Friday, July 21, 2006

ஆந்திரா பெறும் 'இலவச' மின்சாரம்!

இன்று தி ஹிந்துவில் தென்னிந்திய மின்னிணைப்பு வலையிலிருந்து ஆந்திரா எவ்வாறு அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது என்று ஒரு கட்டுரை வந்துள்ளது.

நள்ளிரவு முதல் அதிகாலை 5.00 மணி வரையில் தமிழகத்துக்கு அதிக மின்சாரம் தேவைப்படுவதில்லை. ஆனால் பல மின் நிலையங்களும் அந்த நேரத்திலும் மின்சாரத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டிருக்கும். தமிழகத்தில் பொதுவாகவே காற்றாலைகளும் தனியார் மூலம் உற்பத்தி செய்யப்படும் Captive மின்சாரமும் அதிக அளவில் உள்ளன. இவை இரவும் தொடர்ந்து மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த மின்சாரத்தை தமிழக மின்வாரியம் குறிப்பிட்ட விலைக்கு வாங்கி மின் வலைக்குள் (Power Grid) செலுத்துகிறது.

இப்படி உபரி மின்சாரம் வலைக்குள் வரும்போது மின் அலை வரிசை அதிகமாகிறது. சாதாரணமாக அலைவரிசை 50 ஹெர்ட்ஸ் இருக்கவேண்டும். மின்சாரம் அதிகமாக இழுக்கப்படும்போது இந்த அலைவரிசை 49.5 என்று குறையும். மின்சாரத்தின் தேவை குறைவாக இருக்கும்போது, உற்பத்தி அதிகமாக இருக்கும்போது அலைவரிசை 50.5 என்று அதிகமாகும். இப்படி அதிகமான அலைவரிசை இருக்கும்போது வலையிலிருந்து அதிகமாக மின்சாரத்தை எடுத்தால் யூனிட் செலவு குறைகிறது.

இதைப் பயன்படுத்திக்கொண்டு ஆந்திர அரசு விவசாயிகளுக்குக் கொடுக்கும் இலவச மின்சாரத்தை இரவு நேரத்தில் வலையிலிருந்து எடுத்துக்கொள்கிறது. இதற்கு ஆந்திர அரசுக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ஜீரோ!

இதில் பாதிக்கப்படுவது தமிழக மின்வாரியம். ஏனெனில் இந்த உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்வது தமிழக காற்றாலைகள். இவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தமிழக மின்வாரியம் கொடுக்கவேண்டும்.

இதற்கு ஒரே மாற்று தமிழக மின்வாரியம் தன்னிடம் இருக்கும் உபரி மின்சாரத்தை வேறு யாரிடமாவது - பிற வட மாநிலங்களுக்கு - விற்க முன்வரவேண்டும். அதை எளிதாகச் செயல்படுத்தமுடியாமல் பல பிரச்னைகள் உள்ளன.

===

சரி, இவ்வளவுதானா? தமிழகத்துக்கு மின்சாரத் தேவையே இல்லையா?

* இன்னமும் பல தமிழக கிராமங்களுக்கு மின்சார வசதி கிடையாது. அதைச் செய்துகொடுத்து, இரவு நேரங்களில் மட்டுமாவது இந்த கிராமங்களுக்கு மிகக்குறைந்த விலையில், அல்லது இலவசமாக மின்சாரம் வழங்கலாம்.

* தமிழகம் முழுவதுமே நேரத்துக்குத் தகுந்தாற்போல மின் கட்டணம் வசூல் செய்யலாம். இரவு நேரம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 1 என்ற கணக்கிலும் Peak Hour சமயத்தில் அதிகமாகவும் கட்டணம் வசூலிக்குமாறு மின்சார மீட்டர்களை மாற்றலாம். (Like metered telephone calls, Internet time etc.)

