Thursday, July 08, 2010

“அத்தனை ஆர்டர்களும் உனக்குத்தான்!”

இரான் - இராக் இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்த நேரம். மனைவியிடம் இராக் போகிறேன் என்று சொன்னால் விடுவாளா? இரண்டு சிறு குழந்தைகள் வேறு. எனவே பங்களாதேஷ் போகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு இராக் கிளம்பினேன். நேராக இராக் செல்ல முடியாது. இரான் விமானங்கள் சுட்டு வீழ்த்திவிடும். எனவே ஜோர்டான் சென்று, அங்கிருந்து இராக்கின் பாக்தாத் நகருக்கு விமானம் ஏறினேன்.

பாக்தாத் விமான நிலையத்தில் இறங்கியபோது நள்ளிரவு மணி 12. நான் வந்திறங்கிய அந்த ஒரு விமானம் மட்டும்தான் அங்கே இருந்தது. உள்ளூர்வாசிகள் அனைவரும் இறங்கியதும் அவரவரது உறவினர்களுடன் கார்களில் ஏறிச் சென்றுவிட்டனர். நாங்கள் ஒரு ஐந்து பேர்தான் விமான நிலையத்தில் இருக்கிறோம். நான் மட்டும்தான் இந்தியன். பிற நால்வரும் வெள்ளைக்காரர்கள். சுற்றும் முற்றும் பார்த்தால் ஒரு டாக்ஸியும் இல்லை.

நான் கொஞ்சம் தைரியமாக வெளியே சென்று டாக்ஸி பிடித்துவருகிறேன் என்று சொன்னேன். வெள்ளையர்களிடம் என் பெட்டிகளை விட்டுவிட்டு வெளியே கும்மிருட்டில் சென்றேன். அந்த இரவு நேரத்தில் வெளியே குளிர் 4 டிகிரி செண்டிகிரேட். என்னிடம் குளிருக்குப் பொருத்தமான ஆடைகளும் இல்லை. அப்படி இப்படி சில நிமிடங்கள் நடந்து பார்த்தால் ஒரு டாக்ஸியின் உள்ளே ஓட்டுனர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். அவரை எழுப்பி, அவரது திட்டுகளை சகித்துக்கொண்டு அழைத்துவந்தேன்.

வெள்ளைக்காரர்களுக்கு ஒரே சந்தோஷம். ஐந்து பேரும் வண்டியில் ஏறிக்கொண்டோம். வெள்ளைக்காரர்கள் அனைவரும் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அறைகளை முன்னமேயே பதிவு செய்திருந்தனர். என் அலுவலகத்தில் தரும் காசில் என்னால் ஒரு சிறு ஓட்டலில்தான் அறை பதிவு செய்ய முடியும். எனவே முதலில் வெள்ளைக்காரர்களை அவரவர் ஓட்டல்களில் இறக்கிவிட்டு என் ஓட்டலை அடைந்தேன்.

வாசல் கதவு சாத்தி இருந்தது. வாசலில் துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர், துப்பாக்கி முனையில் உள்ள பயோனெட்டால் என்னைத் தடுத்து நிறுத்தினார். உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். நான் ஏற்கெனவே அறையைப் பதிவு செய்துள்ளேன் என்று மன்றாடினேன். அவர் மசியவில்லை. வேண்டுமானால் காலையில் வா; இப்போதைக்குக் கதவைத் திறக்கமுடியாது என்றுவிட்டார். காலையிலா? இப்போது நள்ளிரவு 1.00 மணி. இன்னும் ஐந்து மணி நேரத்தை இந்தக் குளிரில் எப்படிக் கழிப்பது?

