Sunday, February 05, 2006

காஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம்

நேற்று NDTV-யில் ஒரு கலந்துரையாடலைப் பார்க்க நேரிட்டது. NDTV மட்டுறுத்துனர் ஒருவர், அவருடன் கலந்துகொண்டவர்கள் நான்கு பேர். அந்த நால்வரில் ஒருவர் இந்திய பத்திரிகையாளர், ஒருவர் இந்திய ஜம்மு காஷ்மீர் பார் கவுன்சில் தலைவர், ஒருவர் பாகிஸ்தான் PPP கட்சிப் பிரமுகர், கடைசியாக பாகிஸ்தான் காஷ்மீரின் வடக்குப் பகுதியின் (Northern Areas) தலைவர் ஒருவர்.

[காஷ்மீர் பிரச்னை பற்றி சசி ஆறு பாகங்களாக அவரது வலைப்பதிவில் எழுதியது உதவியாக இருக்கும்: ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து | ஆறு]

அக்டோபர் 2004-ல் இஃப்தார் விருந்தின்போது முஷாரஃப் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளார். அவரது கோணத்தில் காஷ்மீர் மொத்தம் ஏழு பகுதிகளால் ஆனது. அவற்றுள் இரண்டு தற்போது பாகிஸ்தான் கையில் உள்ளன. மற்ற ஐந்து பகுதிகளும் இந்தியா கையில் உள்ளன. இந்த ஏழு பகுதிகளிலும் சிறிது சிறிதாக படைக்குறைப்பு செய்து, இந்தப் பகுதிகளுக்கு அதிக சுதந்தரத்தைக் கொடுத்து, மெதுவாக அவற்றின் ஆட்சி நிலையில் மாற்ற்ம் செய்யலாம் என்பது முஷாரஃப் திட்டம்.

பாகிஸ்தான் வசம் இருக்கும் இரண்டு பகுதிகள்: வடக்குப் பகுதி (Northern Areas) - கில்கிட் நகரைத் தலைநகராகக் கொண்டது மற்றும் ஆஸாத் காஷ்மீர் (Azad Kashmir) - முஸாஃபராபாத்தைத் தலைநகராகக் கொண்டது. இதைத்தவிர ஒரு பகுதியை பாகிஸ்தான் அரசு சீனாவுக்குக் கொடுத்துவிட்டது (அக்ஸாய் சின்). இந்தியா இந்தப் பெயர்களை எற்றுக்கொள்வதில்லை. மொத்தமாக இந்தப் பகுதிகளுக்கு "பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர்" (Pakistan Occupied Kashmir - POK) என்று பெயரிட்டு அழைக்கிறது (அதாவது சீனாவுக்குக் கொடுத்த பகுதியையும் சேர்த்து).

பாகிஸ்தானில் இருக்கும் இரண்டு காஷ்மீர் பகுதிகளும் பாகிஸ்தான் தேர்தலில் ஈடுபடுவதில்லை. இரண்டும் தனியாக பாகிஸ்தான் ஆளுநர் ஒருவரால் ஆளப்படுகின்றன. மேலும் இங்குள்ள மக்களின் மொழி காஷ்மீரி கிடையாது. வடக்குப் பகுதி மக்கள் பேசும் மொழி உர்தூ, பஷ்டூன் ஆகியவை. NDTV உரையாடலில் கலந்துகொண்ட இந்தப் பகுதி அரசியல்வாதி தங்களுக்கு காஷ்மீரிகளோடு எந்த ஒற்றுமையும் கிடையாது, பாகிஸ்தானின் பிற மக்களோடுதான் ஒற்றுமை அதிகமாக உள்ளது என்றார்.

இந்தியாவின் கையிலிருக்கும் காஷ்மீரில் - ஜம்மு & காஷ்மீர் - மூன்று பெரிய பகுதிகள். காஷ்மீரி மொழி பேசும் முஸ்லிம்கள் இருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி, காஷ்மீரி மொழி பேசும் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஜம்மு பகுதி, புத்த மதத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் லடாக் பகுதி. இந்த லடாக் பகுதியில் திபெத்திய புத்த மதத்தைப் பின்பற்றும், லடாக்கி மொழி பேசுபவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கேயே பால்டி மொழி பேசும் பல ஷியா முஸ்லிம்களும் உள்ளனர்.

