Tuesday, June 24, 2008

சிதம்பரத்தில் ஒரு நாள்

சனிக்கிழமை அன்று நானும் என் அலுவலகத் தோழர் முத்துக்குமாரும் சிதம்பரம் சென்றிருந்தோம். மணிவாசகர் பதிப்பகம் நிறுவனர் மெய்யப்பன் பெயரால் இயங்கும் அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த தமிழ்ப் புத்தகங்களுக்கு விருதுகள் வழங்குகிறது. அதில் இந்த ஆண்டு முத்துக்குமார் எழுதிய 'அன்புள்ள ஜீவா' என்ற புத்தகத்துக்கு விருது கிடைத்துள்ளது.

ஜெமினியிலிருந்து சாதா டவுன் பஸ்ஸில் வடபழனிவரை செல்ல வெறும் ரூ. 3.50தான். ஆனால் தாழ்தள சொகுசுப் பேருந்து என்ற பெயரில் இருந்த ஒரு வண்டியில் வடபழனியிலிருந்து கோயம்பேடு செல்ல ரூ. 5 ஆனது. கூட்டம் அதிகமாக இருந்ததால் சொகுசை உணரமுடியவில்லை. கோயம்பேட்டிலிருந்து சிதம்பரம் செல்ல 5.30 மணிநேரம் ஆனது. டிக்கெட் விலை ரூ. 75.

மாலை ஐந்து மணிக்கு சிதம்பரம் கீழ ரத வீதி ராசி திருமண மண்டபம் வந்து சேர்ந்தோம். 6.00 மணிக்குத் தொடங்க இருந்த விழா, சிறப்பு விருந்தினர் வருவதற்காக சுமார் 40 நிமிடங்கள் தாமதமானது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அகத்தியலிங்கம் கோட் சூட் போட்டுக்கொண்டு ஜம்மென்று வந்திருந்தார். விருதுகளை வழங்கியது மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சபாபதி மோகன், அரசியல்வாதிகளுக்கே உரித்தான வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியில் ஜம்மென்று இருந்தார். அவர் நெல்லையிலிருந்து ரயில் மாறி, பஸ் மாறி, கார் மாறி வருவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது.

மணிவாசகர் பதிப்பகம் மூத்த தமிழறிஞர் ஒருவருக்கு ரூ. 10,000 பணம், விருது ஒவ்வோர் ஆண்டும் வழங்குகிறது. அந்த விருதை இந்த ஆண்டு பெற்றவர் சோ.ந.கந்தசாமி என்பவர். இரண்டு நூல்கள் சிறந்த நூல்களுக்கான பரிசைப் பெற்றன. 85 வயதாகும் கே.ஜி.இராதாமணாளன் எழுதிய, பாரி நிலையம் வெளியிட்ட 'திராவிட இயக்க வரலாறு' என்ற நூல். 28 வயதாகும் முத்துக்குமார் எழுதி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட 'அன்புள்ள ஜீவா' என்னும் நூல். இரண்டு நூல்களுக்கும் தலா ரூ. 5,000 பரிசு. இரண்டு புத்தகங்களையும் வெளியிட்ட பதிப்பகங்களுக்கு தலா ரூ. 2,500 பரிசு.

நடுவர் குழுவில் இருந்த பல்லடம் மாணிக்கம் (இவர் ஓர் அற்புதமான மனிதர், இவரைப் பற்றித் தனியாக எழுதவேண்டும்) வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். தமிழில் வெளியாகும் புத்தகங்கள்பற்றி, விகடன் அற்புதமாக தமிழில் வெளியிட்டுள்ள என்சைக்ளோபீடியாபற்றி, ஜோன் ஆஃப் ஆர்க் பற்றி என்று அங்கும் இங்கும் தாவிய பேச்சு இது. தமிழில் அறிவு நூல்கள் எக்கச்சக்கமாக வரவேண்டும் என்ற ஆர்வம் அவரது பேச்சில் தெறித்தது.

