[புத்தகம் பேசுது காப்புரிமை சிறப்பிதழுக்காக மார்ச் 2010-ல் எழுதப்பட்டது. சிறப்பிதழ் இந்த மாதம்தான் வெளியானது.]
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் ஜெர்மனி நாட்டில் உள்ள ஃப்ராங்ஃபர்ட் நகரில் ஒரு நிகழ்வு நடக்கும். மிகவும் கோலாகலமான ஒரு திருவிழா. புத்தகக் காட்சி என்றுதான் அதற்குப் பெயர். ஆனால் அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புத்தகங்களை வாங்குவார்கள் என்று நினைக்காதீர்கள்.
சொல்லப்போனால் ஐந்து நாள்கள் நடக்கும் அந்த நிகழ்வின்போது புத்தகங்களை யாருமே விற்கமாட்டார்கள். ஆனாலும் அங்கு வியாபாரம் நடக்கும். வருமானம் கிடைக்கும்.
அங்கு எதை வாங்குகிறார்கள், விற்கிறார்கள்? யார் வாங்குகிறார்கள், விற்கிறார்கள்?
இந்தக் கண்காட்சிக்கு trade fair என்று பெயர். அதாவது தொழில் செய்பவர்களுக்கு உள்ளேயே நடந்துகொள்ளும் வர்த்தகம். ஒரு புத்தகப் பதிப்பாளர் இன்னொரு புத்தகப் பதிப்பாளருக்கு விற்பார். அவர் விற்பது பல உரிமைகளை. அவை என்னென்ன என்று பார்ப்போம்.
பிற புவிப் பகுதிகளில் அச்சிட்டு விநியோகிக்கும் உரிமை (Reprint Rights)
அமெரிக்காவில் ஒரு பதிப்பாளர் ஒரு புத்தகத்தை ஆங்கிலத்தில் அச்சிட்டு விற்று வருகிறார். அவருக்கு இந்தியாவிலோ பிரிட்டனிலோ ஆஸ்திரேலியாவிலோ கிளை நிறுவனங்கள் கிடையாது. ஆனால் இந்த நாடுகளிலும் ஆங்கிலப் புத்தகங்கள் பெருமளவு விற்பனையாகின்றன. இந்த நாடுகளில் நல்ல சந்தை உள்ளது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் புத்தகங்களை அமெரிக்காவில் அச்சிட்டு, ஏற்றுமதி செய்து பிரிட்டனுக்கு அனுப்பி, அங்கே விநியோகம் செய்து பணத்தை வசூலிப்பது அவருக்குக் கடினமான செயல். இந்த நிலையில் அவர் என்ன செய்கிறார்? தான் பதிப்பித்த நூலை எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் அப்படியே, அதே போன்ற தாளில், அதேபோன்ற கட்டுமானத்தில் அச்சிட்டு, அந்தந்த நாடுகளுக்கு ஏற்ற விலையில் விற்பனை செய்ய யாராவது தயாராக இருக்கிறாரா என்று பார்க்கிறார்.
அப்படி ஒரு கூட்டாளி கிடைத்துவிட்டால் அவரிடம் மறு-அச்சாக்கும் உரிமையையும், அப்படி அச்சிட்ட புத்தகங்களை குறிப்பிட்ட சில புவிப் பகுதிகளில் மட்டும் விற்கும் உரிமையையும் விற்கிறார்.
பெரும்பாலான அமெரிக்கப் புத்தகங்களும் பிரிட்டன் புத்தகங்களும் அப்படித்தான் இந்தியாவுக்கு வருகின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் குறைந்த விலையிலேயே கிடைக்கின்றன. கணினித் துறை, பொதுவாகவே கல்வித் துறை என்று மட்டுமின்றி பொதுவான புத்தகங்கள், கதைகள், அ-புதினங்கள் என்று அனைத்துமே இந்த வகையில் இந்தியாவுக்கு வரத்தொடங்கியுள்ளன.
