Sunday, November 16, 2008

அடிதடி, ரகளை

நான் 6-வதோ, 7-வதோ படிக்கும்போது, பள்ளி மாணவர்கள் அனைவரையும் சினிமா பார்க்க அழைத்துக்கொண்டு போனார்கள். படம் ஏதோ அடாசுப் படம்தான். ஏதோ பிரச்னை. என்னவென்று நினைவில்லை. ஆனால் எங்கள் மாணவர்கள் அன்று படம் பார்க்கமுடியாது என்று திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது சில மாணவர்கள், தெருவில் இருந்த சரளைக் கற்களை எடுத்து தியேட்டரை நோக்கி வீசத் தொடங்கினர். நானும் என் கைக்குக் கிடைத்த கற்களை வீசி எறிந்தேன். ஆனால் திடுமென பயம் வந்தது. யாராவது பார்த்துவிட்டு, என் தந்தையிடம் போய் சொல்லிவிடுவார்களோ என்று. அவரும் அதே பள்ளியில் ஆசிரியராக இருந்தார். ஓடிவிட்டேன்.

பின் 1983 இலங்கைக் கலவரங்களை அடுத்து, தமிழகம் எங்கும் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு இருந்தது. அப்போது நான் 8-ம் வகுப்பு. நாகை தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூட்டமாகக் கிளம்பி சுற்றி இருக்கும் ஒவ்வொரு பள்ளியாக மூடச் சொல்லியபடிச் சென்றனர். முக்கியமாக 11, 12-ம் வகுப்பு மாணவர்கள். 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். நானும் அந்தக் கூட்டத்தோடு சென்றேன்.

எங்களது பள்ளிக்கூடம் இருக்கும் அதே தெருவில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி. ரவுடிப் பசங்கள் வருகிறார்கள் என்பதால் உடனடியாக இழுத்துமூடிவிட்டனர். பின் அங்கிருந்து சி.எஸ்.ஐ இடைநிலைப் பள்ளி (1-8 வகுப்பு வரையிலானது). அங்கும் பள்ளிக்கு விடுமுறை விட்டாயிற்று. அடுத்து தேசிய தொடக்கப் பள்ளி (1-5 வகுப்பு). இதுவும் எங்கள் தேசிய மேல்நிலைப் பள்ளியின் அதே நிர்வாகத்தின் கீழ் இயங்குவது. ஏதோ காரணத்தால் அவர்கள் பள்ளியை மூடவில்லை. அங்கு எங்கள் மாணவர்கள் ரகளை செய்தனர். தலைமை ஆசிரியர் கடுப்பாகி, மூட மறுத்துவிட்டார். உடனே கல்லடி. அதற்கு அடுத்த தெருவில்தான் என் வீடு. அதனால் கொஞ்சம் பயத்தோடு நான்கு கற்களை விட்டெறிந்துவிட்டு, நைஸாகக் கழற்றிக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.

அதற்கு சில வருடங்களுக்கு முன் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, கருணாநிதியைக் கைதுசெய்தார். பள்ளிக்கூடம் முடிந்து நான் பெருமாள் கோவில் தேர் நிலையைத் தாண்டி வீட்டுக்குப் போகவேண்டும். தேருக்குப் பின், புளியமரத்தடி பாபுவும் அவரது நண்பர்கள் சிலரும் நின்று முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

கெரசின் பாட்டிலெல்லாம் ரெடியா? ரெடி. நாளைக்குக் காலைல...

அடுத்த நாள் வேளாங்கண்ணி செல்லும் 2-ம் நம்பர் பஸ்ஸைக் கொளுத்திவிட்டனர். பாபு பின்னர் நகராட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு, எங்கள் வார்ட் கவுன்சிலர் ஆனார். எங்கள் தெருவுக்கு குப்பைத்தொட்டி கொண்டுவந்தார். தண்ணீர்ப் பஞ்ச காலத்தில் டேங்கரில் தண்ணீர் கொண்டுவந்தார். பின் அகாலத்தில் - 35 வயதுக்குள்ளாக - மாரடைப்பால் காலமானார்.

