Thursday, July 06, 2006

தமிழ்நாடு பட்ஜெட் - என்ன செய்ய வேண்டும்?

"All for distribution, little for development" - S.விஸ்வநாதன், ஆசிரியர், பதிப்பாளர், Industrial Economist.

விஸ்வநாதன், வரவிருக்கும் தமிழ்நாடு பட்ஜெட்டை முன்னிட்டு தன் கருத்துகளை முன் வைத்தார். அதிலிருந்து சில துளிகள்:

* தமிழகம் கடந்த 15 வருடங்களில் வளர்ச்சிக்காக செலவழிக்கவில்லை. கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் தமிழகத்தைவிட அதிகமாக சாலைகள், மின்சாரம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளில் செலவுகள் செய்துள்ளன.

* கல்வியில் கடந்த சில வருடங்களில் ஆந்திரா தமிழகத்தைவிட வெகுவாக முன்னேறியுள்ளது. மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ் பயிற்சிக்குத் தேர்வு பெற்றவர்கள், ஐஐடிக்கு தேர்வு பெறுபவர்கள், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை என்று பலவற்றைப் பார்த்தால் ஆந்திரா தமிழகத்தைவிட முன்னேறிச் செல்கிறது.

* Human Development Index - தமிழகம் கேரளாவைவிட வெகுவாகப் பின்தங்கியுள்ளது.

* தமிழகத்தின் நிதிநிலை மோசமாக உள்ளது. கடந்த பத்து வருடத்தில் வருவாய் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் கடனுக்காகத் திருப்பித் தரவேண்டிய வட்டி பத்து மடங்கும், வழங்கப்படும் ஓய்வூதியம் பத்து மடங்கும் அதிகரித்துள்ளன.

* தமிழகத்தின் வருடாந்திர பென்ஷன் பட்ஜெட்: ரூ. 4,800 கோடி! ஏன்? தமிழகத்தில்தான் அரசுப் பணியாளர்கள் அதிகம். தமிழக அரசு ஊழியர்கள் இப்பொழுது 13 லட்சத்துக்கு மேல் உள்ளனர். கருணாநிதி சாலைப் பணியாளர்களையும் அரசு ஊழியர்களாக்கிவிட்டால் இந்த எண்ணிக்கை 15-16 லட்சம் ஆகும். தமிழகத்தைவிடப் பெரிய மாநிலங்களான மஹாராஷ்டிரா, ஆந்திராவில் எத்தனை அரசு ஊழியர்கள் உள்ளனர் தெரியுமா? இந்த எண்ணிக்கையில் பாதிதான்!

* கடந்த சில வருடங்களில் தென்னிந்திய மாநிலங்கள் சில மின்சார வசதியை அதிகமாக்க எவ்வளவு செலவு செய்துள்ளன தெரியுமா?
ஆந்திரா - ரூ. 6,000 கோடி
கர்நாடகா - ரூ. 2,000 கோடி
தமிழகம் - ரூ. 275 கோடி

* கேரளாவில் மாநில அரசின் பட்ஜெட் (செலவுத்தொகை) எத்தனையோ அதே அளவு பணம் வெளிநாடு வாழ் மலையாளிகளால் அந்த மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறது (consumptive). ஆந்திரத்தில் வெளிநாடுவாழ் தெலுங்கர்கள் எக்கச்சக்கமான பணத்தை முதலீடு செய்கிறார்கள் (investments). தமிழகத்தில் இது நிகழ்வதில்லை.

* பிற மாநிலங்களில் ஓரளவுக்கு பொருளாதாரம் தெரிந்தவர்களே நிதியமைச்சர்களாக வருகிறார்கள். தமிழகத்தில்தான் தமிழ் பண்டிதர்கள் நிதியமைச்சர்களாகிறார்கள்.

* பிற மாநிலங்களில் மின்சாரத் துறையில் சீர்திருத்தங்கள் தொடங்கிவிட்டன. உற்பத்தி, விநியோகம் ஆகியவை பிரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் இது தொடங்கக்கூட இல்லை.

* பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 500க்கும் மேற்பட்ட குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் நான்கு கூட இல்லை. இதனால் விவசாயிகள் அதிகம் விளைவிக்கும்போது அத்தனையும் உடனடியாக சந்தைக்கு வருகிறது, இதனால் விலை பெருவீழ்ச்சி அடைந்து விவசாயிகளையே பாதிக்கிறது. குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு இருந்தால் அங்கு அதிக விளைச்சலை (காய்கறி/பழங்கள் போன்ற சீக்கிரம் வீணாகிவிடும் பொருள்கள்) சேமித்து அதிக விலை கிடைக்கும் இடங்களுக்கு மாற்றி விவசாயிகள் அதிக வருமானம் பெறலாம்.

* தமிழகத்தில் மொத்தப் பொருளாதாரத்தில் 14% விவசாயம் சார்ந்தவை. ஆனால் கிட்டத்தட்ட 50% பேர் இதில் வேலை செய்கிறார்கள். 30% பொருள் உற்பத்தி. 56% சேவை. விவசாய வளர்ச்சி இல்லையென்றால் பெருமளவு மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

கருணாநிதி அரசு என்ன செய்யவேண்டும்?

1. குளிர்சாதன வசதிகொண்ட சேமிப்புக் கிடங்குகளை பல இடங்களில் அமைக்க வேண்டும். இவற்றுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வகை செய்யவேண்டும்.

2. உயர் கல்விக்கு அளிக்கும் மான்யங்களை முற்றிலுமாக நிறுத்திவிட்டு அடிப்படைக் கல்விக்கு செலவழிக்க வேண்டும். (அதாவது தனியார் கலை/அறிவியல் கல்லூரிகள் பலவும் Govt. aided கல்லூரிகளாக உள்ளன. இங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு அரசே சம்பளம் கொடுக்கிறது. அதை நீக்கவேண்டும் என்கிறார். மாணவர்களிடமிருந்து வசூலிக்கும் பணத்தில் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவேண்டும் என்கிறார்.)

3. பொது மருத்துவமனை வசதிகளை அதிகரிக்கவேண்டும்.

4. தொழில்பேட்டைகளில் அடிப்படை வசதிகளை அதிகரிக்கவேண்டும்.

5. மதிப்புக் கூட்டு வரியை (VAT) அமல்படுத்தவேண்டும். கடந்த சில மாதங்களில் VAT-ஐ அமல்படுத்தாததால் மூன்று பெரிய நிறுவனங்கள் தமிழகத்துக்கு வருவதற்கு பதில் ஆந்திரா சென்றுவிட்டன.

6. கடற்கரையோரம் பல சிறு துறைமுகங்களை உருவாக்க வேண்டும். முரசொலி மாறன் இதைப் பல வருடங்களாகச் சொல்லிவந்தாராம். ஆனால் இதுவரையில் யாருமே செய்யவில்லை. உதாரணத்துக்காக குஜராத் - குஜராத்தில் ஐந்து சிறு துறைமுகங்கள் சேர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமான விசாகப்பட்டிணத்தைவிட அதிக சரக்குகளைக் கையாளுகின்றன. இதனால் குஜராத்துக்கு நிறைய வருமானம் கிடைக்கிறது. தமிழகமும் இதேபோல செய்யமுடியும்.

7. Special Economic Zones - SEZ. நாங்குநேரி SEZ அம்மாவின் கருணையால் தொங்கலில் விடப்பட்டது. திமுக ஆட்சியில் வேகமாக எதையாவது செய்யவேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஐந்து வருட அஇஅதிமுக ஆட்சியில் மீண்டும் முட்டுக்கட்டைகள் வரலாம்.

8. அந்நிய நேரடி முதலீடுகள். கடந்த பதினைந்து வருடங்களில் எந்தத் தமிழக முதல்வர்/அமைச்சர்களாவது வெளிநாட்டுக்குச் சென்று முதலீடுகளைப் பெற்றுள்ளார்களா? பிற மாநிலங்களைப் பாருங்கள். கடந்த ஐந்து வருடத்தில் டாடா ஹவுசிங் அதிகரிகள் பலமுறை ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்தும் முடியவில்லை. கருணாநிதியையாவது சந்திக்க முடிகிறது. ஆனால் அவருக்கு வயதாகிவிட்டது! We need a young and energetic person to aggressively go after investments.