டாக்ஸிக்காரர் தொடர்ந்து ஹார்ன் அடித்துக்கொண்டிருந்தார். அவருக்கு பைசா செட்டில் செய்யவில்லை. மீண்டும் டாக்ஸியில் ஏறி அமர்ந்தேன். அருகில் உள்ள வேறு ஏதேனும் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன். கோபத்துடன் என்னை அழைத்துச் சென்றார். எந்த ஓட்டலுக்குச் சென்றாலும் இதே தொல்லை. உள்ளே அனுமதிக்கவே இல்லை; அல்லது அறை காலி இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

கடைசியாக ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் ஒரு சுற்று சுற்று வந்தோம். அங்கும் அறைகள் இல்லையாம். விஷயம் என்னவென்றால் பாஸ்ராவில் இரான் குண்டு வீசித் தாக்கியுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பலர் பாக்தாத் வந்து ஓட்டல்களில் இருக்கும் அனைத்து அறைகளையும் ஆக்ரமித்துவிட்டனர். எனக்கோ மோசுல் நகரத்துக்குப் போகவேண்டும். அங்குள்ள பல்கலைக்கழகத்திலிருந்துதான் அழைப்பு வந்திருந்தது. அந்த நகரம் பாக்தாதிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பாக்தாதில் கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு மோசுல் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். இப்போது முதலில் இரவை எங்கேயாவது கழிக்கவேண்டும். மணி 2.30 ஆகிவிட்டது.

டாக்ஸி ஓட்டுனர் கடுப்பில் இருந்தால். நள்ளிரவுத் தூக்கத்தை எனக்காக விட்டுக்கொடுத்திருந்தார். அவரிடம் சென்று, என்னை மீண்டும் விமான நிலையத்திலேயே விட்டுவிடுமாறு சொன்னேன். அங்காவது கொஞ்சம் கதகதப்பாக இருக்கும். வண்டியில் ஏறி அமர்ந்தவன் அப்படியே தூங்கிவிட்டேன்.

திடீரென விழிப்பு வந்ததும் எதோ தவறான பாதையில் செல்வதை உணர்ந்தேன். விமான நிலையத்திலிருந்து வரும்போது வழவழவென்ற பாதை. இப்போதோ, தடதடவென வண்டி ஆடிக்கொண்டே குண்டு குழிகளின்மீது சென்றது. என் திகைப்பு அடங்குவதற்குள் வண்டி ஓரிடத்தில் நின்றது. ஓட்டுனர் கன்னாபின்னாவென்று திட்டிக்கொண்டே எழுந்துவந்து என் பெட்டிகளை விட்டெறிந்தார். என்னிடம் வந்து பணம், பணம் என்றார். பயத்தில் என் பர்ஸை அவரிடம் கொடுத்தேன். அதிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, மீதியை பர்ஸில் விட்டுவைத்து அதை என்னிடம் எறிந்துவிட்டு, என்னைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளினார். வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.

கும்மிருட்டு. குளிர். பயம். தூக்கம். பசி. அழுகையாக வந்தது. என் பெட்டிகளை இழுத்துப் பிடித்து என்னைச் சுற்றி வைத்துக்கொண்டு அங்கேயே தெருவில் உட்கார்ந்துவிட்டேன். எத்தனை நேரம் அப்படியே அந்தக் குளிரில் விறைத்தபடி உட்கார்ந்திருந்தேன் என்று தெரியாது.

சற்று நேரம் கழித்து சற்றுத் தள்ளி நிறைய வண்டிகள் செல்லும் சத்தம் கேட்டது. ராணுவ டாங்கிகள். போர்க்களம் நோக்கிச் செல்கின்றன போலும். அங்கே ஓடிச் சென்று உதவி கேட்கலாமா என்று நினைத்தேன். ஆனால் பயமாக இருந்தது. அவர்கள் ஏதாவது சங்கேத வார்த்தையைக் கேட்க, எனக்குத் தெரியாமல்போக, சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்றால்?

இன்னும் சிறிதுநேரம் கழித்து ஒரு கார் சற்றுத் தொலைவில் வந்து நின்றது. அதன் விளக்கொளியில் அருகே ஒரு மசூதி இருப்பது தென்பட்டது. அந்த காரிலிருந்து இறங்கியவர் மசூதியை நோக்கிச் சென்றார். காலையில் மசூதியில் தொழுகை செய்ய வந்திருக்கிறார். அப்படியென்றால் மணி 5.00 ஆகிவிட்டதா?