இது ஒருவழிப் பாதையும் அல்ல. இந்தியப் பதிப்பாளர்கள் இந்தியாவில் விநியோகித்துவரும் ஆங்கிலப் புத்தகங்களுக்கு அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் சந்தை தேடலாம். ஆப்பிரிக்க நாடுகளிலும் சிங்கப்பூர், மலேசியாவிலும் சந்தை தேடலாம்.
ஏன், வரும் நாட்களில் தமிழகத்தின் பதிப்பாளர்கள் இலங்கையில் உள்ளவர்களுக்கு அந்த நாட்டில் மட்டும் விற்கக்கூடிய வகையில் மறு-அச்சாக்கும் உரிமைகளை விற்கலாம்.
மொழிமாற்றும் உரிமை (Translation Rights)
மிகப் பெரிய வாய்ப்புகள் என்று பார்த்தால் அது மொழிமாற்றல் துறையில்தான் இருக்கிறது. ஃப்ராங்ஃபர்ட் நகரில் பெரிய அளவு தொழில் இதில்தான் நடக்கிறது. ஆங்கிலப் புத்தகங்களின் மொழிமாற்றல் உரிமையை பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிய, இத்தாலி, ரஷ்ய மொழி முதற்கொண்டு உலகின் பல்வேறு மொழியைச் சேர்ந்தவர்களும் வாங்குகிறார்கள். அதேபோல பிரெஞ்சு, ஸ்பானிய மொழிப் பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட விரும்பும் பதிப்பாளர்களை நாடுகிறார்கள்.
உலகிலேயே பல மொழிகள் பெருமளவில் புழங்கிவரும் ஒரே நாடு இந்தியாதான்! இந்தியாவின் பல்வேறு மொழிகளைச் சார்ந்த பதிப்பகங்களும் ஃப்ராங்ஃபர்ட் நகர் வந்து இந்திய மொழிகளுக்கு மொழிமாற்றும் உரிமையை போட்டி போட்டு வாங்குகின்றன.
ஃப்ராங்ஃபர்ட் போன்றே, தில்லியில் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனவரி மாதத்தில் உலகப் புத்தகக் கண்காட்சி ஒன்று நடக்கிறது. சமீபத்தில் 2010 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. இங்கும் இந்தியப் பதிப்பாளர்கள் ஒன்றுகூடி அவர்களுக்குள் பேசிக்கொண்டு தமிழிலிருந்து இந்திக்கும், ஆங்கிலத்திலிருந்து மலையாளத்துக்கும் மொழிமாற்றும் உரிமைகளை விற்று, வாங்கினர்.
மொழிமாற்ற உரிமையைப் பெற ஃப்ராங்ஃபர்ட்டுக்கோ தில்லிக்கோதான் செல்லவேண்டும் என்றில்லை. இருந்த இடத்திலிருந்தே பெறலாம். ஆனால் ஒரு முறையாவது முகத்தை நேரில் காட்டி, பேசுவது அவசியம். நீங்கள் யார், உங்கள் பதிப்பகம் என்னென்ன புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளது, யார் யாருடன் உறவு வைத்துள்ளீர்கள் என்பதை எதிராளி அறிந்துகொள்வது அவசியம்.
ஃப்ராங்ஃபர்ட் அல்லது தில்லி சென்றுவந்தால் பெரும்பாலான உலகப் பதிப்பாளர்களின் தொடர்பு முகவரி உங்களுக்குக் கிடைக்கும். இன்று மின்னஞ்சலிலேயே சகல விஷயங்களையும் செய்துமுடிக்கக்கூடிய நிலை வந்துள்ளது.
மறு-அச்சாக்க உரிமை அல்லது மொழிமாற்ற உரிமை ஒப்பந்தங்கள்
உங்களுக்கு மறு அச்சாக்கம் அல்லது மொழிமாற்றம் ஆகியவற்றில் ஏதோ ஒன்றில் விருப்பம் என்று வைத்துக்கொள்வோம். இந்த உரிமங்களைப் பெற என்ன செலவாகும்? எத்தனை ஆண்டுகளுக்கு இந்த உரிமைகள் கிடைக்கும்?
