Monday, June 30, 2008

புனிதப்பசு சிவாஜி

இன்று தி ஹிந்து செய்தித்தாளில் பார்த்த ஒரு செய்தி அதிரவைத்தது. இதுபோன்ற கொடுமைகள் நமக்கும் நிகழலாம். எனவே விழிப்புடன் இதுபோன்ற அபத்தங்களை எதிர்ப்பது அவசியமாகிறது.

பெங்களூருவைச் சேர்ந்த லக்ஷ்மண் கைலாஷ் என்ற தகவல் தொழில்நுட்பப் பணியாளரை பூனாவிலிருந்து வந்த காவலர்கள் கைது செய்துள்ளனர். என்ன குற்றம் என்பதைப் பின்னர் பார்ப்போம். கைது செய்து, பூனாவுக்கு அழைத்துச் சென்று, 7 நாள் காவலில் வைத்து, பின்னர் ஜாமீன் தராமல், சிறையில் அடைத்து 40 நாள் அங்கே வைத்துள்ளனர். பின்னர் உண்மையான “குற்றவாளி” பிடிபட்டதால், இவரை விடுவித்துள்ளனர்.

குற்றம்? ஆர்குட் வலைத்தளத்தில் சத்ரபதி சிவாஜி என்னும் பல ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஓர் அரசரைப் பற்றி “மோசமாக” எழுதியதாம். இது எந்தவகையில் குற்றமாகும்? இன்று தாக்கரே குடும்பத்தின் ஒவ்வொரு முட்டாளும் வாயைத் திறந்தால் அடுத்தவரைக் கேவலமாகப் பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளனர். என்றோ செத்த சிவாஜியைப் பற்றி தரக்குறைவாகப் பேசினால், எழுதினால் குற்றம் என்றால் இன்று வாழும் பீஹார், உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்தவர்களைப்பற்றி தரக்குறைவாகப் பேசுவதும் எழுதுவதும் குற்றம் இல்லையா? இந்து தற்கொலைப் படைகளை உருவாக்கவேண்டும் என்று பேசுவது குற்றம் இல்லையா?

லக்ஷ்மண் கைலாஷின் சிறையடைப்புக்குப் பின் இருந்தது ஒரு மொபைல் நிறுவனம். தமிழ் வலைப்பதிவுகளில் ஐ.பி எண் வைத்து இவனைப் பிடித்து உள்ளே போடுகிறேன், அவனை ஜெயிலில் தள்ளுகிறேன் என்றெல்லாம் வீர வசனங்கள் வரும். அப்படித்தான் அப்பாவி லக்ஷ்மண் கைலாஷ் ஜெயிலுக்குப் போனார். ஆனால் மொபைல் கம்பெனி கொடுத்த தவறான ஐ.பி எண் தகவலால். அந்தக் குறிப்பிட்ட ஆர்குட் பக்கத்தை எழுதியவரது ஐ.பி எண், இந்த ஆசாமியின் மொபைல் போனுக்குத்தான் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கப்பட்டது என்று மொபைல் நிறுவனம் தவறான தகவலைக் கொடுக்க, ஓர் அப்பாவிக்கு 47 நாள் சிறை வாசம்.

இது உங்களுக்கும் எனக்கும் நடக்கலாம். யாரோ ஒரு மூடன் எதையோ தனது வலைப்பதிவிலோ, ஆர்குட்டிலோ எழுத, இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களோ மொபைல் போன் நிறுவனங்களோ அதைச் செய்தது நீங்களும் நானும் என்று தவறான தகவல் கொடுத்தால், காவலர்கள் உங்களையும் என்னையும் ஜாமீன் கொடுக்காமல் சிறையில் அடைக்கலாம்.

பாதிக்கப்பட்டவர், நஷ்ட ஈடு வேண்டி, அந்த மொபைல் போன் கம்பெனியை கோர்ட்டுக்கு இழுத்துள்ளார். அத்துடன் மஹாராஷ்டிர சட்டங்களையும் சேர்த்து கோர்ட்டுக்கு இழுக்கவேண்டும். சிவாஜி என்னும் புனிதப்பசுவைப் பற்றி பேசுவது, எழுதுவது, ஏன் அவதூறாக ஏதோ சொல்வது குற்றமா? இந்தக் கேள்விக்கு நாட்டின் நீதிமன்றங்கள் பதில் சொல்லவேண்டும். நாளை தமிழகத்திலும் கர்நாடகத்திலும் சில புனிதப்பசுக்கள் உருவாகும். அவற்றைப் பற்றியும் நாம் எழுதக்கூடாது, பேசக்கூடாது என்பார்கள்.

