Tuesday, November 04, 2008

நாடெங்கும் வெடிக்கும் குண்டுகள்

கடந்த ஓராண்டில் இந்தியாவில் குண்டு வெடிக்காத பெரிய நகரமே இல்லை என்று சொல்லலாம். அதுவும் அடுத்தடுத்த சில நாள்களில் ஜெய்ப்பூர், பெங்களூரு, அஹமதாபாத், டில்லி என்று தொடராக வெடித்து இந்தியாவையே பீதியில் ஆழ்த்திய கட்டம். இந்த குண்டுகள் தொடர்ந்து இப்போது அசோமில் வெடித்து கலவரத்தை அதிகப்படுத்துகின்றன.

தீவிரவாதிகள் சிலர், அரசைப் பணியவைக்க அல்லது பொதுமக்களிடையே பீதியைக் கிளப்ப, இதுபோன்ற நகர குண்டுவெடிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். Urban terror.

பொதுவாக இந்தியாவில் குண்டு வைப்பவர்கள் என்றால் அவர்களை ஒரு வகைமாதிரிக்குள் அடக்கிவிட முடியும். காஷ்மீர் பயங்கரவாதிகள். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ஆதரவு. உள்ளூர் முஸ்லிம் அமைப்புகளுடன் (சிமி) உறவு. இதுவே வடகிழக்கு என்றால் உல்ஃபா. பங்களாதேஷ் உளவு அமைப்பு உதவியுடன்.

இந்த நிலையில்தான் மஹாராஷ்டிராவில் சில இந்துத் தீவிரவாதிகள் ஒரு குண்டுவெடிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடந்துள்ள அனைத்து குண்டுவெடிப்புகளுமே ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் முஸ்லிம்கள்மீது வெறுப்பு வருவதற்காகச் செய்துவருபவை என்று சில முஸ்லிம் அமைப்புகள் ஏற்கெனவே சொல்லிவருகின்றன. தமிழ் வலைப்பதிவுகளிலேயே இப்படிச் சொல்லும் பல பதிவுகளைக் காணலாம். ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பு இதில் ஈடுபடும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் தனிப்பட்ட இந்து வெறியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு நிறையவே உள்ளது.

மாலேகாவ் மசூதியில் குண்டு வைத்தது சில இந்துக்களாக இருக்கலாம். அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் அதற்கான தண்டனையைப் பெறவேண்டும். ஆனால் வழக்கு முடிவதற்கு முன்னமேயே, சிவசேனை மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியும் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருப்பது மிகவும் ஆபத்தானது.

பாஜகவின் கோபிநாத் முண்டே, இந்துக்கள் என்றுமே இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டதில்லை என்கிறார். உல்ஃபா என்பது இந்துக்கள் நிறைந்த தீவிரவாத இயக்கம்தானே? இந்து என்றால் குண்டு வைக்கமாட்டான்; முஸ்லிம் என்றால் எப்போதும் குண்டு வைப்பான் என்ற எண்ணம் அபத்தமானது.

அதே நேரம், இந்தியாவின் பெரும்பான்மை நகர குண்டுவெடிப்புகள் இஸ்லாமிய தீவிரவாதிகளால்தான் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. காஷ்மீர், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ, சிமி ஆகியவற்றின் கை பல இடங்களில் தெரிந்துள்ளது. ஆனால் இதைத் தடுக்க வெறுமனே பாதுகாவலை அதிகப்படுத்தினால் மட்டும் போதாது. இந்தப் பிரச்னை உருவாகும் அடிப்படையை ஆராய்ந்து அதைக் களைய முற்படவேண்டும்.

கடந்த 50 வருடங்களில் காஷ்மீர் பிரச்னையைக் கையாள்வதிலும் வடகிழக்கு பிரச்னைகளைக் கையாள்வதிலும் இந்தியா சரியாகச் செயல்படவில்லை. இந்தப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துதல், அரசியல் ஊழலைக் குறைத்தல், உள்ளூர் கலாசாரம் அடிபட்டுவிடாமல் பாதுகாத்தல், கட்டமைப்புகளை மேம்படுத்துதல், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துதல், அதிகபட்ச தன்னாட்சி அதிகாரம் நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் - இவற்றை ஒழுங்காகச் செய்தாலே போதும்.

சிறுபான்மை பயங்கரவாதம் பயத்தால் வருவது. இதனை காவல்/ராணுவத் தாக்குதலால் மட்டும் எதிர்கொள்ள முடியாது. இது பயத்தை அதிகரிக்கவே செய்யும். ஆனால் பெரும்பான்மை (இந்து) பயங்கரவாதம் வெறுப்பால் வருவது. அதனை எதிர்கொள்ள மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது இது. தடியால் அடித்தால்தான் அடங்கும் இது.

27 comments:

 1. உஙகள் கருத்துக்கள் அருமை.
  கடினமான செய்திகளை மிக எளிமையாக விளக்கம் அளித்து புரிதலுக்கு வழி செய்தல் மிக அருமை

  ReplyDelete
 2. பத்ரி!
  தொடர்பான ஞாநியின் 'பயங்கரவாதத்தின் நிறம் காவி !'(http://www.gnani.net/index.php?option=com_content&task=view&id=43&Itemid=65 - login required) கவலை கவனத்திற்குரியது!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்!

  ReplyDelete
 3. // வழக்கு முடிவதற்கு முன்னமேயே, சிவசேனை மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியும் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருப்பது மிகவும் ஆபத்தானது.//

  "வழக்கு முடிவதற்கு முன்பே" என்பது தவறு. விசாரணை முடியும் முன்பே என்பதுதான் சரி.

  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாஜாகாவும் சிவசேனையும் பேசவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறு செய்தது நிரூபணமனால் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் அவை உறுதியாக இருக்கின்றன. ஆனால், விசாரணைக்குட்படுத்தப்பட்டவருக்கு தேவையான சட்ட ரீதியான உரிமைகளை மட்டுமே அவை ஏற்படுத்தித் தரப்போகின்றன. இதற்குக் காரணம், குற்றம் சாட்டப்பெற்றவர் சங்க பரிவாரத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டும் அல்ல, இதுபோன்று ஏற்கனவே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றம்சாட்டப்பெற்றவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று நிரூபணம் ஆனதும் காரணமாகிறது.

  சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும் என்று நம்புகிற அவர்கள் செய்யும் செயல் ஆபத்தானது என்று எந்த அடிப்படையில் சொல்லுகிறீர்கள்?

  கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்ட மதானியின்மீது போடப்பட்ட கேஸை வாபஸ் வாங்கச் சொல்லி அவரது கட்சிக்காரர்களும், மதத்தவர்களும் கேரளாவிலிருந்து ஊர்வலம் வந்தார்கள். கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் தமிழக முதல்வரை சந்தித்துப் பேசினார். கேரள சட்டமன்றம் அந்த கேஸை வாபஸ் வாங்கவேண்டும் என்று தீர்மானம் இயற்றியது.

  இதைப் போல ஏதேனும் ஒரு செயலை இந்துத்துவ அமைப்புகள் செய்தனவா? இந்து அமைப்புகள் சட்டப்படி நடப்பதுகூட ஆபத்தானது என்று எழுதுவது நியாயமா? எதேச்சதிகாரம்தான் சரி என்று சொல்லுகிறீர்களா?

  பாஜாக சிவசேனை முதலான கட்சிகள் வெளிப்படையாக சட்டரீதியில் போராடுவதை தவறு, ஆபத்தானது என்று எழுதும் நீங்கள், மதானி விஷயத்தில் கேரள அரசாங்கம், மற்றும் அரசியல் கட்சிகளின் போக்கைப் பற்றி என்ன கருத்தை வெளியிட்டீர்கள்? இங்கே அந்த கட்டுரையின் லிங்கை கொடுக்க இயலுமா?

  // உல்ஃபா என்பது இந்துக்கள் நிறைந்த தீவிரவாத இயக்கம்தானே? இந்து என்றால் குண்டு வைக்கமாட்டான்; முஸ்லிம் என்றால் எப்போதும் குண்டு வைப்பான் என்ற எண்ணம் அபத்தமானது.//

  யார் குண்டு வைக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் தீவிரவாதப் பட்டம் கொடுக்கப்படுவதில்லை. என்ன காரணத்திற்காக குண்டு வைக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி. என்றைக்காவது உல்ஃபா இயக்கத்தவர்கள் தங்களது கொள்கையாக ஹிந்துக்களின் நலனுக்காகவும், ஹிந்து தர்மத்தை பாதுகாக்கவும் போராடுவோம் என்று சொல்லி இருக்கிறார்களா?