பொதுவாக இந்த உரிமங்கள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுக் காலத்துக்கு என்று தரப்படும். நல்லபடியாகத் தொழில் நடக்கிறது என்றால் மேலும் மேலும் பல ஆண்டுகளுக்கு இந்த உரிமங்களை நீட்டித்துக்கொள்ள முடியும்.
பொதுவாக இந்த உரிமங்களைப் பெற முன்பணம் (advance) தரவேண்டும். இது பொதுவாக இரண்டு வகைப்படும். குத்துமதிப்பான ஒரு முன்பணம், அல்லது ஏதோ ஒரு கணக்கீட்டை முன்வைத்து. குத்துமதிப்பு என்பது ஒரு எழுத்தாளரின் அல்லது அந்தப் புத்தகத்தின் மதிப்பைப் பொருத்து இருக்கும். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அல்லது ஹாரி பாட்டர் வரிசைப் புத்தகங்களை எழுதிய ஜே.கே.ரௌலிங், டா விஞ்சி கோட், தி லாஸ்ட் சிம்பல் போன்ற புத்தகங்களை எழுதிய டான் பிரௌன் போன்றவர்கள் என்றால் கணிசமான அளவு முன்பணம் வைக்கவேண்டி வரும். டாலர் மதிப்பில் சொல்வதானால், இந்திய மொழிகள் என்று எடுத்துக்கொண்டால், குறைந்தது 2,000 அமெரிக்க டாலர் முதற்கொண்டு 5,000, 10,000 அமெரிக்க டாலர் என்று செல்லும் (1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை).
ஆனால் பொதுவாக எல்லாப் புத்தகங்களின் உரிமங்களை வாங்குவதற்கும் இந்த அளவுக்குப் பணம் தரவேண்டும் என்பதில்லை. ஒரு எளிதான கணக்கைப் போட்டுப் பார்த்து, எவ்வளவு முன்பணம் தரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கமுடியும்.
முதல் அச்சில் 1,000 பிரதிகள் அடிக்க உள்ளீர்கள் என்று வையுங்கள். புத்தகத்தின் விலை ரூ. 200 இருக்கலாம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். பேப்பர்பேக் எனப்படும் சாதா அட்டைக்கு 7.5% ராயல்டி தந்தால் போதுமானது. கெட்டி அட்டை என்றால் 10% ராயல்டியை எதிர்பார்ப்பார்கள். சாதா அட்டை என்றால் முதல் அச்சின் ராயல்டி தொகை ரூ. 15,000/-
நீங்கள் மொழிமாற்றல் உரிமையைப் பெறுவதாக இருந்தால் இந்தத் தொகையை மட்டும் முன்பணமாகத் தருகிறேன் என்று பேசிப் பார்க்கலாம். எதிராளி அதனை ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம். (நாங்கள் கிழக்கு பதிப்பகத்துக்காக அப்படிப் பல புத்தகங்களுக்குச் செய்துள்ளோம்.) சிலர் குறைந்தது 2,000 பிரதிகளுக்காவது முன்பணம் தரவேண்டும் என்று எதிர்பார்த்து, அதைக் கேட்பார்கள். அப்படியானால் மேற்படி புத்தகத்துக்கு ரூ. 30,000/- முன்பணம் தரவேண்டும்.
வேறு சிலர் முன்பணம் பற்றிக் கவலைப்படாமல் கூட இருக்கலாம். ஒவ்வோர் ஆண்டும் கணக்கெடுத்து, எத்தனை புத்தகங்கள் விற்றுள்ளனவோ அந்த ராயல்டி தொகையைக் கொடுத்தால் போதும் என்று அவர்கள் ஒப்பந்தம் போடலாம்.