மெதுவாக என் பெட்டிகளை ஒவ்வொன்றாக இழுத்துக்கொண்டு காருக்கு அருகில் சென்றேன். கார்க்காரர் திரும்பிவரும்போது அவரிடம் உதவி கேட்கலாம் என்று எண்ணம். அவர் திரும்பி வந்ததும் என்னைப் பார்த்து அதிர்ந்துபோனார். நான் பேயோ பிசாசோ அல்லது திருடனோ என்று நினைத்து ஓடத்தொடங்கினார். குளிரில் வெடவெடத்த என் உருவம் அவருக்கு பயத்தைக் கொடுத்திருக்கவேண்டும். ஓடாதீங்க என்று கெஞ்சினேன். மெதுவாக என்னை நோக்கி வந்தவர், என்னைத் தொட்டுப் பார்த்து நான் மனிதன்தான் என்பதை உறுதி செய்துகொண்டார்.

சைகை பாஷையில் எனக்கு ஓட்டலில் ஓர் அறைவேண்டும் என்று விளக்கினேன். வண்டியில் என்னை ஏற்றிக்கொண்டார். தன்மேல் இருந்த கோட்டை எனக்கு அணிவித்தார். மீண்டும் பாக்தாத். மீண்டும் அறை இல்லை என்ற பாட்டு. இனி என்ன செய்வது என்று என்னிடம் கேட்டார். மோசுல் போகவேண்டும் என்றேன். உனக்கென்ன பைத்தியமா என்றார். மோசுல் 300 கிலோமீட்டர். ஆனால் அவருக்கு பதில் சொல்லும் அளவுக்கு எனக்கு நினைவில்லை. அப்படியே மயங்கியிருந்தேன்.

அடுத்து நான் கண் விழித்தபோது சுட்டெரிக்கும் வெயில், நடு மதியம். வண்டி எங்கோ நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருந்தது. வண்டிக்காரர் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார். மோசுல், மோசுல் என்றார். அவர் மனத்தில் ஏதோ ஒன்று தோன்றியிருக்கவேண்டும். என்னை மோசுல் வரை கொண்டுவிட்டுவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறார். கண்களாலேயே நன்றி சொல்லிவிட்டு மீண்டும் உறங்கிப்போனேன்.

மோசுல் சென்றடைந்ததும், நேராக பல்கலைக்கழகம் போனோம். நல்லவேளையாக அங்கே நூலகருக்கு என்னை அடையாளம் தெரிந்திருந்தது. என்னய்யா, போர்க்களத்திலிருந்து வருகிறீரா என்றார். போர்க்களமா, அதெல்லாம் வெறும் ஜுஜுபி, அதைவிட மோசமான அனுபவத்திலிருந்து வருகிறேன் என்றேன். எனக்காக ஓர் அறையை வைத்திருந்தார்கள். கார்க்காரருக்கு நன்றி சொல்லி, கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு அறைக்குச் செல்லத் திரும்பினேன்.

நில்லுங்க, உங்க அலுவலகத்திலிருந்து 300 பெட்டிங்க வந்திருக்கு; அதுல உள்ள புஸ்தகங்களை எல்லாம் எடுத்து அடுக்கி வெச்சுட்டுப் போங்க என்றார் நூலகர். அய்யா, நொந்து போயிருக்கேன், நாளைக்கு செய்யக்கூடாதா இதை என்றேன். ஆனால் நூலகர் கேட்கவில்லை. நாளைக்கு புத்தகக் கண்காட்சி ஆரம்பம்; கல்வி அமைச்சர் வருகிறார்; இதைச் செய்தே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார். ஓரிருவர் உதவி செய்ய வந்தனர். ஒரு பெட்டி விடாமல் பிரித்து, புத்தகங்களை அடுக்கிவிட்டு, அறைக்குப் போய் விழுந்தவன்தான். அடுத்து மறுநாள்தான் எழுந்தேன்.

