நல்ல குடியாட்சி முறை அமையாத நாடுகளில், சில தொழிலதிபர்கள் தங்களது அரசியல் உறவுகளை பலமாகக் கொண்டு தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டமைப்பார்கள். போட்டி நிறுவனங்களை வளரவிடாமல் செய்ய, சட்டபூர்வமான முறைக்கு அப்பால், மிரட்டல், அடிதடி, பொய் வழக்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள்.
இந்தியா அப்படிப்பட்ட நாடுகளில் ஒன்று. ஆனால் இங்கே அரசியல் முறையில் கடந்த சில வருடங்களில் பல நல்ல மாறுதல்கள் ஏற்பட்டுவருகின்றன. சட்டம் ஒழுங்கில் நல்ல முன்னேற்றம் உள்ளது. தொழில்துறைகள் பலவற்றைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு வாரியங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகம் இருப்பதில்லை. ஆனாலும் பல துறைகளில் தொழில் தொடங்க, தொழிலை நடத்த அரசியல் ஆதரவு இல்லாமல் முடிவதில்லை.
இன்று தொலைக்காட்சி சானல்கள் தொடங்குவதில் அரசியல் ஆதரவு தேவைப்படுவதில்லை. தினமும் ஒரு சானல் வருகிறது. ஆனால் தொலைக்காட்சி சானல்களை விநியோகம் செய்வது அவ்வளவு எளிதல்ல. தரைவழி சிக்னல்களை அனுப்பும் உரிமை (terrestrial television) தூரதர்ஷனுக்கு மட்டுமே உண்டு. மீதியெல்லாம் இப்போதைக்கு கேபிள் அல்லது டிடிஎச் எனப்படும் செயற்கைக்கோள் வழி விநியோகம். டிடிஎச் என்பது இந்தியாவைப் பொருத்தமட்டில் சமீபத்திய தொழில்நுட்பம். இந்தியாவுக்குமேல் உள்ள ஜியோ ஸ்டேஷனரி செயற்கைக்கோள்களில் உள்ள டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்டுமட்டுமே இந்தச் சேவையை அளிக்கமுடியும்.
ஜியோ ஸ்டேஷனரி செயற்கைக்கோள் என்றால் பூமி தன் அச்சில் சுழலும் அதே வேகத்தில் பூமியைச் சுற்றிவரும், கிட்டத்தட்ட வட்டப் பாதையில் இருக்கும் ஒரு செயற்கைக்கோள். இதனால் இந்தச் செயற்கைக்கோள் பூமிக்கு மேல் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின்மீது அப்படியே நிலையாக இருப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். இதனை இணைசுற்று செயற்கைக்கோள் என்பார்கள். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து 35,786 கிலோமீட்டர் தூரத்தில் இயங்குவது. நமது சமீபத்திய இன்சாட் வகை செயற்கைக்கோள்கள் அனைத்தும் இந்த வகையைச் சார்ந்தவை. இவற்றில் இருக்கும் டிரான்ஸ்பாண்டர்கள் வழியாகத்தான் டிடிஎச் செயற்கைக்கோள் சிக்னல் நம் வீடுகளுக்கு வருகிறது.
இன்று இந்தியாவில் டிடிஎச் சேவையை அளிப்பவர்கள் சுபாஷ் சந்திராவின் டிஷ் நெட்வொர்க், மர்டாக்-டாடாவின் டாடா-ஸ்கை, தூரதர்ஷனின் சேவை ஒன்று, சன் டிவியின் சன் டைரக்ட். விரைவில் சேவையை ஆரம்பிக்க உள்ளன அனில் அம்பானியின் நிறுவனமும், சுனில் பார்த்தி மிட்டலின் நிறுவனமும். நினைத்த மாத்திரத்தில் நாளைக்கு யாரும் இந்தச் சேவையை ஆரம்பித்துவிட முடியாது. ஏனெனில் டிரான்ஸ்பாண்டர்கள் இடம் குறைவு. யார் முந்திக்கொண்டு முதலீட்டைப் போட்டு, டிரான்ஸ்பாண்டர்களுக்கு கியூவில் நின்று துண்டு போட்டார்களோ அவர்களால்தான் முதலில் ஆரம்பிக்கமுடிந்தது.
