Friday, June 19, 2009

கச்சத்தீவு

யாருக்காவது கச்சத்தீவு பிரச்னை என்ன என்று தெளிவாகத் தெரியுமா? எனக்குத் தெரியாது.

‘கச்சத்தீவை மீட்பது’ என்றால் என்ன? கச்சத்தீவு என்பது எவ்வளவு சதுர மீட்டர் பரப்பளவு? அதன் strategic importance என்ன? அதனால் இந்திய மீனவர்களுக்கு என்ன ஆதாயம்? அதை ஏன் இந்திரா காந்தி இலங்கைக்குகத் தூக்கிக் கொடுத்தார்? அதை ஏன் கருணாநிதி தடுக்கவில்லை; அல்லது இன்று சொல்வது போல எதிர்த்தார்? அதை எம்.ஜி.ஆர் ஆதரித்தாரா, எதிர்த்தாரா? அதற்குப்பின் வந்த பல தமிழக முதல்வர்களும் சட்டமன்றங்களும் கச்சத்தீவை மீட்கச் சொல்லி ஏன் தீர்மானம் போடவில்லை? அப்படியே தீர்மானம் போட்டாலும் மத்திய அரசை இது எந்த வகையில் கட்டுப்படுத்தும்?

கருணாநிதி இன்று சொல்கிறார்: “அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்தால் தீர்மானம் கொண்டுவருவோம்.” ஏன், தீர்மானம் கொண்டுவந்துதான் பாருங்களேன், அனைவரும் ஆதரிக்கிறார்களா, இல்லையா என்று. யாராவது ஒருவர் மட்டும் ஆதரிக்கவில்லை என்றால் தீர்மானம் கொண்டுவரக்கூடாதா என்ன? ஏதோ சட்டமன்றத்தில் நிறைவேறும் அனைத்து விஷயங்களும் ஏகமனதாக ஆதரித்துக் கொண்டுவந்தாற்போல இவர் ஏன் பேசுகிறார்?

அன்னை சோனியா உடனடியாக கச்சத்தீவை மீட்டுத் தராவிட்டால் அண்ணா சமாதி முன் அரை நாள் உண்ணாவிரதம் என்ற பல்ட்டி உண்டா, கிடையாதா?

இலங்கை கச்சத்தீவை வைத்துக்கொண்டு என்ன செய்ய முயற்சி செய்கிறது? இப்போது இந்தியா இலங்கைக்குக் கொடுத்திருக்கும் லீஸ் இன்னும் எவ்வளவு ஆண்டுகளுக்குச் செல்லும்? அந்த லீச் முடியும்போது ராகுல் காந்தியின் மகன் (அவர் யாரையாவது கல்யாணம் கட்டி, குழந்தை பெற்றபின்...) பிரதமராக இருப்பாரா? அப்போதாவது கச்சத்தீவு இந்தியாவுக்கு மீண்டும் வந்துவிடுமா?

விவரம் தெரிந்தவர்கள் விரிவாக எடுத்துரைத்தால் மகிழ்வேன்.

8 comments:

  1. பா. ரெங்கதுரைFri Jun 19, 09:17:00 AM GMT+5:30

    அமெரிக்க ஆங்கிலத்தில் சொல்வதானால் கச்சத்தீவு ஒரு ‘Piece of Shit’. மார் தட்டிக் கொள்வதைத் தவிர அதை மீட்பதனால் வேறு எந்த உபயோகமும் இருக்கப்போவதில்லை. அதனால் இலங்கைக்கு இழப்பும் கிடையாது. கருணாநிதி வேண்டுமானால் அதைப் பெரும் சாதனையாகச் சொல்லிக்கொள்வார்.

    சட்டமன்றத்தில் எந்தத் தீர்மானத்தையும் கொண்டுவரலாம். வழக்கம்போல அதுவும் கருணாநிதிக்கு ஒரு சாதனைதான். அதனால் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. இலங்கையின் கடற்பரப்பிலும் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வழிசெய்யும் ஒப்பந்தம் மட்டுமே மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்கக்கூடும்.