விவசாயம் பற்றி விரிவாகப் பேசினார். அமெரிக்காவில் ஓர் எக்கர் நிலத்தில் பத்து டன் சோளம் உற்பத்தியாகிறதாம். சீனாவில் 5 டன். தமிழகத்தில் ஒரு டன். இதைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு விவசாயிக்கு வருடத்துக்கு அதிகபட்சமாக ரூ. 24,000தான் வருமானமாக வரும். அதாவது மாதம் ரூ. 2,000. அதனால் விவசாயம் வேஸ்ட் என்று கருதி அவர்கள் நகரங்களுக்கு வந்து கூலிவேலை செய்வதே மேல் என்று முடிவெடுக்கின்றனர். ஆனால் குறைந்தது ஏக்கருக்கு 2 டன் என்று விளைச்சலைப் பெருக்கினால் வருமானம் அதிகமாகும். விஸ்வநாதன், வேறு சிலர் சேர்ந்து சென்னைக்கு அருகே படப்பையில் ஏழு ஏக்கர் அளவில் ஒரு விவசாய ஆராய்ச்சி/சோதனை மையம் வைத்து விளைச்சலைப் பெருக்குவதற்கான சோதனைகள் செய்துவருகின்றனர். (non-profit setup). அங்கு ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி எழுதுகிறேன்.

14 comments:

  1. இப்பதிவில் ஆட்சியாளர்களின் பார்வைபட கடவுளை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. இந்த வார அவுட்லுக் பிஸினஸில் தயாநிதி மாறன் கொரியா, சிங்கப்பூர் என்று போய் முதலீட்டாளர்களை சந்திக்கிறார் என்று சொல்லியிருந்ததாக நினைவு. தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்பு நிலையில் பெரியதாய் மாற்றம் வருமென்று தோன்றவில்லை. முதலில் நவி மும்பை போல சென்னை தாண்டிய ஒரு சாட்டிலைட் டவுன் தேவை. அது திருபெரும்புதூரோ, திருவள்ளூரோ, எது வேண்டுமானாலும் இருக்கட்டும். நகரத்தில் எல்லா தேவைகளையும் முடக்க முடக்க, வருமானம் இல்லாத விவசாயி, கே.கே.நகர் ப்ளாட்பாரமில் படுத்துக் கொண்டு கட்டிட வேலை பார்க்க கியுவில் நிற்கிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு என் - லாகின் மாயவரம் சுற்றி இருக்கும் கியாஸ்க்குளைப் பார்க்க போயிருந்தேன். வைத்தீஸ்வரன் கோயில் சுற்றி நாடி ஜோசியம் பார்ப்பவர்களைத் தவிர வேறு ஒருவருமில்லை. பிரச்சனை அடிப்படையில் உள்ளது.

    பக்கத்து ஊர் பெங்களூரில் சூரிய ஒளியினால் எரியூட்டப்படும் வாட்டர் ஹீட்டர்களுக்கு அரசு மானியம் அளிக்கிறது. எல்லா அடுக்ககங்களிலும் அவைதான் பொறுத்தப்படுகின்றன. வருடத்துக்கு 10 மாதம் வெயில் காயும் தமிழகத்தில் அவ்வாறான திட்டங்கள் ஒன்றுமில்லை. காய்ந்துக் கொண்டிருக்கிறோம். கரண்ட் பில்லுக்கு காசு கொடுத்துக் கொண்டு சீரியல் பார்க்கிறோம். சுசலான் போன்ற wind energy நிறுவனங்கள் கோயமுத்தூர்,ஜெயங்கொண்டான் தவிர வேறெங்குமில்லை. கரும்பு அதிகமாக விளையும் தமிழகத்தில் இன்னமும் மாற்று எரிபொருளுக்கான எவ்வித முயற்சிகளுமில்லை. கொஞ்ச மாதத்திற்கு முந்தைய பிஸினஸ் வேர்ல்டில் ஐஐடி பேராசிரியர்கள் பஞ்சாபிலும், உத்தரபிரதேசத்திலும் கரும்பினை அடிப்படையாக கொண்டு எத்தனால் மூலம் ஒடும் மோட்டர்களை நிறுவி இருக்கிறார்கள். நாம் இன்னமும் டீசல் விலையுயர்வினை கண்டித்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