* ஆந்திர விவசாயிகளுக்கு ஆந்திர அரசு செய்வதுபோலவே தமிழக விவசாயிகள் இரவு நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்த - இலவசம் அல்லது யூனிட்டுக்கு 50 பைசா - என்று வசூல் செய்யலாம்.

* இரவு நேரம் தொழிற்சாலைகள் ஷிஃப்ட் நடத்தினால் குறைந்த விலைக்கு மின்சாரம் வழங்கலாம்.

* இரவு நேரங்களில் மக்கள் Inverterகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்துக்கொண்டு பகல் நேரத்தில் - Peak Hour நேரத்தில் - அவற்றைப் பயன்படுத்தினால் யூனிட் விலை குறையும் என்று சொல்லலாம்.

* மாபெரும் பேட்டரிகளை இரவு நேரத்தில் தமிழக மின்வாரியமே இயக்கி உபரி மின்சாரத்தை அவற்றுள் தேக்கி காலை நேரங்களில் இந்த பேட்டரிகளிலிருந்து மீண்டும் மின்சாரத்தை Grid-டுக்குள் செலுத்தலாம்.

(யாராவது எலெக்ட்ரிகல் பொறியாளர் நான் சொல்வதில் எவையெல்லாம் சாத்தியப்படுவன என்று சொல்லுங்கள்.)

ஆனால் இதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு "அய்யோ, ஆந்திரா திருடறான்" என்பதுபோல புலம்பல் மட்டும்தான் நம்மூரிலிருந்து வெளிவருகிறது.

14 comments:

  1. //* தமிழகம் முழுவதுமே நேரத்துக்குத் தகுந்தாற்போல மின் கட்டணம் வசூல் செய்யலாம்.
    இரவு நேரம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 1 என்ற கணக்கிலும் Peak Hour சமயத்தில்...//


    இது சாத்தியம்தான். இங்கே எங்களுக்கு இந்த வசதி இருக்கு. அதுக்குத் தனியா ஒரு மீட்டர் பொருத்தறாங்க.
    இரவு 9 முதல் காலை 7 வரை வீடுகளில் உபயோகிக்கும் மின்சாரத்துக்கு 50% தான் சார்ஜ். அதனாலே
    டிஷ்வாஷர், வாஷிங் மெஷீன், ஹீட் பம்ப், ஹீட்டர்ஸ் எல்லாம் அரைச் செலவுலே ஓடும்.

    ReplyDelete
  2. மின்சாரத்தை விட்டுக் கொடுப்போம். தண்ணீர் வாங்க வக்கில்லை. ஆனா பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. வாழ்க சனநாயகம்.

    ReplyDelete
  3. Is there any responsible person from the TNEB who will answer this ?! Or Can anyone direct him the news ?!

    or can we file an RTI Act asking for this information, so that they realize atleast after this ?!

    ReplyDelete
  4. > மாபெரும் பேட்டரிகளை இரவு நேரத்தில் தமிழக மின்வாரியமே இயக்கி உபரி மின்சாரத்தை அவற்றுள் தேக்கி காலை நேரங்களில் இந்த பேட்டரிகளிலிருந்து மீண்டும் மின்சாரத்தை Grid-டுக்குள் செலுத்தலாம்.
    இது நடைமுறையில் சாத்தியம் இல்லை. மக்கள் இன்வெர்டரை பயன்படுத்தலாம். ஸ்ரீசைலம் (ஆந்திரா) மின்னுற்பத்தி நிலையம் போல வேறு பல மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கலாம். ஸ்ரீசைலத்தில் பகல் நேரத்தில் அணையில் தேக்கிய நீரை உபயோகித்து மின்சாரம் உற்பத்தி செய்வார்கள். இரவு நேரங்களில் உபரி மின்சாரத்தை உபயோகித்து கீழிருக்கும் நீரை மேலேற்றுவார்கள். (இது ஒரு பெரிய பாட்டரி போல செயல் படுகிறது).