    ReplyDelete
  2. http://bsubra.wordpress.com/2007/05/10/katcha-theevu-issue-history-indian-naval-strategy/

    ReplyDelete
  3. //அன்னை சோனியா உடனடியாக கச்சத்தீவை மீட்டுத் தராவிட்டால் அண்ணா சமாதி முன் அரை நாள் உண்ணாவிரதம் என்ற பல்ட்டி உண்டா, கிடையாதா?//

    முதல்வர் அரைநாள், துணை முதல்வர் அரைநாள் என மாற்றி மாற்றி உண்ணாவிரதம் இருக்க திட்டமாம்!

    ReplyDelete
  4. கருணாதிக்கு முதல் தேவை பணம், பதவி அதை பெற விழுந்தடித்துக் கொண்டு டில்லி பறந்து செல்வார் ஆனால் மக்கள் பிரச்சனை என்று வரும்பொழுது கடிதம் எழுதுவார், தந்தி அடிப்பார். ஏன் கேட்டுப்பெற்ற தொலைத்தொடர்புத் துறை உள்ளதே அதன் தொலைபேசியை கூட மக்கள் பிரச்சனைகளுக்காக‌ அவர் பயன்படுத்துவதில்லை. தமிழகத்தின் ஒரு சாபக்கேடு இது போல சுயநலத் தலைவர்களை கொண்டிருப்பது. பாலாறு, ஒகேனக்கல் , கச்சத்தீவு என்று ஒரு விஷயத்திலும் ஒரு அரசியல்வாதியும் தமிழக நலனைக் கருதியும் , மக்கள் நலனைக்கருதியும் செயல்படவில்லை.

    கச்சத்தீவு என்பது ஒரு சிறிய பிரதேசம் தான், ஆனால் அதை நாம் தாரைவார்த்தது பெரும் தவறு, அதன் பின்பு நம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் என்னற்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். இந்த பிரச்சனையை மத்திய அரசிடம் எந்த ஒரு மாநில அரசாங்கமும் வலியுறுத்தவில்லை. ஒருவேளை மீனவர்கள் சிறுஅளவில் இருப்பதால் அவர்களது ஓட்டுக்கள் இவர்களுக்கு முக்கியமாக தெரிவதில்லை போலும்.

    நன்றி,
    ராம்குமரன்

    ReplyDelete
  5. கச்சத்தீவைக் கை கழுவியதால்...?

    காஷ்மீர், பாரதத் தாயின் முகமென்றால், கச்சத்தீவு கால்விரல் மெட்டி எனலாம்.

    கச்சத்தீவின் நீளம் ஒரு கல்; அகலம் அரை கல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ., ராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ. கச்சத்தீவில் "டார்குயின்' எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே பச்சைத் தீவு நாளடைவில் கச்சத்தீவு ஆயிற்று. 1882ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று.

    கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குத்தகை நிலமாக கச்சத்தீவைப் பெற்றனர். இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரிஸ், "விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சத்தீவு இலங்கையைச் சேர்ந்ததன்று; அது ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்'' என உறுதிப்படுத்தினார். என்றாலும், இலங்கை அரசு 1955, 56-ல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சத்தீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அத்துமீறலை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, இந்த விவகாரம் பற்றிப் போதிய தகவல்கள் இல்லை... இந்தச் சிறு தீவுக்காக இரு நாடுகளும் போராடும் என்ற கேள்விக்கு இடமில்லை.

    இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தன்மானம் கலக்கவில்லை; அதுவும் நம் பக்கத்து நாடான இலங்கையுடன்'' எனப் பிரதமராக இருந்த நேரு பதிலுரைத்தார். காஷ்மீர் என்ற முகத்தில் ஒரு சிறு கவலை ரேகை படர்ந்தாலும், அலறித் துடிக்கின்ற மைய அரசு, கச்சத்தீவு என்ற கால்விரல் மெட்டியை இலங்கை அரசு கழற்றியபொழுது கண்டுகொள்ளவே இல்லை. இது முதற் கோணல்.

