நேற்று மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் நல்லி நிறுவனமும் ‘திசை எட்டும்’ மொழிமாற்றல் காலாண்டிதழும் சேர்ந்து நடத்திய நிகழ்ச்சியில், தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் மொழிமாற்றப்பட்ட புத்தகங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன (ரூ. 10,000 + பட்டயம்). கூடவே, மொழிமாற்றல் துறையில் வாழ்நாள் சாதனையாளர்கள் இருவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன (ரூ. 25,000 + பட்டயம்).
விழாவுக்கு நானும் சென்றிருந்தேன்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினர். நல்லி குப்புசாமி செட்டி, தலைமை. கு.ஞானசம்பந்தன், வாழ்த்துரை வழங்கியவர் (அதாவது சிரிக்கச் சிரிக்கப் பேசியவர்). அமைச்சர் கிளம்பிச் சென்றதும் லோக்கல் எம்.எல்.ஏ நன்மாறன் (கம்யூனிஸ்டுகளுக்கே உரித்தான எளிமை) அரங்குக்கு வந்தார். அமைச்சர் உட்கார்ந்த இடத்தில் மேடையில் அமர்ந்தார். ஏகப்பட்ட பேர் மேடையில் வந்து பரிசு வாங்கி, படம் எடுத்து, 2 நிமிடம் பேசுகிறேன் என்று சொல்லி 20 நிமிடத்துக்கும் மேலாகப் பேசியதில், அழைப்பிதழில் பேசுவதாகச் சொல்லியிருந்த நான்கு பேருக்கு பேச வாய்ப்பு கிடைக்கவில்லை (என்னையும் சேர்த்து:-) அதுவும் ஒருவகையில் நல்லதுதான்.
சில படங்கள் கீழே: பேராசிரியர் நா.தர்மராஜன், (கடைசியாக அன்னா கரேனினாவை தமிழாக்கம் செய்தவர். 100 நூல்களுக்கு மேல் தமிழாக்கம் செய்துள்ளார்; ரஷ்யாவில் 8 ஆண்டுகள் வசித்துள்ளார்; பல ரஷ்ய நூல்களை மொழிபெயர்த்துள்ளார்) வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்.
சௌரிராஜன், வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார். பல தமிழ் நூல்களை இந்திக்கும் இந்தியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்தவர்.
Indian Writing பதிப்புக்காக, ஜெயகாந்தனின் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” நாவலை “Once an Actress” என்ற தலைப்பில் மொழிபெயர்த்த கே.எஸ்.சுப்ரமணியன், சிறந்த ஆங்கில ஆக்கத்துக்கான விருதைப் பெறுகிறார்.
கேரளாவில் வசிக்கும் மருத்துவர் டி.என்.ரகுராம், மலையாளத்திலிருந்து தமிழுக்கு வைசாகன் என்ற எழுத்தாளரின் சிறுகதைகளை மொழிமாற்றி “வைசாகன் சிறுகதைகள்” என்ற பெயரில் கொண்டுவந்ததற்காக சிறந்த மலையாளத்திலிருந்து தமிழாக்கத்துக்கான விருதைப் பெறுகிறார்.
பிற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை:
* சிவகாமி ஐ.ஏ.எஸ்ஸின் “பழையன கழிதலும்” நாவலை தமிழிலிருந்து கன்னடத்துக்கு மாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் கன்னடத் துறைப் பேராசிரியர் தமிழ்ச் செல்வி.
* Platero y Yo (Platero and I) என்ற நோபல் பரிசு பெற்ற ஸ்பெயின் எழுத்தாளர் Juan Ramón Jiménez-ன் (1881-1958) ஸ்பெயின் மொழி நாவலை ஆங்கிலம் வழியாக “ப்ளேடெரோவும் நானும்” என்று தமிழாக்கிய சா.தேவதாஸ் (வம்ஸி புக்ஸ்) (ஏதோ காரணத்துக்காக பலரும் இதை “ஃப்ளோரிடாவும் நானும்” என்று குறிப்பிட்டனர்! விழாவினர் கொடுத்த கையடக்கப் புத்தகத்திலும் இப்படியே குறிப்பிட்டிருந்தனர்!).
* Up From Slavery, Booker T Washington (1856-1915)
புத்தகத்தை “அடிமையின் மீட்சி” (நிவேதிதா பதிப்பகம்) என்று தமிழாக்கிய 80 வயதுக்கும் மேற்பட்ட M.N.ராமசாமி.
மற்றபடி, தமிழ்->இந்தி, தமிழ்->இந்தி->மராத்தி (சின்னப்ப பாரதியின் நாவல்), சமஸ்கிருதம்->தமிழ், தமிழ்->தெலுங்கு போன்ற விருதுகளும் இருந்தன.
***
விழா பற்றிய என் முந்தைய பதிவு
பெங்களூர் இலக்கியத் திருவிழா
4 hours ago
Maybe you can nominate NHM writer for this ?
ReplyDeletehttp://thatstamil.oneindia.in/news/2008/11/25/business-tn-govt-announces-prize-for-best-tamil-software.html
சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பாளருக்கு பரிசு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்து.
கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் வெளிவரும் மென்பொருள்களில் சிறந்த மென்பொருள் ஒன்றைத் தேர்வு செய்து, அதை உருவாக்கியவருக்கு `கணியன் பூங்குன்றனார்' பெயரில் பரிசுத்தொகை ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதுடன் அந்த நிறுவனத்துக்கு பாராட்டிதழ் வழங்கப்படும்.
இது தமிழ் வளர்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்படும் மென்பொருளாக இருக்க வேண்டும். தனியாளாகவோ, கூட்டு முயற்சியிலோ, நிறுவனத்தாலோ உருவாக்கப்படலாம். கூட்டு முயற்சி என்றால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள பதிவுக் கட்டணம் ரூ.100-ஐ தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் பணமாக செலுத்தலாம். தமிழ் வளர்ச்சி இயக்குனர், சென்னை என்ற பெயரில் டி.டி. எடுத்து அனுப்பலாம். அடுத்த மாதம் டிசம்பர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.
விண்ணப்பங்களை, எழும்பூர், ஹால்ஸ் சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்தில் பெறலாம். 044-28190412 , 13 ஆகிய தொலைபேசி எண்களில் விவரங்களைக் கேட்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.