எங்கள் பள்ளிக்கூடத்தில் ஒருமுறை ஸ்டிரைக் நடந்தது (2 நாள்). காரணம் ஞாபகத்தில் வரவில்லை. பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது. அப்போதும் கல் எறிந்தார்கள் என்று கேள்விப்பட்டேன். நான் போகவில்லை. என் தந்தை விடவில்லை.

நாகப்பட்டிணத்தில் உருட்டுக் கட்டைகள், கத்திகள், இரும்புத் தடிகள் என்று பள்ளி, பாலிடெக்னிக்கில் நான் பார்த்ததில்லை, கேட்டதில்லை. சாதிரீதியாக மாணவர்கள் சண்டை போட்டதாகவும் சரித்திரம் இல்லை.

திருவாரூர் காலேஜில் நிறைய ஸ்டிரைக் நடக்கும். சண்டைகள் எல்லாமும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கத்திக் குத்து நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அப்படித்தான் அங்கே படித்த நண்பன் பசுபதி சொல்லி ஞாபகம். மீண்டும் உறுதி செய்துகொள்ளவேண்டும்.

என் எதிர்வீட்டில் இருந்த நண்பன் சுரேஷ், சிதம்பரத்துக்கு அருகில் இருந்த ஒரு பாலிடெக்னிக்கில் படித்தான். அங்கே ஹாஸ்டலில் நடந்த ஊழலைக் கண்டுபிடித்த காரணத்தால் “நிர்வாகம்” ஒரு மாணவனை ஆள் வைத்து அடித்துவிட்டது. அது பிரச்னையாகி, Students Federation of India அங்கே ஸ்டிரைக் செய்தது. அப்போது மாணவர்கள் பலருக்கும் “நிர்வாகத்தினரிடமிருந்து” உயிர் மிரட்டல் வந்தது என்று சுரேஷ் சொல்லியிருக்கிறான். (சில வருடங்களுக்குப் பின்னர், நான் அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்றபோது, சுரேஷ், தஞ்சாவூரில், லாரி ஏற்றிக் கொல்லப்பட்டான். அது வேறு கதை.)

1980கள் வரையில் தமிழகக் கல்லூரிகளில் பெரிய அளவில் வன்முறைகள் நிகழ்ந்திருக்கும் என்றும், 1990களில் ராகிங் தவிர்த்து, பெரும்பாலும் வன்முறைகள் குறைந்துவிட்டதாகவும் எனக்கு ஓர் எண்ணம். 2000-த்துக்குப் பிறகு, மாணவர்கள், தாம் உண்டு, தம் வேலையுண்டு என்று படித்து, பாஸ் மார்க் வாங்கி, அல்லது தெருவில் அலைந்து ஃபெயில் ஆகி, ஏதோ வேலைக்குப் போய், மிடில் கிளாஸ் மாதவனாக, மதியழகனாக, மாடசாமியாக வாழ்க்கையைக் கவனிப்பார்கள் என்று நினைத்திருந்தேன்.

வியாழன் காலையில் அந்த எண்ணம் முற்றிலுமாகத் தகர்ந்தது.

***

இன்று ஜெயா பிளஸ் அல்லது மைனஸில் ரபி பெர்னார்ட், இந்த விஷயத்தைப் பற்றி பத்திரிகையாளர் ஞாநி, பாஜகவின் எச்.ராஜா மற்றும் கலிவரதன் (யார் என்று தெரியவில்லை) என்ற ஓர் அரசியல்வாதி ஆகியோருடன் பேசினார்.

