Sunday, November 28, 2004

கொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்

தென் ஆப்பிரிக்கா 227/5 (83.3 ஓவர்கள்) - கால்லிஸ் 103*, டி ப்ருயின் 15*

கங்குலி கடைசியாக டெஸ்ட் ஆட்டங்களில் எப்பொழுது டாஸில் வென்றார் என்று யாருக்காவது நினைவிருக்கிறதா? தொடர்ச்சியாக இந்த சீஸனில் இந்தியா விளையாடிய ஆறு டெஸ்ட்களிலும் டாஸ் எதிரணிக்குத்தான்.

கொல்கொத்தா ஆடுகளத்திலும் என்ன செய்தான் ஸ்பின் எடுக்கும் என்று யோசித்து, புல்லை வெட்டி, தண்ணீர் குறைவாக விட்டு வைத்திருந்தனர். ஆனால் கான்பூர் அளவுக்கு செத்த பிட்ச் கிடையாது. இந்தியா முரளி கார்த்திக்கு பதில் இர்ஃபான் பதானை விளையாட வைத்தனர். வேறு எந்த மாற்றமும் இல்லை. நேற்று இரவு தென் ஆப்பிரிக்கா அணித்தலைவர் கிராம் ஸ்மித் கால் மீது அவரை ஹோட்டலில் இறக்கிவிட்ட டாக்சியோ ஏறிச்சென்றது. டாக்சியை விட்டு இறங்கிய ஸ்மித் ஏன் சக்கரத்துக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார் என்பது புரியாத புதிர். அத்துடன் அவர் காலில் ஏறிச்சென்ற டாக்சி சுற்றியிருப்பவர்கள் சத்தம் போட்டதால், என்ன ஏது என்று தெரியாமல் ரிவர்ஸில் வந்து மீண்டும் கால் மீது ஏறி அப்படியே நின்றுவிட்டதாம்! நம்பவா முடிகிறது? இன்று ஸ்மித் விளையாடுவாரா இல்லையா என்பதே தெரியாத நிலை. ஆனால் டாஸ் போட வந்து, டாஸில் வென்று, பேட்டிங் செய்யத் தீர்மானித்தார் ஸ்மித். தென் ஆப்பிரிக்கா அணியில் இரண்டு மாற்றங்கள். இந்திய வம்சாவளி ஹாஷிம் ஆம்லா என்பவரும், ஜஸ்டின் ஆண்டாங் என்பவரும் அணிக்கு உள்ளே வந்தனர். மார்ட்டின் வான் யார்ஸ்வெல்ட், ராபின் பீட்டர்சன் இருவரும் வெளியே.

முதல் ஓவரை வீசவந்தவர் பதான். காலில் டாக்சி ஏறியதன் விளைவோ என்னவோ ஸ்மித் கால்களை நகர்த்தாமல் ஆஃப் ஸ்டம்பிற்கு வெகு வெளியே சென்ற பந்தைத் துரத்திச் சென்று தட்டி தினேஷ் கார்த்திக் கையில் இரண்டாவது பந்திலேயே கேட்சைக் கொடுத்தார். ஸ்மித் 0, தென் ஆப்பிரிக்கா 0/1. அடுத்து உள்ளே வந்தவர் ஜாக் ருடால்ப். மற்றுமொரு இடதுகை ஆட்டக்காரர். முதல் டெஸ்ட் ஆட்ட நாயகர் ஆண்டிரூ ஹாலுடன் சேர்ந்து ரன்களைச் சேர்த்தார். ஹாலும், கான் வீசிய ஆஃப் ஸ்டம்பிற்கு வெகு வெகு வெளியே சென்ற பந்தைத் துரத்தி கார்த்திக்கிற்கு இரண்டாவது கேட்சைக் கொடுத்தார். ஹால் 7, தென் ஆப்பிரிக்கா 21/2.

