Monday, July 26, 2010

திருநெல்வேலிக்கே அல்வா!

நாடு நாடாகப் போய் புத்தகம் விற்பதுதான் என் தொழில். இம்முறை சவுதி அரேபியா. அங்கு நான் போவது இதுதான் முதல் முறை. அங்கே என்ன புத்தகங்களை விற்கலாம் என்று தெரியாது. இருந்தாலும் அது ஒரு முஸ்லிம் நாடு என்பதால் இஸ்லாமியப் புத்தகங்களை விற்கலாமே என்று தோன்றியது. எனவே இந்தியாவில் யார் யாரெல்லாம் ஆங்கிலத்தில், உருதுவில், அரபியில் இஸ்லாமியப் புத்தகங்கள் அச்சிட்டு வெளியிடுகிறார்கள் என்று தேடி, அவர்களிடமிருந்து சாம்பிள்களைப் பெற்றுக்கொண்டேன். இஸ்லாமியப் புத்தகங்கள் தவிர வேறு எதையும் கையில் எடுத்துக்கொள்ளவில்லை.

சுற்றி வளைத்து ரியாதில் போய் இறங்கினேன். ஆனால் என் லக்கேஜ் எதுவும் வந்துசேரவில்லை. இரண்டு நாள்கள் ஓட்டலில் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டியதாயிற்று. என் பெட்டிகளில்தான் சாம்பிள் புத்தகங்கள் இருந்தன. கடைசியாக பெட்டிகள் வந்து சேர்ந்ததும் சில புத்தகங்களை எடுத்துக்கொண்டு, ஊரிலேயே இருந்த மிகப் பெரிய புத்தகக் கடை ஒன்றுக்குச் சென்றேன்.

அங்கே ஒரு பாகிஸ்தானிய ஊழியர் இருந்தார். அவரிடம் புத்தகங்களைக் காட்டினேன். அவர் தன்னால் முடிவுகள் எடுக்கமுடியாது என்றார். அதே நேரம், என்னிடம் இருந்த புத்தகங்களை அந்தக் கடை வாங்குவதற்குச் சாத்தியங்களும் இல்லை என்றார். கடைசியில் எனது தொல்லை தாங்கமுடியாமல் மாடியில் இருக்கும் ஷேக்கிடம் சென்று நேராகப் பேசுமாறு அனுப்பினார்.

அந்த ஷேக்தான் புத்தகக் கடை முதலாளி. நான் அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டார். இந்தியா என்றேன். கையில் இருந்த புத்தகங்களைக் காட்டினேன். எல்லாம் இஸ்லாமியப் புத்தகங்கள். அவருக்கு ஒரே ஆச்சரியம். இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கிறார்களா என்று கேட்டார். ஆமாம், எங்கள் நாட்டில்தான் உலகிலேயே இரண்டாவது அதிக முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்றேன்.

அவரால் நம்பமுடியவில்லை. உடனே தன் நண்பர் ஒருவருக்கு போன் போட்டார். இங்க ஒருத்தன் வந்து இந்தியாலதான் உலகத்துலயே ரெண்டாவது அதிக முஸ்லிம்கள் இருக்காங்கன்னு சொல்றான், உண்மையா என்றார். உண்மைதான் என்று அந்தப் பக்கத்திலிருந்து பதில் வந்திருக்கவேண்டும். 1947-ல் எல்லா முஸ்லிம்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட்டீர்கள் என்று நினைத்தேனே என்றார். பொறுமையாக விளக்கினேன். ஓ, அப்படியானால் பாகிஸ்தானுக்கு அடுத்து உங்கள் நாட்டில்தான் முஸ்லிம்கள் அதிகமா என்றார்.

இல்லை சார், உலகிலேயே மிகப்பெரிய முஸ்லிம் நாடு இந்தோனேசியா; அடுத்து இந்தியா என்றேன். அப்படியானால் பாகிஸ்தான் எந்த இடத்தில் வருகிறது என்றார். மூன்றாவது பங்களாதேசம், நான்காவது இடத்தில்தான் பாகிஸ்தான் வருகிறது என்றேன்.

அவருக்கு ஒரே ஆச்சரியம். நான் கொண்டுவந்த புத்தகங்களைப் பார்வையிட்டார். இத்தனை இஸ்லாமியப் புத்தகங்கள் இந்தியாவில் அச்சிடுகிறார்களா என்றார். ஆனால் கொஞ்சம் நேரம் கழித்து உதட்டைப் பிதுக்கினார். பையா, நீ இங்கு வந்தது சந்தோஷம்; ஆனால் நீ கொண்டுவந்த எந்தப் புத்தகத்தையும் நான் வாங்கமுடியாது என்றார்.

சவுதியில் கடுமையான சென்சார்ஷிப் உண்டாம். அதுவும் மதப் புத்தகம் என்றால் ஒவ்வொரு பிரதியிலும் அவர்களது இஸ்லாமிய பிராண்டுக்கு உட்பட்டுத்தான் கருத்து இருக்கிறதா என்று பார்த்து, பின்னரே அனுமதிப்பார்களாம். இதற்கென்றே மத போலீஸ் என்று உள்ளதாம். அந்தத் தலைவலியை ஏற்றுக்கொள்ள புத்தகக்கடை ஷேக் தயாராக இல்லை.