    ReplyDelete
  5. பத்ரி,
    இப்போது என்னிடம் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனாலும்
    இது கிட்ட தட்ட முடியாது என்று நினைக்கிறேன். காரணம், இதற்கு ஆகும் பெரும் செலவு. அதிக அத்தகைய மின்கலங்களை உருவாக்க பெரும் செலவு ஆகும். அதோடு அதன் திறன் ஒரு எல்லை வரையே உருவாக்க முடியும். எனவே இதன் வழி கிடைக்கும் மின்சாரத்தின் விலை மிகுதியாகும். எனவே இம்முறையை சற்றே சிறிய அளவிலான அத்தியாவசியமான, பைசாபற்றி கணக்கு பார்க்காத நெருக்கடியான சூழ்நிலைக்கு மட்டும்(உ.தா. unexpected shutdown) பயன்படுத்த முடியும். இன்னும் நிறைய technical விஷயங்கள் உண்டு. ஆனால் இப்போது நினைவில்லை (கட்டர கீழே போட்டு 9 வருடத்துக்கு மேல் ஆச்சுங்க:-) ). கண்ணன் சொன்ன ஸ்ரீசைலம் போலத்தான் ஏதாவது செய்ய முடியும். ஆனால் இதன் efficiency குறைவு.

    ReplyDelete
  6. பத்ரி

    இந்த மின்சாரம் உற்பத்தி அளவை விட உபயோகிக்கும் அளவு குறைந்திருக்கும் சமயத்தில், உபரி மின்சாரத்தால் வேறு இடங்களில் அதிக வோல்டேஜினால் பாதிப்பு ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காக
    'எர்த்' செய்யப்படும்.

    இதைக் காரணம் காட்டியே விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. எர்த் செய்யும் மின்சாரத்தை எங்களுக்கு இலவசமாக அளியுங்கள் என்று.

    ///
    * ஆந்திர விவசாயிகளுக்கு ஆந்திர அரசு செய்வதுபோலவே தமிழக விவசாயிகள் இரவு நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்த - இலவசம் அல்லது யூனிட்டுக்கு 50 பைசா - என்று வசூல் செய்யலாம்
    ///


    ஏன் பத்ரி

    இலவச மின்சாரத்தை தமிழக விவசாயிகள் எத்தனை உயிர் இழப்புக்கு, போராட்டத்துக்குப் பிறகு பெற்றார்கள்.
    அவர்களிடம் வசூலிக்கச் சொல்கிறீர்களே நியாயமா?

    ReplyDelete
  7. கொள்கையளவில் நான் இலவச 'எதற்குமே' எதிரானவன். குறைந்தபட்சத் தொகையையாவது வசூல் செய்யவேண்டும்.

    விட்டால் நீங்களும் நானும்கூட உயிரைக் கொடுத்து எங்கள் வீட்டுக்கும் இலவச மின்சாரம் கொடுங்கள் என்று போராடலாமே? இலவச அரிசி, இலவச மின்சாரம், இலவச தேங்காய்த் துவையல்...

    என் பதிவின் நோக்கம் - தமிழக மின்வாரியம் பல வகைகளில் தமிழகத்தில் உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை மக்களுக்குப் பயன் கிடைக்கும் வகையில் உபயோகிக்க முடியும் என்பதே. சொல்லப்போனால் 'உபரி மின்சாரம்' என்னும் பிரயோகமே அபத்தமானது. தேவையை மிகக்குறைவாக வைத்து - அதாவது கிராமங்களுக்கு சரியான மின்வசதி ஏற்படுத்தித் தராமல், அதனால் மிந்தேவை மிகக்குறைவாக இருப்பதாகக் காட்டி அதன்பின் தேவையைவிட அதிகமாக உற்பத்தி செய்வதாகக் கணக்கு காண்பிப்பதற்கு பதில் இன்னமும் எந்தெந்த வகையில் மின் இணைப்புகளை உருவாக்கவேண்டும், அதன்மூலம் மக்கள் வாழ்க்கையை எந்த அளவுக்கு வளப்படுத்தமுடியும் என்பதை அரசு யோசிக்கவேண்டும்.