  நீங்கள் சொல்லும் வாதத்தின்படி, கருநாநிதி என்னும் ஹிந்துவின் மகனான அழகிரியின் கட்டளைப்படி தினகரன் பத்திரிக்கை அலுவலகம் எரிக்கப்பட்டதுகூட ஹிந்து தீவிரவாதம்தான். இந்த வாதம் மடத்தனமாக இருப்பது உங்களுக்கே தெரியவில்லையா?

  தீவிரவாதியாகப் பிடிக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டால் தூக்கு தண்டனை வழங்கப்பட்டவர்களை, அவர்கள் இஸ்லாமியர் என்பதற்காக தூக்கில் போடக்கூடாது என்று முஸ்லீம்கள் சொல்லிவருவது ஒரு ஆபத்தான போக்காக உங்களுக்கு ஏன் தெரியவில்லை?

  அதே சமயத்தில், சாத்வியும் மற்றவர்களும் குற்றம் இழைத்தனர் என்று முடிவு செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அந்த தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அதன்படி அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றுதான் ஹிந்து இயக்கங்கள் கூறிவருகின்றன. இது தீவிரவாதத்கிற்கு எதிரான நிலை. இஸ்லாமியர்கள் இப்படி ஒரு நேர்மையான நிலையை என்றும் எடுத்ததே இல்லை. அதன் அடிப்படையில் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லுவது என்ன தவ்று?

  ஹிந்துத்துவர்களைப் போல, தீவிரவாதிகள் தங்களுடைய மதத்தினராக இருந்தாலும் தண்டிக்கவேண்டும் என்று இஸ்லாமியர்கள் எப்போது சொல்லுகிறார்களோ அப்போது "இஸ்லாமிய தீவிரவாதம்" என்று சொல்லுவது தவறு என்று சொல்லலாம். அப்படி நடக்காதவரை, அப்படி சொல்லுவது நேர்மையான செயல் இல்லை.

  "முஸ்லீம் என்றால் குண்டுவைப்பான்" என்று எண்ணுவது தவறுதான். இதுதான் ஹிந்துத்துவர்களின் எண்ணமும். ஆனால், குண்டு வைப்பவர்களை ஆதரிப்பவர்கள் இஸ்லாமிய மதத்தவர்களாக இருக்கும்போது இப்படிப்பட்ட எண்ணம் எழுவது தவிர்க்கமுடியாதது. இதை தீர்க்கவேண்டிய கடமை இஸ்லாமியர்களிடம்தான் உள்ளது. தீவிரவாதத்தில் ஈடுபடும் இஸ்லாமியர்களை தண்டிக்கக்கூடாது, அவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவேண்டும் என்று அவர்கள் சொல்லும்வரை அவர்கள்மேல் உள்ள இந்த கருத்து பொதுமக்களின் மனத்தில் இருந்து மாறாது.

  பிடிபட்டவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால், இந்திய இறையாண்மையின்மீது, சட்டத்தின்மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்தும் இஸ்லாமியர்கள், கைது செய்யப்பட்டவர்கள் ஹிந்துக்களாக இருந்தால் வாயை மூடிக்கொள்கின்றனர். இது தெளிவாக, தங்கள் மதத்தினரின் செயல்கள் இந்திய இறையாண்மையை மீறியது தெய்வ நோக்கம் கொண்டது என்ற எண்ணத்தில்தானே எழுகிறது?

  ஒரு வெள்ளிகிழமை கூட்டத்தில் வைத்து யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்பதைக்கூட முடிவு செய்யக்கூடிய, மிகுந்த கட்டுப்பாடுள்ள ஒரு மத நிறுவனத்திற்கு தங்களது இளைஞர்களில் யார் தீவிரவாத செயலில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

  கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகளின்போது அடுத்த தெருவில் இருந்த, அடுத்த வீட்டில் இருந்த முஸ்லீம்கள் அனைவரும் வெளியூருக்கு சென்றுவிட்டார்கள். குண்டுவெடிக்கப்போகிறது என்பதை நன்கு தெரிந்து தெளிவாக திட்டமிட்டு தங்களுடன் அன்பாகப் பழகிய பக்கத்துவீட்டு மனிதர்களும், குழந்தைகளும், பெண்களும் ஹிந்துக்கள் என்ற ஒரே காரணத்திற்காக செத்து தொலையட்டும், கைகால் இழந்து அவர்கள் வாழ்க்கை நாசமாகட்டும் என்று விட்டுவிட்டுப் போனார்கள். அவர்களுக்கு ஏற்படப்போகும் துயரத்தை மூடிமறைக்க இவர்களுக்கு மதத்தைவிட வேறு என்ன காரணம் இருக்கிறது? அந்த பக்கத்து வீட்டுக்காரர்களும், தெருக்காரர்களும் இவர்களுக்கு என்ன கொடுமை செய்துவிட்டார்கள்?

  மருத்துவமனையின் மகப்பேறு வார்டில்கூட குண்டு வைத்தார்களே ஐயா. பிறக்காத குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் இவர்களுக்கு என்ன கொடுமை செய்துவிட்டார்கள்?

  இந்த செயலில் ஈடுபட்டவர்களை "முஸ்லீம் தீவிரவாதிகள்" என்று சொல்லுவதில் என்ன தவறு?

  எந்த மதம், மற்ற மதத்தவரை கொல்லுவது சரி என்று போதிக்கிறதோ, அல்லது எந்த மதத்தவர் தங்களது மதக்கருத்தாக வன்முறையை ஆதரிக்கிறார்களோ, அந்த மதத்தையும், அத்தகைய நம்பிக்கையையும் வைத்திருப்பவர்களை அந்த மதம் சார்ந்த தீவிரவாதிகள் என்று சொல்லுவதில் என்ன தவறு?

  //கடந்த 50 வருடங்களில் காஷ்மீர் பிரச்னையைக் கையாள்வதிலும் வடகிழக்கு பிரச்னைகளைக் கையாள்வதிலும் இந்தியா சரியாகச் செயல்படவில்லை. இந்தப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துதல், அரசியல் ஊழலைக் குறைத்தல், உள்ளூர் கலாசாரம் அடிபட்டுவிடாமல் பாதுகாத்தல், கட்டமைப்புகளை மேம்படுத்துதல், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துதல், அதிகபட்ச தன்னாட்சி அதிகாரம் நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் - இவற்றை ஒழுங்காகச் செய்தாலே போதும்.//

  பத்ரி, நீங்கள் தெரிந்துதான் சொல்லுகிறீர்களா? அல்லது தெரியாமல் சொல்லுகிறீர்களா?

  பொதுவாக நீங்கள் தேவையான தகவல்களை திரட்டி அதன் அடிப்படையில் எழுதுபவர். கஷ்மீருக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகை ஜம்முவிற்கோ, லடாக்கிற்கோ ஒதுக்கப்படுவதைவிட குறைவு என்று நிரூபியுங்கள். பாக்கிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீருக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட்டையும் பற்றி தகவல் தாருங்கள்.

  வடகிழக்கு மாநிலங்களில் தனிநபர் வருமானம் இந்தியாவின் மற்ற எல்லா மாநிலத்தவர்களுக்கும் இணையானது. அங்குள்ள தீவிரவாத அமைப்புகளை நடத்துபவர்கள் அந்த மாநிலங்களின் மந்திரிகள், எம்.எல்.ஏக்கள்.

  வடகிழக்கு மாநிலங்களின் பிற்போக்கு நிலை பீகாரைவிட எந்த அளவு குறைந்த ஒன்று?

  //சிறுபான்மை பயங்கரவாதம் பயத்தால் வருவது. இதனை காவல்/ராணுவத் தாக்குதலால் மட்டும் எதிர்கொள்ள முடியாது. இது பயத்தை அதிகரிக்கவே செய்யும். ஆனால் பெரும்பான்மை (இந்து) பயங்கரவாதம் வெறுப்பால் வருவது. அதனை எதிர்கொள்ள மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது இது. தடியால் அடித்தால்தான் அடங்கும் இது//

  பயங்கரவாதத்திற்கு காரணம் எதுவாக இருந்தாலும், பயங்கரவாதம் அதன் எந்த வடிவத்திலும் நசுக்கப்படவேண்டும். அதைவிட்டுவிட்டு, சிறுபான்மை பயங்கரவாதம் சின்ன பூச்சாண்டி, பெரும்பான்மை பயங்கரவாதம் உண்மையில் பிசாசு என்று எழுதுவது ஒருகுறிப்பிட்டவகை பயங்கரங்கவாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியது, வேறு ஒரு பயங்கரவாதம் தவறு என்று சொல்லும் செயல். இது நடுநிலைமையான கருத்து இல்லை. கள்ளச்சாராயம் காய்ச்சுபவன், கள்ளநோட்டு அடிப்பவனை விமர்சிப்பதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை.

  பெரும்பான்மை நாசகாரச் செயல்கள் சிறுபான்மையினரின் தீவிரவாதத்தால் ஏற்படும்போது சிறுபான்மையினரின் தீவிரவாதம் ஒதுக்கி தள்ளப்படவேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தா?