முஷாரஃப் பார்வையில் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியை மூன்றாகப் பார்க்கிறார் போல. அதனால்தான் இந்தியாவின் கையில் உள்ள காஷ்மீரில் ஐந்து பகுதிகள் உள்ளது என்கிறார் என்று நினைக்கிறேன்.

-*-

இனி நேற்றைய விவாதத்துக்கு வருவோம். வடக்குப் பகுதியிலிருந்து வந்தவர் சொன்னது என்னை யோசிக்க வைத்தது. "பாகிஸ்தானும் இந்தியாவும் தத்தம் கதைகளையே பேசுகின்றனர். ஆனால் ஹரி சிங் கையிலிருந்த காஷ்மீரில் ஏகப்பட்ட இன/மத/மொழிக் குழுக்கள். இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே முடிவையே விரும்புவார்கள் என்று எவ்வாறு எதிர்பார்க்கலாம்" என்பதே அவரது வாதம். பல மொழிகளைப் பேசுபவர்கள் (காஷ்மீரி, உர்தூ, லடாக்கி, பால்ட்டி, ஹிந்த்கோ +++++ என்று பல மொழிகள் அந்தச் சிறு பகுதிக்குள்), பல மதங்கள் (சன்னி - ஷியா இஸ்லாம், ஹிந்து, புத்த, சீக்கிய மதங்கள்), இனப் பின்னணிகள் காஷ்மீரில் உள்ளன.

ஆனால் இந்தியப் பெரும்பான்மை ஆதிக்கத்தை எதிர்க்கும் காஷ்மீரி முஸ்லிம்களே அதே ஆதிக்கப் பார்வையுடன்தான் லடாக்கி புத்த மதத்தவரையும் கில்கிட் பால்டிஸ்தான் மக்களையும் காஷ்மீரி இந்து பண்டிட்களையும் பார்க்கின்றனர்.

எனவே ஓரளவுக்கு முஷாரஃப் சொல்வதுபோல காஷ்மீரை ஏழாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக plebiscite நடத்தலாம். அப்படி நிஜமாகவே நடந்தால் வடக்குப் பகுதி பாகிஸ்தானுடன் சேரவே முடிவெடுக்கும். ஜம்மு, லடாக் பகுதிகள் இரண்டும் இந்தியாவுடன் சேர முடிவெடுக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ஜம்மு, லடாக் இரண்டு பகுதிகளிலுமே காஷ்மீரி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவர்கள் அதிகமாக இருக்கும் மாவட்டங்கள் வேறு எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் மிகவும் பிரச்னையான பகுதி: AK/POK காஷ்மீர் + இந்திய காஷ்மீர் பள்ளத்தாக்கு. இவர்கள் மூன்று முடிவுகளில் எதை வேண்டுமானாலும் எடுக்கலாம் - பாகிஸ்தானுடன் சேர்வது, இந்தியாவுடன் சேர்வது, தனித்து இருப்பது. ஏனெனில் இந்தப் பகுதியில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு, பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடு, தனித்து இருப்பதற்கான நிலைப்பாடு என மூன்றுமே ஓரளவுக்கு இருக்கிறது. குறைந்த காலத்துக்காவது இந்தப் பகுதிக்கு அதிகபட்ச சுதந்தரம் கொடுத்து ஐ.நா பாதுகாப்பு அதிகாரத்தின்கீழ் கொண்டுவரலாம்.

குறைந்தது வடக்குப் பகுதி, லடாக், ஜம்மு போன்ற பகுதிகளிலாவது சீரான நிலைமை சீக்கிரம் வர வாய்ப்புள்ளது.

நேற்றைய NDTV கலந்துரையாடலைக் கேட்டபிறகு முஷாரஃப் திட்டம் அவ்வளவு ஒன்றும் மோசமானதாகத் தெரியவில்லை. ஆனால் அக்டோபர் 2004க்குப் பிறகு இத்தனை நாள்களில் இந்தியா இந்தத் திட்டத்தைச் சற்றும் கண்டுகொள்ளாமல் முழுதாக எதிர்க்கிறது. இது வருத்தம் தரக்கூடியது!

12 comments:

  1. அட, இன்னொரு திட்டம் Commando முஷாரப் இடம் இருந்து!

    இதை 7 regions theory என்று சொல்லலாம்.plebiscite என்பது நடவாத காரியம்.

    அது எப்படி பண்டிகளை விரட்டிவிட்டு plebiscite நடத்துவது.