    ReplyDelete
  8. //கொள்கையளவில் நான் இலவச 'எதற்குமே' எதிரானவன். //

    பத்ரி,
    விவசாயிகளின் இலவச மின்சாரம்,ஏழைகளின் இலவச அரிசி...இன்னபிற திட்டங்களை நீங்கள் விமர்சித்த அளவுக்கு நீங்கள் கார்போரேட் நிறுவனங்களுக்கு அரசு தரும் சலுகைகளை விமர்சித்தது இல்லை.

    அரசு ஒரு இடத்தில் அமைக்கும் கம்ப்யூட்டர் சார்ந்த தொழில் பூங்காவிற்கு பன்னாட்டு,இந்நாட்டு நிறுவனக்களை அழைக்க தரும் இலவசங்கள்/சலுகைகள் உங்களுக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. அரசுகள் நிறுவனங்களுக்கு என அளிக்கும் சலுகைகளை நான் பிரச்னையாக நினைக்கவில்லை.

    அதேபோல அரசு அளிக்கும் பல்வேறு வரிவிலக்குகளையும் நான் பிரச்னையாக நினைக்கவில்லை.

    ஓர் அரசு உற்பத்தி நிறுவனங்கள்மீது கீழ்க்கண்ட வரிகளுள் சிலவற்றை விதிக்கிறது:
    1. உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தி நடக்கும் இடத்திலேயே விதிக்கப்படும் ஆயத்தீர்வை (கலால் - Excise)
    2. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின்மீது விதிக்கப்படும் சுங்கம் (Customs Duty)
    3. பல்வேறு விற்பனை வரிகள் (Sales Tax) அல்லது மதிப்புக் கூட்டு வரி (VAT)
    4. சேவைகளாக இருப்பின் சேவை வரி (Service Tax)
    5. நிறுவனம் பெறும் லாபத்தின்மீது விதிக்கப்படும் வருமான வரி (Income Tax)
    6. நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு அளிக்கும் ஈவுத்தொகை (Dividend) மீது சுமத்தப்படும் Dividend Tax
    7. நகராட்சி விதிக்கும் பல்வேறு வரிகள்
    8. புதிதாக நிலம் வாங்கிக் கட்டடம் கட்டும் முன்னர் விதிக்கப்படும் Stamp Duty

    இன்னபிற.

    இவையனைத்தும் இருந்தால் சில மாநிலங்களில் தொழில் ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை பல்வேறு நிறுவனங்களுக்கு ஏற்படும். அவர்களால் லாபம் பெறமுடியாது என்ற சூழ்நிலை ஏற்படும். அப்பொழுது அந்த நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கோ நாடுகளுக்கோ செல்ல முற்படுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் அந்தந்த மாநில அரசுகளே தாங்களாகவோ அல்லது மத்திய அரசுடன் இணைந்தோ சில வரிகளுக்கு, குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கிறார்கள்.

    உதாரணத்துக்கு சமீபத்தில் என்ரான் விட்டுவிட்டுச் சென்ற DPC - ரத்னகிரி மின் நிலையத்துக்கு நாஃப்தா வாங்குவதற்கு வரிவிலக்கு அளித்தால்தான் அந்த நிறுவனம் இயங்கமுடியும் என்ற சூழ்நிலை. இல்லாவிட்டால் இழுத்துமூடவேண்டும் என்ற சூழ்நிலை. அதனால் மத்திய அரசு இந்த நிறுவனத்துக்கு மட்டும் நாஃப்தா வாங்குவதில் வரிவிலக்கு அளித்துள்ளது.