    பின்னர், ஜே.வி.பி. என்ற சிங்கள தீவிரவாத இயக்கம், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்ந்து இலங்கையில் பரப்பி வந்தது. அதைக் குறைப்பதற்காக கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக் கொள்கையளவில் இந்திய அரசு முடிவு செய்தது.

    பின்னர் 1974ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.

    ஐ.நா. அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக்கடனாக இந்தியா கச்சத்தீவைக் கை கழுவ இசைந்தது.

    கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: ""இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.''

    ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து ராமேசுவரம் மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும் தகராறு நடக்காத நாளே இல்லை. கச்சத்தீவை வழங்கியதால், ராமேசுவரத்து மீனவர்கள் வடிக்கும் கண்ணீரும் கடலைப்போல.

    ReplyDelete
  6. மைய அரசு, மேற்கு வங்கத்திற்குச் சொந்தமான "டின்பிகா' எனும் தீவை, வங்கதேசத்திற்குக் குத்தகைக்குத் தரும்போது எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கையையும் அக்கறையையும் ஏன் கச்சத்தீவில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான், நமது வருத்தம். டின்பிகாவை வங்க தேசத்திற்குக் குத்தகைக்குத் தந்தாலும், அதன் இறையாண்மை அல்லது ஆட்சியுரிமை இந்தியாவிடம்தான் இருக்கும். மேலும், எந்தக் காரணத்தைக் கொண்டும், அத்தீவை ராணுவத் தளமாகப் பயன்படுத்தக் கூடாது. "டின்பிகா' ஒப்பந்தத்தில் கடைப்பிடித்த அணுகுமுறையைக் கச்சத்தீவில் கையாளாதது ஏன்?

    கச்சத்தீவினால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிந்தித்துப் பார்த்தால், நாம் செய்த வரலாற்றுப் பிழை தெரியும். கச்சத்தீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால், ராமேசுவரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். சித்தமருத்துவத்திற்குத் தேவையான "உமிரி' போன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை.

    கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூறாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு - குமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகள் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர். தாற்காலிகமாக இவற்றையெல்லாம் இழந்து நிற்கும் நாம், நிரந்தரமாகவே இழக்க வேண்டுமா? நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும், தகுதி வாய்ந்த இடமாகக் கச்சத்தீவு விளங்குகின்றது.

    அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தாற்காலிகமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சத்தீவு இருக்கிறது. ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.

    கடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம். ராணுவத்திற்குத் தேவையான தகவல்-தொடர்பு மையங்களையும், "ராடார்' போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம். பாக் சந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது கச்சத்தீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம்.

    பிலிப்பின்ஸ் நாட்டின் எல்லையிலுள்ள "பால்மஸ் மியான்ஜஸ்' எனும் தீவு, நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமானது. ஆனால், நெதர்லாந்து மக்கள் நீண்டகாலம் புழங்காமல் இருந்த காரணத்தால், அந்தத் தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. பின்னர், அதனைப் பிரெஞ்சுக்காரருக்குத் தாரை வார்த்தது. ஆனால், நெதர்லாந்து மக்கள் உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இழந்த உரிமையை மீண்டும் பெற்றனர். அதுபோல, கச்சத்தீவில் உரிமையை ஏன் இந்தியா மீண்டும் பெறக் கூடாது?

    ராமேசுவரத்தைச் சுற்றி வாழ்கின்ற மீனவர்களுக்கு அது மண் மட்டுமன்று; கண்ணும்கூட. கச்சத்தீவை நாம் கழற்றிவிட்டது முதற்கோணல்; முற்றிலும் கோணல் ஆகாமல் காக்க வேண்டியது, மானுடம் பேசுகின்றவர்களுடைய மகத்தான கடமை.

    http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20070510104425&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0

    ReplyDelete
  7. http://www.keetru.com/anaruna/mar08/tamilselvan.php

    ReplyDelete
  8. thanks for your brief article mr.gopalan ramasubbu

    ReplyDelete