தலாய் லாமா (டென்ஸின் க்யாட்ஸோ), தனது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், சீடர்கள் ஆகியோரோடு இந்தியாவுக்கு ஓடிவந்து தஞ்சம் புகுந்தது 1959-ல். அன்றுமுதல் இன்றுவரை ஹிமாசலப் பிரதேசத்தின் தர்மசாலா என்ற இடத்தில் அவர் தனது ஆன்மிக, அரசியல் தலைமையிடத்தை அமைத்து திபெத்தியர்களின் ஆன்மிக, அரசியல் தலைவராக இருந்துவருகிறார்.
சீனா, திபெத்தை முழுமையாக தன் ஆக்ரமிப்பில் கொண்டுவந்துவிட்டது. அதையடுத்து (வேறு காரணங்கள் இருந்தாலும் தலாய் லாமாவுக்கு இந்தியா கொடுத்த ஆதரவும் ஒரு முக்கியக் காரணம்) சீனா, இந்தியாவுடன் ஒரு போரையும் நடத்திவிட்டது.
சீனாவின் கம்யூனிச அரசைப் பொருத்தமட்டில், தலாய் லாமா ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி. பிற்போக்கு நிலவுடைமைச் சக்தி. முக்கியமாக, சீனாவின் தலைமையை ஏற்க விரும்பாத ஓர் எதிரி. தர்மசாலாவில் இருந்தபடி, திபெத்தியர்களைத் தூண்டிவிட்டு சீனாவில் கலகத்தை ஏற்படுத்தும் அடாவடிப் பேர்வழி.
தலாய் லாமா மற்றும் பாரம்பரிய திபெத்தியரைப் பொருத்தமட்டில், சீனா திபெத்தை விழுங்கப் பார்க்கிறது. ஹான் சீனர்கள் திபெத்தின் பொருளாதாரத்தை ஏற்கெனவே விழுங்கிவிட்டனர். சீன மொழி, திபெத்திய மொழியை அழித்துவிடும். சீனாவின் கம்யூனிசமும் சந்தைப் பொருளாதாரமும் கலந்த குழப்பமான கலாசாரம் திபெத்திய பாரம்பரியக் கலாசாரத்தை நாசமாக்கிவிடும். தன்னாட்சி அதிகாரம் இல்லாத திபெத், தனி அடையாளம் இல்லாமல், சீனக்கடலில் கலந்த பெருங்காயமாகப் போய்விடும்.
தலாய் லாமா, சுதந்தரம் கேட்டுவந்தார். இப்பொது, சீனாவுக்குள் தன்னாட்சி அதிகாரம் போதும் என்கிறார்.
சமீபத்தில் சீனாவுக்கும் தலாய் லாமா தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தையில் பேசவந்த சீனத் தரப்பு அதிகாரிகள் தலாய் லாமாவை கன்னாபின்னாவென்று திட்டிவிட்டு வெளியேறினர்.
தலாய் லாமா, இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறார். இந்தியாவால் என்ன உதவியைச் செய்யமுடியும்?
இந்திய - சீன உறவு கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறும் இந்த நேரத்தில், இந்தியா தர்மசங்கடமான நிலையில் உள்ளது. இந்தியாவுக்கும் திபெத்துக்கும் உள்ள உறவு காலம் கடந்தது. தலாய் லாமா, திபெத்தியர்களுக்கு மட்டுமல்ல, இந்திர்களாலும் மதிக்கப்படும் ஓர் ஆன்மிக குரு.
சீனா, என்றுமே இந்தியாவின் நண்பனாக இருக்கமுடியாது. அதிகபட்சம், சீனா, இந்தியாவின் வெளிப்படையான எதிரியாக இல்லாமல் இருக்கலாம். சீனா சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் சிக்கிமை இந்தியாவின் பிரதேசம் என்று ஏற்றுக்கொண்டது. இன்றும்கூட அருணாசலப் பிரதேசத்தை இந்தியாவுடையது என்று ஏற்பதில்லை. மக்மஹான் (எல்லைக்)கோட்டை சீனா அங்கீகரிப்பதில்லை.
