Sunday, February 19, 2006

சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் அழுகை, புலம்பல்

தினமணி

இன்று சென்னை நாரத கான சபாவில் கூடிப் பேசியுள்ள சினிமா தயாரிப்பாளர் சங்கம் சில முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாம். அவை:

* கடந்த 12 வருடங்களாக சன் டிவியால் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் நஷ்டமாகியுள்ளன. எனவே சன் டிவிக்கு எதிராக ரூ. 2000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு முறையாகப் பிரித்துத் தரப்படுமாம். (அதாவது நஷ்ட ஈடு கையில் கிடைத்தே விட்டது என்பது போலக் கனவு காண்கிறார்கள்!)

* சன் டிவி குழுமம் ரூ. 8,000 கோடிக்கு வெளியிட உள்ள ஷேர்களில் எங்களையும் (சி.த.ச) பங்குதாரர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

சி.த.ச வினருக்கு நியாயமாகவே சில கோரிக்கைகள் இருக்கலாம். அதற்கு அவர்கள் செய்யவேண்டியது சன் டிவியுடனான சரியான ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தில் புது சினிமாக்களின் விடியோ துண்டுகளை எந்த விதத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அந்தக் கட்டுப்பாடுகளை மீறினால் சன் டிவி மீதோ (பிற டிவிக்களின் மீதோ) வழக்கு தொடுக்க வேண்டும். அதைச் செய்யாமல் கடந்த 12 வருடங்களாக ... என்று புலம்புகிறார்கள்.

அடுத்ததாக "ட்ரெயிலருக்கு என்று வாங்கும் படக்காட்சிகளை அவர்கள் விருப்பத்துக்கேற்றவாறு காமெடி டைம், நீங்கள் கேட்ட பாடல் உள்ளிட்ட பல தலைப்புகளில் ஒளிபரப்புகிறார்கள்; அத்துடன் 'தயாரிப்பு சன் டிவி' என்று வேறு போட்டுக்கொள்கிறார்கள்" என்ற புலம்பல். ட்ரெயிலர் என்று காட்சிகளை சினிமா தயாரிப்பாளர்கள் ஏன் தொலைக்காட்சிகளுக்குக் கொடுக்கிறார்கள்? அது ஓர் இலவச விளம்பரம் என்றுதானே? இனி ட்ரெயிலரே கொடுக்கப்போவதில்லை என்று முடிவு செய்யலாமே? விளம்பரம் வேண்டுபவர்கள் காசு கொடுத்து டிவிக்களில் விளம்பரம் செய்துகொள்ளட்டும்? மேலும் ட்ரெயிலரைக் கொடுக்கும்போது எதாவது ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு இப்படித்தான் அதனை உபயோகிக்க வேண்டும் என்று கட்டுப்படுத்துகிறார்களா இல்லை சும்மா ஒரு கேசட்டை எடுத்துக் கொடுத்துவிடுகிறார்களா?

'தயாரிப்பு சன் டிவி' - இது ஓர் அபத்தமான குற்றச்சாட்டு. அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியின் தயாரிப்பு சன் டிவி என்றுதான் அனைவருமே புரிந்துகொள்வார்கள்.

வானொலிகளில் சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவதற்கு ஒரு பாடலுக்கு ஒரு வருடத்துக்கு இவ்வளவு என்று ராயல்டி தொகையை The Indian Performing Rights Society Limited என்னும் நிறுவனத்துக்குக் கொடுக்கவேண்டும். இந்தத் தொகை யாருக்குப் போய்ச்சேரும் என்று தெரியவில்லை - சினிமா தயாரிப்பாளருக்கா அல்லது சினிமா இசையமைப்பாளருக்கா என்று எனக்குத் தெரியாது.

"நாங்கள் தயாரிக்கும் சினிமாக்களை வைத்துத்தான் சன் டிவி இந்தளவு வளர்ந்துள்ளது" - இது முழு அபத்தம். சன் டிவியின் வளர்ச்சியில் சினிமா முக்கியமான பங்கு வகித்துள்ளது. ஆனால் ஒவ்வொரு சினிமாவுக்கும் சாடிலைட் உரிமம் என்று பணம் கொடுத்துதானே பெற்றுள்ளார்கள்? இப்பொழுது சன் டிவி பங்குச்சந்தைக்குச் செல்கிறது என்றவுடனேயே சினிமா தயாரிப்பாளர்களுக்கு தேவையில்லாத வயிற்றெரிச்சல்! 8000 கோடி ரூபாய் என்று எங்கிருந்து அவர்களுக்குத் தகவல் வந்துள்ளதோ தெரியவில்லை. சன் டிவி இந்த ஐ.பி.ஓவில் எதிர்பார்ப்பது 700-800 கோடி ரூபாய்களை. இதில் சினிமா தயாரிப்பாளர்களையெல்லாம் இஷ்டத்துக்கு பங்குதாரர்களாக்கிக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம்.