மேலும், மேற்கண்ட “குற்றத்தில்”, “உண்மையான் குற்றவாளி” கிடைத்துவிட்டார் என்கிறார்கள். அவரது நிலைமை என்ன? அவர் எத்தனை நாள் சிறையில் வாடவேண்டும்?

இது எங்கே போய் முடியும்?

12 comments:

 1. இந்த இந்துப்பத்திரிக்கைக்காரன்களின் நாசூக்கிலே இடி விழ... இந்த அநியாயம் செய்த அந்த மொபைல் நிறுவனத்தின் பெயரை வெளிப்படையாகச் சொன்னால் தான் என்னவாம்? அது ஏர்டெல் நிறுவனம்.

  காலையிலே இந்தச் செய்தியைப் படித்ததில் இருந்து மனசு ஆறவே மாட்டேன் என்கிறது

  ReplyDelete
 2. Long live our democratic nation!

  God save all of us!

  ReplyDelete
 3. செய்யாத "குற்றத்திற்காக", அநியாயமாக சிறையில் வாடிய அம்மனிதரை நினைத்தால், மனதைப் பிசைகிறது. நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும்.

  ஏதோ இவர் ஒரு IT கம்பெனியில் பணியில் இருப்பதால், செய்தி வெளியில் வந்துள்ளது. இது போல எத்தனையோ பாமரர்கள், எந்தக் குற்றமும் செய்யாமல், வருடக்கணக்கில் சிறையில் வாடுகின்றனர் :(

  ReplyDelete
 4. பாவம் லக்ஷ்மண் கைலாஷ் மற்றும் 'உண்மைக் குற்றவாளி'..

  சிவாஜியை அல்ல, அந்த சிவாஜி வணங்கிய தெய்வத்தையே விமர்சிக்கவும், அவமதிக்கவும் கருத்துரிமை மிக்க நாடு என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன்.

  கருத்துரிமை, மண்ணாங்கட்டி என்று வாய் கிழிய பேசாமல், அரபு நாடுகளைப் போல இத்தளங்களையே தடை செய்து விடலாம்.

  தாக்கரேக்கள் போன்ற அரை வேக்காட்டு, சுயநல அரசியல்வாதிகள் அதிகாரம் பெற்றால் நிச்சயம் இதையும் செய்வார்கள்.

  ஜெயமோகன் போன்றோர் மகாராஷ்டிராவில் பிறந்திருந்தால்... அய்யோ பாவம்...

  ReplyDelete
 5. பத்ரி, இது பழைய செய்தி. சனவரி மாதத்தில் நடந்தது என்று நினைக்கிறேன். ஆனந்த விகடனில் படித்ததாக ஞாபகம்

  ReplyDelete
 6. //இந்த அநியாயம் செய்த அந்த மொபைல் நிறுவனத்தின் பெயரை வெளிப்படையாகச் சொன்னால் தான் என்னவாம்? //

  அரசு நிறுவனம் என்றால் கண்டிப்பாக சொல்லியிருப்பார்கள் :) :)

  ReplyDelete
 7. தொடர்புடைய சுட்டி

  http://indiauncut.com/iublog/article/just-one-bowl-for-lakshmana-kailash/

  இதர சுட்டிகள்

  http://timesofindia.indiatimes.com/Bangalore_techie_sues_cell_co_police/articleshow/2697494.cms

  ReplyDelete
 8. அம்புட்டு நல்லவனாக இருந்து ஜெயிலில் அடைபடுவதைவிட, கேவலமாக திட்டி வலைப்பதிவு எழுதிவிட்டுப் போகலாம். அட்லீஸ்ட் ஒன்றும் செய்யாமல் தண்டனை அனுபவித்தோம் என்று இருக்காது பாருங்கள் ?!!

  தாக்கரேவை மட்டும் திட்டி என்ன பயன். வலைப்பதிவு உலகில் லிங்க் வேலை செய்யாவிட்டாலும் பார்ப்பானர் சதி என்று ஊளையிடும் ஓநாய்களையெல்லாம் என்ன செய்வது ?

  ReplyDelete
 9. It is very very old news i suppose ! Vivek padathula Tea kadaila "Gandhi sethu ponna news" gramathaanunga padipaanungalae, adhu madhiri padichi irukeenga !

  mani

  ReplyDelete
 10. Hi,

  I guess this is old news , already written by gnani in "O pakkangal".
  But still thanks to badri for remembering it, I have shared this news to my friends and i am only thinking about the guys life.

  Actually, He was working in HCL and he lost his job due to the prison life.Airtel was the service provider and they not yet worried about anything.

  So frinds be careful it clearly says we are not living in a freedom country.

  ReplyDelete
 11. I just realized that you wrote this blog to put forth your points on "freedom of expression". So, it should not really matter on whether the news is old or new.

  mani

  ReplyDelete