    மேலும் ஏன் எந்த இந்தியரும் பாகிஸ்தானி காஷ்மீரில் நடக்கும்/நடந்து கொண்டு இருக்கும் Shia-Sunni பிரிவு சண்டைகளையும்...அதனால் அங்கே அவர்கள் இரானுவத்தின் அடக்குமுறைகளை பற்றியும் பேசுவதில்லை?

    பாகிஸ்தான் காஷ்மீரின் Demographicsஐ அவர்கள் மாற்றி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன!

    உன்மையான காஷ்மீரிகளை விட பாகிஸ்தானில் இருந்து குடி அமர்த்தபட்ட Punjabi காஷ்மீரிகள் தானே அவர்கள் பக்கத்தில் அதிகம்.

    அப்படி இருக்கும் போது நாமும் ஒரு சில கோடி மக்களை காஷ்மீருக்குள் அனுப்பி பின்னர் plebiscite நடத்தலாமா?

    இது பற்றி யோசிக்காமல் இந்த seven regions theoryஐ ஏற்றூ கொள்வது மிக மிக தவறான செயலாகும்.

    நம்மை கோமாளியாக்க முஷாரப் செய்யும் லொள்ளு வேளைகளில் இதுவும் ஒன்று..

    மக்கள் புரிந்து கொண்டால் சரி.!

    ReplyDelete
  2. முதலில் முஷாரப் பாகிஸ்தான் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை கொடுக்கட்டும்.தம்மை யார் ஆள்வது என்னும் உரிமையையே பாகிஸ்தான் மக்களுக்கு கொடுக்காத முஷாரப் அதை காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கிறாராம்.என்ன காமடி இது?

    காஷ்மிரை 7ஆக பார்க்கிறாராம் முஷாரப்.பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தான் பிரிந்துபோக போர்க்கொடி உயர்த்துகிறதே,அங்கு போய் முதலில் தேர்தல் நடத்தட்டும் அவர்.

    இந்தியாவின் ஒரு பிடி மண்ணை கூட அன்னியன் தொட அனுமதியோம்.கடைசி இந்தியன் உயிரோடு இருக்கும் வரை இந்திய ஒருமைப்பாட்டை இன்னுயிர் கொடுத்தும் காப்போம்.

    ReplyDelete
  3. காஷ்மீர் பிரச்சனைக்கு உருப்படியான தீர்வை நோக்கி முதல் அடியை முன்வைத்தவர் முஷ்ரப் தான்.

    இந்தியா, பாக்கிஸ்தான் நாடுகள் தொடர்ச்சியாக பின்பற்றி வந்த நிலைப்பாடுகள் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கமுடியாத ஒரு Deadlock நிலைக்கு கொண்டு சென்று இருந்தது.

    முஷ்ரப் தனது திட்டத்தை முன்வைத்த பொழுது இந்தியாவில் இருக்கும் சங்பரிவார் அமைப்புகளும், பாக்கிஸ்தானில் இருக்கும் ஜிகாத் அமைப்புகளும் கடுமையாக எதிர்த்தன. பின் முஷ்ரப்பே இது பற்றி அதிகம் பேசவில்லை.

    காஷ்மீரை முழுவதுமாக demilitarise செய்வது, இரு காஷ்மீர் பகுதிகளுக்கும் பாஸ்போர்ட், விசா இல்லாமல் காஷ்மீர் மக்கள் பயணம் செய்ய ஏற்பாடு செய்வது, காஷ்மீர் பகுதிகளுக்கு சுயாட்சி வழங்குவது போன்றவை இடைக்கால நிவாரணமாக செய்ய வேண்டும். முழுமையான தீர்வு என்பது இதற்கு எட்டப்படுமா என்பது தெரியவில்லை. முழுமையான தீர்வை நோக்கி செல்ல வேண்டுமானால் காஷ்மீர் பிரச்சனையில் உள்ள யதார்த்தமான சூழலை இரு நாடுகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பாக்கிஸ்தானில் இருக்கும் மத அடிப்படைவாதிகளும், மேலே கருத்து தெரிவித்திருக்கிற நண்பர் போன்ற இந்தியாவில் இருக்கும் சங்பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்களும் இதனை உணரவேண்டும்.

