Sunday, June 08, 2008

திபெத் பற்றி பிகோ ஐயர்

ஜப்பானில் வசிக்கும் எழுத்தாளரான பிகோ ஐயர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். கடைசியாக எழுதியது The Open Road: The Global Journey of the Fourteenth Dalai Lama. இவர் Dissent என்ற பத்திரிகைக்காக ஜான் வெய்னருக்குக் கொடுத்த நேர்முகத்திலிருந்து சில பகுதிகளைச் சேர்த்து ஒரு கட்டுரை வடிவில் கொடுத்துள்ளேன்.

லாசா இப்போது 65% ஹான் சீனர்களால் நிரம்பியுள்ளது. தங்களது நாட்டிலேயே திபெத்தியர்கள் இன்று சிறுபான்மையினர்களாக உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிவேக ரயில்சேவை தொடங்கப்பட்டது. இப்போது நாளுக்கு மேலும் 6,000 ஹான் சீனர்கள் திபெத்துக்கு வரமுடியும்.

ஒவ்வொரு மடத்திலும் எவ்வளவு துறவிகள் இருக்கலாம் என்பதற்கு ஒரு கட்டுப்பாடு நிலவுகிறது. பழைய திபெத்தில் 20% மக்கள் துறவிகளாக இருந்தனர். 8,000-10,000 துறவிகளைக் கொண்ட மடங்கள் இருந்தன. இப்போது ஒரு மடத்தில் 500 துறவிகளுக்குமேல் இருக்கமுடியாது.

1950-ல், சீன ஆக்ரமிப்பை எதிர்த்து திபெத் ஐ.நா சபைக்குச் சென்றபோது, திபெத்துக்கு ஆதரவாளர்களாக பிரிட்டனும் இந்தியாவும் இருந்தது என்றார்கள். ஆனால் இந்த இரு நாடுகளுமே, ஐ.நா சபையை திபெத்தின் கோரிக்கைகளைக் கேட்கவேண்டாம் என்று சொல்லிவிட்டனர். திபெத்துக்கு பதிலே கிடைக்கவில்லை. தனக்கு நண்பர்களே இல்லை, எந்த நாடும் தனக்கு உதவி செய்ய வரப்போவதில்லை என்று திபெத்துக்கு அப்போதுதான் புரிந்தது. பத்தாண்டுகள் கழித்து, அமெரிக்கா உள்ளே நுழைந்தது. சீனாவுக்கு எதிரான போராட்டத்தில் திபெத்தைப் பகடையாகப் பயன்படுத்தலாம் என்று புரிந்துகொண்டது.

1960-களில் சி.ஐ.ஏ, திபெத்தியர்களுக்கு கொலராடோவில் ஆயுதப் பயிற்சி கொடுத்து, நேபாளத்துக்குள் புகுத்தியது. சி.ஐ.ஏவுக்கு திபெத்மீது எந்த அக்கறையும் கிடையாது. பெரும் கம்யூனிஸ்ட் எதிரியான சீனாவைத் தடுக்கவேண்டும். அவ்வளவுதான். ஆனால் வன்முறைப் போராட்டத்தால் தனது மக்களுக்கு மேலும் தொல்லைதான் என்பதை உணர்ந்த தலாய் லாமா, வன்முறைப் போராட்டத்தைக் கைவிடுமாறு, நேபாளத்தில் இருந்த போராளிகளுக்கு, பதிவுசெய்த ஒலிநாடாவை அனுப்பிவைத்தார். அவர்களும் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால் பல போராளிகளும் மனதுடைந்து தற்கொலை செய்துகொண்டனர்.

சீனக் கலாசாரப் புரட்சி காலகட்டத்தில் குறைந்தது 12 லட்சம் திபெத்தியர்கள் கொல்லப்பட்டிருக்கவேண்டும். அதாவது மொத்த மக்கள்தொகையில் 20%. 6,000 மடாலயங்களில் 13-ஐத் தவிர மீதி அனைத்தும் அழிக்கப்பட்டன. சிறு பிள்ளைகளைக் கொண்டே, அவர்களது பெற்றோர்கள் கொல்லப்பட்டனர். புனித நூலின் பக்கங்களை கழிவுகளைத் துடைப்பதற்குப் பயன்படுத்துமாறு துறவிகள் வற்புறுத்தப்பட்டனர். இன்று இந்தக் கொடுமைகளை சீன அரசு தவறு என்று மறுதலித்துள்ளது.

இன்று உலக வரைபடத்திலிருந்து திபெத் அழிக்கப்பட்டுவிட்டாலும் உலகெங்கும் பரவியுள்ளது. கலிஃபோர்னியாவில், சுவிட்சர்லாந்தில், ஜப்பானில். 1968-ல் மேற்கு உலகில் இரண்டே இரண்டு திபெத்திய புத்த மையங்கள் இருந்தன. இன்றோ, நியூ யார்க்கில் மட்டுமே 40 மையங்கள் உள்ளன. 'நான் எனது வீட்டை இழந்துள்ளேன்; ஆனால் இந்த உலகையே எனது சமூகமாகப் பெற்றுள்ளேன்' என்கிறார் தலாய் லாமா.

இந்தியாவில் தர்மசாலாவில் பல திபெத்தியர்கள், திபெத்திய கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள் உள்ளனர். ஆனால் இவர்கள் தங்கள் வாழ்நாளில் திபெத்தையே பார்த்ததில்லை. இவர்கள் ஓர் எழை நாட்டில், ஏழைமைக் குடியிருப்பில் வாழ்கிறார்கள். ஆனால் சுற்றிலும் அழகான கலிஃபோர்னிய ஆண்கள், பெண்களைப் பார்க்கிறார்கள். உலகில் வளரும் நாடுகளில் உள்ள பிறரைப் போன்றே, சுதந்தரமும் செல்வமும் நிரம்பியிருக்கும் அமெரிக்காவுக்குக் குடியேற விரும்புகிறார்கள்.