முதல் அரை மணிநேரத்திற்குள்ளாக இரண்டு தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளைப் பெற்ற இந்தியா தொடர்ச்சியாக நன்றாகவே பந்து வீசியது. கான், பதான் வீச்சை ஜாக் கால்லிஸ், ஜாக் ருடால்ப் இருவருமே தட்டுத்தடுமாறியே எதிர்கொண்டனர். ஆனால் சிறிது சிறிதாக அவர்கள் கஷ்டமான நிலையிலிருந்து மீண்டு, உணவு இடைவேளைக்கு முன் வேறெந்த விக்கெட்டும் விழாமல் காத்தனர். கும்ப்ளே, ஹர்பஜன் இருவரும் நன்றாகப் பந்து வீசினர். கும்ப்ளே எப்பொழுதும் போலல்லாமல் ஸ்டம்பிற்கு நேராகவே வீசினார். ஹர்பஜன் உணவு இடைவேளைக்கு முன்னர் நான்கு அருமையான ஓவர்களை வீசினார். ஒரு விக்கெட்டும் எடுக்காதது அவரது துரதிர்ஷ்டம். ருடால்ப் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் தன் விக்கெட்டைக் காத்தார் என்று சொல்லவேண்டும். கால்லிஸ் அந்த அளவிற்குத் திண்டாடவில்லை. உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்கா 28 ஓவர்களில் 60/2 என்ற நிலையில் இருந்தது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் ஒரு புறத்திலிருந்து வேகப்பந்தும், மறுபுறம் ஸ்பின்னுமாக இருந்தது. ஆனால் கால்லிஸ், ருடால்ப் இருவருமே மிக அருமையாக, நிதானமாக விளையாடினர். எந்த அவசரத்தையும் காண்பிக்கவில்லை. ரிஸ்க் எதுவும் எடுக்காமலேயே ஓவருக்கு 2-3 ரன்கள் பெற்றனர். இருவரும் அரை சதத்தைத் தாண்டினர். ஆட்டம் வெகு சீக்கிரமாக இந்தியாவின் கையை விட்டுப் போய்க்கொண்டிருந்தது. கங்குலி பதானுக்கு பதில் கானைக் கொண்டுவந்தார். இதற்குள் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத்தொடங்கியிருந்தது.

கான் ருடால்புக்கு வீசிய ஓர் ஓவரில் முதல் பந்து பளபள பக்கம் வெளியே இருந்ததால் ரிவர்ஸ் ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து இன்னமும் வெளியே போனது. ஆனால் அடுத்த பந்து ஸ்விங் ஆகாமல் குத்திய அதே திசையில் உள்ளெ வந்து பேட், கால் காப்பிற்கான இடைவெளியில் புகுந்து ஆஃப் ஸ்ட்ம்பை எகிற வைத்தது. அற்புதமான பந்து இது. ருடால்ப் 61 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். தென் ஆப்பிரிக்கா 130/3. தொடர்ந்து முதல் டெஸ்டில் விளையாடும் ஹாஷிம் ஆம்லா வந்தார். மனிதர் தலையை மொட்டையடித்து, கறுகறுவென பெரிய முஸ்லிம் தாடி வைத்துள்ளார். அழகாக விளையாடினார். இவர் நிற்கும் ஸ்டைல் சற்று மோசமானது. ஆனால் பேட்டைக் கொண்டுவந்து பந்துடன் சந்திக்கும்போது கால்கள் சரியாக மாறிவிடுகின்றன. இப்படியே தேநீர் இடைவேளை வந்தது. தென் ஆப்பிரிக்கா 152/3 என்ற நிலையில் இருந்தனர்.

தேநீர் இடைவேளைக்குப் பின் கும்ப்ளே, கான் இருவரும் தொடர்ந்து வீசினர். ஹர்பஜன், கும்ப்ளேக்கு பதில் வந்தார். கானுக்கு பதில் பதான் மீண்டும் வந்தார். திரும்பி வந்த முதல் ஓவரிலேயே லெக் ஸ்டம்பில் பந்தைக் குத்தி அதை ஆஃப் ஸ்டம்பிற்கு எடுத்து வந்து ஆம்லாவை பவுல்ட் ஆக்கினார் பதான். ஆம்லா 24, தென் ஆப்பிரிக்கா 176/4. அடுத்து தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரும் அறுவை மன்னர் போடா டிப்பெனார் விளையாட வந்தார். கால்லிஸுடன் சேர்ந்து ஆட்டத்தை அழித்தே விடுவார் என நினைத்தோம். ஆனால் மிகக் குறுகிய நேரத்திலேயே பதானின் மற்றுமொரு பந்தில் - இதுவும் லெக்/நடு ஸ்டம்பில் விழுந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே போனது, டிப்பெனார் மட்டையில் விளிம்பில் பட்டு கார்த்திகிடம் கேட்சானது. டிப்பெனார் 1, தென் ஆப்பிரிக்கா 182/5.

இந்த நேரத்தில் இந்தியாவின் கை நிச்சயமாக மேலோங்கியிருந்தது. கால்லிஸ் 74 ரன்களுடன், புதிதாக உள்ளே வந்த ஜாண்டர் டி ப்ருயினுடன் சேர்ந்து அணியைக் காக்க வேண்டிய நிலைமை. அதை அருமையாகச் செய்தார். தடாலடி ஏதும் கிடையாது. அவ்வப்போது இங்கும் அங்குமாக ஒரு நான்கு. மற்றபடி ஒன்று, இரண்டு. ஸ்பின் பந்துவீச்சாளர்கள் கும்ப்ளே, ஹர்பஜன் இருவருமே மிக நன்றாகத்தான் வீசினர். ஆனால் விக்கெட் ஏதும் விழவில்லை. பதான், கான் இருவருமாவது அவ்வப்போது விக்கெட்டுகளைப் பெற்றனர். 81 ஓவர்கள் தாண்டியதும், இந்தியா புதுப்பந்தை எடுத்து கான் கையில் கொடுத்தது. அப்பொழுது கால்லிஸ் 98இல் இருந்தார். அடுத்த பதான் ஓவரில் கவர் திசையில் அடித்த நான்கின் மூலம் கால்லிஸ் இந்தியாவிற்கெதிரான தன் முதல் சதத்தை அடித்தார். ஆனால் அடுத்த ஓவர் - கான் வீசியது - நடந்துகொண்டிருக்கும்போதே சூரிய அஸ்தமனம் நெருங்க, வெளிச்சம் குறைய ஆட்டம் நிறுத்தப்பட்டது. முதல் நாள் இறுதியில் கால்லிஸ் 211 பந்துகளில் 103 ரன்கள், 11x4.

