Wednesday, June 04, 2008

திபெத் பற்றி சீனாவின் தூதர் கேள்வி-பதில்

தானே கேள்வி, தானே பதில் என்பது தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தமிழினத் தலைவர் மட்டுமல்ல, அவர் உலகுக்கே தலைவர் என்பதால், சீன அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அவரைப் பின்பற்றத்தொடங்கியுள்ளனர்.

கொல்கத்தாவில் இருக்கும் சீனாவுக்கான தூதர் (மேற்கு வங்க கம்யூனிஸ்ட் பார்ட்டி தலைவர்கள் அல்ல) மாவோ சிவேய் என்பவர், தி ஹிந்து பத்திரிகையில் தானே கேள்வி, தானே பதில் கொடுத்திருக்கிறார்.

அதன் சுருக்கமான சில பகுதிகள் இங்கே:

1. தலாய் லாமாவின் ‘திபெத்துக்கான தன்னாட்சி' என்ற கோரிக்கையை ஏன் சீனர்கள் நேர்மையானது என்று நம்ப மறுக்கிறார்கள்?

தலாய் லாமா, 1951-க்கு முன், திபெத் சீனாவின் பகுதியாக இருந்தது என்பதை ஏற்க மறுக்கிறார். அப்படியென்றால் 1951-ல் (சீனாவின்) மக்கள் விடுதலைப் படை அத்துமீறி திபெத்துக்குள் நுடைந்தது என்றாகும். அப்படியென்றால் திபெத் இன்று ஆக்ரமிக்கப்பட்ட ஒரு பகுதி என்றாகும். இன்று தன்னாட்சி கோரிக்கையை முன்வைக்கும் தலாய் லாமா, நாளை வாய்ப்பு கிடைத்தவுடன் சுதந்தரப் பிரகடனத்தை முன்வைப்பார். பல முக்கியமான திபெத்தியத் தலைவர்கள் இதனை வெளிப்படையாகவே சொல்கின்றனர். எனவேதான் சீனர்கள் தலாய் லாமாவின் கோரிக்கை நேர்மையானது என்று நம்ப மறுக்கிறார்கள்.

2. திபெத்தில் மனித உரிமை மீறல்கள் இருப்பதாக உலக ஊடகங்கள் சொல்வதை சீனா ஏன் ஏற்பதில்லை?

திபெத் மக்களின் வாழ்க்கை நிலையை முன்னேற்ற சீனா நிறைய முயற்சிகளை எடுத்துள்ளது. அடிப்படை மனித உரிமை என்பது முதலில் வாழ்வதற்கான உரிமை என்று இன்று திபெத்தில் இருக்கும் பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். 1953-ல் திபெத்தில் 10 லட்சம் பேர் வாழ்ந்தனர். 2007 கடைசியில் இது 28 லட்சமாக உயர்ந்துள்ளது. 1950களில் திபெத்தியர்களின் சராசரி ஆயுள் 35.5 ஆண்டுகளாக இருந்தது. இன்று இது 67ஆக உயர்ந்துள்ளது.

[சொல்லாமல் விட்டது: இதற்குமேல் திபெத்தியர்கள் வேறு எதை எதிர்பார்க்கிறார்கள்? கிடைக்கும் சோற்றைத் தின்றுகொண்டு, எண்ணிக்கையைப் பெருக்கவேண்டியதுதானே?]

3. திபெத்தில் மத உரிமை இல்லை என்று உலக ஊடகங்கள் சொல்வதை சீனா ஏன் ஏற்க மறுக்கிறது?

மத உரிமை என்றால், லாமாக்கள் தெருவில் திபெத் விடுதலைக்காகக் கோஷம் எழுப்பி, கல்லை விட்டெறிவது என்றால் சீனாவில் எங்கும் அந்த உரிமை கொடுக்கப்படமாட்டாது. 1960, 1970களில் கலாசார புரட்சி என்று சொல்லப்பட்ட நேரத்தில் செஞ்சட்டையினர் சீனாவில் பல இடங்களிலும் கோயில்கள், சர்ச்களைத் தாக்கினர். அப்போது திபெத்தில் மடங்களையும் தாக்கினர்.

ஆனால் 1980-க்குப் பிறகு நிலைமை மாறியுள்ளது. இன்று திபெத்தில் 1700 மடங்களில் 46,000 துறவிகள் உள்ளனர். ஒரு லாமா தனது மடத்தில் முன்னர் 8000 லாமாக்கள் இருந்தனர், ஆனால் இப்போது 4000 ஆகக் குறைந்துள்ளது என்கிறார். இவரது கருத்தில் 4000 என்பது குறைவாம்! இப்படி எல்லா ஆண் திபெத்தியர்களும் துறவிகளாகப் போனதால்தான் பல நூற்றாண்டுகளாக திபெத் வலுவற்ற பகுதியாக இருக்கிறது.

[சொல்லாமல் விட்டது: அதனால்தான் எங்களால் எளிதாக இவர்களை ஆக்ரமிக்க முடிந்தது!]

4. சீனா கலாசாரப் படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்ற தலாய் லாமாவின் குற்றச்சாட்டு ஒரு பொய் என்று ஏன் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ சொன்னார்?

[சொல்லாமல் விட்டது: பிறகு உண்மை என்றா சொல்வார்?]

1951-க்கு முன் 2%-க்கும் குறைவான திபெத்தியக் குழந்தைகளே பள்ளிக்குச் சென்றனர். படிப்பறிவின்மை 95%-ஆக இருந்தது. இன்று குழந்தைகளிடையேயான படிப்பறிவின்மை 4.8% ஆகக் குறைந்துள்ளது. மொத்தப் படிப்பறிவின்மை 30%-க்கும் கீழாக உள்ளது.