அடுத்து, ஒப்பந்தம். கட்டாயமாக ஒரு தாளில் முக்கியமான ஷரத்துகளை எழுதி இரு பக்கமும் கையெழுத்திடுவது அவசியம். பொதுவாக நீங்கள் அமெரிக்க, பிரிட்டானிய பதிப்பாளர்களிடம் அல்லது இந்தியாவில் உள்ள ஆங்கிலப் பதிப்பாளர்களிடம் பேசுகிறீர்கள் என்றால் அவர்களே ஒப்பந்த முன்வரைவை உங்களுக்கு அனுப்பிவிடுவார்கள். அதில் ராயல்டி சதவிகிதம், கணக்கெடுக்கும் காலம், முன்பணம், எத்தனை ஆண்டுகளுக்கு இந்த உரிமம் போன்ற பல தகவல்களும் இருக்கும். அதில் உங்களுக்கு ஏதேனும் ஷரத்து சரியாக இல்லை என்று தோன்றினால் நீங்கள் எதிராளியிடம் அது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த ஷரத்தை மாற்ற முயற்சி செய்யலாம்.
ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் முன்பணம் தரவேண்டி இருந்தால், அதுவும் எதிராளி வேறு நாட்டில் இருந்தால், நீங்கள் டாலரில் அல்லது பவுண்டில் பணம் செலுத்தவேண்டி இருக்கும். அதற்கு இந்தியாவில் வரி பிடித்தம் செய்யவேண்டி இருக்கும். இதற்கான தகவல்களை உங்கள் ஆடிட்டரிடமும் வங்கியிடமும் பேசித் தெரிந்துகொள்ளுங்கள்.
ஒப்பந்தம் காலாவதி ஆகும் தேதியைக் கவனமாக நினைவில் வைத்திருங்கள். அந்தக் காலகட்டத்துக்குள் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் அச்சடித்து விற்கலாம். (சில ஒப்பந்தங்களில் எத்தனை பிரதிகள் மொத்தமாக நீங்கள் அச்சாக்கலாம் என்பதற்கும் ஒரு வரையறை இருக்கலாம்.) காலம் முடிவதற்குள் ஒப்பந்தத்தை நீட்டிக்கும் செயலிலும் நீங்கள் இறங்கலாம்.
மொழிமாற்றல் செய்வதாக இருந்தால் அதற்கான செலவு உங்களுடையதே. ஆனால் சில நேரங்களில் இலக்கியப் படைப்புகளாக இருந்தால் (கவிதை, கதை) சில நாடுகளில் அரசுகள் மொழிமாற்றத்துக்கு என மானியம் கொடுக்கிறார்கள். உதாரணமாக பிரெஞ்சு, டச்சு, ஜெர்மன் மொழியிலிருந்து இந்திய மொழி எதற்காவது நாவல்களை மொழிமாற்றம் செய்யும் உரிமையை நீங்கள் பெற்றால், மொழிமாற்றத்துக்கான மானியம் ஏதேனும் கிடைக்குமா என்று அந்தந்த நாட்டின் தூதரகங்களை நீங்கள் தொடர்புகொண்டு கேட்டுப் பார்க்கலாம். இந்த நாடுகளில் இருக்கும் பதிப்பகங்களே அது தொடர்பான தகவல் இருந்தால் உங்களுக்குத் தெரிவித்துவிடுவார்கள்.
ஃப்ராங்ஃபர்ட்டில் இந்த நாடுகளின் அரச நிறுவனங்களே தனியாக ஸ்டால் அமைத்து மொழிமாற்றத்துக்குத் தாங்கள் உதவித்தொகை அளிப்பதைத் தெரிவிக்கின்றன.
சித்திரக் கதைகள் உரிமம்
உள்ளதிலேயே எளிதானது என்று ஒருவகையில் பார்த்தால் அது சித்திரக் கதைகளின் எழுத்துகளை மட்டும் மொழிமாற்றி அதே படங்களுடன் அச்சிடுதல். சிறு குழந்தைகளுக்கான வண்ணப் புத்தகங்கள், வண்ண அல்லது கறுப்பு/வெள்ளை காமிக்ஸ் புத்தகங்கள் போன்ற பலவும் இப்படிக் கிடைக்கின்றன.