    இதுபோன்ற வரிவிலக்குகளின் அடிப்படையில் யாரோ சில முதலாளிகள் பெரும்பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதற்காகச் செய்யப்படுவது இல்லை. இதுபோன்ர தொழில்கள் உருவாகும்போது அதனால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், அவை ஏற்படுத்தும் பொருளாதார மறுமலர்ச்சி ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றன.

    ஆனால் "ஏழைகளுக்கு" என்று சொல்லிவிட்டு எல்லோருக்கும் அள்ளிக்கொடுக்கப்படும் மான்யங்களும் இலவசங்களும் ஊழலில் மட்டும்தான் போய் முடிகின்றன.

    நான் இப்பொழுது இருக்கும் தொழிலில் எந்த நேரடி மான்யமும் கிடையாது. ஆனால் புத்தகங்களுக்கு விற்பனை வரி கிடையாது. இந்த வரிவிலக்கு இருப்பதனால் பொதுமக்கள் அதிகமாகப் புத்தகங்கள் வாங்கமுடியும் என்பது உண்மைதான். ஆனால் CDROM-களுக்கு விற்பனை வரி உண்டு. நாளை கல்வி சம்பந்தமான CDROM-களுக்கு விற்பனை வரியை நீக்கவேண்டும் என்று நான் நிச்சயம் கேட்பேன். (அது கிடைக்குமா, கிடைக்காதா என்பது வேறு விஷயம்.) அதில் தவறு இல்லையென்று கருதுகிறேன்.

    விவசாயிகளது வருமானத்துக்கு வரி கிடையாது. விவசாய உற்பத்திக்கு ஆயத்தீர்வை கிடையாது. விவசாயிகளுக்குக் கிடைக்கும் தண்ணீருக்கு (அது கிடைக்கும்போது...) பயன்பாட்டுச் செலவு ஏதும் கிடையாது. மின்சாரம் இலவசம்.

    அதையும்மீறி அவர்களது வாழ்க்கையில் வறுமை உள்ளது என்றால் அந்தக் காரணங்களை ஆராய்ந்து அதற்கு வழிசெய்யவேண்டும். பல முன்னேறிய நாடுகளிலும் விவசாயம் செய்பவர்கள் நல்ல வளத்துடன் உள்ளார்கள்லேன், சீனாவில்கூட விவசாயிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார்கள். மேற்கு வங்கத்தின் விவசாயிகள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்ப்பட்டுக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

    தமிழக விவசாயிகளுக்கு தரமான மின்சாரம் - metered power - கிடைக்க வகை செய்யவேண்டும். ஆனால் இலவச மின்சாரமல்ல. அவர்களுக்கு குளிர்சாதனக் கிடங்குகளை ஏற்படுத்தித் தரவேண்டும். நல்லவகை விதைகளும் உரங்களும் கிடைக்க வகை செய்யவேண்டும். இலவச ஆனால் உபயோகமில்லாத உரங்கள் அல்ல. விளைச்சல் பெருக வழி வேண்டும். கடன் ரத்து அல்ல.

    சரியான வழிமுறைகளைச் செய்யாமல் ஆண்டுக்கு ஆண்டு இதையும் அதையும் ரத்து செய்து, இலவச மின்சாரமும் தண்ணீரும் தந்தால் பஞ்சப்பாட்டு மட்டும்தான் பதிலாகக் கிடைக்கும்.

    ReplyDelete
  10. எரிந்து போன காடம்பாறை ப்ராஜக்டில் இப்படிதான்
    மின்சாரம் தேக்கி வைத்து உபயோகித்தார்கள். இது
    peak demand சந்திப்பதற்காக மட்டுமே.

