Sunday, September 27, 2009

டீம் எவரெஸ்ட்

நேற்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன்.

காக்னசண்ட் டெக்னாலஜி சொலுஷன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் கார்த்தீபன் என்பவர் எவெரெஸ்ட் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இளையவர். 25 வயதுக்குள்தான் இருக்கும். அரசுப் பள்ளிகளில் அதிக வசதிகள் கிடைக்காத ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்வதுதான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்.

நாளடைவில் கார்த்தீபனுடன் கூட வேலை செய்யும் காக்னசண்ட் ஊழியர்கள் பணம், நேரம் என்று உதவ ஆரம்பித்தனர். தமிழகத்தில் உள்ள பல பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கித் தருதல், படிக்க சுவாரசியமான பல புத்தகங்கள் வாங்கித் தருதல், பார்வையற்றோருக்கு அருகில் இருந்து படித்தல், அனாதை இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளோடு விழா கொண்டாடுதல் போன்ற பலவற்றை இவர்கள் செய்கின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் நல்ல எண்ணங்களையும் சொல்லித்தரும் வாழ்க்கைச் சம்பவங்களைக் கோர்த்து அவற்றை ஒரு நல்ல புத்தகமாக எழுதி மானவர்களுக்குக் கொண்டு சேர்ப்பது என்ற நோக்கம் கார்த்தீபனுக்கு ஏற்பட்டது. காக்னசண்ட் ஊழியர்கள் 23 பேர் ஒன்று சேர, பல்வேறு அரசியல், சமூக, மதத் தலைவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சுவாரசியமான விஷயங்களைச் சேகரித்து, எழுதினார்கள். இப்படி 100 சம்பவங்களைத் தொகுத்தபின், (முன்னாள் பதிவர்) மீனாக்ஷிசங்கரும் கார்த்தீபனும் என்னைத் தொடர்புகொண்டனர்.

அந்தத் தகவல்களைச் சேர்த்து ஒரு புத்தகமாக ஆக்கித் தருமாறு கேட்டுக்கொண்டனர். நான் கிழக்கு பதிப்பகம் வாயிலாகச் செய்துதந்தேன். (இது கிழக்கு வெளியீடு அல்ல. டீம் எவரெஸ்ட் வெளியீடு.)

புத்தகத்தை நான் வெளியிட, காக்னசெண்ட் தன்னார்வலர் ஒருவர் பெற்றுக்கொள்கிறார். நடுவில் இருப்பது கார்த்தீபன்.

இந்தப் புத்தகத்தை பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடத்திலும் கொண்டு சேர்த்து, காலை கூட்டத்தின்போது இதிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையாகச் சொல்லவைக்க கார்த்தீபன் திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக, திருவண்ணாமலை மாவட்டத்தின் அரசுப் பள்ளிகளில் இந்தப் புத்தகத்தை விநியோகிக்க முடிவு செய்து அனுமதி பெற்றுள்ளனர்.

நேற்று சென்னை காக்னசண்ட் அலுவலகத்தில் நடந்த வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொண்டேன். சில நிமிடங்கள் பேசினேன்.

***

ஐடியினால் இந்தியாவுக்கு நல்லதா, கெட்டதா என்று வலைப்பதிவுகள் முதல் பத்திரிகைகள், சினிமா வரை விவாதங்கள் நடக்கின்றன. என் பார்வையில் ஐடி இந்தியாவுக்கு பல நன்மைகளை வழங்கியுள்ளது.

1. முதலில், உலகத் தரத்தில், உலக நிறுவனங்களோடு போட்டி போட்டுக்கொண்டு இந்திய நிறுவனங்களால் சில காரியங்களைச் செய்யமுடியும் என்று நிரூபித்தது ஐடி துறைதான். அதைத் தொடர்ந்து இன்று பல துறைகளிலும் இந்த நம்பிக்கை பரவியுள்ளது.

2. வென்ச்சர் கேபிடல் முறையில் நிறுவனங்களை உருவாக்குதல், புரொஃபஷனல் நிர்வாகம், பங்குதாரர் தலையீடு (அதிகமாக) இல்லாமல் நிர்வாகிகள் முன்னெடுத்துச் செல்லும் தலைமை ஆகியவை ஐடியினால்தான் இந்தியாவுக்குக் கிடைத்தன.

3. ஊழியர்களுக்கு அதிக சம்பளம் என்பது ஐடி துறையால்தான் இந்தியத் தொழில்துறைக்குள் புகுத்தப்பட்டது. அது நாள் வரை, நீங்கள் டிஸ்கோ, டெல்கோ, எச்.எல்.எல் முதற்கொண்டு எந்தத் தனியார் நிறுவனத்தின் மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும், சொந்தமாக வீடு வாங்குவது என்பது கைக்கு எட்டாத ஒரு நிலையாகவே இருந்தது.

ஐடி சம்பளங்கள் பெருகப் பெருகவே, பிற தனியார் நிறுவனங்களும், தம் ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் தரவேண்டி இருந்தது. தனியார் வங்கிகள், கன்சல்டன்சி நிறுவனங்கள், எஃப்.எம்.சி.ஜி, விளம்பரத் துறை என்று பலவற்றிலும் வேலை செய்தவர்கள் நல்ல பணம் பார்க்கத் தொடங்கினர்.

