அமெரிக்கத் தேர்தல்பற்றி அமெரிக்கர்கள்தவிர பிறரும் கவனிக்கவேண்டியது அவசியம். அமெரிக்காவால் உலகில் சுபிட்சம் நிலவுமோ இல்லையோ, அமெரிக்காவால் உலகையே அழிக்கமுடியும். அந்த ஒரு காரணத்துக்காகவாவது அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பது அவசியம்.
அமெரிக்க நலன்கள் என்ற பெயரால் இதுவரையில் பல அமெரிக்க அதிபர்கள் தங்களது முரட்டுப் பிடிவாதக் கொள்கைகளை பிற நாடுகள்மீது புகுத்தி அந்த நாடுகளை அழித்துள்ளனர்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர்தான் அமெரிக்காவின் கை ஓங்கத் தொடங்கியது. அமெரிக்கா தனது கொள்கைகளாக குடியாட்சி முறை, தாராளமயப் பொருளாதாரம், தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துச் செல்லும் தொழில்மயம், கல்விக்கு முக்கியத்துவம், தனி நபர் சுதந்தரத்துக்கு மதிப்பு, மரியாதை ஆகியவற்றை முன்னிறுத்தியது. Life, Liberty, Pursuit of Happiness ஆகியவற்றை அடிப்படை உரிமைகளாக அமெரிக்க சுதந்தரப் பிரகடனம் முன்வைத்திருந்தது. வெறும் வாழும் உரிமை மட்டுமல்ல, சுதந்தரமாக வாழும் உரிமை, மகிழ்ச்சியைத் தேடிச் சென்று அடையும் உரிமை ஆகியவையும் மனிதனுக்கு அவசியம் என்பதை முன்வைத்த சாசனம் இது.
ஆனால் இவை அமெரிக்கர்களுக்கு மட்டுமன்றி, உலக மக்கள் அனைவருக்குமே பொதுவானவை என்பதை அமெரிக்க ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
கம்யூனிசம் என்பது கொடும் தீமை, குடியாட்சி முறைக்கு முற்றிலும் எதிரானது என்ற நிலையை அமெரிக்கா எடுத்தது. கம்யூனிசத்தை ஒழிக்கவேண்டும் என்றால், எந்தவித முறையையும் கையாளலாம் என்ற அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை. இதன் விளைவாகத்தான் பல நாடுகளில் சர்வாதிகாரிகள், ராணுவ ஜெனரல்கள், மதத் தீவிரவாதிகள் ஆகியோரை அமெரிக்கா ஆதரித்தது. இவர்களில் பலர் கம்யூனிச நாடுகளைவிடக் கொடுமையான ஆட்சி நடத்தி, தம் மக்களையே கொன்று குவித்தவர்கள். ஆனாலும் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றனர். அமெரிக்க மக்கள் இதனை எதிர்த்துக் கேள்வி கேட்கவில்லை.
ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள்பற்றி அந்த நாட்டினர் கண்டுகொள்ளவே போவதில்லை என்ற நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக, ஆட்சியாளர்களின் போக்கு மேலும் மோசமானது.
அமெரிக்கா, தனது அனைத்து சக்திகளையும் கொண்டு, ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்கக் கண்டங்களில் பல நாடுகளில் அழிவு வேலைகளைச் செய்தது. பல நாடுகளிலும் தங்களுக்குப் பிடித்த ஆட்சியாளர்கள் பதவியில் இருக்க என்ன செய்யமுடியுமோ அனைத்தையும் செய்தது. தன் கொள்கைக்கு எதிரானவர்கள் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட என்ன சதிவேலைகள் வேண்டுமோ அதையும் செய்தது.
கம்யூனிசத்துக்கு எதிராக அல்லது தீவிரவாதத்துக்கு எதிராக என்று நாடுகள்மீது போர் தொடுத்தது. இதுவரையில் வியட்நாம், கொரியா தொடங்கி இன்றைய ஈராக்வரை இந்தப் போர்கள் அனைத்துமே உபயோகமானதாக இல்லை. இந்தப் போர்கள் மேலும் பிரச்னைகளையே உருவாக்கியுள்ளன. ஆனால் அமெரிக்காவின் கொள்கைகளை உருவாக்குபவர்கள் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.
(தொடரும்)
எதற்குரியது நம் வாழ்க்கை?
8 hours ago
Life, Liberty, Pursuit of Happiness
ReplyDeleteவெளியுறவுக் கொள்கைகளும் இதே அடிப்படை உரிமைகளின் அடிப்படையில் அமைந்தால் சிறப்பாயிருக்கும்.