    ReplyDelete
  11. கொள்கையளவில் நான் இலவச 'எதற்குமே' எதிரானவன் என்று சொல்லிவிட்டு உங்களின் தொழிலுக்கு கிடைக்கும் சலுகையையும், பெரிய நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகளையும், வரி விலக்குகளையும் பல காரணக்களைக் கூறி சரி என்று நிறுவ முயலும் நீங்கள், அதே போல் ஒரு விவசாயியும் காரணங்களைக் காட்ட முடியும் என்பதை அறிய வேண்டும்.

    பத்ரி,ஆக்கபூர்வமான் முயற்சிகளை அரசு செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இலவசம் வேண்டும் ஆனல் அது யாருக்கு,எங்கே எப்படிச் செல்கிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

    //அரசுகள் நிறுவனங்களுக்கு என அளிக்கும் சலுகைகளை நான் பிரச்னையாக நினைக்கவில்லை.//
    //அதேபோல அரசு அளிக்கும் பல்வேறு வரிவிலக்குகளையும் நான் பிரச்னையாக நினைக்கவில்லை.//

    ஏன் விவசாயச் சலுகை மட்டும் உங்களுக்குப் பிரச்சனையாகத் தெரிகிறது?

    ஒரு பெரிய நிறுவனம் சலுகைகள் மறுக்கப்படும் போது வேறு மாநிலத்துக்குச் செல்லலாம்.விவசாயம் அப்படி இல்லை.ஒரு நிறுவனத்தால் மட்டுமே வேலைவாய்ப்புகள், பொருளாதார மறுமலர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது என்ற நோக்கில் எழுதியிருகின்றீர்கள்.இது தவறு. விவசாயத்தை மட்டுமே நம்பி/சார்ந்து இருக்கும் கூலித் தொழில் உங்கள் பார்வையில் வேலைவாய்பபாகத் தெரியவில்லை.

    //விவசாயிகளது வருமானத்துக்கு வரி கிடையாது. விவசாய உற்பத்திக்கு ஆயத்தீர்வை கிடையாது. விவசாயிகளுக்குக் கிடைக்கும் தண்ணீருக்கு (அது கிடைக்கும்போது...) பயன்பாட்டுச் செலவு ஏதும் கிடையாது. மின்சாரம் இலவசம்.அதையும்மீறி அவர்களது வாழ்க்கையில் வறுமை உள்ளது என்றால் அந்தக் காரணங்களை ஆராய்ந்து அதற்கு வழிசெய்யவேண்டும். //

    அதற்கு நீங்கள் சொல்லும் வழி எது? இலவசத்தை நிறுத்துவதா?

    பண்ணையார்களை விடுங்கள், அவர்கள் விவாசாயி என்ற பேரில் கொள்ளை அடிப்பவர்கள். ஒரு ஏக்கர் , கால் ஏக்கர் வைத்து விவசாயம் செய்து அதை மட்டுமே நம்பி ஜீவனம் நடத்திப் பாருங்கள்.அப்போது புரியும் ஏன் இந்த இலவசக் கூப்பாடு என்று.

    //தமிழக விவசாயிகளுக்கு தரமான மின்சாரம் - metered power - கிடைக்க வகை செய்யவேண்டும். ஆனால் இலவச மின்சாரமல்ல. அவர்களுக்கு குளிர்சாதனக் கிடங்குகளை ஏற்படுத்தித் தரவேண்டும். நல்லவகை விதைகளும் உரங்களும் கிடைக்க வகை செய்யவேண்டும். இலவச ஆனால் உபயோகமில்லாத உரங்கள் அல்ல. விளைச்சல் பெருக வழி வேண்டும். கடன் ரத்து அல்ல.//
    //நான் இப்பொழுது இருக்கும் தொழிலில் எந்த நேரடி மான்யமும் கிடையாது. ஆனால் புத்தகங்களுக்கு விற்பனை வரி கிடையாது. இந்த வரிவிலக்கு இருப்பதனால் பொதுமக்கள் அதிகமாகப் புத்தகங்கள் வாங்கமுடியும் என்பது உண்மைதான். ஆனால் CDROM-களுக்கு விற்பனை வரி உண்டு. நாளை கல்வி சம்பந்தமான CDROM-களுக்கு விற்பனை வரியை நீக்கவேண்டும் என்று நான் நிச்சயம் கேட்பேன்.//


    :-)))
    இந்த வரிவிலக்கு இருப்பதனால் பொதுமக்கள் அதிகமாகப் புத்தகங்கள் வாங்கமுடியும் ...அதனால் அதிக புத்தகம் விற்கும் ...பதிப்பாளருக்கு அதிக இலாபம் கிடைக்கும் ...சரியா?