இந்தப் புத்தகங்களுக்கான மொழிமாற்ற உரிமங்களைப் பற்றிப் பேசும்போது ஒரிஜினல் படங்களை எந்த வழியில் பெறப்போகிறீர்கள் என்பதைப் பற்றியும் பேசவேண்டும். சில நேரங்களில் இந்தப் புத்தகங்களில் ஒரிஜினல் பதிப்பாளர்கள் படங்களை உங்களுக்குத் தர மறுக்கலாம். மாறாக நீங்கள் மொழிமாற்றிய எழுத்துகளை அவர்களிடம் கொடுத்தால், அவர்கள் அந்த எழுத்துகளை படங்களுடன் சேர்த்துப் பதியவைத்து, அவர்களே அச்சிட்டு, புத்தகங்களாக உங்களுக்குக் கொடுப்பார்கள்.
அதேபோல இங்கும், நீங்கள் இந்தியப் பதிப்பாளராக இருந்தால், உங்கள் உரிமங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க அரிய வாய்ப்பு உள்ளது. ஃப்ராங்ஃபர்ட்டில் இந்தியப் பதிப்பாளர்கள் சிலர் சிறுவர் புத்தகங்களின் உரிமங்களை ஸ்வீடன், நார்வே, பெல்ஜியம், நெதர்லாந்து, ருமேனியா, பல்கேரியா போன்ற நாடுகளில் உள்ள பதிப்பகங்களுக்கு விற்பதை நான் பார்த்தேன். அத்துடன் இந்தியாவில் அச்சாக்கும் செலவு குறைவாக இருப்பதால், இந்தப் புத்தகங்களை அச்சிட்டுத் தரும் ஒப்பந்தத்தையும் இந்த இந்திய நிறுவனங்கள் பெறுகின்றன.
உங்கள் சித்திரக் கதை இந்தியாவில் 3000 அல்லது 4000 பிரதிகள் மட்டுமே விற்கக்கூடும். ஆனால் ஒரேயடியாக ஜெர்மனியின் ஒரு பதிப்பகம் மூலம் அதன் ஜெர்மன் மொழிபெயர்ப்புக்கு 50,000 பிரதிகளுக்கான ஆர்டர் கிடைக்கக்கூடும்.
ஜெர்மனி மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரலில் லண்டனில் இதேபோன்ற டிரேட் கண்காட்சி நடக்கிறது. இத்தாலியில் பொலோனா என்ற இடத்தில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் குழந்தைகளுக்கான புத்தகங்கள் காட்சி நடக்கிறது. இதுவும் தொழில்துறையினருக்கானதே.
எழுத்தாளர், ஏஜெண்ட்
இந்தக் கூட்டங்களின்போது எழுத்தாளர்களுக்கான வாய்ப்புகளும் கிடைக்கின்றன. பொதுவாக மேலை நாடுகளில் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு ஏஜெண்ட் இருப்பார். இந்த ஏஜெண்ட்தான் பதிப்பாளர்களுடன் தொடர்புகொண்டு, தன் எழுத்தாளர்க்கு நல்ல ஒரு ‘டீல்’ வாங்கித்தருவார். அதாவது நல்ல ராயல்டி, நல்ல முன்பணம். இந்தியாவில்கூட ஆங்கில எழுத்தாளர்களுக்கு என்று ஏஜெண்ட்கள் வர ஆரம்பித்துவிட்டனர்.
பிற மொழிகள் இன்னும் அந்த நிலைக்கு உயரவில்லை.
அச்சகங்கள், தாள் உற்பத்தி செய்பவர்கள்
ஃப்ராங்ஃபர்ட், தில்லி போன்ற இடங்களில் மாபெரும் அச்சகங்கள், தாள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகியவை ஸ்டால் அமைத்து, வாடிக்கையாளர்களைப் பிடிக்கும் வேலைகளையும் செய்கின்றன.
மின்-புத்தகங்கள், இணைய விற்பனை
கடந்த நான்கைந்து வருடங்களாகவே ஃப்ராங்ஃபர்ட்டில் அமேஸான் போன்ற இணையக் கடைகள் மட்டுமின்றி கூகிள், மின் புத்தகப் படிப்பான்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவையும் வருகின்றன. இதன்மூலம் இணையத்தில் பதிப்பாளர்களுக்கு நிறைய வருமான வாய்ப்புகள் உருவாகின்றன. இம்முறை தில்லியிலும் பல மின் புத்தகப் படிப்பான் நிறுவனங்கள் காட்சியில் கலந்துகொண்டன. வரும் ஆண்டுகளில் இந்தத் துறையில் பதிப்பாளர்களுக்குப் பெரும் வாய்ப்புகள் காத்துள்ளன.