  நேர்மையற்ற எழுத்து. தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் மனிதத்தின் அவல குரல்களை ஒதுக்கித் தள்ளிவிடும் உணர்வற்ற இதையம்.

  ReplyDelete
 4. //
  சிறுபான்மை பயங்கரவாதம் பயத்தால் வருவது. இதனை காவல்/ராணுவத் தாக்குதலால் மட்டும் எதிர்கொள்ள முடியாது. இது பயத்தை அதிகரிக்கவே செய்யும். ஆனால் பெரும்பான்மை (இந்து) பயங்கரவாதம் வெறுப்பால் வருவது. அதனை எதிர்கொள்ள மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது இது. தடியால் அடித்தால்தான் அடங்கும் இது.
  //

  சிறுபான்மையினர் பயங்கரவாதத்தினால் ஏற்பட்டுள்ளது இந்த பெரும்பான்மையின் பயம். பயத்தால் ஏற்படும் பயங்கரவாதம் என்றாலும், மதக் கொள்கை அடிப்படையில் ஏற்படும் பயங்கரவாதம் என்றாலும் அது முளையில் கிள்ளி எறியவேண்டும். FULL STOP.

  பெரும்பான்மை பயங்கரவாதம் என்றால் என்ன ?

  ReplyDelete
 5. //பயங்கரவாதத்திற்கு காரணம் எதுவாக இருந்தாலும், பயங்கரவாதம் அதன் எந்த வடிவத்திலும் நசுக்கப்படவேண்டும். அதைவிட்டுவிட்டு, சிறுபான்மை பயங்கரவாதம் சின்ன பூச்சாண்டி, பெரும்பான்மை பயங்கரவாதம் உண்மையில் பிசாசு என்று எழுதுவது ஒருகுறிப்பிட்டவகை பயங்கரங்கவாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியது, வேறு ஒரு பயங்கரவாதம் தவறு என்று சொல்லும் செய//

  அத்வானியின் கேரளா வருகைக்கு காவல்துறையின் முஸ்லிம்கள் வடிகட்டபட்டனர். அடுத்த பிரதமர் வேட்பாளர் காவல்துறை சேர்ந்த முஸ்லிம்களை நம்ப மறுக்கும் நிலையில் இளைஞர்களில் சிலர் அடிபடைவதிகளின் கையில் சிக்குவது தவிர்க்க முடியாது. இது தான் சிறுபான்மையினரின் பயம் , இதை இராணுவம் கொண்டு அடக்க முடியாது

  ReplyDelete
 6. பத்ரி, தகவல் பிழைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். மாலேகாவ்னில் இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. ஒன்று மசூதியின் வெளியே. ஷாப்-ஈ-பரத் அன்று நிகழ்ந்தது. செப்டம்பர் 2006 இல் இதில் 40பேர் இறந்தனர். இந்த விழா தூய இஸ்லாமியவாதிகளுக்கு ஹராமான விழா. இதில் சிமி இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். தற்போது சாத்வி கைதாகியுள்ள விவகாரமானது செப்டம்பர் 2008 இல் வெடித்த குண்டு - இது மசூதியிலோ மசூதியின் அருகிலோ வைக்கப்படவில்லை. சிமி அலுவலக/செயல்பாடுகள் நிகழும் இடங்களின் அருகே வெடித்தது. இதில் ஐந்து பேர் இறந்தனர். அடுத்ததாக சிறுபான்மை பயங்கரவாதம் என்பது அச்சத்திலிருந்து ஏற்படுவது என சொல்லியுள்ளீர்கள். இந்தியாவில் யார் சிறுபான்மையினர் என சொல்வீர்களா மதிப்பிற்குரிய அறிவுசீவி அய்யா. நீங்கள் ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாட்டை ஏற்பவராக இருப்பின் (நீங்கள் அப்படித்தான் என ஊகிக்கிறேன் குறைந்தபட்சம் நளின சுந்தரமாக புலப்பெயர்வு என ஆரிய இனவாதக் கோட்பாட்டை அதன் உயிரிழக்காமல் மொழியியல் கோட்பாடாக மாற்றியாவது வாழவைப்பதில் அ.மார்க்ஸுடன் இணைவீர்கள் என்பது என் கணிப்பு) தமிழக பிராம்மணர்களை சிறுபான்மை என கருதலாமா? அவர்களை விட தமிழ்நாட்டில் மிகமோசமாக வசைப்பாடப்பட்ட ஒரு மக்கள் குழுவை காட்டமுடியுமா? அதுவும் அதிகாரபூர்வமான வெறுப்பியல் வசைபாடல் அரசியல்வாதிகளால் நிகழ்த்தப்பட்டு வருகிறது. கலைஞர் என்றும் தமிழ்குடிதாங்கி என்றும் உலவுகிற இனவெறியாளர்கள் ஹிட்லரின் யூதவெறுப்பு தோற்கும் அளவுக்கு பிராம்மண துவேஷத்தை உமிழ்ந்து வருகின்றனர். சரி எத்தனை அந்தண இளைஞர்கள் ஆர்.டி.எக்ஸ் வாங்கி தமிழ்நாடெங்கும் வெடிகுண்டு வைத்து வருகிறார்கள் செப்புகிறீரா? கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளாளர்கள் சிறுபான்மை இல்லையா? 1970களில் சிறுபான்மையினர் மரியாதையாக இருக்கப் பழகிக்கொள்ளவேண்டுமென மஞ்சள் துண்டார் அறிக்கையே விட்டாரே - அதனைத் தொடர்ந்து மலையாளிகள் சென்னையில் தாக்கப்பட்டனரே தமிழகமெங்கும் மலையாளிகள் சிறுபான்மையினரில்லையா? மத அடிப்படை சிறுபான்மையினர் மட்டும்தான் சிறுபான்மையினரா? நான் மேலே சொன்ன மக்கட் குழுக்கள் அனத்துமே செக்யூலர் பகுப்புகளின் அடிப்படையில் சிறுபான்மையினர். மதம் என்பது என் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் உள்ளதல்லவா அப்போது ஒரு மதச்சார்பற்ற நாட்டின் சிறுபான்மையினர் என்பது மத அடிப்படையில் அமைய வேண்டுமா மதச்சார்பற்ற அடிப்படையில் அமைய வேண்டுமா? இனி மத சிறுபான்மையினர் என நீங்கள் சொல்பவர்களை பாருங்கள். அவர்கள் சிறுபான்மையினர் என்பதனை தாண்டி தங்களை பெரும்பான்மையினராக்கத் துடிக்கும் சிறுபான்மையினர் - aggressive minorities. அவர்கள் வெளிநாடுகளின் ஆதிக்க சக்திகளுடன் தத்துவார்த்த ரீதியிலும் பயங்கரவாத செயல்பாட்டு ரீதியிலும் கை கோர்க்கும் சிறுபான்மையினர். இந்தியாவின் அடிப்படை இயற்கையை அழிக்கத்துடிக்கும் சிறுபான்மையினர். பீட்டர் அல்போன்ஸ் வாய் மூடி மௌனித்துக்கேட்க இந்திய அரசியல் சட்டத்தில் கல் எறிந்து பெண்களை கொல்ல வழியில்லையே என வருத்தம் தெரிவிக்கும் சிறுபான்மையினர். இவர்களால் உருவாக்கப்படும் பயங்கரவாதம் அச்சத்தினால் ஏற்பட்ட பயங்கரவாதம் அல்ல ஆதிக்க வெறியினால் ஏற்பட்டுள்ள பயங்கரவாதம். எதுவானால் என்ன பத்ரி நம் வீட்டு பிள்ளைகள் வெடிகுண்டால் வெடித்து பிணமாக வீட்டுக்கு வராத வரை புளித்த ஏப்பம் விட்டு பேசலாமையா மதச்சார்பின்மை.

  ReplyDelete
 7. //
  அடுத்த பிரதமர் வேட்பாளர் காவல்துறை சேர்ந்த முஸ்லிம்களை நம்ப மறுக்கும் நிலையில் இளைஞர்களில் சிலர் அடிபடைவதிகளின் கையில் சிக்குவது தவிர்க்க முடியாது. இது தான் சிறுபான்மையினரின் பயம் , இதை இராணுவம் கொண்டு அடக்க முடியாது
  //

  அதைச் செய்தது யார் ?

  கேரளத்தை ஆளும் மதச்சார்பின்மைக் காவலர்களான கம்யூனிஸ்டுகள் தானே.

  ReplyDelete
 8. நீலகண்டன்: செப்டம்பர் 2008 மாலேகாவ் குண்டுவெடிப்பு, பிக்கு சௌக் சந்தைப் பகுதியில், மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டல் இருக்கும் இடத்தில் என்றுதான் நான் படித்தேன்.