    கருணாநிதிக்கு வயதாகிவிட்டது என்பது உண்மைதான். முடியாட்சி தத்துவத்தின் படி, ஸ்டாலின் வந்தால், நீங்கள் சொல்லும் young and energetic வந்துவிடுமா என்று தெரியவில்லை. இந்தியாவில் எந்த பட்ஜெட்டும் மக்களுக்கான accountability-யோடு செய்யப்படுவதில்லை. இந்த முறை தகவல் அறியும் சட்டமிருப்பதால், 6 மாதம் கழித்து கேள்வி எழுப்பிப் பார்ப்போம், என்ன நடக்கிறதென்று

    ReplyDelete
  3. Hi Badri

    I am not sure if Viswanthan is doomsday prophet or he is just presenting the figures they way they are.if later is the case,figures are really alarming

    Looks like there are only two families that have benefit from the Dravidian Rule-Maran Family and Mannargudi Coterie

    Also i see no redemption for TN under the current regime.It will be a populist,please all regime

    Its true -Anbhazhagan or for that matter Ponnaiyan -what expertise they have running the finance of the state.

    Going by the current trend in Tamil Blogdom today ,i am not expecting a enlightened discussion such issues like economic future of Tamil Nadu -the development model that needs to be followed building on the inherent strengths of the state

    All that will happen is Viswanthan might be attacked and castiagted for pointing this out and his caste too might be invoked

    ReplyDelete
  4. Very Informative. I was under the impression that J.Jaya was wooing a lot FDI.

    hope for the best in the future !

    ReplyDelete
  5. Very Informative . Thanks for sharing.

    I was thinking that J.Jaya was wooing FDI well. Your article changed that perception.

    Hope for something better in the future !

    ReplyDelete
  6. பட்ஜெட் குறித்த, திரு விஸ்வநாதன் அவர்களுடைய கருத்துக்களிலே, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் பற்றிஅவர் சொல்வது முற்றிலும் உண்மை. இது பற்றி எனக்கும் சில கருத்துக்கள் உண்டு. குறிப்பாக மின்சாரம். ஆனால், அதை விரிவாக எழுத வேண்டும் என்றால், ஒரு முன்கதைச் சுருக்கம் தேவைப்படுகிறது. ( புள்ளிவிவரங்களை எல்லாம் தவிர்த்து விட்டு பொதுவாக எழுதுகிறேன்)