உயர்கல்விப் புத்தகக் கண்காட்சியில் உலகில் பல பகுதிகளிலிருந்தும் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் வந்திருந்தனர். இரண்டு நாள்கள் ஆயின. மோசுல் அருகிலும் இரான் குண்டு வீசியிருந்தது. வெள்ளைக்கார பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் நடுங்கிப்போய்விட்டனர். மூன்றாம் நாள் காலையுணவுக்கு நான் வந்தபோது அவர்கள் யாருமே அங்கு இல்லை.

எனக்குப் பயமில்லையா என்று கேட்டார் நூலகர். முதல் நாள் எனக்கு நடந்த சம்பவத்துக்குப்பிறகு, போர்க்களத்துக்குச் செல்வதற்குக்கூட எனக்குப் பயமில்லை என்றேன். அன்றுதான் இறுதி நாள். கல்வி அமைச்சர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். நான் ஒருவன் மட்டும்தான் அந்நியன். பேசும்போது என்னைச் சுட்டிக்காட்டி என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு நடுக்கமாக இருந்தது. திடீரென நூலகர் என்னை விலாவில் குத்தி, மேடைக்குப் போ, மேடைக்குப் போ என்றார். எதற்கு என்றேன். அமைச்சர் கூப்பிடுறார் என்றார். நடுங்கிக்கொண்டே மேடை ஏறினேன். கல்வி அமைச்சர் என்னைக் கட்டித் தழுவினார். ஒரு பெரிய தாம்பாளத்தில் எதையோ வைத்து நீட்டினார். வாங்கிக்கொண்டேன்.

பிறகுதான் புரிந்தது. குண்டுகள் அருகில் வீசப்பட்ட நிலையிலும் தைரியமாக நான் மட்டும் அங்கே இருந்தது அவர்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியைத் தந்துள்ளது. எனவே பல்வேறு நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்ட ஆர்டர்களை எல்லாம் கேன்சல் செய்துவிட்டு அனைத்தையும் என் கம்பெனிக்கே கொடுத்துவிட்டார்கள்.

இப்படித்தான் உயிரைப் பணயம் வைத்து இராக்கில் நான் பெரிய ஆர்டரைப் பிடித்தேன்.

***

புத்தக ஏற்றுமதி பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு தில்லியில் நடைபெற்றது. அதில் பேசிய சுகுமார் தாஸ், தன் சொந்த அனுபவங்கள் சிலவற்றைச் சொன்னார். அவற்றை இங்கு வரிசையாகப் பதிவுகளாக இடப்போகிறேன். சுகுமார் தாஸ் UBS Publishers and Distributors என்ற இந்தியாவின் மிகப்பெரிய புத்தக விநியோக நிறுவனத்தில் வேலை செய்தவர். மூத்த புத்தக விற்பனையாளர்.

18 comments:

  1. எழுதப்பட்ட விதம் மனதுக்கு நிறைவாக இருந்தது.

    ReplyDelete
  2. இந்த ஹரன் பிரசன்னாவை அட்லீஸ்ட் ஆஃப்கானிஸ்தானுக்காவது அனுப்பக்கூடாதா? :-)

    ReplyDelete
  3. செர்லாக் ஹோம்ஸ் கைதையை என்னுடைய ஆங்கில ஆசிரியர் நடத்தியது போன்று அனுபவத்தை நேரடி வர்ண்னையாக விவரித்த விதம் அற்புதமாக இருக்கிறது.

    பொதுவாக ஒரு வெற்றி மட்டுமே பிரதானமாக கவனிக்கப்படும் நிலையில் அதற்குப்பின் உயிரைப் பணயம் வைத்தே அந்த வெற்றி ஈட்டப்பட்டிருக்கிறது என்பது அவ்வளவு எளிதில் வெளியே தெரிய வாய்ப்பு குறைவு.

    தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சித்
    தன்மெய் வருத்தக்கூலி தரும் -திருக்குறளின் வாழ்வியல் கருத்தும் நிறுவப்படுகிறது இச்சம்பவத்தின் மூலம்.

    ReplyDelete
  4. எழுதப்பட்ட விதம் உண்மையிலேயே மனதுக்கு நிறைவாக இருந்தது.

    ReplyDelete
  5. அருமையாக (உண்மை) கதையைச் சொல்லியதற்கு நன்றி. நீங்கள் இவ்வளவு அழகாக கதைவிடுவீர் (எழுதுவீர்) என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை :-)

    ReplyDelete
  6. இந்தப்பதிவு ஹரன்பிரசன்னாவிற்கான மறைமுகச் செய்தி போலிருக்கிறது. :) பிரசன்னா, கிழக்கு புத்தகங்களை கஜகஸ்தானில் விற்ற அனுபவங்களை இப்படி எழுதினாலும் அதை ஆன்மீக ஊறுகாயுடன் தமிழ்ஹிந்து.காமில் மாத்திரம் போட வேண்டாம் என்று சொல்லி வையுங்கள். :)

    ReplyDelete
  7. ஆப்கானிஸ்தானிற்கு ஹரன் பிரசன்னா என்றால் காஸா பகுதிக்கு பா.ராகவனை அனுப்ப சிபாரிசு செய்கிறேன் :)

    ReplyDelete
  8. நடுநடுவே சிறுகதையா இல்லை உண்மை சம்பவமா என்ற பிரமையும், சஸ்பென்சாக கொண்டு சென்றுள்ளதில் இருக்கும் நேர்த்தியும் அருமை.என்னே அனுபவம்!

    ReplyDelete
  9. அருமையான நடை, பத்ரி. இது கதையா அல்லது உண்மை சம்பவமா என்று கடைசி வரை சந்தேகமாகவே இருந்தது. முதலில் பேயோன் எழுதியதோ என்ற சந்தேகம் வேறு.

    ReplyDelete
  10. ஆஹா! அருமையான நடை! நான் பத்ரி இப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருகிறாரா என்று நினைத்து படித்தால் , கடைசியில் அது சுகுமார் தாஸ் அனுபவம் என்று தெரிந்த பிறகு ஷாக்.

    ReplyDelete
  11. ஆப்கானிஸ்தான் நம் காந்தாரியின் பிறந்த அகம். அங்கே போக என்ன பிரச்சினை? :)

    ReplyDelete
  12. என் மனதை தொட்டவர் , அந்த கார்காரர்தான் .

    ReplyDelete
  13. Badri,

    Nice write-up! btw, did you notice that Gnani has written about your blog piece on semmozhi maanadu in this week's "o pakkangal"?

    -av.

    ReplyDelete
  14. ஹரனை ஆஃப்கானிஸ்தானுக்கும் பாராவை கஜக்ஸ்தானுக்கும் அனுப்புவதை நான் சந்தோஷமாக வழிமொழிகிறேன். இந்த ச.ந.கண்ணனை மட்டும் மைலாப்பூர் மாமி மெஸ்ஸுக்கு அனுப்பவும். “அனுப்பவா? அங்கேயிருந்து எழுந்து வந்தால்தானே” என்கிறீர்களா? அதுவும் சரிதான் !

    ReplyDelete
  15. நீங்கள் குறிப்பிட்டு இருப்பவர் ஒரு மலையாளியாக இருக்க சாத்திய கூறுகள் நிறைய உண்டு. உண்மையா?

    ReplyDelete
  16. what an amazing salesmanship :)

    the ruthlessness of an organization that puts its employee's safety at stake is one thing... am literally stunned by the stupidity of the salesman who actually risked his life for selling some extra copies..(which could have been sold by other means anyway)

    ReplyDelete