    ஏன் உங்களுக்கு தரமான காகிதங்களும்,தரமான CDROM களும் போதாதா? எதற்கு வரி விலக்கும் சலுகையும்?

    ஏன் என்றால் வரிவிலக்கு என்பது அரசு தனது இலாபத்தை விட்டுக் கொடுக்கிறது.இழப்பு அரசுக்கே இருக்க வேண்டும் தனக்கு கூடாது எனப்தே உங்களின் நோக்கம். உங்களைக் குற்றம் சொல்லவில்லை. அதுதான் வியாபாரம்.
    ஏன் நீங்களே அரசின் வரியைச் செலுத்திவிட்டு உங்களின் இலாபத்தைக் அதற்குச்சமமாக குறைத்து அதே குறைந்த விலையில் புத்தகம் கொடுத்தால்..அதே பொதுமக்கள் அதிகமாகப் புத்தகங்கள் வாங்கமுடியும் சரியா?

    பத்ரி, உங்களைப் போலவேதான் விவசாயியும் அரசிடம் இருந்து வேறு வகையில் சலுகை/உதவி கேட்கிறார்கள்.
    இலவசங்கள்,மானியங்கள் அத்துடன் நீங்கள் சொல்லும் தரமான விதைகள்,குளிர்சாதனக் கிடங்குகள் எல்லாம் தேவை விவசாயத்திற்கு.
    கடன் ரத்து என்பது ஓட்டுக்காக. அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதுவும் பெரும்பாலனவர்கள் பெரிய விவசாயிகள்.

    //பல முன்னேறிய நாடுகளிலும் விவசாயம் செய்பவர்கள் நல்ல வளத்துடன் உள்ளார்கள்லேன், சீனாவில்கூட விவசாயிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார்கள். மேற்கு வங்கத்தின் விவசாயிகள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்ப்பட்டுக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்.//

    எது நீங்கள் சொல்லும் முன்னேறிய நாடு? அமெரிக்கா??
    ஆம் அங்கெல்லாம் விவசாயத்திற்கு மானியம் இல்லை.சலுகைகள் இல்லை.இல்லவே இல்லை.
    பத்ரி, இந்தியாவில் உள்ள ஒரு ஏழை விவசாயியையும்,அமெரிக்காவின் விவசாயிகளையும் ஒப்பிட்டால் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

    ReplyDelete
  12. While discussing about free electricity to farmers, we need to take one crucial thing into account.
    Government controls the output price of most of the farm produce to keep the food price in control. This control reduces the economical viability of the farming activity in a very bad way.
    So, this kind of subsidies and free electricity is very much required for sustaining the farming activity in our country. Otherwise nobody would be willing to do the farming and we would end up in pre-1970 days of importing most of our food requirements.
    If you guys feel that this kind of subsidy should be stopped, then the government should stop controlling the food prices. That would let the farm produces find its actual market value.
    my 2 cents based on the scenario in my village.

    ReplyDelete
  13. Badri & Kalvettu:

    There are more agriculture subsidies in most of the western countries than the developing countries. That is why the recent round of WTO talks (between USA vs EU vs Developing countries) failed. I am not sure whether they are "free" or the exact number of dollars provided as farm subsidies, but they are in billions for sure in US.

    http://www.commondreams.org/views02/0506-09.htm

    ReplyDelete