Monday, November 03, 2008

செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை

2003-ல் வாங்கிய புத்தகங்கள். இத்தனை வருடங்களாகப் படிக்காமல் விட்டது. திடீரென எடுத்து ஒரு மூச்சில் இரண்டையும் படித்து முடித்தேன்.

செம்மீன், தோட்டியின் மகன். இரண்டுமே மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதி, இரண்டையுமே சுந்தர ராமசாமி தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். முதல் புத்தகம் சாஹித்ய அகாடெமி பதிப்பாகவும், இரண்டாவது காலச்சுவடு பதிப்பாகவும் வெளியாயின.

செம்மீனைத்தான் முதலில் எடுத்துக்கொண்டேன்.

நீர்க்குன்றம் மீனவக் கிராமத்தின் மீனவன் செம்பன்குஞ்சு, மனைவி சக்கி ஆகியோரின் மகள் கறுத்தம்மா. இளம்பெண் கறுத்தம்மா பரீக்குட்டி என்கிற முஸ்லிம் பையன் மேல் அவளையும் அறியாமலேயே காதல் வயப்படுகிறாள். பரீக்குட்டி - ‘சின்ன முதலாளி’ - மீன், கருவாடு வாங்கி விற்பவன்.

செம்பன்குஞ்சுவுக்கு வேலையாளாக இல்லாமல், சொந்தமாகத் தோணி வாங்க ஆசை. ஆனால் அதற்கேற்ற பணம் அவனிடம் இல்லை. எனவே பரீக்குட்டியிடம் கருவாட்டை ரகசியமாக, காசு கொடுக்காமல் வாங்கி, அதனை விற்று, அதன்மூலம் பணம் திரட்டுகிறான். பரீக்குட்டி, கறுத்தம்மா மீதுள்ள காதலால், இதனை அனுமதிக்கிறான்.

செம்பன்குஞ்சு தோணி வாங்கியபின், முற்றிலும் மாறிய மனிதனாகிவிடுகிறான். பரீக்குட்டியின் ‘கடனை’ அடைப்பதில்லை. பரீக்குட்டியும் அதைக் கடனாக நினைக்காமல் திரும்பக் கேட்பதில்லை. கறுத்தம்மாவுக்கு மட்டும் மனது உறுத்துகிறது.

பக்கத்து ஊர் திருக்குன்றத்தில் உள்ள அனாதைப் படகோட்டி பழனி, மிகத் திறமைசாலி. அவனைத் தன் பெண்ணுக்கு மணமுடித்து, அவனை வீட்டோடு மாப்பிள்ளையாகத் தங்கவைத்தால், தோணியை ஓட்டி நிறைய சம்பாதிக்கலாம் என்பது செம்பன்குஞ்சுவின் எண்ணம்.

கறுத்தம்மா திருமணம் நடக்கிறது. ஆனால் அதற்குள் ஊருக்கே, கறுத்தம்மா - பரீக்குட்டி காதல் தெரிந்துவிடுகிறது. பழனிக்கும் அரசல் புரசலாகத் தெரியும். பரீக்குட்டியின் வியாபாரம் அதற்குள் நொடித்துவிடுகிறது. அவன் ஏகப்பட்ட கடனில் மூழ்குகிறான். பித்துப் பிடித்தவன்போல இரவெல்லாம் பாடிக்கொண்டே அலைகிறான்.

பழனி, மணம் முடித்ததும், கறுத்தம்மாவைத் தன்னோடு அழைத்துச் செல்கிறான். மாமனார் வீட்டில் தங்க மறுக்கிறான். செம்பன்குஞ்சு - பழனி உறவு கெட்டுவிடுகிறது. மகள் தன்னைவிட்டுப் பிரிந்த சோகத்தில் சில மாதங்களுக்குள் அவளது தாய் சக்கி இறந்துபோக, அந்தச் செய்தியைச் சொல்ல யாரும் திருக்குன்றம் வருவதில்லை. பரீக்குட்டி மட்டும் அங்கு வந்து விஷயத்தைச் சொல்கிறான்.

செம்படவர்களிடையே ஒரு நம்பிக்கை - மனைவி ஒழுக்கமானவளாக இருந்தால்தான், கடலுக்குப் போன கணவன் உயிரோடு திரும்புவான் என்று. பரீக்குட்டி திருக்குன்றம் வரை வந்து சென்றது விஷமிகளை நிறையப் பேசவைக்கிறது. இதனால், அவனது தோழர்கள் பழனியை கடலுக்குக் கூட்டிச் செல்ல மறுத்துவிடுகிறார்கள். அவனோடு கடலுக்குப் போனால், பழனியை விழுங்கும் கடல் கடவுள், அவர்களையும் கொன்றுவிடலாம் என்று பயம்.

பழனி, மனைவியின் நகையை விற்று சிறு தோணியும் தூண்டிலும் வாங்கி ஒண்டியாக மீன் பிடிக்கிறான். பழனி - கறுத்தம்மாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

கறுத்தம்மாவின் தந்தை செம்பன்குஞ்சு வேறொருத்தியை மணம் செய்துகொள்கிறான். அவனது தொழில் நசித்துப் போகிறது. சொல்லப்போனால், அந்தக் கடலில் யாருக்குமே மீன் கிடைப்பதில்லை. எங்கும் பஞ்சம், கஷ்டம். செம்பன்குஞ்சுவின் இரண்டாம் மனைவிக்கு முதல் மணத்தால் பிறந்த மகன், பணம் கேட்டுத் தாயை வற்புறுத்த, அவள் வீட்டில் பணம் திருடுகிறாள். அடுத்து நடக்கும் பிரச்னையால் கறுத்தம்மாவின் தங்கை பஞ்சமி வீட்டைவிட்டு ஓடி அக்காளிடம் வருகிறாள்.

அக்காளும் தங்கையும் ஊர்க் கதைகளையெல்லாம் பேசும்போது, பழனி ஒளிந்திருந்து ஒட்டுக் கேட்கிறான். அப்போது கறுத்தம்மா பரீக்குட்டியைப் பற்றி விசாரிப்பதைக் கேட்டுவிடுகிறான். கடும் கோபத்துடன் அவளை வற்புறுத்திக் கேட்க, கறுத்தம்மா, தனக்கு பரீக்குட்டி மேல் உள்ள காதலைச் சொல்லிவிடுகிறாள்.

அன்று இரவு பழனி, தனது சிறு தோணியில் நடுக்கடலுக்குச் சென்று சுறா மீனைப் பிடிக்க முயற்சி செய்கிறான். அதே இரவு பரீக்குட்டி கறுத்தம்மா வீடு வந்து அவளுடன் உறவு கொள்கிறான். அடுத்த நாள் சுறாவுடன் போராடிய பழனி உயிர் துறந்த சடலமாகக் கிடைக்கிறான். கறுத்தம்மாவும் பரீக்குட்டியும் பிணமாகக் கரை சேருகிறார்கள்.

***

அடுத்து தோட்டியின் மகன் கதை, நாளை. தொடர்ந்து இரு கதைகளைப் பற்றிய என் சிந்தனைகள்.

No comments:

Post a Comment