கால்லிஸ் மிக அருமையாக விளையாடினார். திராவிட் விளையாடுவதைப் போன்று. ருடால்ப் - கால்லிஸ் ஜோடி சேர்த்த ரன்கள் மிகவும் முக்கியமானவை. இந்தியாவிற்கு பதான், கான் பந்துவீச்சு நன்றாக இருந்தது. பழைய பந்து, புதுப்பந்து இரண்டையும் வைத்து இருவரும் மிக அருமையாகவே வீசினர். சுழற்பந்து வீச்சாளர்களும் நன்றாகத்தான் வீசினர். சில நாள்கள் நன்றாக வீசியும் விக்கெட் கிடைக்காமல் போய்விடுவதுண்டு. அப்படித்தான் இன்றும். ஹர்பஜன் பந்தில் டி ப்ருயின் மட்டையில் பட்டு பின்னால் கேட்ச் போனது. மீண்டும் மீண்டும் பார்த்ததில் அது கேட்ச் போலத்தான் தோன்றியது. ஆனால் நடுவர் சைமன் டாஃபல் அவுட் கொடுக்கவில்லை.

நாளை இந்தியப் பந்துவீச்சாளர்கள் கிடுகிடுவென கடைசி ஐந்து விக்கெட்டுகளையும் எடுத்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. தென் ஆப்பிரிக்கா 350ஐத் தொடாது, 300க்கருகில் முடிந்துவிடும் என்று தோன்றுகிறது. கால்லிஸ் போல நிலைத்து நின்று ஆடுவதற்கு யாருமில்லை.

3 comments:

  1. கங்குலி, பிட்சுகள் மீது தனி (தேவைக்கு அதிகமாகவே) கவனம் எடுத்துக் கொள்கிறார். அதே அளவு கவனத்தை தன் ஆட்டத்திலும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் அடித்த சதத்தை தவிர ஒரு நீண்ட காலம் பெரியதாக சாதித்தாக தெரியவில்லை. நல்ல கேப்டன் என்பதால் தான் டெஸ்ட அணியில் தொடர்ந்து இருக்கிறார் போலும் ?

    பிட்சுக்காக எந்த கேப்டனும் இந்தளவுக்கு சிரத்தை எடுத்துக் கொண்டார்களா என்று தெரியவில்லை. அசாருதீன் - அஜித் வடேகர் இதைப் போல சுழற் பந்திற்கு சாதகமாக பிட்சுகளை உருவாக்கி, வெளிநாட்டில் உதைப்பட்டாலும் உள்நாட்டில் வெற்றி பெற்றார்கள். அதற்குப் பிறகு கவாஸ்கர் தலைமையில் இந்தியாவில் உள்ள பிட்சுகளை மேம்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டு, சில மைதானங்களில் பிட்சுகள் மாற்றப்பட்டதாக ஞாபகம். கங்குலி பிட்சுகளுக்கு எடுத்துக் கொள்ளும் அக்கறையால் அந்தக் குழுவின் பரிந்துரை என்னவாகும் ?

    நம் நாட்டில் நடைபெறும் போட்டிகளில் நமக்கு சாதகமான பிட்சுகள் அமைப்பதில் தவறில்லை.
    உள்நாட்டு போட்டிகளுக்கு மட்டும் வேகப்பந்திற்கு சாதகமான பிட்சுகளை உருவாக்கி கொண்டு, சர்வதேச போட்டிகளுக்கு கங்குலியின் ஆசைப்படியே பிட்சுகளை உருவாக்கி கொடுக்கலாமே.

    ReplyDelete
  2. கங்குலி டாஸில் தோற்ற பிறகு அவரிடம் டாஸ் போட்டவர் இது பற்றி விசாரித்தபோது, "இப்போவெல்லாம் நான் எதுவுமே ஜெயிக்க மாட்டேங்கறேன்" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார். காமெடியாக இருந்தது.

    By: Meenaks

    ReplyDelete
  3. ஹர்பஜன் பந்துக்கு ஸ்மித் கொடுத்தது சரியான முடிவு தான். பந்து பேட்டில் படவில்லை.

    ReplyDelete