ஆனால் இந்தப் பிரச்னை பெரிதானால் ஒரு நன்மையாவது இருக்கும். சினிமா தயாரிப்பாளர்கள் சினிமாத் துண்டுகளை சன் டிவியிடம் (பிற டிவிக்களுக்கும்தான்) கொடுக்க மாட்டார்கள் என்றால் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகள் தமிழ் தொலைக்காட்சிகளில் பெரிதாகக் குறையும். அதைச் சரிக்கட்ட இன்னமும் சில சீரியல்கள் எடுக்கப்படும் என்றாலும் மிச்ச நேரங்களில் சில நல்ல நிகழ்ச்சிகளும் வரலாம்.

4 comments:

  1. ஒரு படம் முடிந்ததும், அதில் இருக்கும் முக்கியமான காட்சிகளைக் கொண்டு பீட்டா ( beta) காசட் தயாரிக்கப்பட்டு, PRO மூலமாக தொலைக்காட்சிகளுக்கு வினியோகம் செய்யப்படும். இதுக்கு காசு கிடையாது. அதாவது நிறுவனங்கள் வெளியிடும் press release போல. அதை தொலைக்காட்சிகள் தங்கள் நிகழ்சிகளுக்காக, எப்படி வேண்டுமானாலும் உபயோகம் செய்து கொள்ளலாம். அதைத்தான், திரைவிமர்சனம், திரை கண்ணோட்டம், திரைப்பார்வை, திரை வாசனை என்ற பெயரில் பார்க்கிறோம். டிரெயிலர் என்பது விளம்பரம். அதுக்கு சம்மந்தப்பட்ட திரைப்பட நிறுவனங்கள் துட்டு கொடுக்க வேண்டும். இந்த இரண்டு வழி தவிர, வேறு முறையான வழியில், தனியார் தொலைக்காட்சிகளுக்கு படத்துணுக்குகள் கிடைக்காது. இன்னொரு வழி உள்ளது. சன்தொலைக்காட்சி, புதிய படம் ஒன்றின் ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருந்தால், அந்த படத்தின் சொந்தக்காரரிடம் 'பேசி வைத்துக் கொண்டு', பீட்டாவிலும், டிரெயிலரிலும் இடம் பெறாத காட்சிகளை பயன் படுத்துவார்கள். சன் டீவியில் வரும் திரைப்பட நிகழ்ச்சிகள் கொஞ்சம் exclusive ஆக இருப்பது இதனால் தான். சன் டீவியில் நிறைய பணம் இருக்கிறது. அதிக காசு கொடுத்து புதிய பட உரிமைகளை வாங்குகிறார்கள். இது ஒரு restrictive trade practice என்று நினைத்தால், போட்டிக் கம்பெனிகள் தான் பிரச்சனை எழுப்ப வேண்டுமே தவிர, இவர்கள் இல்லை.

    ReplyDelete
  2. //இந்தப் பிரச்னை பெரிதானால் ஒரு நன்மையாவது இருக்கும். சினிமா தயாரிப்பாளர்கள் சினிமாத் துண்டுகளை சன் டிவியிடம் (பிற டிவிக்களுக்கும்தான்) கொடுக்க மாட்டார்கள் என்றால் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகள் தமிழ் தொலைக்காட்சிகளில் பெரிதாகக் குறையும். அதைச் சரிக்கட்ட இன்னமும் சில சீரியல்கள் எடுக்கப்படும் என்றாலும் மிச்ச நேரங்களில் சில நல்ல நிகழ்ச்சிகளும் வரலாம்.
    //
    இதை இதைத்தான் எதிர்பார்க்கின்றேன்...

    ReplyDelete
  3. சன் டிவிக்கு ஒரு இலவச விளம்ப்பரத்தைக் கொடுப்பதைத் தவிர இவர்கள் வேறு எதுவும் உருப்படியாக செய்யப்போவதில்லை.

    மிச்ச நேரங்களில் உருப்படியான நிகழ்ச்சிகள்? ரொம்பத்தான் எதிர்பார்க்கறீங்க!

    ReplyDelete
  4. இன்றுமுதல் தயாரிப்பாளர்களின் புதிய விதி அறிமுகமாகிறது. சன் டிவியில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

    ReplyDelete