ஆனால், இந்தப் பிரச்னைகள்கூட நாளடைவில் இந்தியாவும் சீனாவும் சுமுகமாகப் பேசி முடித்துக்கொள்ளலாம். இந்தப் பிரச்னைகளுக்கு மாற்றாக இருக்கவேண்டும் என்பதற்காக, சீனாவுக்கு எப்போதும் ஒருபக்கம் பல்வலிபோல திபெத் குடைந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதற்காக இந்தியா தலாய் லாமாவை ஆதரித்தால் அது அற வழிப்பட்ட நிலையாக இருக்காது.
தலாய் லாமாவும் திபெத்தியர்களும் இந்தியாவின் நண்பர்கள்; அவர்களுக்கு இந்தியாவின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று சொல்லும் அதே நேரம், இந்தியா தலாய் லாமாவிடம் நியாயமாக ஓர் உண்மையையும் சொல்லவேண்டும். திபெத் தொடர்பாக, திபெத்தில் தன்னாட்சி உரிமை தொடர்பாக, இந்தியா சீனாவிடம் எந்த முகத்தைக் கொண்டும் பேசமுடியாது. இந்தியா அப்படிப் பேசினாலும் சீனா கேட்கப்போவதில்லை. காஷ்மீர் என்ற கொடியை சீனா பதிலுக்குத் தூக்கும். இந்தியாவில் பல இடங்களில் சுய நிர்ணய உரிமையை வைத்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றை தார்மீக வழியில் எதிர்கொள்ள இந்தியா தயங்குகிறது. ராணுவ வழியில்தான் எதிர்கொள்கிறது. அப்படி இருக்கையில், இந்தியா எந்த முகத்தை வைத்துக்கொண்டு சீனாவிடம் பேசமுடியும்?
அதேபோல, இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை, இந்திய அரசு கண்டுகொள்வதே இல்லை. அதைப்பற்றிப் பேச மறுக்கிறது. அதைப் பற்றி தமிழகத்தில் யாருமே பேசமுடியாது என்ற நிலை இருக்கிறது. திபெத், இலங்கை இரண்டும் ஒரே மாதிரியாக ஆரம்பித்த பிரச்னைகள் இல்லை என்றாலும், அடிப்படையில் இன்று இரு சிறுபான்மையினரும் எதிர்கொள்வது பெரும்பான்மையினரின் அடக்குமுறையைத்தான்.
தலாய் லாமா, இந்தியாவில் தங்கிக்கொண்டு, வேறு அரசுகளின் உதவியைத்தான் எதிர்பார்க்க வேண்டிவரும். இப்போது இருக்கும் நிலையில் அவரது வாழ்நாளில் திபெத்துக்கு விடிவு வரும் என்று தோன்றவில்லை.
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
12 hours ago
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள், சமீபத்தில் தலாய்லாமா ஜெர்மனியோ அல்லது ரஸ்யாவோ சென்ற பொழுது அவரிடம் பேசக்கூடாது என்று சீனா நிர்பந்தித்ததாக படித்தேன், அப்படி இருக்கையில் இதில் நாம் நேரிடையாக தலையிட்டால் சீனாவின் கோபம் அதிகம் ஆகும். திரும்ப அருணாச்சல்பிரேதச பிரச்சினையை கையில் எடுக்கும்.
ReplyDeleteகுசும்பன்: சீனாவின் கோபம் அதிகமாகும் என்பதால் நாம் தலாய் லாமாவுடன் பேசக்கூடாது என்று சொல்லவில்லை. தலாய் லாமாவுக்கும் திபெத்தியர்களுக்கும் நாம் எப்போதுமே இந்தியாவில் வசிக்க, படிக்க, தங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாக்க அனுமதியும் ஆதரவும் தரவேண்டும். அதனால் சீனாவுக்குக் கோபம் வந்தால், ‘போய், உன் வேலையைப் பார்’ என்று நாம் சீனாவிடம் சொல்லிவிடலாம்.
ReplyDeleteஆனால் சீனாவிடம் சென்று திபெத்துக்குத் தன்னாட்சி அதிகாரம் தாருங்கள் என்று நம்மால் பேசமுடியாது; அதற்கான தார்மீக உரிமையும் நம்மிடம் கிடையாது என்பதுதான் என் கருத்து.