ஆனால் தரையில் போடும் கேபிளை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இங்குதான் அரசியல் புகுந்து விளையாடுகிறது. பிற மாநிலங்களில் எப்படியோ, தமிழகத்தில் கொஞ்சம் அதிகம்தான். மாறன்கள், கருணாநிதியுடன் சுமுக உறவு வைத்திருந்த காலத்தில் தங்களுக்குப் போட்டியாக எந்த கேபிள் கம்பெனியையும் வளரவிடவில்லை. இதில் பணம் படைத்தவர்கள், சாதாரணர்கள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மிரட்டல், கேபிளை வெட்டுதல், பொய் வழக்கு என்று பிரமாதமாக நடந்தேறியது. ஹாத்வே என்ற நிறுவனம் சென்னையிலிருந்து ஒழித்துக்கட்டப்பட்டது. பிற மாவட்டங்களின் நிலைமை எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஜெயலலிதா ஆட்சிகளின்போது கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள். மீண்டும் கருணாநிதி ஆட்சியில் SCV வேகமாக வளரும். இந்த அசிங்கத்தை மனத்தில் வைத்துதான் பலரும், டிடிஎச் வரும், அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்திருந்தனர்.
பிறகு மாறன்கள் - கருணாநிதி உறவு முறிவின் காரணமாக கலைஞர் தொலைக்காட்சி உதயமானது. ஆனால் தொலைக்காட்சி சானல் வைத்திருந்தால் போதாது, அதைக் காண்பிப்பதில் விநியோகம் செய்யும் கம்பெனிக்கு நிறைய கண்ட்ரோல் உள்ளது என்பது கலைஞர் தொலைக்காட்சியினருக்குப் புரிந்தது. அரசு கேபிள் கார்பொரேஷன் உதவும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் பின்னர் அழகிரி கேபிள் கார்பொரேஷனாக இருந்தால் என்ன அரசு கேபிள் கார்பொரேஷனாக இருந்தால் என்ன, முந்தையதில் குடும்பத்துக்கும் நிறையப் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளதே என்பதால் ராயல் கேபிள் வந்தது.
கேபிள் நிறுவனம் ஆரம்பித்தால் போதாது, இன்று சன் சானல்கள் இல்லாவிட்டால் பருப்பு வேகாது என்பதை அழகிரி வெகு சீக்கிரமே புரிந்துகொண்டார். சன் தனது சானல்களைக் கொடுக்க மறுக்க, அழகிரி டிடிசாட் தீர்ப்பாயத்துக்குச் சென்றார். ஆனால் கலாநிதி/தயாநிதிக்குத் தெரிந்த அளவு இந்த புரொசிஜர்கள் அழகிரிக்குத் தெரிய நியாயமில்லை. ஒரு கேபிள் கம்பெனி ஆரம்பித்தால் ஒரு சானல் உடனடியாகத் தனது சிக்னல்களை அந்த கேபிள் கம்பெனிக்குத் தரவேண்டும் என்பதில்லை. இது கேட்டால், அது கொடுக்கலாமா, வேண்டாமா என்று தீர்மானிக்க 90 நாள்கள் எடுத்துக்கொள்ளலாம். அந்தத் 90 நாள்களில் உலகமே மாறக்கூடுமே?
புதிதாக ஆரம்பித்த ராயல், மாறன்களின் சுமங்கலியின் கேபிள் விநியோகஸ்தர்களைத் தன் பக்கம் மிரட்டி இழுக்கிறது. அப்படி இழுத்தால் உங்களது வாடிக்கையாளர்களின் கதி அதோகதிதான் என்று காட்ட விரும்புகிறது சன். இப்படி யாரும் மிரட்டாத வகையில் சன்னின் டிடிஎச்சுக்கு மாறுங்கள் என்கிறார் 'வீட்டுக்கு வீடு சன் டைரக்ட்' தமன்னா. வெறும் 999 ரூபாய்தான், ஒரு வருடத்துக்கு எல்லா சானல்களும் உண்டு என்கிறது விளம்பர வாசகம்.