மணிவாசகர் பதிப்பகத்தினர்தான் தமிழ்நாட்டு மாணவர்கள் கல்விக்காக வேண்டி, வெற்றித் துணைவன் என்ற பெயரில் நோட்ஸ் வெளியிடுகிறார்கள். அதில் குலுக்கல் முறையில் பரிசு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் செலவை ஏற்றுக்கொள்கின்றனர். அப்படி பயணம் செய்ய விரும்பாத மாணவர்களுக்கு பணமாகக் கொடுக்கின்றனர். அந்த விழாவும் தொடர்ந்து நடந்தது.

விழா மேடையில் பலரும், நிறையப் பேசினர். பலருக்கும் விருதுகளும் பரிசுகளும் தரவேண்டியிருந்ததால் நிறைய நேரம் ஆனது. ஆனால் பொதுமக்கள் அமைதியாக இருந்து ரசித்தனர். பாரி நிலையம் அமர்ஜோதி, சென்னையில் இந்தமாதிரியான கூட்டம் வருவது அபூர்வம் என்றார்.

கூட்டம் முடிந்ததும் மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம் வீட்டில் அற்புதமான இரவு விருந்து. இரவு சென்னைக்கான பேருந்து 11.45 மணிக்குத்தான் என்பதால் அப்படியே மெதுவாகக் கிளம்பி சிதம்பரம் நடராஜர் சந்நிதிக்குச் சென்றோம். உள்ளே எங்கு பார்த்தாலும் பக்கவாட்டில் குடுமி வைத்த தீட்சிதர் ஆண்கள் - 5 வயது முதல் 75 வரை ஆங்காங்கே காணப்பட்டனர். மடிசார் அணிந்த சின்னஞ்சிறு பெண்கள் (அப்படியானால் திருமணம் நடந்திருக்கும்) - தீட்சிதர் ஆண்களின் மனைவிமார்கள் - காணப்பட்டனர். சில பெண் குழந்தைகள் ஆங்காங்கே விளையாடிக்கொண்டிருந்தன. பாவம் எப்போது பிடித்து கல்யாணம் செய்துவைத்துவிடுவார்களோ.

தங்கக் கூரை வேய்ந்த விதானத்தின்கீழ் நடராஜர், தெற்கு நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதற்கு எதிராக இருந்த மண்டபத்தில் ஒருவர் அமர்ந்து தேவாரப் பதிகங்களைப் பாடிக்கொண்டிருந்தார். அவரது முதுகில் பூணூல் இல்லை என்று தோன்றியது. அப்படியே ஒரு சுற்று சுற்றி, திருமங்கையாழ்வார் 'பல்லவர்கோன் பணிந்த செம்பொன் மணிமாடங்கள் சுழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம்' என்று மங்களாசாசனம் செய்த கிழக்கு பார்த்திருக்கும் கோவிந்தராஜரைப் பார்க்கச் சென்றால் கதவை இழுத்து மூடிக்கொண்டிருந்தார் பட்டாச்சாரியார்.

பேருந்துக்கு வெகு நேரம் இருந்ததால், மீண்டும் ராசி திருமண மண்டபம் சென்றோம். பட்டிமன்றம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அதில் இருப்பவர்கள் எல்லாம் ஒன்று சன் டிவி புகழ் ஆட்கள் அல்லது விஜய் டிவி புகழ் ஆட்கள். காமெடி கிங், காமெடி குயின் என்று அடைமொழியை வைத்துள்ளனர். “வாழ்க்கை என்பது இனிய பூந்தோட்டமா? நெடிய போராட்டமா?” என்பதுதான் தலைப்பு. ஆண்கள் மூவர் போராட்டம் என்றும், பெண்கள் மூவர் பூந்தோட்டம் என்றும் வாதிட்டனர்.