கலிவரதன் பேசியதிலிருந்து அவர் அதிமுககாரர் என்பதுபோலத் தெரிந்தது. கருணாநிதி ஆட்சியில் வன்முறை எப்போதும் பெருகும் என்று பேசினார். இது அபத்தம். அம்மா ஆட்சியில் நாட்டில் அமைதி நிலவியது என்றால் மூன்று கல்லுரி மாணவிகளை பஸ்ஸோடு எரித்தது எதில் சேர்த்தி? கலிவரதன் பேசும்போது, திருச்சி செயிண்ட் ஜோஸப் கல்லூரியில் சில மாணவர்கள் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்த்து, நாய் ஒன்றின் கழுத்தில் டாக்டர் என்று எழுதிய பலகையை மாட்டியதால் கோபமடைந்த கருணாநிதி, போலீஸை ஹாஸ்டலுக்குள் அனுப்பி, மாணவர்களை அடித்து துவம்சம் செய்தார் என்றார். இதை விசாரணை செய்த கமிஷன் வெளியிட்ட அறிக்கையிலிருந்தும் மேற்கோள் காட்டினார். விவரம் அறிந்தவர்கள் விளக்கவும். நான் கேள்விப்பட்டதில்லை.

ராஜா, காவல்துறை என்ற அமைப்பின்மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டால் அவர்கள் சட்டத்தைத் தங்கள் கைக்குள் எடுத்துக்கொள்வார்கள் என்றார். கொஞ்சம் இதை அவர் சங்க பரிவாரங்களுடன் பகிர்ந்துகொண்டால் நல்லது.

இந்த விஷயத்தை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சி வரதராஜன் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்கிறார். திமுக கூட்டணியில் தொடர்ந்திருந்தால் என்ன சொல்லியிருப்பாரோ, தெரியாது.

எதிர்க்கட்சிகள் சகட்டு மேனிக்கு கருணாநிதியை வாங்கு வாங்கியுள்ளன. அவர் இன்னமும் முரசொலியில் கவிதை எதையும் எழுதவில்லை.

***

கட்சிகள் யாருமே இந்த விஷயத்தைச் சரியாக அணுக விரும்பவில்லை என்று தெரிகிறது. திமுகவோ ஆதரவுக் கட்சிகளோ வாயே திறக்கவில்லை. எதிர்க்கட்சிகள், எல்லாவற்றுக்கும் திமுகவே காரணம் என்று சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

ஆனால் “நீ அடி, நான் ஆதரவு தருகிறேன்” என்று சில அரசியல்வாதிகள் சொல்லியிருக்காவிட்டால், இரு தரப்பு மாணவர்களும் இந்த அளவுக்கு ஆயுதங்களைச் சேகரித்து, தாக்குதலில் ஈடுபட்டிருந்திருக்க மாட்டார்கள். ஆனால் இப்படித் தாக்கிக்கொள்ளும்போது, தாங்கள் எந்த சாதியினராக இருந்தாலும், கடைசியில் தங்களுடைய உயிரே போகலாம்; அல்லது படிப்பு போய், ஜெயிலில் தங்க நேரிடலாம் என்று யோசிக்கமாட்டார்களோ?

பிரச்னை வரும், அதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும்; வேண்டுமென்றால் கொலையும் செய்யும் அளவுக்கு. இப்படி ஒருவர் யோசிக்கும் அளவுக்கு வாழ்வா, சாவா பிரச்னையா சட்டக்கல்லூரியில் நடந்தது? தேவர் ஜெயந்தி என்ற விழாக் கொண்டாட்டம், முத்துராமலிங்கம் என்ற தனியொரு மனிதனைக் கொண்டாடுவதாக இல்லாமல் அவர் சார்ந்த சாதியின் பெருமையை நிலைநாட்டுவதாக இருப்பதே அசிங்கம். அதில் கூட்டம் கூட்டமாக அரசியல்வாதிகள் கலந்துகொண்டு ரம்ஜான் கஞ்சி குடிப்பது போல பாவலா செய்வது அதைவிட அசிங்கம். அதற்கு போஸ்டர் அடித்துக் கொண்டாடுவது கல்லூரிகள் வரையிலா வரவேண்டும்?