4. தனி மனித வசதிகள் பெருகப் பெருகத்தான், சமுதாய முன்னேற்றம் பற்றியும் அரசியல் மாற்றம் பற்றியும் யோசிக்கும் நிலை வரும். அரசியல் தலைவர்கள் முன்வைக்கும் மாற்றங்கள், தொழிலாளர் சங்கங்கள்/தலைவர்கள்/தொழிற் சங்கங்கள் முன்வைக்கும் மாற்றங்கள் ஆகியவை ஒரு பக்கம் இருக்க, நன்கு படித்து, நன்கு சம்பாதிக்கும், வசதியான வாழ்க்கை வாழும், லிபரல் எண்ணங்கள் கொண்டவர்கள் முன்வைக்கும் சமுதாய முன்னேற்றம் தொடர்பான கருத்துகள் மிகவும் முக்கியமானவை. இந்திய நடுத்தர வர்க்கம் ஐடிக்கு முன் இதைச் செய்யவில்லை.

ஏனெனில் ஐடிக்கு முன், இந்திய நடுத்தர வர்க்கம் ஒரு வீடு வாங்குவதையே வாழ்நாளின் மிகப்பெரிய கனவாக நினைத்து, அதைச் செய்யமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தது. அதனால் சமுதாய முன்னேற்றம் பற்றி யோசிக்க முடியாத ஒரு நிலை இருந்தது. வேலை பார்க்கும் காலம் வரை அதைத்தவிர வேறு எதையும் யோசிக்க முடியாத நிலை. வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், உடலில் வலு இல்லாத நிலை. அந்த நிலை, இன்றைய ஐடி சம்பளத்தால் மாறியுள்ளது.

அனைவரும் பிஸ்ஸா சாப்பிடும், காசை வீசி எறியும் அக்கறையற்ற ஐடி ஆசாமிகளையே வகைமாதிரிகளாகக் காட்டுகிறார்கள். அப்படிப்பட்ட ஆசாமிகள் நிறைய உண்டு. மாற்றங்கள் அவர்களால் நிகழ்வதல்ல. ஆனால், ஐடியின் வரவுக்குப் பின்னர்தான், இளைஞர்கள் பலர் ஓரளவுக்குப் பணம் சம்பாதித்தபின், 30-களிலேயே வேலைகளைத் துறந்துவிட்டு, சமுதாய முன்னேற்றம் என்னும் செயலில் இறங்குகிறார்கள். இவர்கள் வெறுப்பை வளர்ப்பதில்லை. அன்பை வளர்க்கிறார்கள். இவர்களது நண்பர்கள் வேலைகளில் இருந்துகொண்டு, தமது வருமானத்தில் ஒரு பகுதியை முன்னேற்றப் பணிகளுக்குக் கொடுக்கிறார்கள்.

***
புத்தகத்தை காக்னசெண்ட் CSR நிர்வாகி அர்ச்சனா வெளியிட, ‘பயிர்’ செந்தில் பெற்றுக்கொள்கிறார்.

அப்படி ஓர் இளைஞர்தான் செந்தில். ‘பயிர்’ என்ற அமைப்பை திருச்சிக்கு அருகில் தேனூர் என்ற கிராமத்தில் நிறுவியுள்ளார். அமெரிக்காவில் செய்துவந்த வேலையை உதறிவிட்டு கிராமப்புற மேம்பாட்டில் ஈடுபட்டு வருகிறார். அவரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். கார்த்தீபனும் அப்படிப்பட்ட ஓர் இளைஞரே. அவருக்கு காக்னசெண்ட் நிறுவனமும், உடன் வேலை செய்யும் 3000-க்கும் அதிகமான தன்னார்வலர்களும் பணமாகவும் நேரமாகவும் ஒதுக்கி உதவுகின்றனர்.

***
அர்ச்சனாவிடமிருந்து கார்த்தீபனின் தாய் (பள்ளி ஒன்றின் தலைமையாசிரியராக இருக்கிறார்) பெற்றுக்கொள்கிறார்.

112 பக்கங்கள் கொண்ட ‘இளம் இந்தியாவுக்கு...’ என்ற இந்தப் புத்தகத்தைப் பெற விரும்பினால், நீங்கள் கார்த்தீபனுக்கு எழுதலாம். அல்லது ஏதேனும் பள்ளிக்கு இந்தப் புத்தகம் போய்ச் சேரவேண்டும் என்று விரும்பினாலும் அவரைத் தொடர்பு கொள்ளலாம். அவரது மின்னஞ்சல் முகவரி: teameverest@yahoo.co.in

3 comments:

  1. Good work..Wishes for "Team Everest"..

    ReplyDelete
  2. wow - this is just amazing! Godspeed for Karthipan, Senthil and company!

    ReplyDelete
  3. ஐ.டி. இளைஞர்கள் குறித்த எதிர்மறை கருத்துகளையே ஊடகங்கள் உருவாக்கி வந்திருக்கின்றன. ஏனெனில் அதுதான் அவர்களுக்கு பரபரப்பாக விற்க உதவும். இது மிகவும் அவசியமான கட்டுரை. நீங்கள் முன்னணி தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் இது குறித்து விரிவாக எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நானும் இது பற்றி பதிவெழுத நினைத்துள்ளேன். நன்றி.

    ReplyDelete