சீன மொழியில் கல்வி கற்பிக்கிறோம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். திபெத்திய மொழி, கலாசார, மதச் சிந்தனைகளை வெளிப்படுத்த நல்ல மொழி. ஆனால் அதனால் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை வெளிப்படுத்த இயலவில்லை. இதற்கான முழுப் பழியையும் முந்தைய திபெத்திய அரசர்களே ஏற்கவேண்டும். எனவேதான் நாங்கள் சீன மொழியைக் கொண்டு திபெத்தியர்களுக்குக் கல்வி கற்பிக்கிறோம். திபெத்தில் இருக்கும் இளம் திபெத்தியர்கள் சீன மொழியில் கற்க விரும்புகிறார்கள். (இந்தியாவின்) தர்மசாலாவில் இருக்கும் திபெத்தியர்கள் ஆங்கிலத்தில் கல்வி கற்க விரும்புகிறார்கள்.

5. ஏன் ‘பெரும் திபெத்' என்ற கொள்கை சீனாவுக்கு ஏற்புடையதல்ல?

'பெரும் திபெத்' என்று இவர்கள் கேட்பது திபெத், கிங்காய் மாகாணம் முழுவதும், சிச்சுவான் மாகாணத்தில் பாதி, கான்சு மாகாணத்தில் மூன்றில் ஒரு பகுதி, யூனான் மாகாணத்தில் நான்கில் ஒரு பகுதி, சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் ஐந்தில் ஒரு பகுதி. மொத்தத்தில் சீனாவின் பரப்பில் நான்கில் ஒரு பகுதி!

இதில் பல பகுதிகளிலும் பல இன, மொழிக்குழுவினர் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவருகிறார்கள். அந்தப் பகுதிகளையெல்லாம் தர்மசாலாவில் உள்ளவர்கள் பெரும் திபெத் பகுதிக்குள் சேர்க்க விரும்புகிறார்கள்.

சொல்லப்போனால் 1940-ல் 14-வது தலாய் லாமாவின் பதவியேற்பு வைபவத்தின்போது அவரது தந்தைக்கு திபெத்திய மொழி சரியாகப் பேசத்தெரியவில்லை; ஆனால் அவர் சீன மொழியின் கிங்காய் வட்டார வழக்கிலேயே பேசினார்.

[சொல்லாமல் விட்டது: எனவே திபெத்தியர்கள் திபெத் மொழி, திபெத் கலாசாரம் ஆகியவற்றை விட்டுவிட்டு, சீன மொழி கற்று, சீனர்களாக வாழ்வதே சிறந்தது. பெரும் திபெத் ஏன், பெரும் சீனா போதுமே?]

1 comment:

  1. அன்புள்ள பத்ரி,

    உங்களுடைய sarcasm எழுத்தினை தற்போது புரிந்து கொள்ளும் அளவு முன்னேறியிருக்கிறேன். இதனை ஹிண்டுவிலே படித்தேன். சீன அரசு தற்போது தன் brand imageற்காக செய்யும் சில முயற்சிகளில் இதுவும் ஒன்று. ஆனால் முதல் பாயிண்ட்டிலே பொய்யான தகவல் தூதரகத்தால் கொடுக்கபட்டிருக்கிறது. 1951க்கு முன்பு திபெத் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை சொல்லும் தூதரே அடுத்தடுத்து அதற்கு முரண்பாடான தகவல்களை சொல்கிறார். திபெத் - சீனாவிற்கு முன், பின் என பகுக்கிறார். ஆனால் தொடக்கத்தில் திபெத் எப்போதும் சீனாவில் இருந்தது என சொல்கிறார்.

    வரலாற்றில் இது ஒரு முக்கியமான குழப்பம். இப்போது நான் குடியிருக்கும் வீடு என்னுடையது. இந்த நிலம் நூறு வருடங்களுக்கு முன் ஒரு குடும்பத்தினரின் பொறுப்பில் இருந்தது. 1000 வருடங்களுக்கு முன்பு வேறொரு குடும்பத்தினாரால் பராமரிக்கபட்டு வந்தது. இந்த நிலம் யாருக்கு சொந்தம்?

    பாபர் மசூதி பிரச்சினையில் தொடங்கி ஜெருசலம் கோயில் பிரச்சனை வரை உரிமை கோரும் போராட்டங்கள். ஒவ்வொருவரும் தங்கள் இஷ்டத்திற்கு வரலாற்றினை வளைத்து கொள்ளும் அனுகூலம் இருக்கிறது.

    என்னை பொறுத்த வரை நாடுகளின் எல்லைகள் இனி போர்களால் மாறாது. அது வறுமையால் அங்கிருந்து ஓடும் அகதிகளால் மறைந்து போக தொடங்கும். அகதிகளாய் ஓடியவர்கள் புலம் பெயர்ந்த நிலத்தில் தங்களுக்கான மரியாதையை நிலை நாட்ட மீண்டும் தங்கள் இன அடையாளங்களை தூசி தட்டுவார்கள். ஏதேனும் ஓர் அடையாளம் தேவை தானே?

    சீனா திபெத் மீது படையெடுத்து ஆக்ரமித்தது ஒரு பிழை. அதற்கு அவர்கள் ஏற்கெனவே கப்பம் கட்ட தொடங்கி விட்டார்கள். எல்லா புரட்டுகளையும் தாண்டி வரலாறு உண்மையை எழுதி கொள்ளும் என நம்புகிறேன்.

    ReplyDelete