  மசூதி குண்டுவெடிப்பு என்று சொல்லியிருக்கவேண்டாம். சரி, மாற்றிக்கொள்கிறேன்.

  ====

  இஸ்லாமியத் தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பை நான் நியாயப்படுத்தவில்லை. சிமி, காஷ்மீரி இயக்கங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டியவை என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

  இந்திய முஸ்லிம் அமைப்புகள் அச்சத்தாலா, அல்லது ஆதிக்கச் சக்திகளின் தூண்டுதலாலா - எதனால் பயங்கரவாதத்தைக் கைக்கொள்கிறார்கள் என்பதில் நாம் இருவரும் ஒத்துப்போகப் போவதில்லை.

  அமைதியான ஓர் இடத்தில், திருப்தியுடன் மக்கள் இருக்கும் ஓரிடத்தில், அந்நியச் சக்திகள் முஸ்லிம்களைத் தூண்டி பயங்கரவாதத்தை ஏற்படுத்தமுடியும் என்று நான் நம்பவில்லை. இருக்கும் பிரச்னைகள் பெரிதாக்கப்படுகின்றன. அந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பது அவசியமாகிறது.

  இதே நிலையில்தான் இன்று சீனாவும்கூட உள்ளது. இந்தியா அளவுக்கு இல்லாவிட்டாலும், சீனாவில் உய்கர்கள் மட்டுமின்றி ஹூயி முஸ்லிம்களும் பெரும்பான்மை ஹான் சீனர்களிடம் சண்டை பிடிக்கப் போகிறார்கள்.

  இந்தியாவில் யார் பெரும்பான்மையினர்? இந்துக்கள் என்ற மதப்பிரிவினர்தான். சீனாவில் யார் பெரும்பான்மையினர்? ஹான் சீனர்கள் என்ற இனப் பெரும்பான்மையினர்.

  மொழி வாரியாக எடுத்தால் இந்தியாவில் பெரும்பான்மையைப் பிடிப்பது கஷ்டம். இந்தி பேசுபவர்கள் என்று சொல்லலாம். ஆனால் அவர்கள் ஒருமித்த குழுவாக இயங்குவதில்லை.

  ===

  தமிழகத்தைப் பொருத்தமட்டில், பார்ப்பனர்கள் சாதி ரீதியில் சிறுபான்மையினர்தான். ஆனால், அவர்கள் அச்சத்தில் வாடுவதாக எனக்குத் தெரியவில்லை. எல்லாச் சிறுபான்மையினரும் போராட்டத்தில் இறங்கவேண்டியதில்லை. இறங்குவதும் இல்லை.

  ReplyDelete
 9. //உல்ஃபா என்பது இந்துக்கள் நிறைந்த தீவிரவாத இயக்கம்தானே? இந்து என்றால் குண்டு வைக்கமாட்டான்; முஸ்லிம் என்றால் எப்போதும் குண்டு வைப்பான் என்ற எண்ணம் அபத்தமானது.// இதுதான் காமெடி என்பது. உல்ஃபாவின் சித்தாந்தம் இன்றைய தேதியில் என்ன? மார்க்ஸியமும் அஸாமியர்கல் தனி தேசியம் என்கிற கோட்பாடு. இதற்கும் இந்து தருமத்துக்கும் என்ன தொடர்பு. அய்யா பத்ரி, 'வொலக நாயகன்' கமலஹாசனுக்கு அடுத்தபடியாக மதச்சார்பின்மையை ரட்சிக்க உதயமாயிருக்கும் உலகமகா அறிவுசீவியே, ஒரு அப்துல்லாவோ ஆண்டனியோ எல்டிடியிலோ அல்லது மாவோயிஸ்ட் கும்பலிலோ (மாவோயிஸ்ட்களுக்கும் எல்டிடியினருக்கும் சர்ச்க்கும் கள்ளத்தொடர்பு இருப்பது வேறு கதை) சேர்ந்து குண்டு வைத்தால் அவனை இஸ்லாமிய தீவிரவாதி என்றோ கிறிஸ்தவ தீவிரவாதி என்றோ சொல்லமாட்டோ ம் மாவோயிஸ தீவிரவாதி என்றுதான் சொல்லுவோம். அப்படி இந்துத்துவ இயக்கத்தினர் (தனிமனிதர்கள் இல்லை அய்யா இயக்கத்தினர்) எத்தனை பேர் குண்டு வைத்துக் கொண்டு திரிகிறார்கள்? அப்படி குண்டு வைக்க சொல்லுகிற சித்தாந்தத்தை எத்தனை ஷாகாக்களில் சொல்லிக் கொடுக்கிறார்கள் செப்புகிறீரா உலகமகா சிந்தனை செம்மலே? காஃபிர்களை வாழ அனுமதிக்க முடியாது 'உன் மதம் உனக்கு என் மதம் எனக்கு' என்று சொல்லுகிற வசனங்களை பிறகு வந்திறங்கிய வஹீயேறிய வரிகள் அழித்துவிட்டன என்று சொல்லுகிற ஏதோ ஃப்ரிஞ்ச் ஆசாமியல்ல முக்கியமான இஸ்லாமிய ஆசாமியை காட்ட என்னால் முடியும். இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரன் இந்தியாவில் இந்துவும் இஸ்லாமியனும் பண்பாட்டால் ஒன்றுதான் என்றுதான் உளறிக்கொண்டிருக்கிறானே ஒழிய முஸ்லீம்களே பாகிஸ்தானுக்கு போங்கள் என்று சொல்லிவிடவில்லை. ஆகவே குண்டு வைப்பது எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் வைக்கப்படுகிறது - என்பதை கணக்கில் கொண்டு பாருங்கள். Certain ideologies have a pre-disposition towards bomb cultures that kill innocents. Definitely Wahabhi Islam is one such virus of the mind whereas both LTTE as well as ULFA had to remove Hindu identities before becoming a full-blown terrorist organizations. Hinduism except in rarest of the rare cases is a compromising moderating influence. Just as even Abrahamic prophet cults can also in rarest of the rare cases show some love for peace and humanism.

  இப்போது உங்களது விளக்கங்களுக்கு வருகிறேன்.
  //இந்தியாவில் யார் பெரும்பான்மையினர்? இந்துக்கள் என்ற மதப்பிரிவினர்தான்.//

  அய்யா என்னுடைய கேள்வியே அதுதான் ஏன் பெரும்பான்மை சிறுபான்மை என்று மத அடிப்படையில் ஒரு மதச்சார்பற்ற நாட்டில் பார்க்கிறீர்கள்? Why is religion made a category for identifying people in a secular country? இதை அம்பேத்கரும் சுட்டிக்காட்டியிருக்கிறார். அரசியலின் categories என்பதே இஸ்லாமிய அடிப்படைவாத அரசியலுக்கும் மதச்சார்பற்ற அரசியலுக்கும் மாறுவதைக் கூறியிருக்கிறார்.

  //தமிழகத்தைப் பொருத்தமட்டில், பார்ப்பனர்கள் சாதி ரீதியில் சிறுபான்மையினர்தான். ஆனால், அவர்கள் அச்சத்தில் வாடுவதாக எனக்குத் தெரியவில்லை.//
  இது முழுக்க முழுக்க தவறான வாதம். உங்களைச் சுற்றியுள்ள யதார்த்த உலகைத்தான் நீங்கள் பார்க்கவில்லை குறைந்த பட்சம் வலைஉலகையாவது பாருங்கள். பிராம்மண வெறுப்பின் உச்சத்தை காண்பீர்கள். அவர்களை நோக்கி நுட்பமான கருத்தியல் வெறுப்பு முதல் படிக்க கூசும் ஆபாச வசைகள் வரை நீங்கள் காணலாம். வலையுலகிலேயே அவர்கள் பிராம்மணர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்கள் உளவியல் ரீதியாக மிகமோசமாக அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்துத்துவர்கள் என கருதும் எந்த வலைப்பதிவராவது இஸ்லாமியர்களை அத்தகைய தனிமானுடக்குழுவின் மீதான வெறுப்புடன் தாக்கியதுண்டா? கருத்து ரீதியாக மட்டுமே முகமதுவை விமர்சித்திருக்கிறார்கள் (நபியாக நம்பப்படும் முகமதுவின் தனிப்பட்ட வாழ்க்கை ஒரு ஆதர்ச வாழ்க்கையாக முன்வைக்கப்படுவதால் அதுவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.) இதனை செய்தவருக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. தவறாக இஸ்லாமை விமர்சித்ததாக சுட்டிக்காட்டப்பட்ட ஒரு தமிழ் எழுத்தாளருக்கும் அச்சுறுத்தல்கள் வீடு தேடியே வந்துள்ளன. இதெல்லாம் அச்சுறுத்தப்பட்டதால் ஏற்படுவதா? இல்லையே இதுதானே பாசிச அத்து மீறிய அச்சுறுத்தல். இந்துக்களிடம் வம்பு செய்து ஒரு மிக மோசமான provocationஐ உருவாக்கி கலவரத்தை ஏற்படுத்துவதும் அந்த கலவரத்தை பயன்படுத்தி ஒரு குண்டு வெடிப்பை நடத்தி அதனை கலவரத்தின் மூலம் நியாயம் செய்வதுமாக - இந்த முறையில் இவர்கள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இறுதிக்கனவு கடைசி காஃபீர் குழந்தையையும் இல்லாமல் செய்வது. மாலேகாவ்ன் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் - யாராக இருந்தாலும் அவர்கள் இந்துக்களோ முஸ்லீம்களோ- வன்மையாக கண்டிக்கிறேன். அந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் இந்துக்களாக இருக்கும் பட்சத்தில் பதிலடியாக - இந்துக்களை வஞ்சித்த அரசியலின் விளைவால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவாக- இதனை செய்திருக்கிறார்கள். இஸ்லாமிய பயங்கரவாதம் இந்த தேசத்தின் மீது தொடர்ந்து நிகழ்த்தி வரும் தாக்குதல்களை இந்திய அரசியல் கட்சி வட்டங்களுக்கு அப்பால் உணர்ந்து தடுத்து நிறுத்தினால் - அந்த பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணான வஹாபியிசத்தின் மீது அதே வன்மையுடன் கருத்தியல் தாக்குதல் நிகழ்த்தி அதனை அழித்தால் ஒழிய குண்டு வெடிப்புகள் நிற்கப் போவதில்லை. காலத்தை செலவிட்டு பதிலளித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 10. // திருப்தியுடன் மக்கள் இருக்கும் ஓரிடத்தில், அந்நியச் சக்திகள் முஸ்லிம்களைத் தூண்டி பயங்கரவாதத்தை ஏற்படுத்தமுடியும் என்று நான் நம்பவில்லை.//