    ஆனால் இது அவ்வளவு சுலபமாக நடக்க கூடிய விஷயங்கள் அல்ல. அது வரை காஷ்மீர் மக்கள் காத்திருக்கவும் முடியாது. முதலில் இரு நாடுகளும் இடைக்கால நிவாரணத்தை வழங்க வேண்டும். அதை நோக்கியே சமீபகால பேச்சுவார்த்தைகள் அமைந்திருக்கின்றன.

    plebiscite நடத்துவது தற்போதைய இந்திய சூழலில் முடியாத காரியம். அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

    ReplyDelete
  4. இந்திய ஒருமைப்பாடு பற்றி பேசினால் உடனே அவர் சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவராக தான் இருக்க வேண்டுமா?நாட்டுபற்று இருப்போர் வேறு கட்சிகளை சேர்ந்தவராக இருக்கவே முடியாதா?இந்திய மண்ணை அன்னியன் தொட அனுமதியோம் என்று சொன்னால் உடனே அவர் சங் பரிவாரா?

    காஷ்மீர் தான் இந்தியா.இந்தியா தான் காஷ்மீர்.மாநிலங்களுக்கு இடையேயான கோடுகள் நிர்வாகத்துக்காக போடப்பட்டவை தான்.குமரி முதல் சியாச்சின் வரை ஒவ்வொரு அங்குலமும் இந்தியா தான்.வேறு எந்த பிரிவினையும் நமக்குள் இல்லை.

    நான் தேச பக்தியுள்ள இந்தியன்.வேறு எந்த கட்சியின் அடையாளத்தையும் என் மீது சுமத்தாதீர்.இந்தியன் என்ற ஒரு அடையாளம் தவிர வேறேதும் அடையாளம் எனக்கு வேண்டியதில்லை.

    ReplyDelete
  5. "காஷ்மீர்தான் இந்தியா, இந்தியாதான் காஷ்மீர்", "இந்தியன் என்ற அடையாளம்" - இவைதான் சரியான தீர்வுக்கு எதிரியாக உள்ளன. தேசியம் என்பது ஒருவர்மீது புகுத்தப்படுவதல்ல. ஒரு குறிப்பிட்ட சமூகம் தானாக உணர வேண்டியது. வெளியிலிருந்து திணிக்கமுடியாதது.

    மாநிலங்களுக்கு இடையேயான கோடுகள் மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையேயான கோடுகளும்கூட arbitrary-ஆகத் தோன்றியவைதான். அதனால்தான் தேசியம் பற்றிய கருத்துகளும் மாறவேண்டும். மகாபாரதக் காலம் தொட்டு இந்தியா என்பது இதே நிலப்பரப்பாகத்தான் உள்ளது என்று சங் பரிவார் கோஷ்டிகளும் பிற அதீத தேசியவாதிகளும் பேசுகின்றனர். மகாபாரத நிகழ்வுகள் - உண்மையாகவே இருந்தால் - இன்றைய ஆஃப்கனிஸ்தான் பகுதியிலும்தான் நடந்துள்ளன.

    அகண்ட பாரதம் வேண்டும் என்று கத்திய பலரும் இன்று வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில் பாகிஸ்தான் என்றொரு தனி தேசிய அடையாளம், பங்களாதேசம் என்ற மற்றொரு தனி தேசிய அடையாளம் இன்று தோன்றிவிட்டது. தேசிய அடையாளங்கள் மாறிக்கொண்டே இருப்பவை. காலம் காலமாக ஒரேமாதிரியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

    இலங்கை விடுதலை பெற்றபோது சிலோன் என்றொரு தேசிய அடையாளம்தான் வெளிப்படையாக இருந்தது. இலங்கைத் தமிழர் தேசியம் என்னும் கருத்தாக்கம் சிறிது சிறிதாகத்தான் வெளிவந்துள்ளது. ஆனால் இன்று மறுக்க முடியாத அளவுக்கு நிலைபெற்றுவிட்டது - என்கிறார் ஜெயரத்னம் வில்சன் (Sri Lankan Tamil Nationalism).

    இந்தியா என்ற தேசிய அடையாளம் வலுவாக இருக்கவேண்டுமானால் சில இனக்குழுக்கள் நசுக்கப்படுவது நிற்கவேண்டும். இந்தத் தேசிய அடையாளமும் திணிக்கப்படாமல் தானாக உருவாகி நிலைபெற வேண்டும். வெற்று கோஷம் போடுவதாலும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதாலும் மட்டுமே இதனை அடைய முடியாது.

