Thursday, December 15, 2011

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011

‘தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை’ என்ற பதிவுசெய்யப்பட்ட ஒரு அறக்கட்டளையை நாங்கள் நடத்திவருகிறோம். நான் அதில் ஓர் அறங்காவலன். பேராசிரியர் சுவாமிநாதன் அறக்கட்டளையின் தலைவர். பாரம்பரியம் என்று நாங்கள் பார்ப்பது இலக்கியம், சிற்பம், ஓவியம், கோவில் கட்டுமானம், இசை, நாட்டியம் போன்றவை.

மாதாமாதம் முதல் சனிக்கிழமை அன்று பாரம்பரியம் தொடர்பாக ஓர் உரையை நடத்துவோம். இதுவரை நடத்தியுள்ள அனைத்து நிகழ்வுகள் பற்றியும் அதில் சுமார் 80%-க்கும் மேற்பட்டவற்றின் முழு ஒளிப்பதிவுகளையும் நீங்கள் இங்கே காணலாம்.

இதுதவிர, விருப்பம் உள்ள சுமார் 20-25 பேர் சேர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை பாரம்பரிய இடங்களுக்குப் போய் நான்கைந்து நாட்கள் தங்கியிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்களைப் பற்றி ஆர்வமாகக் கற்போம். இங்கு போவதற்குமுன் ஓரிரு மாதங்கள் அந்த இடம் தொடர்பானவற்றைப் பற்றிப் படிப்போம். பேசுவோம். விவாதிப்போம். இவ்வாறு மகாபலிபுரம், அஜந்தா/எல்லோரா ஆகிய இடங்களுக்குக் கடந்த இரண்டாண்டுகளில் சென்றுவந்துள்ளோம். வரும் ஜனவரி மாதம், புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இடங்களைச் சுற்றிவரப்போகிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் சென்னையில் இசை கேட்பதற்காகக் கூடும் மாபெரும் மக்கள் திரளிடம் எப்படி இசை தவிர பிற பாரம்பரிய விஷயங்களை அறிமுகம் செய்வது என்று ஒருமுறை பேச்சு வந்தது. இசையை விரும்புவோர், பிறவற்றை விரும்பவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முயற்சி செய்வதில் என்ன தவறு? அதில் ஆரம்பித்ததுதான் ‘பாரம்பரியக் கச்சேரி 2011’. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் இதனை நடத்த உள்ளோம்.

இந்த ஆண்டு நிகழ்வு கீழே:

23 டிசம்பர் 2011 - எழுத்தாளர் ஜெயமோகன் - குறுந்தொகை: தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்
24 டிசம்பர் 2011 - பேராசிரியர் சா. பாலுசாமி - அருச்சுனன் தபசு: மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை
25 டிசம்பர் 2011 - ஸ்தபதி கே.பி. உமாபதி ஆசார்யா - இந்திய புனிதக் கலைப் பாரம்பரியம்
26 டிசம்பர் 2011 - முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் - கங்கைகொண்ட சோழபுரம்: வரலாறும் கலையும்
27 டிசம்பர் 2011 - நடனக் கலைஞர் ஸ்வர்ணமால்யா கணேஷ் - ரகுநாத நாயக்கரின் வாழ்க்கை - யக்ஷகானம்

அனைத்து நிகழ்வுகளும் நடக்கும் இடம்: ராகசுதா அரங்கம், மைலாப்பூர் (நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில்). 150 பேர் வரைதான் உட்கார முடியும். தினமும் காலை 10.00 முதல் 12.00 மணி வரை. அனுமதி இலவசம்.

***

நிகழ்ச்சிகளை முடிவு செய்யும்போது, இரண்டு குறுக்குவெட்டுகளைப் பார்த்தோம். ஒன்று வரலாற்றில் ஒரு விரிந்த வெளி இருக்கவேண்டும். மற்றொன்று, பல கலைகளோடு தொடர்புடையதாக இருக்கவேண்டும்.

அப்படித்தான் இங்கே சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம் என்று காலம் நகர்ந்துவருவதை நீங்கள் பார்க்கலாம். அதேபோல, இலக்கியம், சிற்பம், ஓவியம், கோவில் கட்டுமானம், பாடல் இயற்றுதல், நடனம் என அனைத்து கலைகளையும் பார்க்கலாம். சுவாரசியமான பேச்சாளர்களாகவும் வேண்டும். வெகுஜனங்கள் ரசிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.

ரகுநாத நாயக்கரை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் நாயக்க மன்னர்களில் மிக முக்கியமானவர். பாடல் இயற்றுவார். பாடுவார். வீணை வாசிப்பார். பல மொழிகளை அறிந்தவர். தஞ்சையிலிருந்து ஆட்சி செய்தார். தெலுங்கு பேசும் அரசர்கள். இவருடைய மகன், தன் தந்தையின் வாழ்க்கையை யக்ஷகானமாக தெலுங்கில் பாடியுள்ளார். அதிலிருந்து அக்காலத் தஞ்சையின் வரலாறு பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ள முடியும் என்று ஸ்வர்ணமால்யா தமிழில் பேசுவார், பாடுவார், அபிநயம் புரிவார்.

குறுந்தொகை, சங்க இலக்கியத்திலேயே மிகவும் சுவை வாய்ந்தது. அதுதான் பிற சங்க நூல்களையெல்லாம்விடப் பழமையானதும்கூட என்கிறார்கள். ஆனால் அதுதான் பிற சங்கத் தொகைகளையெல்லாம்விட மிகச் சிறப்பானதும். குறுந்தொகை பற்றியும் தமிழ்க் கவிமரபு பற்றியும் ஜெயமோகன் பேச உள்ளார்.