  தனது புத்தகம், தனது இறைதூதர், தனது நம்பிக்கை தவிர மற்ற நம்பிக்கைகள் பொய்யானவை, அழிக்கப்படவேண்டியவை என்று சொல்லுபவர்களுக்கு திருப்தி எப்போது கிட்டும் ?

  ReplyDelete
 11. பத்ரி

  பிராமணர்கள் அச்சத்துடன் வாழ்வதில்லை என்று அனைத்துப் பிராமணர்களின் ஏகபோகப் பிரதிநிதியாகப் பேசுகிறீர்களே.

  புத்தூர் அக்ரஹாரத்திலும், ஸ்ரீரங்கத்திலும் இன்னும் நூற்றுக்கணக்கான அக்ரஹாரங்களிலும் பிராமணர்கள் ஒவ்வொரு முறையும் தி மு க வெற்றி பெறும் பொழுது தாக்கப் பட்டே வருகிறார்கள். உடம்பு பூராவும் ரத்தக் காயங்களுடன் கொலை வெறி பிடித்த தி மு க வினரால் தாக்கப் பட்டு உயிர் தப்பி வீடு வந்த என் தந்தையை சிறு வயதில் நான் கண்டு அடைந்த நடுக்கம் இன்று வரை போகவில்லை. தமிழ் நாட்டு பிராமணர்கள் மனதில் ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களிடம் இருந்த அதே அச்சம் நிலவி வருகிறது என்பதே உண்மை நிலை. இன்று கருணாநிதி முரசொலியில் ஜெயலலிதாவை எத்தனை முறை கடும் வெறியுடன் பாப்பாத்தி என்று எழுதியிருக்கிறார் என்பதைப் படித்தீர்களா? அதைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதும் நேர்மை உங்களுக்கு உண்டா? அதைப் படிக்கும் ஒவ்வொரு பிராமணன் மனதிலும் அச்ச உணர்வு ஏற்படுவதில்லை என்று எப்படிக் கூசாமல் எழுத முடிகிறது? ஆனால் அந்த அச்சத்தினால் எந்த பிராமணனும் வெடி குண்டை எடுத்துக் கொண்டு கிளம்பி விட வில்லை. இதற்கு முன்பாக ஒரு முறை திவ்யபிரபந்தத்திலும் பிற மத வெறுப்பு இருக்கிறது என்று சொல்லி இஸ்லாமியத் தீவீரவாதியான உங்கள் ஆஸ்தான எழுத்தாளர் நாகூர் ரூமிக்கு வக்காலத்து வாங்கியிருந்தீர்கள். எத்தனை வைணவர்கள் பிரபந்தத்தைப் படித்து விட்டு குண்டு வைத்தார்கள் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்ற கணக்கு உங்களிடம் உண்டா ?

  அப்சல் குருவை விடுவிக்கச் சொன்ன பொழுதும், மதானியின் விடுதலைக்காக தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் கையெழுத்து வேட்டை ஆடிய பொழுதும். இதே போன்று கண்டித்து நீங்கள் கட்டுரை எழுதியது உண்டா. உடல் கருகிச் செத்த, கையையும் காலையும் இழந்த அப்பாவிகளுக்குத்தான் அதன் வலியும் வேதனையும் புரியும். இந்துக்கள்தான் இன்றைய நிலையில் இந்தியாவில் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  இந்தியாவில் சிறுபான்மை என்பது பல அடுக்குகளில் உள்ளது. மாநிலத்துக்கு மாநிலம் மொழிக்கு மொழி வேறு படுவது. ஒவ்வொரு சிறுபான்மையினரும் ஒவ்வொரு விதமான அச்சத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எவரும் அந்த அச்ச உணர்வைக் காட்டி குண்டு வைப்பதை நியாயப் படுத்துவதை விட ஈனமான செயல் எதுவும் இருக்க முடியாது.

  லண்டனில் நடந்த குண்டு வெடிப்பையும், பெஸ்லானில் ஈவு இரக்கமன்றி எரித்துக் கொல்லப் பட்ட சிறுவர்களின் படுகொலைகளையும் நியாயப் படுத்திய நீங்கள், இந்தியாவில் இது நாள் வரை தீவீரவாதிகளுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியவர்களைக் கண்டித்திராத நீங்கள், இப்பொழுது ஒரு இந்துவின் மேல் குற்றம் சாட்டப் படும் பொழுது ஆவேசமாகக் கண்டிப்பது போலித்தனமான இரட்டை வேடம் அன்றி வேறு என்ன?

  மாலேகானில் அப்படியே இந்துக்கள் குண்டு வைத்திருந்தாலும் அது மதத்தின் பெயரால் நடத்தப் பட்டது அல்ல. பிற மதத்தினரைக் கொன்று அழிக்க வேண்டும் என்று குரானைப் படித்து விட்டு எழுந்த கொலை வெறி அலல. தம் சொந்தச் சொந்தச் சகோதர்கள் உடல் வெடித்துச் சிதறுவதைக் காணப் பொறுக்காமல் எடுக்கப் பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக மட்டுமே அதைக் காண முடியும். அப்படி அவர்கள் செய்திருப்பது உறுதிப் படுத்தப் பட்டால் எந்த இந்துவும் அவர்களுக்குத் தண்டனை தரக் கூடாது என்று போராட்டமோ, கையெழுத்து இயக்கமோ நடத்தப் போவது இல்லை. அவர்களுக்குச் சட்டப் படி என்ன தண்டனை வழங்க வேண்டுமோ அதை வழங்கட்டும். அவர்கள் செய்திருந்தால் அது சட்டப் படி குற்றமே. தண்டைக்குரியதே.


  அதையும் மதத்தின் பெயரால் உலகம் முழுவதும் நடத்தப் படும் இஸ்லாமியப் படுகொலைகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முயல்பவர்கள் என் பார்வையில் அந்தத் தீவீரவாதிகளை விடவும் இழிவானவர்களே.

  வேதனையுடன்
  ச.திருமலை

  ReplyDelete
 12. மிகச் சரியாகச் சொன்னீர்கள்,திருமலை !

  இதற்கு பத்ரி பதிலளிப்பார் என்று நம்புகிறேன்

  ReplyDelete
 13. //உல்ஃபா என்பது இந்துக்கள் நிறைந்த தீவிரவாத இயக்கம்தானே? இந்து என்றால் குண்டு வைக்கமாட்டான்; முஸ்லிம் என்றால் எப்போதும் குண்டு வைப்பான் என்ற எண்ணம் அபத்தமானது.//


  பத்ரி,

  மிகவும் தவறான ஒப்பீடு. இந்தக் கட்டுரையில் நீங்கள் முஸ்லிம் சார்பு நிலையையையும் இந்து எதிர்ப்புநிலையையும் எடுத்திருக்கிறீர்கள். உல்ஃபா தீவிரவாதத்தின் நோக்கம் இந்து தொடர்புடைய ஒன்றல்ல. ஆனால் இஸ்லாமிய தீவிரவாதம் எப்போதும் இஸ்லாமை மையமாக வைத்தே செய்யப்படுகிறது.