மின் புத்தக உரிமம் என்பது தனியாகப் பிரிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அப்படியானால் அந்த உரிமம் யார் கையில் இருக்கும் என்பது ஒரு பெரிய கேள்வி. எழுத்தாளரிடமா, பதிப்பாளரிடமா? எழுத்தாளர் தன் படைப்புக்கான மின் புத்தக உரிமத்தைத் தானே தனியாக மற்றொரு நிறுவனத்துக்கு விற்கமுடியுமா?
அல்லது பதிப்பாளர், எழுத்தாளரிடம் ஒப்பந்தம் செய்துகொள்ளும்போது அச்சுப் புத்தக உரிமையுடன் மொழிமாற்றல் உரிமை, மின் புத்தக உரிமை ஆகியவற்றையும் சேர்த்தே எழுதி வாங்கிக்கொள்ள வேண்டுமா?
இந்தக் கேள்விகள் தொடர்பாக மேலை நாடுகளில் கடுமையான போட்டிகள் ஏற்பட்டுள்ளன. விரைவிலேயே இந்தியாவிலும் இது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டு விவாதங்கள் நடைபெறும்.
***
மொத்தத்தில் பதிப்புத் துறையில் உள்ள பல்வேறு உரிமங்களை முழுமையாகப் புரிந்துகொள்வது பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கு வருமானத்தை அதிகரிக்க உதவும். அதற்கு முக்கியம் உலக அளவில் நடக்கும் டிரேட் புத்தகக் காட்சிகளில் பங்குபெறுதல்.
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
6 hours ago
நல்ல பதிவு. நன்றி பத்ரி.
ReplyDeleteபல அரிய விஷயங்களை தெரியப் படுத்தி இருக்கிறீர்கள்.
பல தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்களை உள்ளடக்கியது.
ReplyDeleteஎனக்கு 1975-லோ 76லோ ஒரு தடவை அக்டோபரில் Frankfurt Book Fair நடந்த சமயம், அதைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் உள்ளே சென்று சுற்றி வந்தது ஞாபகத்துக்கு வருகிறது. இந்தியாவில் நான் ஏஜெண்டாக இருந்த Swedish Pulp & Paper Association (SPPA) அதில் பங்குபெற்றபோது, நானும் அவர்களில் ஒருவனாக Delegate Pass-ஐ மாட்டிக்கொண்டு ச்சும்மா சுற்றிப்பார்த்தேன். அடேயப்பா! இதில் இத்தனை விஷயங்கள் உள்ளன.
நன்றி, பத்ரி. நல்ல பதிவு!!
பாரதி மணி
//பேப்பர்பேக் எனப்படும் சாதா அட்டைக்கு 7.5% ராயல்டி தந்தால் போதுமானது. //
ReplyDeleteமொழிமாற்றம் செய்பவருக்கு எத்தனை சதவிதம் தர வேண்டும் :) :)
1940 க்கு முன்னால் உள்ள பல புத்தகங்களும் இருக்கிறது. எத்தனையோ பதிப்பகங்கள் இப்போது எங்கே இருக்கிறார்களோ என்று யோசித்துக் கொள்வதுண்டு. சர்வ தேச அரசியல் தெரியாமல் தலைவன் ஆவது கடினம் என்பது போல இப்போது எந்த தொழில் குறித்தும் நாம் உலகளாவிய அறிவு இல்லாவிட்டால் கடினம் என்பது போல் உங்கள் கட்டுரை உணர்த்துகிறது. எத்தனை எத்தனை விசயங்கள்.
ReplyDeleteமணிமேகலைபிரசுரத்துக்கே ஐடியா குடுப்பீங்க போல இருக்கே
ReplyDeleteபதிப்பகத்துறையின் பல நுணுக்கங்களை தெரிந்து கொள்ள உதவியது
ReplyDelete