    பல ஆண்டுகளாக, எல்லா அடிப்படை வசதிகள் போலவே, மின்சாரமும்,அரசு வசம் தான் இருந்தது, இன்னமும் இருக்கிறது. இதன் அர்த்தம் என்ன என்றால், அரசு தான், மின்சார உற்பத்தி நிலையங்களை நிறுவி,நடத்தி,
    விநியோகம் செய்யும். தனியார் செய்ய இயலாது ( இதற்கு ஒரு விதி விலக்கு உண்டு. பெரிய ஆலைகள்,தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளலாம். captive power plant என்று அதற்குப் பெயர். இதிலேயும் சில கட்டுப்பாடுகள் உண்டு. உதாரணமாக, தங்களுக்குத் தேவையானது போக, மீதமுள்ள மின்சாரத்தை, பிறருக்கு விற்க முடியாது. அரசுக்கு மட்டும் தான் விற்க முடியும்). பிறதுறைகளை, தனியாருக்குத்திறந்து விட்ட போது, மின்சாரத்துறையையும் திறந்து விட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அப்போது, பல இந்திய/பன்னாட்டு/வெளிநாட்டு நிறுவனங்கள், மின்சாரத்துறையில் முதலீடு செய்ய ஓடி வந்தார்கள். ( அதிலேஒன்றுதான், என்ரான் நிறுவனத்தின், Dabhol Power Company). ஆனால், மின்சார உற்பத்தி நிலையத்தை ஒரு தனியார் நிறுவனம், நிறுவுவதற்கான விதிமுறைகள் மிகக் கடுமையாக இருந்தன. குறைந்த பட்சம், முப்பது அரசாங்க ஏஜென்சிகளில் ஒப்புதல் பெற வேண்டும். அனைத்து தகுதிகளைப் பெற்றிருந்தாலும், திட்டஅறிவிப்புக்கும், கட்டுவதற்கான முதல் செங்கலை எடுத்து வைப்பதற்குமான இடைவெளி குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளாவது இருக்கும். இந்த கடுமையைத் தாங்க முடியாமல், கழட்டிக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் ஏராளம் ( இதிலே பிரபலமானது, cogentrix இன், மங்களூர் மின்சாரத்திட்டம்). தனியாருக்குத் திறந்து விட்டால் மட்டும் போதாது, விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்று 1998 இலே ஒரு சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதை அமுலாக்கம் செய்வதற்காக central electricity regulatory commission என்ற ஒரு ஏஜென்சியும் நிறுவப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர், அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் ( மறைந்த ) ரங்கராஜன் குமாரமங்கலம். ஒரு யூனிட்டுக்கான விலையை நிர்ணயிப்பது, அரசிடம் இருந்து escrow வசதி பெறுவது, தேவையான மூலப் பொருட்களைப் ( நிலக்கரி, எரிவாயு, நாஃப்தா, இன்னபிற ) பெறுவது, விநியோக சுதந்திரம் போன்றவற்றில் பெருமளவுக்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. இந்திய மின்சாரத் துறையில், இது ஒரு ஹால்மார்க்கான விஷயம் ( இன்னமும் சீர்திருத்தம் வேண்டும் என்ற போது ) என்று உறுதியாக அடித்துச் சொல்லலாம்.

    இந்த சீர்திருத்தத்தின் அடிப்படை நோக்கமே, மின்சார உற்பத்தியில் தனியாரை ஊக்குவிப்பதுதான். இதை பெருமளவில் பயன்படுத்திக் கொண்ட மாநிலங்கள், ஆந்திரம், மகாராஷ்டிரம், உத்தராஞ்சல், கர்நாடகம், ஒரிசா போன்ற மாநிலங்கள் தான்.

    தமிழ்நாடு? யூஸ்லெஸ் ஃபெல்லோஸ்...

    (தொடரும்)

    ReplyDelete
  7. ஆந்திரா எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். ஒரு வாகான இடத்தில் மின்சார நிலையத்தை நிறுவலாம் என்று முடிவு செய்த உடனே, ஆந்திர மின்சார நிறுவனம், தன் இஞ்சினியர்களை அனுப்பி, முதன்மைச்சோதனையைச் செய்யும். ஒத்து வரும் என்ற உடனே, அது செய்தியாக வெளியாகும். திட்டத்தில் பிற நாட்டு மின்சார தாதாக்களுக்கு எல்லாம் ஃபீலர்கள் செல்லும். அவர்கள், தங்கள் இந்திய அலுவலகத்தில் இருந்து (கவனத்திற்கு : அமெரிக்கா, ஐக்கிய குடியரசு, பிரான்ஸ் ஜெர்மனி நாடுகளில் இருக்கும் பெரும்பான்மையான மின்சாரக் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்திற்கும், குறிப்பாக கிழக்காசிய நாடுகளில், காலூன்றத் துடிக்கும் அனைவருக்கும், மும்பையிலோ, புதுதில்லியிலோ நிச்சயம் ஒரு அலுவலகம் இருக்கும் )
    ஆட்களை அனுப்பி, ஒர்க் அவுட் ஆகுமா ஆகாதா என்று prefeasibility survey செய்து வைத்துக் கொள்வார்கள். அதாவது, திட்ட அறிவிக்கப்ட்டால், உடனடியாக டெண்டர் கோருவதற்காக. தேர்வு செய்யப்பட்ட உடனேயே, ஆந்திரத்தின் முதலமைச்சரையும், மின்சாரத்துறை அமைச்சரையும் சந்தித்து கைகுலுக்கி ஒப்பந்தம் ஒன்றை பரஸ்பரம் கையெழுத்திட்டுக் கொண்டு, போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள். அடுத்த நாள் எகனாமிக் டைம்ஸிலே போட்டோவுடன் செய்தி வரும். புதிய திட்டத்திலே, ஆந்திர அரசுக்குக் கொஞ்சம், நிதி நிறுவனங்களுக்குக் கொஞ்சம், தேவைப்பட்டா பிஎச்ஈஎல்லுக்குக் கொஞ்சம் பங்கு கொடுத்து விட்டு, சொன்ன தேதிக்கு, திட்டத்தை ஆரம்பித்து, சொன்ன தேதிக்கு முன்பாகவே முடித்து விடுவார்கள். வெவ்வேறு திட்டங்களுக்கு வெவ்வேறு மாதிரி என்றாலும், பொதுவாக இந்த வழியில் தான் நடக்கும்.