  நடராஜன்.

  ReplyDelete
 14. (மாவோயிஸ்ட்களுக்கும் எல்டிடியினருக்கும் சர்ச்க்கும் கள்ளத்தொடர்பு இருப்பது வேறு கதை)

  Catholic Church is mostly agains any form human suppression.
  For example, Jesuit Refugee Service is servicing tamil refugees in India. Jesuits are running schools war torn LTTE controlled areas of Srilanka. if you want to know the chruch stand against Hitler,http://en.wikipedia.org/wiki/Clemens_August_Graf_von_Galen search

  ReplyDelete
 15. மாவோயிஸ்டுகள் சர்ச்சின் தூண்டுதலின் பேரில் தான் ஒரிஸாவில் விஷ்வ ஹிந்து பரிஷத் சாமியாரைக் கொலைசெய்ததாக ஓப்பனாகவே சொல்லியிருக்கிறார்கள். இங்கு வந்து மாவோயிஸ்டுகளுக்கும் சர்ச்சுக்கும் தொடர்பு இல்லை என்று சொல்பவர்கள் நிச்சயமாக கனவு லோகத்தில் தான் மிதந்துகொண்டிருக்கிறார்கள்.

  ReplyDelete
 16. சித்தாந்த ரீதியில் முஸ்லிம்கள் மட்டும்தான் குண்டுவைக்கும் பயங்கரவாதிகள் ஆகமுடியும்; முக்கியமாக இந்துக்கள் எப்போதும் இந்தச் செயலைச் செய்யமுடியாது என்பதுதான் இந்துத்துவவாதிகளின் குரலாக இருந்தது. இன்று பதறுபவர்கள் இந்துத்துவவாதிகள்தான். அதனால்தான் கோபிநாத் முண்டே, பிரவீன் தொகாடியா போன்றோர் சில இந்துக்கள் திட்டம் தீட்டி குண்டு வைக்கக்கூடியவர்களாக இருக்கவே முடியாது என்று இன்றும் தீர்மானமாகச் சொல்கிறார்கள். நரேந்திர மோடி பதறுகிறார். உமா பாரதி, ஓடிவந்து சாத்வி பிரக்ஞாவுக்கு தேர்தலில் நிற்க சீட் தருவேன் என்கிறார். மஹாராஷ்டிரா போலீஸ், வேண்டுமென்றே பொய் வழக்கு போடுகிறார்கள் என்கிறார்கள். இன்று தோண்டத் தோண்ட ராணுவத்திலிருந்து சில எலும்புகள் தென்படத் தொடங்கியுள்ளன.

  விசாரணை முடியட்டும்; உண்மை என்ன என்று வெளியே தெரிய வரட்டும்; வழக்கு நடக்கட்டும். ஏன் அதற்குள் பதற்றம்?

  ***

  எல்லாவித சிறுபான்மையினரும் குண்டுவைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் குண்டுவைக்கவேண்டிய அளவுக்கு - அல்லது வன்முறையில் இறங்கும் அளவுக்கு எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் - தமிழகமும் சேர்த்து - இன்றும் அடி, உதை, வன்கலவி என்று பாதிக்கப்படுபவர்கள் தலித்கள்தான். அதற்கு பார்ப்பனர்கள் காரணமல்ல என்றாலும் இன்று கையில் தீப்பந்தம் ஏற்றிக்கொண்டு கொளுத்துவதில் தலித்கள்தான் ஈடுபடவேண்டுமே தவிர பார்ப்பனர்கள் அல்ல.

  திருமலையின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த துரதிர்ஷ்டமான விஷயம் பற்றி இங்கே கருத்து கூற நான் விரும்பவில்லை. எனக்குத் தெரிந்து, பார்ப்பன சக்திகள் கையில் இருக்கும் ஊடகங்கள்கூட 2 வருடங்களுக்கு முன் திமுக ஜெயித்தபோது பார்ப்பனர்களுக்கு எதிராக என்ன வன்முறை நடந்தது என்று பிரசுரிக்கவில்லை. ஏனெனில் எதுவும் நடக்கவில்லை. 1960, 1970-களில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், திமுக ஜெயிக்கும்போதெல்லாம் பார்ப்பனர்கள் வீட்டுக்குள் ஓடி ஒளிந்தமாதிரி திருமலை சித்திரிப்பது அபாண்டம்.

  பார்ப்பான், பார்ப்பான் என்று துவேஷம் பாராட்டி அபத்தமான கவிதைகள் எழுதுவதற்கும், அசிங்க அசிங்கமாக கட்டுரைகள் எழுதுவதற்கும் மு.கருணாநிதியும் வீரமணி கோஷ்டியினரும் சளைப்பதில்லை. அதனால் பார்ப்பனர்கள் எந்தவிதத்திலும் கவலைப்படவேண்டியதில்லை என்பது என் கருத்து. ஸ்ரீரங்கம் பெரியார் சிலை தகர்ப்பை அடுத்து சென்னை அயோத்தியா மண்டபம் அருகில் பிராமணர்கள்மீது நடைபெற்ற தாக்குதல்கள் கண்டிக்கப்படவேண்டியவை. அதில் ஈடுபட்ட குண்டர்கள் சிறையில் தள்ளப்பட்டார்களா என்று தெரியவில்லை.

  ***

  நான் எந்தவிதமான தீவிரவாதச் செயல்களையும் ஆதரிப்பதில்லை. அப்படியான ஒரு சாயத்தை என்மீது புசி, அதனால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்றால், எனக்குச் சந்தோஷமே.

  தீவிரவாதத்தை அழிக்கவேண்டும் என்றால், அதன் அடிப்படையைச் சோதிக்கவேண்டும். அந்த ஆதார விஷயத்தைச் சரி செய்யாவிட்டால், தீவிரவாதம் தொடர்ந்தபடியேதான் இருக்கும்.

  அதுதான் என் கொள்கை.

  தீவிரவாதத்திலும், பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் தீவிரவாதத்துக்கும் வித்தியாசம் உண்டு என்று நான் நம்புகிறேன். இதில் பலருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.

  ReplyDelete
 17. There is islamic terrorism.Our 'secular', 'left', and 'progreesive' bodies and those assocaited with them refuse to accept it. They indirectly justify violence by muslims.They will question everything said by police when it comes to accusations against muslim organizations and muslims but will accept everything when it comes
  to police accusing of hindus and hinduvta groups.
  Badla house has been converted in to humanrights tourist spot. PUCL invites of all the people, president of TMMK to speak on Kashmir.He speaks without criticising Pakistan and finds all the fault with India.A.Marx openly states that Pakistan is better than India in many ways
  and has the audacity to write so many lies
  to support his claim.Today it is fashionable
  for the so called intellectuals ranging from
  Arundati Roy to Charu Nivedita to argue for separating Kashmir from India.In sum and substance many of the so called intellectuals,
  writers, leftists and progressives are anti-India
  and among them some are anti-India AND anti-Hindu.They get enough space in media and such views are mixed with so many other anti-Indian
  views including tamil chavunism.You are taught to hate the country and the very idea of india is
  questioned.If you read Uyrimmai, Keetru and Kalachuvadu you will find
  that these views are expressed as if they are the
  correct views.This is the reality. If this trend
  continues I will not be surprised if those who hate Hindutva take a stand that to save this country from these anti-national and anti-hindu forces including 'secularists', 'left parties' and 'progressives', it is better to support
  hindutva organizations so that the nation survives and india's integrity and sovergnity are not in doubt.My views matter and not my name.a blogger.

  ReplyDelete
 18. சிறுபான்மை பயங்கரவாதம் பயத்தால் வருவது.
  This fear is imagined and promoted.Minorities in India are not treated by Hindus as second class citizens. Indian society is by and large tolerant and secular.India's syncretic traditions are largely responsible for this.
  But instead of highlighting what is positive in this country and assuring muslims that Hindus are not their enemies, 'secular', 'left' 'intellectuals' and their organizations create a fear psychosis among
  muslims to settle their political scores against BJP.I think they have a vested interest in making minorities feeling unsafe and threatened
  so that they can politically win against BJP.
  So they appease muslims in various ways ranging from demanding reservations to muslims to asking for setting aside 15% of budget in each department to muslims.In fact they are the real enemies of muslims and muslims dont realise this.

  ReplyDelete
 19. These leftist maggots still call All Islamic Terror groups as "militants" while they have no qualms in coining and publicizing the word "Hindu Terrorism" in all major news channels and dailies.