சரி, ஒழியட்டும். குடியாட்சி முறையில் இதைச் செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. போஸ்டரிலோ, பிட் நோட்டீஸிலோ அம்பேத்கர் பெயர் விடுபட்டுப் போனால், அதனால் அம்பேத்கர் என்ற மாமேதைக்கு என்ன களங்கம் வந்துவிடமுடியும்? பதிலுக்கு தலித் மாணவர்கள் மற்றுமொரு பிட் நோட்டீஸோ, போஸ்டரோ போட்டுவிட்டுப் போயிருக்கலாம்.

எனது பயம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சியால் தலித்களுக்கு தென் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாதே என்பதுதான். ஆதிக்க சாதியினரை எதிர்த்துப் போராடுவது என்பது எளிதான காரியமல்ல. பொருளாதாரத்தைத் தங்கள் கைகளில் வைத்து, அதன்மூலம் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது ஆதிக்கசாதிகளின் இயல்பு. ரிசர்வ்ட் பஞ்சாயத் தொகுதிகளில் தலித்கள் தலைவர்களாக வருவதைத் தடுக்க எவ்வளவு ஆவேசத்துடன் செயல்பட்டனர்? திமுக ஆட்சியில்தான் இதற்கு வழி கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழக தலித் கட்சிகள், தங்கள் மக்களுக்கு சரியான வழியைக் காட்டவேண்டும். எங்கெல்லாம் ஆதிக்க சாதி வன்முறை வெடிக்கிறதோ, அங்கே தங்கள் மக்களைக் காக்க, வலுவான அரண்களை அமைக்கவேண்டும். பொருளாதாரத் தடைகள் சுமத்தப்பட்டால் அவற்றை உடைக்க, தங்கள் மக்களைக் காக்க, வலுவான பொருளாதார அமைப்புகளை ஏற்படுத்தவேண்டும். ஆனால் அதே நேரம், சட்டக்கல்லூரி போல், தாங்கள் முன்னின்று அடிதடிகளில் இறங்கக்கூடாது. அது counterproductive ஆகிவிடும்.

விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் இப்போது பகுஜன் சமாஜ் கட்சியும் தமிழகத்தில் காலூன்றத் தொடங்கியுள்ளது. பல விஷயங்களில் இந்தக் கட்சிகள் ஒன்றுசேர்ந்து ஒன்றுபட்ட அஜெண்டாவை உருவாக்குவது நல்லது.

பிற கட்சிகள் செய்யவேண்டியது இது ஒன்றைத்தான். தலித்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும், பிற சாதியினரைத் தூண்டிவிட்டுக் குளிர் காயாதீர்கள்.

19 comments:

 1. எங்கள் கல்லூரியில் நான் படித்தபோது தேர்தலெல்லாம், கட்சி சார்புடனும் ஜாதி சார்புடனுமே நடக்கும். பெரிய கலவரமாக மாறியிருக்கவேண்டிய சிறிய சிறிய கலவரஙக்ள் எல்லாம் வந்திருக்கின்றன.

  //திருச்சி செயிண்ட் ஜோஸப் கல்லூரியில் சில மாணவர்கள் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்த்து, நாய் ஒன்றின் கழுத்தில் டாக்டர் என்று எழுதிய பலகையை மாட்டியதால் கோபமடைந்த கருணாநிதி, போலீஸை ஹாஸ்டலுக்குள் அனுப்பி, மாணவர்களை அடித்து துவம்சம் செய்தார் என்றார்.//

  இதைப் பற்றி துக்ளக்கில் முன்பு படித்திருக்கிறேன். சோ எழுதினாரா அல்லது வேறு யாரும் எழுதியதா என்பது நினைவிலில்லை.