என் முகத்தில் ஒரே ஏமாற்றம். இவ்வளவு நாள் கழித்து, வந்த முதல் கடையிலேயே இப்படி. இனி பிற கடைகளிலும் இதே பிரச்னைதான் இருக்கும்.

ஷேக்குக்கு என்ன தோன்றியதே தெரியவில்லை. தன் உதவியாளரை அழைத்தார். இந்தப் பையனுக்கு 5,000 டாலருக்கு ஆர்டர் கொடு, என்ன புத்தகங்களை வேண்டுமானாலும் கொடுக்கட்டும் - இஸ்லாமியப் புத்தகங்கள் தவிர என்று சொல்லிவிட்டார்.

உதவியாளர் என்னை அழைத்துச் சென்றார். 5,000 டாலர் ஆர்டர் எல்லாம் சரி, ஆனால் புத்தகங்களை முதலில் அனுப்பவேண்டும்; அவை விற்றால்தான் பணம் தரப்படும் என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

உடனே அங்கிருந்து பல்கலைக்கழகத்துக்கு ஓடினேன். அங்குள்ள நூலகரிடம் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ரெஃபரன்ஸ் புத்தகங்களின் பட்டியலை வாங்கிக்கொண்டேன். இந்தியா திரும்பினேன்.

என் அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு, ரெஃபரன்ஸ் புத்தகங்களைப் பார்வையிட்டேன். Fundamentals of Fluid Mechanics - James Sullivan என்று இருந்தால், அதே பெயரில் இந்திய எழுத்தாளரின் புத்தகம் இருக்கிறதா என்று பார்ப்பேன். பெயர் மாறக்கூடாது. Fundamentals of Fluid Mechanics - Gupta என்று ஒன்று எப்படியும் இருக்கும். இப்படி ஒரு பட்டியலைத் தயாரித்தேன். அந்தப் பட்டியலை எடுத்துக்கொண்டு சேர்மனின் அனுமதி பெற்று புத்தகத்துக்கு இரண்டு சாம்பிள் என்று எடுத்து, 5,000 டாலருக்கான ஆர்டரைப் பூர்த்தி செய்து அனுப்பிவைத்தேன்.

விற்குமா, விற்காதா என்று தெரியாது. எனவே அந்த விஷயத்தை அத்தோடு மறந்துவிட்டேன். சில வாரங்கள் ஓடியிருக்கும். திடீரென சவுதி அரேபியாவிலிருந்து போன் கால். அப்போதெல்லாம் வெளிநாடுகளிலிருந்து போன் வருவதே ஆச்சரியம்தான். போனை எடுத்தால் நம்முடைய புத்தகக்கடைக்காரர். உடனே சவுதி வாருங்கள் என்றார். எதற்கு என்றேன். நீங்கள் கொடுத்த புத்தகமெல்லாம் காலி. ஏகப்பட்ட ஆர்டர்கள் வர ஆரம்பித்துவிட்டன. மாணவர்களுக்கு உங்களுடைய புத்தகங்கள் மிகவும் பிடித்துள்ளதாம். வந்தால் பெரிய ஆர்டரை வாங்கிக்கொண்டு செல்லலாம் என்றார்.

இப்படித்தான் எதையோ விற்கப்போய் இந்திய பாடப்புத்தகங்களுக்கான மார்க்கெட் சவுதியில் இருப்பதைக் கண்டுபிடித்தேன். அந்த இஸ்லாமியப் புத்தகங்களுக்கு என்ன ஆனது என்கிறீர்களா? அதற்கும் ஒரு மார்க்கெட் கிடைத்தது. ஆனால் சவுதியில் அல்ல. வேறு ஓர் இடத்தில். அந்தக் கதை அடுத்து!

=======

சுகுமார் சென்னின் அனுபவங்கள் - முந்தைய பதிவுகளாக

புத்தகமா, விஷப் புகையா?
அத்தனை ஆர்டர்களும் உனக்குத்தான்!
.

12 comments:

  1. பத்ரி அசத்தல்,அருமை

    ReplyDelete
  2. நண்பரே ... இந்த கதை அருமை. நான் ஒரு முறை வேடிக்கை பார்க்க போயி பேச்சாளன் ஆன கதை கூட இப்படிதான்.பாராட்டுக்கள் - உங்கள் சந்தைபடுத்தும் தந்திரத்திற்கு.

    ReplyDelete
  3. நீங்க தான் ரியாத் வந்திங்களோன்னு படிக்க ஆரம்பிக்கிறப்போ நினைச்சிட்டேன் :-)

    மற்றபடி, இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கிறார்களா என்று அந்த ஷேக் கேட்டதாக எழுதி இருப்பதெல்லாம் சும்மா ஒரு வாசிப்பு சுவாரசியத்துக்கு என்றே தோன்றுகிறது. வேறு சில விஷயங்களும் நம்பத் தகுந்ததாக இல்லை.

    ReplyDelete
  4. கார்த்திக் சார், நீங்க நல்லா பேசுனிங்கன்னு நம்ம மக்கள்ஸ் (from GRIT) சொன்னாங்க :-)

    ReplyDelete
  5. கே.வி.ஆர்: இது நடந்தது 1970-களில் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளவும்.

    வேறு என்னவெல்லாம் நம்பத்தகுந்ததாக இல்லை என்று சொல்லுங்கள்.

    ReplyDelete
  6. 70களிலேயே இந்தியர்கள் (பெரும்பாலும் இஸ்லாமியர்கள்) இங்கே வேலைக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியெல்லாம் சும்மா.

    ஷேக்கெல்லாம் கடையில் மாடியில் உட்கார்ந்து பல்லு குத்திக்கொண்டு இருக்க மாட்டார்கள். அவர்களுடைய பெரும்பாலான பிஸினஸ்களை அவர்களுக்கு நம்பிக்கையானவர்களே பார்த்துக்கொள்வார்கள். இவர்கள் நேரடியாக ஈடுபடுவது இல்லை. ஷேக்கைப் பார்த்தேன், என்ன நினைத்தாரோ 5000 டாலருக்கு ஆர்டர் கொடுத்தார் என்பதெல்லாம் பூச்சுத்தல்.

    இந்திய பாடப்புத்தகங்களுக்கான மார்க்கெட் - 70களிலேயே வந்திருந்தால் இந்நேரத்திற்கு இங்கிருக்கும் புத்தகக்கடைகளில் இந்தியப் பாடப்புத்தகங்கள் குவிந்திருக்க வேண்டும், ஆனால் அப்படி எந்தப் புத்தகமும் காணக் கிடைப்பதில்லை.

    ReplyDelete
  7. சரி, புருடா என்றே வைத்துக்கொள்வோம்! படிக்க சுவாரசியமாக இருக்கிறதே, அதுவே போதும்:-)

    அந்தக் குறிப்பிட்ட தினத்தன்று ஷேக் அங்கே இருக்க வாய்ப்பே இல்லை என்கிறீர்களா? பாவம் அய்யா, சுகுமார் சென், பிழைத்துப்போகட்டும்!

    இவருடைய முதல் இரண்டு கதைகளுடன் ஒப்பிடும்போது இந்தக் கதையில் அவ்வளவு நம்பகத்தன்மை குறைவா என்ன?

    ReplyDelete
  8. படிக்க சுவாரசியமாக இருக்கும்படி தான் அள்ளி விடுகிறார்.

    முதல் இரண்டு கதைகளைப் பற்றி ரஷ்யா, இராக்கில் வசிப்பவர்களிடம் தான் கேக்கணும் :-)

    ReplyDelete
  9. "ஷேக்கெல்லாம் கடையில் மாடியில் உட்கார்ந்து பல்லு குத்திக்கொண்டு இருக்க மாட்டார்கள். அவர்களுடைய பெரும்பாலான பிஸினஸ்களை அவர்களுக்கு நம்பிக்கையானவர்களே பார்த்துக்கொள்வார்கள்"

    இது முழுக்க முழுக்க உண்மை கிடையாது சில அரேபிய முதளாளிகள் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் இது கண்கூடாக பார்த்தது
    முடிவுகளை செய்லபடுத்துவது
    ஒரு ஆசியாவை சேர்ந்த குறிப்பாக இந்தியாவை சேர்ந்த அதிலும் தமிழன் அல்லது மலையாளியாக இருப்பார்

    அந்த முதலாளி முழுக்க தன் பணத்தில் அந்த வியாபாரம் நடத்தி இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

    sleeping partner(ஷேக்) இந்த முடிவுகளை எடுக்கமாட்டார் பணம் போட்ட மற்றோரு பாட்னர் எடுப்பார்

    மேலும் இதில் ஒரு திருத்தம் ஷேக் என்பவர் அந்த ஆநட்டை ஆள்பவர்கள் குறிக்கும்

    இவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களை sheik famly என்று அழைப்பது வழக்கம் இவர்களுக்கும்

    ஆட்ச்சியாளர்கள் போல சில முக்கிய சலுகைகள் உள்ளது

    ReplyDelete
  10. பத்ரி சார்,

    http://www.livemint.com/2010/08/02225046/Wink-to-enter-India8217s-e.html?h=B

    இந்த கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் 50% ராயல்டி சாத்தியமா? இபுக் ரீடர் பயன்பாடு மற்றும் இ புக் பதிப்பித்தல் பரவலாகும் சாத்தியங்கள் எப்படி? மின் புத்தகங்கள் பதிப்பித்தால் piracy பிரச்சனைகள் அதிகமாகுமே ! இதை பற்றிய உங்கள் கருத்துக்களைஎதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  11. Interesting... Enjoyed reading it...

    ReplyDelete