  ReplyDelete
 20. பத்ரி, தமிழ் நாட்டில் பிராமணர்கள் மீது தாக்கதலே இல்லை என்று நீங்கள் பூசி மொழுகுவது வேடிக்கையாக இருக்கிறது. தாக்குதல் என்பது உடல் ரீதியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நீங்கள் புரிந்து வைத்திருப்பது சிறுபிள்ளைத்தனமானது. ஒரு மாநிலத்தில் முதல்வரே ஒரு குறிப்பிட்ட ஜாதிப் பெண்களைப் பாப்பாத்தி என்று எழுதும் பொழுதும் பேசும் பொழுதும் அதை உங்களைப் போன்ற விமர்சகர்கள் கண்டு கொள்லாமல் போக வேண்டும் என்று சொல்லும் பொழுதும் அது ஏற்படுத்தும் உளவியல் ரீதியான தாக்குதல்கள், பிற விளைவுகள் உங்களுக்குப் புரிவதில்லை அல்லது புரியாதது போல நடிக்கிறீர்கள். அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று எண்ணிக் கொள்வது பிரச்சினைகளை எதிர் கொள்ள முடியாத, கோழைத்தனமான போக்கு.
  குறைந்த பட்சம் அதைக் கண்டித்து ஒரு பதிவு போடும் நேர்மை கூட உங்களிடம் இலலாதது வருத்ததிற்குரியது.


  இன்று தமிழ்நாட்டில் பிராமணர்கள் தாக்கப் படுவதில் நூற்றில் ஒரு பங்கு கூட இஸ்லாமியர்கள் தாக்கப் படுவதில்லை என்பதுதான் உண்மை. அதை மறைத்து இஸ்லாமியர்கள் அச்சத்தில் வாழ்வது போன்ற ஒரு பொய்யான உணர்வை ஏற்படுத்துவது உங்கள் ஒரு தலைப் பட்சமான உள்நோக்கம் உள்ள எண்ணத்தையே காட்டுகிறது. தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் இது வரை எத்தனை இந்துக்கள் குண்டு வெடிப்பில் செத்திருக்கிறார்கள் என்ற கணக்கைப் பார்த்தால் உங்களுக்கு யார் அச்ச உணர்வில் வாழ்கிறார்கள் என்ற உண்மை எளிதாகத் தெரிந்திருக்கும்.


  அப்படி நீங்கள் சொல்வது போல தலித்கள் அச்ச உணர்வில் வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் கூட எந்தவிதமான குண்டு வைப்புக்களிலும் ஈடுபடுவதில்லை. அப்படி இருக்கும் பொழுது முஸ்லீம்கள் தாக்கப் படுகிறார்கள் என்று பச்சைப் பொய்யைப் புளுகி விட்டு அதனால் அவர்கள் குண்டு வைத்தால் நியாமம்தான் என்றும் சொல்லி விட்டு இப்பொழுது மழுப்புகிறீர்கள். இந்தியாவை விட முஸ்லீம்கள் வேறு எங்கும் பாதுகாப்பாக வாழ்வதில்லை என்பதுதான் உண்மை நிலை.


  தன் மதத்தைத் தவிர பிற மதத்தினர் வாழக் கூடாது அவர்களைக் கொல்ல வேண்டும் என்ற வெறி ஒன்றே இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியத் தீவீரவாதம் பரவி வருவதன் ஒரே காரணம். அதை மறைத்து அவர்களுக்கு அச்ச உணர்வு அதனால் குண்டு வைக்கிறார்கள் என்று சொல்வது எல்லாம் சுத்தப் பேத்தல். நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தை தாக்கிய அரபிக்கள் எல்லோரும் வசதியான பணக்கார அரபிக்களே அவர்களுக்கு என்ன அச்ச உணர்வு இருந்திருக்கக் கூடும்? பாலியிலும், பாக்கிஸ்தானிலும் பாக்தாத்திலும் அனு தினமும் ஏன் குண்டு வைக்கிறார்கள்? எந்த அச்ச உணர்வினால் அங்கெல்லாம் குண்டு வெடிக்கின்றன? சொல்ல முடியுமா? வெறுப்பின் அடிப்படையில் மட்டுமே உலகம் முழுக்க தீவீர்வாத முஸ்லீம்கள் படுகொலை செய்து வருகிறார்கள். நீங்கள் சொல்வதை அமைதியை விரும்பும் எந்த முஸ்லீமும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  கோத்ராவுக்காக நடந்த பதில் தாக்குதலும், மாலேகானில் நடந்ததாகக் குற்றம் சாட்டப் படும் பதில் தாக்குதல்களும் மட்டுமே அச்ச உணர்வின் வெளிப்பாடாக அமைந்து வருகிறது. நீங்கள் கதையையே மாற்றுகிறீர்கள். இவன் இந்து இவனைக் கொல்ல வேண்டும் என்று நினைப்பதுதான் வெறுப்பு. அப்படி ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைக்கும் இந்தியர்கள்தான் அச்ச உணர்வில் வாழ்கிறார்கள். இப்படி எழுதுவது உங்களுக்குப் பெரிய அறிவு ஜீவி, மதச்சார்பின்மைவாதி என்ற இமேஜை ஏற்படுத்தலாம். ஆனால் போலியான இமெஜை விட உண்மை என்பதும் மனசாட்சி என்பதும் போலியாக உருவாக்கிக் கொள்ளப் படும் மதிப்பீடுகளை விட மிகப் பெரியது.

  நீங்கள் இது வரை நடந்த குண்டு வெடிப்புக்களில் ஈடுபட்ட தீவீர்வாதிகளை விடுவிக்க உங்களைப் போன்ற பி செக்குகளும், மீடியாக்களும் முயன்ற பொழுதெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு அல்லது அதற்கு ஆதரவு தெரிவித்தும் இருந்து விட்டு இப்பொழுது ஒரு இந்து குற்றவாளிக் கூண்டில் ஏறியவுடனேயே பதற்றம் அடைந்து விசாரணை முடியும் முன்பாகவே பெரும் தடியை வைத்து அடித்துக் கொல்ல வேண்டும் என்று தீர்ப்பு எழுதுகிறீர்கள். இதற்கு முன்பாக மதானியை தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் விடுவிக்க கையெழுத்து வேட்டையாடிய பொழுதும், கீலானியை விடுவிக்க அருந்ததிராய் போன்றோர் முயற்சித்த பொழுது, அப்சல் குருவிற்காக ஒட்டு மொத்த இந்திய பி செக்குகளும் போராடிய பொழுதும் இதே போல நீங்கள் கண்டித்தது உண்டா? அப்பொழுதெல்லாம் சும்மா இருந்து விட்டு இப்பொழுது மட்டும் துள்ளிக் குதித்து கண்டிப்பானேன்? இது என்ன விதமான நேர்மை? ஒரு விஷயத்தைக் கண்டிக்க வரும் முன் அதே விஷயத்தில் கடந்த காலத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை குறைந்த பட்சம் கண்ணாடியில் பார்த்து விட்டு வந்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள்.இங்கு பதற்றப் பட்டு ஓடி வந்து பெரிய தடியால் அடிக்க வேண்டும் என்று சொன்னது நீங்கள் தான், மோடியோ, அத்வானியோ அல்ல. அரசாங்கம் தன் கடமையைச் செய்யாமல், ஓட்டுக்காக மக்களைப் பாதுகாக்காமல் இருக்கும் பொழுது பல சாத்விக்கள் உருவாகவே செய்வார்கள் தங்கள் உயிரை அரசாங்கம் காக்காது என்ற அச்ச உணர்வின் காரணமாக உருவாகிறார்கள் அவர்கள்.

  என்னமோ போங்க மெத்தப் படித்த உங்களைப் போன்றவர்களே இப்படி சிந்தித்தால் இந்தியாவின் எதிர்காலம் குறித்து அச்சமும் அவநம்பிக்கையுமே ஏற்படுகிறது.

  அன்புடன்
  ச.திருமலை

  ReplyDelete
 21. //ஆனால், திமுக ஜெயிக்கும்போதெல்லாம் பார்ப்பனர்கள் வீட்டுக்குள் ஓடி ஒளிந்தமாதிரி திருமலை சித்திரிப்பது அபாண்டம்.//

  திமுகவின் வெற்றியை வெடி வெடித்து கொண்டாடிய இருள்நீக்கியின் சீடர்கள் எல்லாம் யார்? பாப்பாத்தி என்று கொலை வெறி தாக்குதல் நடத்தும் கருணாநிதிக்கும் அவரின் பிள்ளைக்கும் பிறந்தநாள் மற்றும் விசேஷ நாட்களில் பழம் கொடுத்து அனுப்பும் காஞ்சி மடத்தில் இருப்பவர்கள் யார்?

  பாப்பாத்தி என்பது உளவியல் ரீதியான தாக்குதலா? அப்படி என்றால் சட்டமன்றத்தில் தான் ஒரு பாப்பாத்தி என்று புரட்சிதலைவி முழங்கியது??

