Monday, June 23, 2008

மலையாளம் புத்தகப் பதிப்பு அறிமுகம்

எங்களது நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் மலையாளப் பதிப்பு புலரியின் புத்தகங்கள் சில மாதங்களாகவே உருவாகி வந்துள்ளன. ஆனால் கடைகளுக்கு அவை செல்லவில்லை. விற்பனைப் பிரதிநிதிகள் இல்லாமையே காரணம். அத்துடன் ப்ராடிஜி மலையாளத்தின் புத்தகங்களும் தயாராகிவந்தன. அவையனைத்தையும் எங்களது ஆங்கிலப் புத்தகங்களுடன் சேர்த்து மொத்தம் 125 புத்தகங்களுக்கு சென்ற வாரம் அறிமுக வெளியீட்டு விழா ஒன்றை திருவனந்தபுரத்தில் நடத்தினோம்.

அதற்குமுன்னரே எங்களது மலையாளப் புத்தகங்கள் சிலவற்றுக்கு கோழிக்கோட்டிலும் ஆலப்புழையிலும் திருவனந்தபுரத்திலும் வெளியீட்டு விழாக்கள் நடந்துள்ளன. ஆனால் அவை குறிப்பிட்ட எழுத்தாளர்களின் ஓரிரு புத்தகங்களுக்கு மட்டுமே. இப்போது நடந்தது எங்களது அனைத்து புத்தகங்களுக்குமாகச் சேர்த்து நடந்த விழா.

புதிதாக ஒரு மொழிக்குச் செல்லும் ஒரு பதிப்பாளரை அந்த மொழியில் படிக்கும் அனைவருக்கும் அறிமுகம் செய்துவைக்கும் விழா.

தமிழ்நாட்டில் நடத்தப்படும் புத்தகம் தொடர்பான விழாக்களுக்கும் கேரளத்தில் நடைபெறும் விழாக்களுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. தொலைக்காட்சிகளைப் பொருத்தமட்டில் புத்தக வெளியீடு செய்திகளில் காண்பிக்கக்கூடிய ஒன்று. ஆறு தொலைக்காட்சிகள் கேமராக்களுடன் வந்திருந்தன. அது பெரிய ஆச்சரியம். அத்துடன் நிற்காது ஒவ்வொரு புத்தகக் கட்டைப் பிரித்து ஒவ்வொன்றாகக் காண்பிக்கும்போது அவற்றையும் முழுதாகப் படம் எடுத்தது அடுத்த ஆச்சரியம். நிகழ்ச்சி முடிந்த கையோடு கேசட்டை அனுப்பி அன்று இரவுக்குள்ளாக ஒரு சானலில் அதனைச் செய்தியில் காட்டியது அதைவிட ஆச்சரியம்.

செய்தித்தாள்கள், இதழியலாளர்கள் திரளாக வந்திருந்தனர். மற்ற பலரும் வந்திருந்தனர். இது பொது நிகழ்ச்சி அன்று. சிலர் வரவேண்டும் என்று எதிர்பார்த்து அவர்களை மட்டும் அழைத்திருந்த நிகழ்ச்சி. அவர்களுக்கு நிகழ்ச்சி நடந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்தும் இருந்தது. எனவே தலை எண்ணி அழைத்திருந்த நிகழ்ச்சி. 80 பேரை எதிர்பார்த்ததில் 100 பேர் வந்திருந்தனர்.

மேடையில் நான்கு பேர் புத்தகங்களை வழங்க, நான்கு பேர் பெற்றுக்கொண்டனர். அறிமுகவுரை, நன்றியுரை என்று மொத்தம் 10 பேர் பேசியிருப்போம். அத்தனையும் சேர்ந்து எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 40 நிமிடங்களே. அவர்களே, இவர்களே, இமயமலையில் கொடியை நாட்டி எறும்புக்கு கோட் சூட் ஈந்த புண்ணியவானே, புலிகேசியே என்றெல்லாம் யாரும் புகழாரம் சூட்டி நேரத்தை வீணாக்கவில்லை.

இனிதான் எங்களது புத்தகங்கள் பரவலாக சந்தைக்குச் செல்லவேண்டும். எங்களது விற்பனை அலுவலர்கள் இரண்டு, மூன்று மாதம் உழைத்து எவ்வளவு கடைகளில் புத்தகங்களை வைக்கமுடியுமோ அவ்வளவு இடங்களில் வைக்கவேண்டும். அதனை மக்கள் வாங்கவேண்டும். வாங்கி, நன்றாக இருக்கிறதா அல்லது மோசமா என்று கருத்து சொல்லவேண்டும். மலையாளத்தில் மாபெரும் பதிப்பாளர் ஒருவர் இருக்கிறார். டிசி புக்ஸ் என்று. டி.சி.கிழக்கேமூரி என்பவரால் உருவாக்கப்பட்டு இன்று அவரது மகன் ரவி டி.சி. என்பவரால் நடத்தப்படும் நிறுவனம் இது. மலையாளத்தில் பிரசுரமாகும் புத்தகங்களில் பாதிக்குமேல் இவர்கள்தான் பதிப்பிக்கிறார்கள். மலையாளத்தின் பிரபல நாளிதழ், வார இதழ்கள் நிறுவனம் மாத்ருபூமி, (தமிழில் விகடன் போன்று) புத்தகப் பதிப்புத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளது. இவற்றைத் தவிர நன்கு வேரூன்றிய ஒரு பத்து பதிப்பகங்களையாவது சொல்லலாம்.

