழில்நுட்பம் நுழைந்தால் ஒழிய இம்மாதிரி பிழைகள் நிகழ்வதை தடுப்பது மிகவும் கடினம். அதுவும் லட்சக் கணக்கானவர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்வை வழக்கம் போல் நம் அரசு அலட்சியமாக நடத்திய உணர்வையே எனக்களிக்கிறது. உள்ளதை உள்ளபடி எழுதும் தங்கள் துணிவிற்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. //அது தாஜ் கொரமாண்டல் ஓட்டலில் ...
  ஜெர்மனியில் நடத்தி னால் நாங்கள் எப்படிப் போக முடியும். உள்ளூரில் கலந்து கொள்ள விருப்பம் கொண்டவர்கள் முன்பதிவு செய்திருக்க வேண்டும். உத்தமம் நிர்வாகத்தினரைக் குறை சொல்லவது பொருத்த மாகாது. சொல்பவருக்கு எங்கு வாய் வலிக்கப் போகிறது. உழைத்தவருக்கல்லவா முதுகு வலிக்கும். தன்னார்வலர்கள் பாராட்டுக்குறியவர்கள்.

  ReplyDelete
 6. //பக்கம், ஆரம்பம் முதற்கொண்டே உத்தமம் சார்பில், இணைய மாநாட்டு அமர்வுகளில் யார் வரலாம் என்பது பற்றி அரசுடன் பேசினார்கள். (நான் அந்தக் குழுக்களில் இல்லை; நான் ஒரு சாதாரண தன்னார்வலர்தான் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.) //

  ஆனால் உங்கள் பெயரும் உள்ளதே அவர்களின் வலைத்தளத்தில்..

  //பதாவது தமிழ் இணைய மாநாடு 2010, சூன் 23-27 2010, கோவை, தமிழ்நாடு
  பன்னாட்டுக் குழு (IOC)

  பன்னாட்டுக் குழு ஆலோசகர் :
  திரு. மு. ஆனந்தகிருட்டிணன், ஆலோசகர் உத்தமம் , சென்னை

  பன்னாட்டுக் குழுத் தலைவர் :
  திரு. வா.மு.சே. கவிஅரசன், துணைத்தலைவர் உத்தமம் , ஒகயோ, அமெரிக்கா

  பன்னாட்டுக் குழு உறுப்பினர்கள் :
  முனைவர் நாக. கணேசன், பொதுக்குழு உறுப்பினர்,உத்தமம், கூசுடன், அமெரிக்கா
  திரு. சிவா பிள்ளை, செயற்குழு உறுப்பினர்,உத்தமம்,இலண்டன், இங்கிலாந்து.
  திரு. இளந்தமிழன், செயற்குழு உறுப்பினர்,உத்தமம்,மலேசியா
  திரு. கலைமணி, பொதுக்குழு உறுப்பினர்,உத்தமம், சிங்கப்பூர்
  முனைவர் மறைமலை, பொதுக்குழு உறுப்பினர்,உத்தமம், சென்னை, இந்தியா
  முனைவர் இராம்.கி, பொதுக்குழு உறுப்பினர்,உத்தமம்,சென்னை, இந்தியா
  திரு. இனிய நேரு, பொதுக்குழு உறுப்பினர்,உத்தமம்,சென்னை, இந்தியா

  //முனைவர் பத்ரி சேஷாத்திரி, உறுப்பினர்,உத்தமம், சென்னை, இந்தியா //

  திரு. தில்லைக் குமரன், பொருளாளர் , உத்தமம், கலிஃபோர்னியா, அமெரிக்கா


  இது நீங்கள் இல்லையா???

  ReplyDelete
 7. ரிதுவின் அப்பா: அது நான்தான். ஆனால் நான் சொல்வது இணைய மாநாட்டுக் குழு. (பன்னாட்டுக் குழு அல்ல). மாநாட்டுக் குழு வேறு, பன்னாட்டுக் குழு வேறு. மாநாட்டுக் குழுதான் யார் எந்த அமர்வில் பேசலாம், எவ்வளவு பேர் பேசுகிறார்கள் என்பதை முடிவு செய்தது. பன்னாட்டுக் குழு எந்தெந்த நிபுணர்களை எல்லாம் மாநாட்டுக்கு வரவழைக்கலாம் என்பதை முடிவு செய்ததுடன் தன் வேலையை முடித்துக்கொண்டது. ஒரு பட்டியலைத் தயாரித்து அதனை தமிழக அரசிடம் அளித்ததுடன் அதன் வேலை முடிவடைந்துவிட்டது.

  ReplyDelete