    ReplyDelete
  6. /காஷ்மீர்தான் இந்தியா, இந்தியாதான் காஷ்மீர்", "இந்தியன் என்ற அடையாளம்" - இவைதான் சரியான தீர்வுக்கு எதிரியாக உள்ளன. தேசியம் என்பது ஒருவர்மீது புகுத்தப்படுவதல்ல. ஒரு குறிப்பிட்ட சமூகம் தானாக உணர வேண்டியது. வெளியிலிருந்து திணிக்கமுடியாதது/

    எந்த சமூகத்தின் மீது யார் தேசியத்தை திணித்தது?இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வேன் என்பது என் உணர்வு.அதை உரக்க சொல்வது தேசிய உணர்வை திணிப்பதா?தேசபக்தியை யாரும் திணிக்க முடியாது.அது தானாக முகிழ்த்து வரவேண்டும்.இந்தியன் என்பதில் எனக்கு உள்ள பெருமிதத்தை இன்னும் ஓராயிரம் முறை உரக்க சொல்வேன்.

    /மாநிலங்களுக்கு இடையேயான கோடுகள் மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையேயான கோடுகளும்கூட arbitrary-ஆகத் தோன்றியவைதான். அதனால்தான் தேசியம் பற்றிய கருத்துகளும் மாறவேண்டும். /

    என் தேச பக்தி எப்படி மாறவேண்டும் என்கிறீர்கள்?விளக்கமாக சொல்லுங்கள்.எனக்கு புரியவில்லை.

    /இந்தியா என்ற தேசிய அடையாளம் வலுவாக இருக்கவேண்டுமானால் சில இனக்குழுக்கள் நசுக்கப்படுவது நிற்கவேண்டும். இந்தத் தேசிய அடையாளமும் திணிக்கப்படாமல் தானாக உருவாகி நிலைபெற வேண்டும். வெற்று கோஷம் போடுவதாலும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதாலும் மட்டுமே இதனை அடைய முடியாது./

    எந்த இனக்குழுவை யார் நசுக்கினார்கள்?தேசியத்தை யார் யார் மீது திணித்தார்கள்?விவரமாக சொல்லுங்கள்.

    "இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வீர்" என்பது வெற்று கோஷமா?தேசபக்தி என்ற உணர்ச்சியை தூண்டிவிடுவது குற்றமா?எனக்கு விளங்கவில்லை.

    அகண்ட பாரதம் எல்லாம் நான் கேட்கவில்லை.அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.யார் அதை கேட்கிறார்களோ அவர்கள் அதற்கு பதில் சொல்லிக்கொள்ளட்டும்.

    ReplyDelete
  7. //காஷ்மீர் பிரச்சனைக்கு உருப்படியான தீர்வை நோக்கி முதல் அடியை முன்வைத்தவர் முஷ்ரப் தான்.
    //

    கார்கிலை தானே குறிபிடுகிறீர்கள்?

    //காஷ்மீரை முழுவதுமாக demilitarise செய்வது//

    ஜிகாதிகள் பாகிஸ்தானின் கட்டுபாட்டில் இல்லாத போது இந்தியா எப்படி demilitarise செய்ய முடியும்?

    மேலும் அவர்களில் infiltrationக்கு அது வழிவகுத்து விடுமே?

    ஐ.நா குழு ஒன்று காஷ்மீரில் இருக்கும் போதே இவர்களில் ஆட்டம் தாங்க முடியவில்லை...அப்படி இருக்கும் போது இந்த demilitarisationஐ யார் கன்கானிப்பார்கள்?

    ReplyDelete
  8. //plebiscite நடத்துவது தற்போதைய இந்திய சூழலில் முடியாத காரியம். அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. //

    பாகிஸ்தான் காஷ்மீரில் demographics மாற்றபட்டுள்ள உன்மையை நிங்கள் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்.

    இப்போதைக்கு "peace" என்று சொல்லுவோர்தான் intellectuals!

    மற்றவர்கள் சங்கத்தினர்.

    ஆகவே பாகிஸ்தானின் தவறுகளை மறைப்போம்! அவர்கள் என்ன சொன்னாலும் அது "அருமையான" திட்டம்!

    ReplyDelete
  9. காஷ்மீர் பிரச்னையின் இந்தியா, பாகிஸ்தான் இருவருக்குமே பங்கு உண்டு. யார் அதிகம் தவறு செய்தவர்கள் என்று பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை.

    இங்கு நான் எங்குமே பாகிஸ்தான் தவறே செய்யவில்லை, பிரச்னை அனைத்துமே இந்தியாவிடமிருந்துதான் என்று சொல்லவில்லை.