  ReplyDelete
 2. //அம்மா ஆட்சியில் நாட்டில் அமைதி நிலவியது என்றால் மூன்று கல்லுரி மாணவிகளை பஸ்ஸோடு எரித்தது எதில் சேர்த்தி?//
  பிப்ரவரி 2, 2000 அன்று தர்மபுரியில் அந்த பஸ் எரிந்தபோது அம்மாவின் ஆட்சியா? என்ன கூறுகிறீர்கள்?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 3. ஐ.ஐ.டி.யில் நீங்கள் படித்த போது வாயில் மீனையோ ஏதோ அசைவ உணவையோ திணிக்க முயன்றதாக நீங்கள் ஏதோ ஒரு பின்னூட்டத்தில் கூறியதாக ஞாபகம்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 4. \\தேவர் ஜெயந்தி என்ற விழாக் கொண்டாட்டம், முத்துராமலிங்கம் என்ற தனியொரு மனிதனைக் கொண்டாடுவதாக இல்லாமல் அவர் சார்ந்த சாதியின் பெருமையை நிலைநாட்டுவதாக இருப்பதே அசிங்கம். \\
  உங்களுக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்தி சார். தேவர் ஜெயந்தி அன்னிக்கு தென் தமிழ்நாட்டுக்கு வந்து பாருங்க. ஊரே அதகளம் ஆகியிருக்கும். எங்களுக்கெல்லாம் வீட்டை விட்டு வெளியே போவதற்கே பயமா இருக்கும்.

  ReplyDelete
 5. Kalivaradhan was well known in early 70s as a speaker and politician who opposed Karunanidhi.
  He had a small party, a break away faction
  of Tamilarasu Kazahagam.The official Kaghazam was
  led by M.P.Sivagnanm aka Ma.Po.Si. Kalivaradhan
  was supporting Kamaraj and Congress(O). His sharp comments incensed Karunanidhi often.
  He used to ask questions that were uncomfortable to Karunanidhi.What he had said about the incidents was true.Na.Parthasarathy wrote a novel based on the incidents that took place
  at Annamalai University.From 71 to 76, till the
  dismissal during emergency Karunanidhi's rule
  was full of violence and violent confrontation
  with parties like ADMK,Congress(O) was common.
  Nanjil Manoharan,a MP then, was attacked as he joined ADMK.CPI(M) leader V.P.Chinthan survived a brutal attack and the plan was to finish him off.The inter-union rivalry in Simpson group resulted in much violence and
  murders. The DMK sponsored unions clashed with
  unions of the left (CITU,AITUC). Many
  ADMK cadres were killed or brutally attacked.
  Clashes between cadres of DMK and ADMK were
  common. Release of MGR's films like Ulagam Suttrum Valiban, Netru Inru Naalai was made difficult by DMK goons who attacked theatres, tore screens. The irony was the person who did this in Madurai, Madurai Muthu later joined ADMK
  and became the first mayor of Madurai
  Corporation.In short Karunanidhi unleashed
  violence in those years and there was
  no precedent for it. Corruption and nepotism became the norm during 71-76. That was why his dismissal was welcomed by many people as it brough an end to the rule of the rogues.Of course
  Mrs.Gandhi was a bigger rogue. Violence was not new to Karunanidhi as it all started with
  inner party violence in DMK and Karunanidhi
  used rogues in those days against his own party
  leaders.

  ReplyDelete
 6. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் இப்போது பகுஜன் சமாஜ் கட்சியும் தமிழகத்தில் காலூன்றத் தொடங்கியுள்ளது. பல விஷயங்களில் இந்தக் கட்சிகள் ஒன்றுசேர்ந்து ஒன்றுபட்ட அஜெண்டாவை உருவாக்குவது நல்லது.
  Factionalism among Dalit parties is the bane
  of dalit politics in tamil nadu.BSP in tamil nadu is headed by Selvam who quit VCK as he
  had problems with Tirumavalavan.Tirumavalavan
  and Dr.Krishnasamy are at loggerheads and refuse to come togther on a common platform.One can expect more parties in the name of dalits.

  ReplyDelete
 7. //திருச்சி செயிண்ட் ஜோஸப் கல்லூரியில் சில மாணவர்கள் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்த்து, நாய் ஒன்றின் கழுத்தில் டாக்டர் என்று எழுதிய பலகையை மாட்டியதால் கோபமடைந்த கருணாநிதி, போலீஸை ஹாஸ்டலுக்குள் அனுப்பி, மாணவர்களை அடித்து துவம்சம் செய்தார் என்றார். இதை விசாரணை செய்த கமிஷன் வெளியிட்ட அறிக்கையிலிருந்தும் மேற்கோள் காட்டினார். விவரம் அறிந்தவர்கள் விளக்கவும். நான் கேள்விப்பட்டதில்லை.//

  இது நடந்தது அண்ணாமலை சர்வகலாசாலையில் ... உதயகுகமார் என்ற மாணவன் மர்மமாக இறந்தான். அது 70-71 ல் நடந்ததாக ‍ஞாபகம்.