தலாய் லாமா இந்தியாவுக்குச் சென்றவுடனேயே, முதலில் செய்தது குடியாட்சி முறையை மதிக்கும் ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதுதான். தர்மசாலாவில் ஒரு நாடாளுமன்றத்தையும் பிரதமரையும் ஏற்படுத்தினார். தன்னையே பதவியிலிருந்து வெளியேற்றும் அதிகாரத்தையும் கொடுத்தார். ஆனால் ஒரேயொரு பிரச்னை, திபெத்தியர்கள் தலாய் லாமாவைக் கடவுளின் அவதாரமாகக் கருதுகிறார்கள். பிரதமரா, கடவுளா என்றால் அவர்கள் தலாய் லாமா சொல்வதையே கேட்கப்போகிறார்கள்.

இப்போதிருக்கும் 14-வது தலாய் லாமா இறந்தால், சீன அரசு உடனடியாக ஏதவது ஒரு கம்யூனிஸ்ட் உறுப்பினரின் சிறு குழந்தையைப் பிடித்து இதுதான் 15-வது தலாய் லாமா என்று அறிவித்துவிடும் என்பது அவருக்குத் தெரிந்துள்ளது. அந்தப் பையனும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாகவும் திபெத்துக்குப் பகைவனாகவும் இருப்பான் என்பதில்ல் சந்தேகமில்லை. இதனால்தான் 14-வது தலாய் லாமா, கடந்த 39 வருடங்களாக அடுத்த தலாய் லாமா திபெத்துக்கும் சீனாவுக்கும் வெளியிலிருந்துதான் வருவார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். 15-வது தலாய் லாமா என்று ஒருவருமே வராமல் இருக்கலாம் என்றும் சொல்கிறார். அல்லது அது ஒரு பெண்ணாகவும் இருக்கலாம்.

தலாய் லாமா திடீரென ஒருவரைக் காண்பித்து, 'இவர் எனக்காகப் பேசுகிறார், இவர் சொல்வதைக் கேளுங்கள்' என்று ஒருவரை அறிமுகப்படுத்தக்கூடும் என்று நினைக்கிறேன்.

1 comment:

 1. அன்புள்ள பத்ரி சார்,

  என்னடா இவன் உங்களுடைய மற்ற பதிவுகளை விடுத்து திபெத் பற்றி எழுதினாலே வந்து விடுகிறான் என நினைக்க வேண்டாம். எனக்கு உங்களுடைய மற்ற பதிவுகளின் மீதும் ஆர்வமுண்டு. வாசிக்க எழுத நேரம் கிடைப்பதில்லை. திபெத் பற்றிய உங்கள் பதிவினை படித்தவுடன் அதற்கு நான் நீண்ட மறுமொழி எழுதிய காரணத்தினால் அதன் தொடர்ச்சியாய் நீங்கள் எழுதுவதற்கு கருத்து பதிய நேர்கிறது. மற்றபடி என்னை திபெத்திற்காக போராடும் நபர் என்று முடிவிற்கு வந்திருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

  உங்களது இந்த பதிவு நன்றாக இருந்தது. பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

  திபெத்தியர்கள் தங்கள் நிலத்திலே சீன மக்களை விட குறைவான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என நீங்கள் சொன்னதற்கு ஒரு கூடுதல் தகவல். இன்று திபெத் என சீனா வகுத்திருக்கும் நிலப்பரப்பு உண்மையில் பழைய திபெத்திய எல்லைகள் அல்ல. திபெத்திய எல்லைக்குள் சீன நிலபரப்பும் உள்ளே வருவது போல மாற்றப்பட்டுள்ளன. அது போல சில திபெத்திய நிலபரப்பு சீனாவின் நிலப்பரப்பிற்கு மாற்றி எல்லைகள் திரிக்கபட்டு மாற்றபட்டுள்ளன.

  பதிவிற்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயம்:
  கர்னாடகாவில் மைசூர் அருகே திபெத்தியர்கள் வாழும் கிராமங்களுக்கு போனால் நாம் திபெத்திற்கே வந்து விட்டோமோ என தோன்றுவது உண்மை. என் திபெத்திய நண்பன் அங்கிருந்த புத்த மடாலயத்திற்கு என்னை அழைத்து சென்றான். பெரிய மடாலயம் அது. அங்கு வரிசையாக புத்த பிட்சு கோலத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் தங்கள் மதிய உணவிற்காக காத்திருந்தார்கள். நான் அந்த வரிசையை கடக்கும் போது பத்து வயதிற்கு உட்பட்ட நான்கைந்து புத்த பிட்சுக்கள் ஒருவர் தலையை ஒருவர் தட்டுவது என சீண்டி விளையாடி கொண்டிருப்பதை பார்த்தேன். மனதினுள் ஒரு வேதனையும் லாமாக்கள் வழக்கத்தின் மீது கோபமும் அப்போது தோன்றியது. பிறகு seven years in tibet படத்தினை பார்த்த போது இதே போன்ற காட்சிகள் அந்த படத்திலும் பார்த்தேன். வேதனையாக இருந்தது.

  இப்படி தொடர்ந்து மறுமொழிகள் எழுதுவது உங்களுக்கு அசௌகரியமாக இருக்காது என்றே நம்புகிறேன்.

  ReplyDelete