பொதுவாகவே இந்த பட்டிமன்றங்கள் எல்லாம் தென்னை மரத்தைப் பற்றி பேசச் சொன்னால், மாட்டைப் பற்றிப் பேசிவிட்டு இந்த மாட்டை தென்னை மரத்தில்தான் கட்டுவர் என்று சொல்லுமாப்போலே இருக்கின்றன.
“இப்பிடித்தாங்க ஒரு நாள், நான் தெருவுல போயிக்கிட்டிருந்தேனா, அங்க ஒருத்தர் தும்மிகிட்டிருந்தாரு. அட, ஏங்க இப்பிடித் தும்மிறீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு, ஏன் மூக்கு, நான் தும்முறேன், உனக்கென்னன்னு. எனக்கு ஏங்க இந்தத் தலையெழுத்து? இதைத்தாங்க வள்ளுவரும் அழகாச் சொன்னாரு... (ஏதாவது ஒரு குறளை எடுத்து விடுங்க இங்க) .... இந்தத் திருக்குறளை எடுத்துக்குங்களேன்... கால் வாங்காத ஒரு குறள் இருக்கு. கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (இதை ரெண்டு தடவை சொல்லனும்). இந்த மாதிரி பெருமை வேற எதுக்குங்க வரும்? அதத்தான் அப்பவே பாரதி சொல்லிவெச்சான், காதுல தேனு...”

இப்படி எதை வேண்டுமானாலும் பேசலாம். பேசிவிட்டு கடைசில, “ஆகவே நடுவர் அவர்களே, வாழ்க்கை என்பது மத்தளமா, மயிலிறகா என்றால் எங்க அணியோட வாதம், மயிலிறகே, மயிலிறகே, மயிலிறகே என்று சொல்லி எனது வாதத்தை முடித்துக்கொள்கிறேன்” அப்பிடின்னா போதும். அதற்குப் பிறகு நடுவர் ஒரு பத்து நிமிஷம் நிறைய ஜோக்கெல்லாம் சொல்லி, கைதட்டல் வாங்கி கடைசியா ஒரு தீர்ப்பு வழங்கிடுவார்.

ஆனால் சிதம்பரம் மக்கள் இரவு 11.00 மணிவரை ரசித்து, சந்தோஷமாகக் கேட்டனர். பட்டிமன்றம் என்பதைவிட Stand-up comedy என்பதுதான் நமது மக்களுக்குத் தேவையோ என்று தோன்றுகிறது. இல்லாத பட்சத்தில் பட்டிமன்ற வழக்குரைஞர்களே அந்த வேலையைச் செய்துவிடுகிறார்கள்.

11.45-க்குக் கிளம்பிய ரதிமீனா டிராவல்ஸ் வண்டி (டிக்கெட் ரூ. 170), காலை 4.00 மணிக்கு அடையாறு வந்து சேர்ந்தது. சிதம்பரத்தில் சொட்டு மழை இல்லை. சென்னையில் அடித்துப் பிய்த்துக் கொட்டி, தெருவெல்லாம் நீர். அந்த அதிகாலையில் ஓர் ஆட்டோ கிடைத்ததே அபூர்வம். அவரிடம் பணத்துக்குப் பேரம் பேசலாமா? சொன்ன காசைக் கொடுத்து கோபாலபுரம் வந்து, ஒரு மணி நேரம் தூக்கம் போட்டு, மாமல்லபுரம் கிளம்பவேண்டிய வேலை. மாமல்லபுரம் தொடர்பாக சில புத்தகங்கள் உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளோம். அதுபற்றி பின்னர்.

3 comments:

 1. பாராட்டுக்கள் பத்ரி! இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. பட்டிமன்றம் குறித்த உங்கள் நையாண்டி சூப்பர் :-)

  முத்துக்குமாருக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 3. அப்புறம், தசாவதாரம் ரெண்டாவது முறை பார்த்தீர்களாமே? அதுக்கு ஏதும் ஸ்பெஷல் விமர்சனம் இல்லையா? :-)

  ReplyDelete