Tuesday, June 17, 2008

ஜார்ஜ் புஷ்ஷைப் பதவி நீக்குவதா? கொலைக் குற்றம் சாட்டுவதா?

டென்னிஸ் குசினிச், டெமாக்ரடிக் கட்சிக்கான பிரைமரி தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் ஆரம்பத்திலேயே ஆதரவு இல்லாமல் கழன்றுகொண்டார். ஒஹாயோ மாநிலத்திலிருந்து ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் உறுப்பினராக இருப்பவர்.

ஜூன் 9, 2008 அன்று, ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷை அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து பதவிநீக்கம் (impeach) செய்யவேண்டும் என்ற மசோதாவை முன்வைத்துள்ளார். இது தனிநபர் செயல். மற்றுமொரு உறுப்பினர் இந்த மசோதாவை ஆதரித்துக் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர்கள், சபாநாயகர் நான்சி பெலோசி முதற்கொண்டு, இதனை ஆதரிக்கவில்லை. எனவே இந்த மசோதா குப்பைக்கூடைக்குத்தான் போகும் என்று தோன்றுகிறது.

மற்றுமொரு பக்கம், முன்னாள் பப்ளிக் பிராசிகியூட்டர் வின்செண்ட் பூலியோசி (Vincent Bugliosi) என்பவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்: The Prosecution of George W. Bush for Murder. இவர் பப்ளிக் பிராசிகியூட்டராக இருந்தபோது 21 கொலைக் குற்றங்களை வழக்காடி அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வாங்கிக்கொடுத்தவராம். இவர்கள் இருவரும் நான் தினமும் கேட்கும் democracynow.org நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பேசினர். இவை எழுத்துவடிவமாகவும் ஒலி வடிவமாகவும் இங்கே கிடைக்கின்றன.

பூலியோசியின் குற்றச்சாட்டுகள் இவ்வாறு:

அக்டோபர் 7, 2002 அன்று சின்சினாட்டி, ஒஹாயோவில் பேசும்போது, ஜார்ஜ் புஷ், அமெரிக்காவுக்கு சதாம் ஹுசேனால் உடனடியாக ஆபத்து வரப்போகிறது என்று சொன்னார். ஆனால் அக்டோபர் 1, 2002 அன்று சிஐஏ அனுப்பிய classified ரகசிய அறிக்கையில் சதாம் ஹுசேனால் அமெரிக்காவுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று சொல்லப்பட்டிருந்தது. அக்டோபர் 4, 2002 அன்று பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்ட வெள்ளை அறிக்கையில் சிஐஏவின் ‘ஹுசேனால் ஆபத்தில்லை' என்ற தகவல் நீக்கப்பட்டிருந்தது. எனவே பொய்யான தகவலைக் கொடுத்து ஈராக்மீதான போரை புஷ் நடத்தியுள்ளார்.

அடுத்து ஜனவரி 31, 2003 அன்று புஷ், பிளேர் மற்ற பிறர் இருந்த கூட்டத்தில் டோனி பிளேரின் அயலுறவுக் கொள்கை ஆலோசகர் டேவிட் மேன்னிங் என்பவரும் கலந்துகொண்டார். அவர் தயாரித்த அறிக்கையில் ஜார்ஜ் புஷ் இவ்வாறு சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளார்: “சதாம் ஹுசேனை எப்படியாவது தூண்டவேண்டும். ஈராக்மீது U2 வேவுப்பணி விமானத்தை, ஐ.நா சபை வண்ணமடித்து அனுப்பவேண்டும். அந்த விமானத்தை சதாம் ஹுசேன் தாக்கினால் அதைக் காரணமாகக் கொண்டு, ஈராக்மீது படையெடுக்கலாம்.”

தொடர்ந்து ஜார்ஜ் புஷ், அல் காயிதாவையும் சதாம் ஹுசேனையும் தொடர்புபடுத்தி பல இடங்களில் பேசியுள்ளார். அமெரிக்க மக்களை ஏமாற்றியுள்ளார். இதனால் ஏற்பட்ட படையெடுப்பில் அமெரிக்கப் போர்வீரர்கள் 4000 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

கொலைக்குற்றத்துக்கு சட்ட விலக்குரிமை கிடையாது. வாஷிங்டன் டிசியில் உள்ள மத்திய அட்டர்னி ஜெனரல்தான் இந்த வழக்கைக் கொண்டுவரவேண்டும் என்றில்லை. 50 மாநிலங்கள், அதில் உள்ள எந்த கவுண்டியாக இருந்தாலும் சரி, அந்த கவுண்டியைச் சேர்ந்த ஒரு சிப்பாய் ஈராக்கில் மரணமடைந்தாலும்சரி, அந்த கவுண்டியின் டிஸ்டிரிக்ட் அட்டர்னிகூட இந்த வழக்கைத் தொடுக்கலாம் என்கிறார் பூலியோசி.

அப்படிப்பட்ட வழக்குக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் தனது புத்தகத்தில் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார் இவர்.

ஆனால் அமெரிக்க சிப்பாய்களின் மரணத்துக்கு என்று மட்டும்தான் ஜார்ஜ் புஷ்மீது வழக்கு தொடுக்கமுடியுமாம். சுமார் ஒரு லட்சம் ஈராக்கியர்களின் மரணத்துக்காக என்று அவர்மீது வழக்கு தொடுக்கமுடியாதாம். ஆனால் ஜார்ஜ் புஷ் குற்றவாளி என்று அமெரிக்க ஜூரி முடிவுசெய்தால், தண்டனை கொடுப்பதற்கு ஈராக்கியர்களைக் கொலை செய்ததையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாமாம்.

***

எனக்கென்னவோ, டென்னிஸ் குசினிச் விஷயம்போலவே இதுவும் நடக்காது என்றே தோன்றுகிறது. அமெரிக்கர்கள் எட்டு வருடங்களுக்குப் பிறகு விழித்துக்கொண்டுள்ளனர். இன்றுதான் ஜார்ஜ் புஷ்ஷின் தவறுகள் இவர்களது கண்ணுக்குப் படுகின்றன. ஈராக்மீது அவர் போர் தொடுத்தபோது கைதட்டி ஆரவாரித்து சந்தோஷப்பட்டவர்கள் அனைவரும் கதறிக் கண்ணீர் விடும் நேரம் இது. ஆனால் இதற்கான விலை: ஒரு லட்சம் ஈராக்கிய உயிர்கள், 4000 அமெரிக்க உயிர்கள், பல பில்லியன் டாலர்கள். ஈராக் என்னும் நாடு முற்றிலும் அழிபட்டது.

Useful read: Excerpts from Bugliosi's book

2 comments:

  1. //பல பில்லியன் டாலர்கள்//

    Actually the long term cost of the Iraq war is 3 trillion Dollars, says Stiglitz in his new book.

    http://www.amazon.com/Three-Trillion-Dollar-War-Conflict/dp/0393067017

    A good read!

    ReplyDelete
  2. //அமெரிக்கர்கள் எட்டு வருடங்களுக்குப் பிறகு விழித்துக்கொண்டுள்ளனர். //

    பிற நாடுகளிலும் போர் தொடுத்தவர்கள் தேர்தலில் தோற்றது அல்லது பதவி விலகியது நடந்து கொண்டுதானே இருக்கிறது

    ReplyDelete