    தமிழகத்தில் , 95 ஐந்திலே, இது போல, 9 சிறிய அனல்மின் திட்டங்கள் போடப்பட்டன ( 200 MW க்கு உட்பட்டது ). இவை fasttrack projects என்று அறிவிக்கப்பட்டன. ஏகப்பட்ட தடங்கல்கள். இவற்றில், பாதி திட்டங்கள், ஆரம்பித்த நிலையிலும், பாதி முடிக்கப்பட்ட நிலையிலும் இருக்கின்றன. புதிய திட்டங்கள் ஏதும் கிடையாது. ஆந்திர மாநிலத்திலே, மின்சார உற்பத்தியை பெருக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். நம்மவர்கள், இருக்கிற மின் நிலையங்களை, ஒழுங்காக ஓட்டினாலே போதும் என்கிறார்கள். அவர்களுக்கு capacity expansion. நம்மவர்களுக்கு capacity utilization. அத்தனை ஏன், பெரும்பான்மையான மாநிலங்களில், generation, distribution, transmission ஆகிய மூன்றிற்கும் தனித்தனியான அமைப்புகள் உண்டு ( நிறுவனம்/நிறுவனமல்லாதவை). கர்நாடக மாநிலத்திலே, மாவட்டத்துக்கு மாவட்டம், தனித்தனி மின்சார விநியோகக் கம்பெனிகள் உண்டு. அவை தங்கள் அளவிலே ஒரு profit centre ஆக இயங்குபவை. இங்கே எல்லாம் TNEB. எல்லாம் மாயா...

    ( தொடரும்)

    ReplyDelete
  8. நம்மவர்களையும் குற்றம் சொல்லமுடியாது. கொடுக்கப்பட்ட வேலைகளையும் தாண்டி, தன்னிச்சையாக, ப்ரொஆக்டிவாக செயல்பட, உந்துசக்தி இங்கே இல்லை. மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் போன்ற அமைச்சர்கள் இங்கே இல்லை. economics is the study of incentives என்று freakonomist ( ஹிஹி ) சொல்லுவார். கடந்த ஆண்டு, உத்தரப் பிரதேச அரசும், ராஜஸ்தான் அரசும், நம்ம ஊர் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனை அழைத்து, தங்கள் மாநிலத்திலும், ஒரு நிலக்கரி அனல்மின் நிலய திட்டத்தை வடிவமைத்து, நிறுவி நடத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். என் .எல்.சியும், உற்சாகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதே போல, ஆற்காடு வீராசாமியோ. அல்லது முந்தைய ஆட்சியின் மின்சாரத்துறை அமைச்சரோ, வருகிற நிதியாண்டில், இத்தனை மெகாவாட் உற்பத்தி வேண்டும், அதற்காக ஒரு திட்டம் தயாரிக்கச் சொன்னால், சூப்பராகச் செய்வார்கள். சரியாக பத்து இடங்களைத் தேர்வு செய்து, அங்கே ஒரு மீடியம் சைஸ் ( 500 MW க்கு உள்ளாக ) மின் நிலையங்களை, தனியார் பங்கேற்புடன், இரண்டே வருடங்களில், முடிக்கலாம். ஆனால், இப்படி செய்தே ஆகவேண்டும் என்பதற்கு எந்த கட்டாயமுமில்லை. ஏனெனில், இன்சென்டிவ் ஸ்கீம் ( நான் துட்டைச் சொல்லவில்லை ) ஒழுங்காக இல்லை. இது அடிப்படைப் பிரச்சனை.