  தியாகராஜன்

  ReplyDelete
 8. டோண்டு: “ஐஐடி - வாய் - மீன் திணிப்பு” - அப்படி எதையும் நான் எங்கும் சொல்லவில்லை. அப்படி ஏதும் நடந்ததாக எனக்குத் தெரியாது.

  ReplyDelete
 9. டோண்டு: “ஐஐடி - வாய் - மீன் திணிப்பு” - அப்படி எதையும் நான் எங்கும் சொல்லவில்லை. அப்படி ஏதும் நடந்ததாக எனக்குத் தெரியாது.

  அப்படிச் சொன்னவர் கனடாவைச் சேர்ந்த வெங்கட் ரமணன் என்பவர். அதுவும்கூட பிராமணியத்தின் கோட்டையான குடந்தை நகரின் கல்லூரி ஒன்றில் என்பதாக நினைவு.

  ReplyDelete
 10. "திருச்சி செயிண்ட் ஜோஸப் கல்லூரியில் சில மாணவர்கள் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்த்து, நாய் ஒன்றின் கழுத்தில் டாக்டர் என்று எழுதிய பலகையை மாட்டியதால் கோபமடைந்த கருணாநிதி, போலீஸை ஹாஸ்டலுக்குள் அனுப்பி, மாணவர்களை அடித்து துவம்சம் செய்தார் என்றார்"

  This message has half true,In St.Joseph's college one popular hostel clives hostel situated near Teppakulam ,nearby one D.M.K,s prominent leader's & then minister(now he is not alive his son is D.M.K.,M.L.A) second wife(keep)situated,hostel students are commenting her,made some interferences to them when the leader visit her home.Police enter into the hostel and brutally beaten the students.then the hostel closed and shifted to the inside college campus.Clives hostel now converted in to shopping complex.This could happened in 70's because i studied there in 1988,but this incident discussed among students traditionally.
  But students protest against Karunanithi's honorary doctorate happened in Annamalai university, murdered student name is Udayakumar.

  ReplyDelete
 11. Appreciations for informing that dravidian movements have introduced violence among students.

  On other notes: Please write about how you manage your time? It really needs to be followed by many of us.

  ReplyDelete
 12. புளியமரத்தடி பாபுவும்- கொஞ்சம் அரசல் புரசலாக ஞாபகம் வருகிறது.

  ReplyDelete
 13. சாதிரீதியாக மாணவர்கள் சண்டை போட்டதாகவும் சரித்திரம் இல்லை.
  எனக்கு பாலிடெக்னிக்கில் மெக்கானிகல் மறுக்கப்படும் வரை சாதி பற்றி பேசியதாகவோ சண்டை வந்ததாகவோ ஞாபகம் இல்லை.
  முதல் சில பத்திகள் நான் படிக்கும் நேரத்தில் கூட அப்படியே நடந்தது ஆனால் நான் கல்லெறியவில்லை.எங்கப்பாவுக்கு நாகப்பட்டிணம் முழுக்க இன்பார்மர் இருக்கிறார்களோ என்ற சந்தேகம். :-)

  ReplyDelete
 14. சுரேஷ், தஞ்சாவூரில், லாரி ஏற்றிக்

  அடப்பாவமே! இது எனக்கு தெரியாது.

  ReplyDelete
 15. //கலிவரதன் (யார் என்று தெரியவில்லை) என்ற ஓர் அரசியல்வாதி//

  பக்கா காங்கிரஸ்காரர்.. கோ.கலிவரதன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.. பழுத்த அரசியல்வாதி. அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்தவர். ஐந்தாண்டுகளுக்கு முன்புதான் காங்கிரஸில் இருந்து அ.தி.மு.க.விற்கு தாவினார்.