    ஆனால் "காஷ்மீர் இந்தியாவின் பகுதி. அதிலிருந்து ஒரு துளி மண்ணைக்கூட வெளியார் எடுக்க விடமாட்டோம்" என்று பேசினால் தீர்வுக்கு வாய்ப்பே இல்லை.

    அதேபோல பாகிஸ்தான் கெட்ட நாடு, முஷாரஃப் ரவுடி என்று திட்டிக்கொண்டே இருந்தாலும் தீர்வு கிடைக்கப்போவதில்லை.

    ReplyDelete
  10. பத்ரி,
    நல்ல கட்டுரை
    பிரச்சனைக்குத் தீர்வு எங்கிருந்து வந்தாலும் அதைப் பரிசீலிப்பதுதான் சரி.

    சசி,

    //முழுமையான தீர்வை நோக்கி செல்ல வேண்டுமானால் காஷ்மீர் பிரச்சனையில் உள்ள யதார்த்தமான சூழலை இரு நாடுகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். //

    இந்தக் கருத்தை அமோதிக்கிறேன்.

    எனக்கு தேசப்பற்றே ஒரு மாயைதானோ என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. அது குறித்த என் பதிவு இங்கே:

    http://nilaraj.blogspot.com/2005/12/blog-post_12.html

    ReplyDelete
  11. /
    ஆனால் "காஷ்மீர் இந்தியாவின் பகுதி. அதிலிருந்து ஒரு துளி மண்ணைக்கூட வெளியார் எடுக்க விடமாட்டோம்" என்று பேசினால் தீர்வுக்கு வாய்ப்பே இல்லை./

    வேறு எப்படி பேச வேண்டும்?தீவிரவாதத்துக்கு அடி பணிகிறோம்.எந்த பகுதி காஷ்மீர் வேண்டும் என்றா பேச வேண்டும்?இந்திய எல்லையை காக்க பல்லாயிரம் வீரர்கள் தம் இன்னுயிர் துறந்துள்ளனர்.ரத்தம் சிந்தி வியர்வை சிந்தி பாதுகாக்கபட்ட எல்லை இந்திய எல்லை.அந்த வீரர்களின் ரத்தம் சிந்திய மண்ணின் ஒரு அங்குலத்தை கூட எதிரிகளிடம் தாரை வார்க்க மாட்டோம்.கடைசி இந்தியனின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் இன்னுயிர் தந்து காப்போம்.

    காஷ்மீருக்கு தீர்வு என்பது அங்கிருக்கும் தீவிரவாத பேயை அடித்து விரட்டுவதுதான்.பாகிஸ்தானே இப்போது அதை உணர துவங்கி விட்டது.பாகிஸ்தான்,அமெரிக்கா,இந்தியா என உலக நாடுகள் பலவும் அந்த தீவிரவாதிகளை வேட்டையாட துவங்கிவிட்டன.

    /அதேபோல பாகிஸ்தான் கெட்ட நாடு, முஷாரஃப் ரவுடி என்று திட்டிக்கொண்டே இருந்தாலும் தீர்வு கிடைக்கப்போவதில்லை. /

    உண்மையை சொல்ல வேண்டுமென்றால் காஷ்மீர் விவகாரத்தில் தனது தவறை உணர்ந்து லஷ்கர், ஜெய்ஷ் இயக்கங்களை தடை செய்து எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பெருமளவு கட்டுப்படுத்திய முஷாரப்பை நான் மனதார பாராட்டுகிறேன்.அமெரிக்கா சொல்லி நடந்தது தான் இது அத்தனையும்.இருந்தாலும் பரவாயில்லை.ஒசாமாவோடும், ஜய்ஷ் தீவிரவதிகளோடும் போரிடும் முஷாரப் இந்தியாவின் நண்பர் தான். காலம் கடந்தேனும் அவருக்கு நல்ல புத்தி வந்ததே என மகிழ்ச்சி அடைகிறேன்.தீவிரவாதத்தை ஏவி விட்டால் அது ஏவி விட்டவருக்கே எதிராக திரும்பும் என்பதை அவர் இப்போதாவது புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  12. since people in jand k state already participate in state and central elections of india, doesnt it mean, they want to be part of india? why need of another plebiscite for j and k?
    plebiscite can be conducted for pok ares.

    respectfully,
    venkat

    ReplyDelete