இந்தச் சண்டைகளால் நாம் தெரிந்துகொள்ளும் நீதி என்ன?
* அரசியல் உறவுகளைக் கொண்டு தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டினால் அதனாலேயே நாளை தீங்கு வரும். அந்தத் தீங்கிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தேவையின்றி சிரமப்படவேண்டிவரும்.
* அரசியல் உறவால் கட்டப்பட்ட சாம்ராஜ்யத்தை, அரசியல் உறவால் மட்டுமே அழித்துவிடமுடியாது. (ரஷ்யாவில் வேண்டுமானால் இப்போது அப்படிச் செய்யலாம்.) அடிப்படை சரக்கு மக்களால் ரசிக்கும்படி இருக்கும்போது (சன் சானல்கள்), அவற்றை அழிப்பது சுலபமல்ல. நேற்று ஆரம்பித்த கலைஞர் தொலைக்காட்சி போகவேண்டிய தூரம் அதிகம். அதற்கு நல்ல கண்டெண்ட் தேவை. பணபலமும் அரசியல் பலமும் மட்டும் போதாது.
* பாதிரியார் மார்ட்டின் நீமோல்லர் சொன்னதுபோல அரசியலும் தொழிலும் கூட்டுசேர்ந்து ஒரு போட்டித் தொழிலை அழிக்கும்போது, பிறர் வாய்பொத்தி உட்கார்ந்திருந்தால் நாளை நமக்கு அழிவு வரும்போது எதிர்த்துக் கேட்க ஆள் இருக்கமாட்டார்கள்.
நமக்குத் தேவை தொழில் ஒழுக்கம். நியாயமான வழியில் தொழில் தொடங்கி, நியாயமாகச் சம்பாதிப்பது மட்டுமே நாளடைவில் ஒட்டும். போட்டி போடுவது என்றாலும் நியாயமான வழியில் போட்டிபோட்டுச் சம்பாதிக்கவேண்டும். மற்றதெல்லாம் குருவி, மோகினி என்று அநியாயமாகப் போய்ச்சேரும்.
கை நழுவிப் போன க்ராஸ்வேர்ட் விருது
1 hour ago
\\கருணாநிதியுடன் சுமுக உறவு வைத்திருந்த காலத்தில் தங்களுக்குப் போட்டியாக எந்த கேபிள் கம்பெனியையும் வளரவிடவில்லை. இதில் பணம் படைத்தவர்கள், சாதாரணர்கள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மிரட்டல், கேபிளை வெட்டுதல், பொய் வழக்கு என்று பிரமாதமாக நடந்தேறியது. ஹாத்வே என்ற நிறுவனம் சென்னையிலிருந்து ஒழித்துக்கட்டப்பட்டது. பிற மாவட்டங்களின் நிலைமை எனக்கு அவ்வளவாகத் தெரியாது\\
ReplyDeleteஅங்கும் அப்படித்தான். அதனால்தான் அதிமுக ஆட்சியில் சூப்பர் டூப்பர் என்னும் நிறுவனம் அவர்களை கவுண்டர் செய்ய ஆரம்பிக்கப்பட்டது. இப்பேது அழகிரி.
\\ஆனால் தொலைக்காட்சி சானல் வைத்திருந்தால் போதாது, அதைக் காண்பிப்பதில் விநியோகம் செய்யும் கம்பெனிக்கு நிறைய கண்ட்ரோல் உள்ளது என்பது கலைஞர் தொலைக்காட்சியினருக்குப் புரிந்தது.\\
அதுபேக இதில் புரளும் பணமும் மிக மிக அதிகம்
Badri Saar!
ReplyDeleteSorry for rasing a query very belatedly ..
Thanks for the info about the rules about the channel's previleges against a distributor..
queries:
1.Can the channel refuse to provide its signals to the distributor?
2.Can a distributor decide to not show a channel?
if SCV is allowed to not show jaya channels, then why is it showing?