  இப்போது "அம்மா"வின் மேடைப் பேச்சுக்களை எழுதித் தருபவர்களில் முதன்மையானவர் இவரே..

  நமது எம்.ஜி.ஆரில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்.

  உண்மைத்தமிழன்

  ReplyDelete
 16. //
  வர் ஜெயந்தி என்ற விழாக் கொண்டாட்டம், முத்துராமலிங்கம் என்ற தனியொரு மனிதனைக் கொண்டாடுவதாக இல்லாமல் அவர் சார்ந்த சாதியின் பெருமையை நிலைநாட்டுவதாக இருப்பதே அசிங்கம். அதில் கூட்டம் கூட்டமாக அரசியல்வாதிகள் கலந்துகொண்டு ரம்ஜான் கஞ்சி குடிப்பது போல பாவலா செய்வது அதைவிட அசிங்கம். அதற்கு போஸ்டர் அடித்துக் கொண்டாடுவது கல்லூரிகள் வரையிலா வரவேண்டும்?
  //

  தலித்துகளுக்கும் தேவர், வன்னியர், போன்ற இன்ன பிற மேல் சாதியினருக்கும் எப்போதுமே தகராறு இருந்துகொண்டே இருக்கும். போஸ்டரில் போட்டோ இல்லை பெயர் இல்லை என்பதெல்லாம் இந்த simmering rage ஐ பற்ற வைக்கும் ஒரு பொறி தான்.

  ReplyDelete
 17. Trichy St. Joseph College incident was famous (or infamous) Clive's Hostel incident. The 1971-1976 Karunanidhi's rule in Tamil Nadu was marked by many excesses. In fact, organized rowdyism took roots only during this period. This tradition is continuing even now. It is surprising that many here are not aware of Kalivaradan. May be, because he is now in AIADMK camp he comes in for ridicule by Badri. He was a good orator in Tamil and if I am right, he is very good at English too. During 1971-75 he was active in Old Congress Camp and a confidant of Kamaraj. Those days, no major public meetings of Old Congress (Syndicate Congress) would be without Kalivaradan as a speaker.

  ReplyDelete
 18. We have to undestand the politics behind flashing up this violence by the media. This time it happened to be the dalits who attacked the MBC students. So, it is too much propgated. The people who were beaten up were also rowdies, we must remember. ADMK wants to once again show itself as the custodians of Mukkulathors.Jeya TV discussions we should not take them very serious because its agenda is not public interest but only attacking Karunanithi. Karunandhi is always portrayed as the one who initated corruption and nepotism in 70's in TN by middle class intelligentia. But if u take stock of the corruptions and favoritism both in Indian and TN politics thereafter it is nothing. (I don't intend to deny the notoriety of Karunanithi due to his devious means of politics)
  What happened in Trichy was true. At that time the principal in St. Joseph was Rev.Gasmir who later became the archbishop of Chennai.Gooliganism in the college was instigated by anbil Tharmalingam, I heard.

  ReplyDelete
 19. My namr is Raghavan. I was at that time studying 10th standard at that time at Trichy. I lead stuents agitation for two years and involved all students to fight against this rowdism on ST. Joseph school students when they critized the lover of then minister Anbil Dharmalingam. She was staying in the other side of the Teppakulam When she was going for morning walk with his dog students made comments against her knowingly she was the girlfriend of Anbil Dharmalingam. As a revenge students were beten to death with hocky sticks, bats, stones and brinks. Many years the briks were hanging on the front side roof as an evidence for the enquiry commission. Now I am living at Bangalore. 2015 when Jayalalitha was dismissed for corruption I have filed my nomination and it was rejected since my name was in the Tamil Nadu voter list. I filed 3 writ petitions in Madras High court for my consitutution rights. First Indian to file writ like this. 2018 I contested for MLA from Hebbal consitutency at Bangalore as an Independent candidate. My email id is newhorizonraghavan@gmail.com

  ReplyDelete