இவற்றுடன் போட்டிபோட்டு நிற்க நாங்கள் நிறைய வேலைகளைச் செய்யவேண்டும்.

அடுத்த சில மாதங்கள் சுவாரசியமாகப் போகும்.

சம்பந்தமுள்ள பா.ராகவன் பதிவு

5 comments:

 1. மென்மேலும் நிகரற்ற வளர்ச்சியடைய நல்வாழ்த்துகள்.

  வாசன்

  நியு மெக்ஸிக்கோ - யு எஸ் ஏ

  ReplyDelete
 2. Very interesting Growth.
  You have PERFECT understanding of the scenario ahead of you.
  That itself is a indicator of your forthcoming SUCCESS.
  Thanks for writing and sharing Badri.
  Good wishes.
  Srinivasan.

  ReplyDelete
 3. சிதம்பரம் பயணம் பற்றிய தங்களது பதிவு சுவையாக இருந்தது. நடராஜர் கோவில் பற்றிய தங்களது உணர்வுகள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கோவில் அதுதான். நடராஜர் சிலை மிகவும் பரவசம் அளிக்கக்கூடிய ஒன்று. சிதம்பரத்திற்குப் பிறகு கும்பகோணம் கோவில்கள் கவர்ந்தன.

  காஸ்மிக் டான்ஸ் எனப்படும் நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்திலும் சிதம்பர ரகசியத்திலும் இந்த பிரபஞ்சம் பற்றிய மகத்தான தாத்பரியம் பொதிந்திருப்பதாகக் கருதுகிறேன்.

  பட்டிமன்றங்கள் கேலிக்கூத்தானவை. அங்கே போய் ஜோக்ஸ் கேட்பதற்குப் பதில் குமுதம், விகடன் படிக்கலாமே அல்லது சபா நாடகங்களுக்கு போகலாமே! கல்லூரி/பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இவற்றில் கலந்துகொள்வதும் தலைமை வகிப்பதும் வெட்கக்கேடு. இணையத்திலும் நூலகங்களிலும் எவ்வளவோ பயனுள்ள விஷயங்கள் உள்ளன. மக்கள் அவற்றில் எல்லாம் அக்கறை காட்டுவதில்லை. பட்டிமன்றங்களை விரும்புபவர்கள் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.

  தீட்சிதர்களைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அது அவர்களது வாழ்க்கை முறை. பழங்குடிகளை நாகரிகப்படுத்துவது எவ்வளவு தவறானதோ அதே அளவு தவறு தீட்சிதர்கள் தங்கள் வாழ்க்கை முறைகளைக் கைவிட்டுவிட்டு மற்றவர்களைப் போல ஆகிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும். எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர், தன் துறையில் விற்பன்னர், இந்தக் காலத்திலும் குடுமி வைத்திருக்கிறார். ஸ்டெப் கட் போல அதுவும் ஒரு சிகையலங்காரம். அவ்வளவே.

  ஆண்டுதோறும் சிதம்பரத்தில் ஒரு வார காலம் நடக்கும் நாட்டியாஞ்சலி பற்றி அறிந்திருப்பீர்கள். அதற்கும் ஒருமுறை போய்வந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். சென்னை இசை விழாக்களைவிட எனக்கு நாட்டியாஞ்சலிதான் மிகவும் பிடித்தது.

  சென்னையில் மிதவை பேருந்து என்று ஒன்று ஓடுகிறது. முதலில் நான் கேலியாக நினைத்தேன், என்ன கப்பல் போல மிதந்து செல்லுமா என்று. ஆனால் ஏறிப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அது உண்மையாகவே மிதவை பேருந்துதான் என்று. மிகவும் ஸ்மூத் ஆக சென்றது. அவ்வளவாக ஜெர்க் இல்லை. எக்ஸ்பிரஸ் கட்டணம். தாராளமாகக் கொடுக்கலாம். அதன் டெக்னாலஜியை பற்றி பத்திரிகையாளர்கள் விசாரித்து எழுதினால் நலம்.

  ReplyDelete
 4. Hi Badri,

  Nice to know that KIZHAKKU is growing.You guys are doing a great job.
  The exposure to your event showed the interest,maturity of malayalam media and readers.
  We hope and pray that Tamilnadu will catch up.
  Thanks for sharing.

  Best Wishes,
  Kannan Viswagandhi
  http://www.growing-self.blogspot.com

  ReplyDelete