    தமிழ்நாடு என்பது சென்னை மட்டுமில்லை. தொழில் முன்னேறம் கார் கம்பெனிகளாலும், கால்சென்டர்களாலும் மட்டும் வருவதில்லை. நம்ம ஊருக்கு வரும் அந்நிய முதலீடுக்கு காரணம், இங்குள்ள இளம் எஞ்சினியர்கள்,
    ஆங்கிலம் பேசத் தெரிந்த பெண்கள், அமைதியான சூழல், நிலையான அரசியல் சூழ்நிலை, மிதமான தொழிற்சங்க சூழ்நிலை, துறைமுகத்தின் அருகாமை போன்ற காரணங்களினாலேதானே தவிர, ஆந்திரா, கர்நாடகம், மேற்கு வங்கம், உத்தராஞ்சல் போல, வெளிநாடுகளுக்குச் சென்று பவர் பாய்ண்ட் பிரசண்டேஷன் செய்து, குழையடித்து, கொண்டு வந்ததல்ல.

    உள்கட்டமைப்பு வசதிகளிலே சுணக்கம் காட்டினால், இப்போது பெங்களூரை, போறவன் வரவனெல்லாம், தர்மடி போடுவது போல, நம் நிலைமையும் ஆகிவிடும்.

    சாலை வசதிகள் பற்றியும் எழுதலாம். அது ஒரு தனி ராமாயணம். ஆனால் டைப்படிக்கக் கஷ்டமாக இருக்கிறது.

    (முற்றும்)

    ReplyDelete
  9. பிரகாஷ்: சூப்பர். இதை தனியான பதிவாகப் போடாவிட்டால் நானே போட்டுவிடுகிறேன்.

    எழுத கஷ்டமாக இருந்தால் நாம் ஒரு podcast செய்யலாம். அடுத்தவாரம் முதல் நான் பட்ஜெட் தொடர்பாகச் சிலரைப் பேட்டிகண்டு அந்த ஆடியோக்களை podcast செய்யலாம் என்று இருக்கிறேன்.

    Captive Power பற்றி: விஸ்வநாதன் கேப்டிவ் பவர் என்பது எப்படிப்பட்ட அயோக்கியத்தனம் என்றும் சொன்னார். ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க பல சிறு நிறுவனங்களுக்கு ரூ. 14-15 ஆகிறது. (டீசல் முதலியவற்றை உபயோகித்து). மின்சாரத்தைப் பெரிய அளவில் தயாரித்தால்தான் யூனிட் விலை ரூ. 2க்குள் வரும். இல்லாவிட்டால் திண்டாட்டம்தான்.

    நெய்வேலி லிக்னைட் கார்பொரேஷன் பற்றி தனியாக எழுதவேண்டும். இந்த டிஸ்-இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் பிற விஷயங்கள் தொடர்பாக. அடுத்த பதிவில்.

    ReplyDelete
  10. //தமிழ்நாடு என்பது சென்னை மட்டுமில்லை. தொழில் முன்னேறம் கார் கம்பெனிகளாலும், கால்சென்டர்களாலும் மட்டும் வருவதில்லை. //

    உண்மை

    ReplyDelete
  11. இகாரஸ் எழுதியிருக்கும் சில விசயங்களில் நான் முரண்படுகிறேன். மின் உற்பத்தி சீர்திருத்த்ங்கள் என்பது ஆழமாக ஆராய வேண்டிய சங்கதி என்றாலும், இகாரஸ் எழுதியிருப்பதைப் பார்த்தால் தமிழ் நாட்டைக் காட்டிலும் ஆந்திராவும் கர்நாடகாவும் முன்னேறியிருப்பதைப் போல பிம்பம் ஏற்படுகிறது. அது உண்மையல்ல.