  ReplyDelete
 22. Please check Dinakaran of Nagercoil edition (which at that time supported DMK) on the date of the results announcement of the last general elections in Tamil Nadu. Soon after the announcemet Hindu temples were attacked and Idols were vandalized. Since then more than 25 cases of hate crimes against Hindus have happened in Kanyakumari district alone. Yes there is a correlation between hate-crimes against Hindus and DMK rule. A chief minister himself indulging in such hate speeches and nobody bothering to control his senile manifestation of hatred - are indicators of civilized Tamil society slipping into an abyss that resembles pre-holocaust Germany. A more proper parallel is the Rwandan genocide where Churc-fuelled rhetoric against Tutsis by Hutus which was preceeded by hate speeches against Tutsis which were done under the name of social justice. -S.Aravindan Neelakandan

  ReplyDelete
 23. //
  தீவிரவாதத்தை அழிக்கவேண்டும் என்றால், அதன் அடிப்படையைச் சோதிக்கவேண்டும். அந்த ஆதார விஷயத்தைச் சரி செய்யாவிட்டால், தீவிரவாதம் தொடர்ந்தபடியேதான் இருக்கும்.

  அதுதான் என் கொள்கை.
  //

  சிறப்பு

  7ம் நூற்றாண்டில் உருவான ஒரு இறுகிய கொள்கை அடிப்படை தீவிரவாதம் தான் இன்று தீவிரவாதத்தின் வேர் என்று அறுதியிட்டுக் கூறும் தைரியம் உங்களிடம் உண்டா ?

  ReplyDelete
 24. சிறுபான்மை பயங்கரவாதத்துக்கும் பெரும்பான்மை பயங்கரவாதத்துக்கும் உள்ள வேறுபாடு மும்பை பயங்கரங்களைப் பார்த்தபிறகாவது உங்களுக்கு புரிந்திருக்கும் இல்லையா? புரியவில்லை என்றால் சொல்கிறேன் கேளுங்கள்:

  ஜிஹாதி பயங்கரவாதிகளுக்கு ஆயுத சப்ளை, பண உதவி, லாஜிஸ்டிகல் உதவி, கொலை செய்து விட்டு ஓடினால் அடைக்கலம் என்று அத்தனையும் செய்ய பயங்கரவாத முஸ்லீம் நாடுகள் தயாராக இருக்கின்றன. அப்படியே தப்பிப்போய் மாட்டிக்கொண்டாலும் சில பேரைப் பணயக்கைதிகளாக்கி காந்தஹார் கடத்தல் போல ஏதாவது ஒன்றை நிகழ்த்தி அவனைத் தப்பிக்க வைக்க பிற ஜிஹாதி நாடுகள் தயாராக இருக்கின்றன. அப்படியே இல்லையென்றாலும் மரணதண்டனை விதிக்கப்பட்டாலும் கூட கொல்லப்பட்ட அதே இந்தியர்களின் வரிப்பணத்தில் சுகமாய் ஜெயிலுக்குள் உட்கார்ந்து சாப்பிட ஓட்டுப்பொறுக்கி செக்யுலரிஸம் இருக்கவே இருக்கிறது. ஆனால் நிருபிக்கப்படாவிட்டால் கூட ஹிந்து பயங்கரவாதி என்று ஒருவரைத் தடியாலடித்துக்கொல்ல உங்களைப்போன்ற உள்ளூராட்களே தயாராகி விடுகிறீர்கள். இதுதான் வித்தியாசம்.

  சொல்லப்போனால், பெரும்பான்மை பயங்கரவாதம் என்பது ஹிந்து சமூகத்திற்கு அப்ளை செய்யவே முடியாது. மராட் கலவரம் ஹைதராபாத் ஹிந்துவை பாதிப்பதில்லை. மண்டைக்காடு மஹாராஷ்டிரா இந்துவைத்தொடுவதில்லை, தென்காசி ப்ரச்னை பற்றிய பிரக்ஞை கன்னட இந்துக்கில்லை. அமர்நாத் பிரச்சனை தமிழ் இந்துவைத் தொடுவதில்லை. ஆனால் ஈராக் இஸ்லாமியன் அமெரிக்க குண்டில் செத்தால் இந்தியாவில் விளக்கு பிடிக்கப்படுகிறது. காஷ்மீர் இந்துக்களைக்கொல்ல கேரள முஸ்லீம் செல்கிறான். மதானி என்ற கேரள முஸ்லீம் பயங்கரவாதியின் விடுதலைக்கு கம்யுனிஸ்ட் அச்சுதானந்தன் லாபி செய்கிறார். மும்பை பயங்கரங்களை நிகழ்த்திய பன்றிக்கூட்டம் ஏழ்மையால் இவற்றை நிகழ்த்தியது என்று கூசாமல் அஸ்ரா நுபானி என்பிஆரில் பேசுகிறாள். யார் பெரும்பான்மை, யார் சிறுபான்மை இங்கே?

  இஸ்லாமியனாக இருக்கும் பட்சத்தில் நிரூபிக்கப்பட்ட பயங்கரவாதிக்குக்கூட பரிந்து கொண்டு பேச மனித உரிமை அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுகின்றனவே. நிரூபிக்கப்படாதபோதே பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்ட ஒரு இந்துவுக்கு வக்கீல் கூட வைக்கக்கூடாதென்று சொல்கிறீர்களே நீங்கள். இப்போது சொல்லுங்கள், இங்கே கோலோச்சிக்கொண்டிருப்பது இஸ்லாமிய பயங்கரவாதமா, அல்லது இந்து பயங்கரவாதமா என்று.

  "அமைதியான ஓர் இடத்தில், திருப்தியுடன் மக்கள் இருக்கும் ஓரிடத்தில், அந்நியச் சக்திகள் முஸ்லிம்களைத் தூண்டி பயங்கரவாதத்தை ஏற்படுத்தமுடியும் என்று நான் நம்பவில்லை" என்கிறீர்கள். உலகில் எந்த நாட்டிலாவது பிரச்சனையே இல்லாத, அரசின் மீது அதிருப்தியே இல்லாத மக்கள் இருக்கிறார்களா என்ன? இவர்கள் எல்லோரும் அப்பாவி மக்கள்மேல் குண்டு வீசவா கிளம்புகிறார்கள்? எல்லோரையும் திருப்தி செய்யத்தான் முடியாமா? அதற்காக அண்டை நாட்டுடன் கைகோர்த்து குண்டு வைப்பேன் என்றால் அது என்ன வகையான மொள்ளமாறித்தனம்? ரயில் நிலையத்தில் சரமாரியாகச் சுட்டுக்கொன்றானே அவனுக்கு இந்திய மக்கள் மீது உள்ள அதிருப்தியை என்ன செய்து தீர்த்து விட முடியும் பத்ரி?

  குண்டு வெடிப்பு மதவாதக் கொலைவெறியை சிறுபான்மை பெரும்பான்மை என்று நிறம் பிரித்து ஆதரிக்கும் உங்களைப்போன்றவர்கள்தான் பயங்கரவாதிகளுக்கு ஒரு போலி இண்டலெக்சுவல் நியாயத்தை நீங்கள் அறிந்தோ அறியாமலோ கொடுத்து விடுகிறீர்கள். விபரீத விளைவுகளுக்கு வினையூக்கியாக செயல்படுகிறீர்கள்.

  இனியாவது போலி செக்யுலரிஸம் பேசி ஜிஹாதி விஷச்செடிகளுக்கு உரம் போடுவதை விட்டு விட்டு உண்மையை உள்ளபடியே பேசுங்கள். ஜிஹாதி பயங்கரவாதத்தைத் தடவிக்கொடுத்து வளர்க்காமல் எல்லா தளங்களிலும் உறுதியோடு எதிர்த்து நில்லுங்கள்- உன்னிகிருஷ்ணன்களுக்கு நீங்கள் செய்யும் உண்மையான மரியாதையாக அது இருக்கும். உயிர்நீத்த காவல் துறையினருக்கு உங்களின் பிராயச்சித்தமாக அது இருக்கும். அகாலமாய்ப்பிரிந்த பல அப்பாவி உயிர்கள் அமைதியடையும்.

  அருணகிரி

  ReplyDelete
 25. தன்னை ஒரு நடுநிலைவாதியாக காட்டி கொள்ளவே இப்படி எழுதுகிறார்கள்.
  1.எந்த ஒரு கட்சியினரும் கிரீமி லேயர் வேண்டம் அதனால் கடை கோடி மக்கள் பாதிகபடுவர்கள் என்று ஏன் கூற மறுக்கிறார்கள்.
  2.என்றாவது ஒரு திராவிட கட்சி முஸ்லிம்களுக்கும் LTTE கும் உள்ள கருத்து வேறுபாடு குறித்து கூறமுடியுமா?
  இது போன்ற தெளிவில்லாமல் நம்மை வைத்திருப்பதே அரசியல்வாதிகளின் வெற்றிக்கு காரணம்.

  குறிப்பு : நான் எந்த அமைப்பையும் சாராத பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்தவன்
  MURALI

  ReplyDelete