பேராசிரியர் பாலுசாமி, சென்னை கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறையில் இருப்பவர். ஆனால் வரலாறுதான் அவருக்கு விருப்பமான துறை என்று நினைக்கிறேன். நாயக்கர் கலை பற்றிதான் அவருடைய முனைவர் பட்ட ஆராய்ச்சியே. மாமல்லபுரத்தின் சிற்பங்கள் பற்றி அவர் விவரிப்பது தாளமுடியாத ஆச்சரியத்தைத் தரும். அந்தந்தச் சிற்பங்களுக்குமுன் அவர் நின்றுகொண்டு பேசினால், அங்கிருந்து நகரவே உங்களுக்கு மனம் வராது. அருச்சுனன் தபசு பற்றி அவர் ஏற்கெனவே தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டலை சார்பாகப் பேசியுள்ளார். பிற இடங்களிலும் பேசியுள்ளார். காலச்சுவடு வாயிலாகப் புத்தகமும் வெளியாகியுள்ளது. ஆனால் மேலும் விரிவான ஒரு கூட்டத்தின்முன் இதனைப் பேச மீண்டும் அவரை அழைத்திருக்கிறோம்.

குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் கியூரேட்டராக இருந்து ஓய்வு பெற்றவர். வரலாற்றாளர். கல்வெட்டாளர். ஏகப்பட்ட கல்வெட்டுகள், சிலைகள், காசுகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து அவை யாருடையவை, அவற்றில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்பதையெல்லாம் வரலாற்று நோக்கில் வெளியிட்டுள்ளவர். தஞ்சைப் பெரிய கோவில் பற்றிய இவருடைய புத்தகம் முக்கியமானது. இவர் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் வரலாறையும் கங்கைப் படையெடுப்பையும் ராஜேந்திர சோழனுடைய வாழ்க்கையையும் தொடுவதோடு, அந்தக் கோவிலில் உள்ள சிற்பங்கள், பிற கட்டுமானங்கள், அங்குள்ள கல்வெட்டுகள், பிற்காலக் கொடைகள் என பலவற்றைப் பற்றியும் விரிவாகப் பேசப்போகிறார்.

இன்னொரு பேச்சைத் தரப்போவது ஸ்தபதி உமாபதி ஆசார்யா. இவர் விஸ்வகர்மா குடும்பத்தைச் சேர்ந்தவர். பரம்பரை பரம்பரையாகக் கோவில் கட்டுதல், சிலை வடித்தல் ஆகியவைதான் இவர்களுடைய தொழில். இன்றைய எஞ்சினியர்கள் வியக்கும் வண்ணம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் சமைக்கப்பட்ட பல கோவில்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. இவற்றை இந்த ஸ்தபதிகள் எப்படிக் கட்ட ஆரம்பிப்பார்கள்? எம்மாதிரியான பயிற்சி பெற்றவர்கள் இவர்கள்? ஒரு சிலையை வடிப்பதற்குமுன் என்ன செய்வார்கள்? எந்த மாதிரியைக் கொண்டு இவற்றை உருவாக்குவார்கள்? இதுபோன்ற பல கேள்விகளுக்கெல்லாம் இந்தப் பேச்சில் விடை கிடைக்கலாம்.

***

ஒவ்வொரு பேச்சும் சுமார் 90 நிமிடங்கள். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், 15 நிமிடத்துக்கு ஒரு சிறு அறிமுக உரை இருக்கும். இதனை வேறு ஒருவர் வழங்குவார். பல்லவர் கலை, சோழர் கலை, சங்க இலக்கியம், நாட்டியம், இப்படி அன்றன்றைய டாபிக் சார்ந்து மிகச் சிறியதோர் அறிமுகமாக இது இருக்கும்.

இந்த நிகழ்ச்சி பற்றி உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள்.

இது தொடர்பாக தனிப்பட்ட நபர்களது நன்கொடைகளை வரவேற்கிறோம். நன்கொடை தர விரும்புபவர்கள் என்னைத் தொடர்புகொள்ளலாம். (மொபைல்: 98840-66566). ஏதேனும் நிறுவனம் இந்நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர்ஷிப் தர விரும்பினாலும் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்.

தொடர்புள்ள ஜெயமோகனின் பதிவு

7 comments:

  1. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதது மிக வருத்தமாக இருக்கிறது...கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு காணொலி கிடைக்குமா....

    ReplyDelete
  2. நல்ல முயற்சி. எப்படியும் தமிழ் ஹெரிடேஜ் வலைத்தளத்தில் காணொளி வரும். வீட்டிலிருந்தே பார்க்கலாம்!

    ReplyDelete
  3. தமிழகத்தின் கர்நாடக இசை தொன்மையானது.இசை அல்லாது தமிழகத்தில் வேறு பல புராதனக் கலைகளும் உள்ளன.சென்னை இசை விழா சமயத்தில் தாங்கள் தமிழகத்தின் அந்த மற்ற பல கலைகளின் சிறப்பையும் எடுத்துக் காட்டும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்துவது மிகவும் பாராட்டத்தக்கது.இலக்கியத்தையும் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்லது. தங்களது இந்த நிகழ்ச்சிகளுக்கு குறிப்பாக இளம் வயதினரை இழுக்க ஏதாவது செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. அது பற்றி யோசிக்கவும்.

    ReplyDelete
  4. 150-ல் எனக்கும் ஒரு பங்கு உண்டு. நிச்சயம் வருகிறேன்.

    ReplyDelete
  5. என்னை போன்று வெளியூர், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்காக வீடியோ காணொளி கிடைக்குமா? அனைத்து நிகழ்ச்சிகளுக்கும்.

    ReplyDelete
  6. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Good.But we are expecting continuous updates.....
    my blog:
    tipsfortechviewers.blogspot.com

    ReplyDelete