    மின்சார வசதிகள் எட்ட்டிப்பார்க்காத கிராமங்கள் கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் தமிழகத்தைக் காட்டிலும் மிகவும் அதிகம். தமிழகத்தை காட்டிலும் பிற மாநிலங்கள் அதிகம் செலவழித்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

    தனியார் மின் உற்பத்தி முதலீட்டாளர்களால் அரசாங்கத்திற்கு குறித்த விலையில் மின்சாரம் சப்ளை செய்ய இயலுவதில்லை. இந்தச் சிக்கல் டாபோலில் மட்டுமல்ல. ஆந்திராவின் சி எம் எஸ் பிராஜக்டிலும் இருந்தது.

    மின் உற்பத்தியையும், மின் விநியோகத்தையும் பிரிப்பது பலன்களை தரும் என்றாலும், இகாரஸ் சொன்னது போல பெரும்பான்மையான மாநிலங்களில் அது செயல்படுத்தப்படவில்லை. மின்சார விநியோக சேதாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டாலே, லாபம் அதிகரிக்கும். ஆனால் மின்சாரத்திருட்டும்,இலவச மின்சாரமும் இருக்கும் வரை இது பிரச்சனையே.

    ஆந்திராவில் யூனிட் ஒன்றுக்கு ரூ7.50 கட்டணம் செலுத்துகிறார்கள். நம்ம ஊரில் ஏற்றினால் கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவார்கள்.

    தமிழ்நாட்டிற்கு மின்சார உற்பத்தி பற்றாக்குறை மற்ற மாநிலங்களைப் போல கிடையாது. பீக் டிமாண்ட்தான் பிரச்சனைதான்.எனவே தனியார் உற்பத்தியை ஊக்குவிக்காததற்கு இதுவும் ஒரு காரணம்.

    ReplyDelete
  12. பத்ரி,
    வணக்கம். தமிழக அரசியலை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வரும் என் போன்ற ஈழத்தவர்களுக்கும் புரியும் வண்ணம் மிகவும் தெளிவான பதிவு. மிக்க நன்றிகள்.

    திரு.விஸ்வநாதன் அவர்களின் தரவுகள் உண்மையாயின், நிச்சயமாக முதல்வர் கருணாநிதி இவ் விடயங்களைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.


    //தமிழக அரசு ஊழியர்கள் இப்பொழுது 13 லட்சத்துக்கு மேல் உள்ளனர். கருணாநிதி சாலைப் பணியாளர்களையும் அரசு ஊழியர்களாக்கிவிட்டால் இந்த எண்ணிக்கை 15-16 லட்சம் ஆகும்.
    //

    இப்போது உலகின் பல நாடுகள் small government எனும் கோசத்துடன் அரச இலாகக்களில் இருக்கும் தேவையில்லாத பிரிவுகளை மூடிவருகின்றன. ஏன் பெயரளவில் பொதுவுடமை நாடாக இருக்கும் சீனாவே பல தேவையற்ற அரச இலாகக்களை மூடி வருகின்றது. இப்படி மூடும் போது பலர் வேலைகளை இழக்கக் கூடும். எனவே இந் நடவடிக்கை ஓர் அரசியல் தற்கொலை முயற்சிக்கு ஒப்பானது. எனினும் கலைஞர் அவர்கள் அரசியலில் தனது சொந்த நலனுக்காக தமிழகத்தின் எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைக்கக் கூடாது.

    ReplyDelete
  13. ராஜ்குமார், ஒரு விதமான அவசரத்திலே எழுதியது. ஏகப்பட்ட தட்டுப் பிழைகள். பல தகவல்கள் விட்டுப் போய்விட்டன. மின்சார உற்பத்தியிலே நாம், எந்த அளவில் பி தங்கி இருக்கிறோம் என்பதை மட்டும் தான் எழுதினேன். இதை இன்னும் என் பதிவிலே எழுத வேண்டும் என்று நினைத்து, நேரமின்மையால் முடியவில்லை.

    இன்று இரவு, இங்கேயே எழுதுகிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete