Wednesday, September 16, 2009

செம்பருத்தி

தன் அண்ணன் கோபாலசாமி அவரது நண்பர் வாங்கிய கடனுக்கு ஜவாப்தாரியாகக் கையெழுத்து போட்டதால் நாசமாகிவிட்டாரே என்று தன் பங்கு நிலத்தையும் பெரியண்ணன் பங்கு நிலத்தையும் ராவுத்தரிடம் விற்ற சட்டநாதன். சுலைமானின் அப்பா ராவுத்தர் வாங்கிய நிலத்தில் ராம, லக்ஷ்மண, சீதா, அனுமத் சமேத விக்கிரகங்கள். தான் காதலித்த (தன்னைக் காதலித்த) பெண் குஞ்சம்மா, தன் சின்ன அண்ணனின் மனைவியாகி, சின்ன அண்ணன் முத்துச்சாமி அகால மரணமடைய சட்டநாதனுக்கும் குஞ்சம்மாவுக்கும் இடையே ஏற்படும் பாலியல் டென்ஷன். சின்ன அண்ணன் சாவதற்குமுன் கைகாட்டிய குடும்பத்தில் புவனா என்ற செம்பருத்திப் பூவை அணிபவளை மணக்கும் சட்டநாதன். (பெயர்க் காரணம்!)

அதன்பின், ஒடிந்துபோன அண்ணன் குடும்பத்தையும் விதவையான அண்ணி குடும்பத்தையும், விதவைத் தாயையும், தன் ஐந்து பிள்ளைகளையும் தூக்கிச் சுமக்கும் சட்டநாதன். அதற்கு முழுதாகத் துணைபுரியும் புவனா. ஆறுதல் அளிக்கும் மாமனார் சண்பகவனம்.

இன்னும் ஏகப்பட்ட பாத்திரங்கள். ஆனால் தி.ஜானகிராமன் முற்றிலுமாகத் தோற்ற நாவல் இதுவாகத்தான் இருக்கும் என்பது என் கருத்து. முதல் பாகம் போன வேகம் இரண்டாம் பாகத்தில் இல்லை. மூன்றாம் பாகத்தில் வலியத் திணிக்கப்பட்ட கம்யூனிசம் முற்றிலும் தோற்கிறது.

பெரிய அண்ணி எப்போதும் தேளாகக் கொட்டுகிறவள். எல்லோரையும் கொட்டுகிறவள். அவள் சட்டநாதனைக் கொட்டியதில் ஆச்சரியமில்லை. ஆனால் திடீரென குஞ்சம்மாவும் சட்டநாதனைக் கொட்டுகிறாள். நெஞ்சை உடைக்கிறாள். அத்தோடு விடாமல், தி.ஜா, புவனாவுக்கு மெனோபாஸைக் கொடுத்து, அவளையும் கொண்டு சட்டநாதன்மீது விஷத்தைக் கக்குகிறார்.

தன் தந்தை விக்கிரகங்களை விற்றுப் பணமாக்கியதை திடீரென ஒப்புக்கொண்டு அந்தப் பணத்தைத் திருப்பித் தந்து சட்டநாதனைக் கலக்கத்துக்கு உள்ளாக்குகிறான் சுலைமான். சட்டநாதனின் வாழ்வில் அடுத்தடுத்து வரும் தொல்லைகளுக்கு ஒருவிதத்தில் அந்தப் பணமே காரணமாகிறது.

கடைசியில் ஒரு கட்டத்தில் சரி, போதும், போ என்று சொல்லி தி.ஜா நாவலை முடித்துவைக்கிறார்.

மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு போன்ற அமர காவியங்களுக்கு இடையே அசிங்கமாகத் துருத்திக்கொண்டு நிற்கிறது இந்த நாவல்.

ஆனாலும் நேற்று காலையில் எடுத்து நேற்று மாலையே படித்துமுடித்துவிட்டேன். போதனை, சோதனை பத்திகளைத் தாண்டி அற்புத மாயாஜாலம் படைக்கும் மொழி அவருக்கு! அது இல்லாவிட்டால் இந்த நாவலைப் படித்தே இருக்கமுடியாது.

கதை நடந்த காலமான சுதந்தர காலத் தமிழகம் சுவையாக இருக்கிறது. அரசியலில் அப்போதே ஏற்பட ஆரம்பித்த ஊழல் சிறிய புன்சிரிப்பை வரவழைக்கிறது.

10 comments:

 1. விட்ட குறை தொட்ட குறையா, தி.ஜாவோட இந்தப் புத்தகம் என் புத்தக அடுக்கில் ரொம்ப நாள் இருந்தது. பொழுது போகாமல் போய்விட்ட ஒரு ஒரு வாரக்கடைசியில் உபயோகப்பட்டது.

  //அத்தோடு விடாமல், தி.ஜா, புவனாவுக்கு மெனோபாஸைக் கொடுத்து, அவளையும் கொண்டு சட்டநாதன்மீது விஷத்தைக் கக்குகிறார்.//

  எனக்கென்னமோ மொத்தக் கதையும் இங்கு வருவதற்காகத்தான் சுழழத் தொடங்கியதோ என்று பட்டது.

  தி.ஜாவின் மற்றக் நாவல்களுடன் ஒப்பிட இது ஒரு குறிப்பிடத் தக்க நாவல் இல்லை தான். அம்மா வந்தாள், மரப்பசு, மோகமுள் தாண்டி வைத்துக் கொள்ளலாம்.

  ReplyDelete
 2. எங்கள் ஊர் ஞாபகம் வரும்போதெல்லாம், திஜா நாவல்களுல் ஒன்றை ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவேன். கும்மோணம், கடை கட்டியாச்சு என்றெல்லாம் எழுத அவரைவிட்டால் யார்? “நம்ப பாகத்தில இருந்ததா? இல்லை பெரியண்ணண் பாகத்தில் இருந்ததா?” என புவனா கேட்டு, சட்டநாதன் மீண்டும் சாயபு வீட்டுக்கு ஓடும் இடம் எனக்கு மிக்கப் பிடித்த இடம்.

  சிவஞானம் என்றொரு குருநாவலும் அவருடைய மிகச்சிறந்த பட்டியலில் சேர்ப்பேன்.

  -முருகன் கண்ணன்

  ReplyDelete
 3. திரு.பத்ரி

  செம்பருத்தி புத்தகம் பற்றிய உங்களுடைய விமர்சனம் சரியில்லை என்பது என்னுடைய அபிப்ராயம்.
  அந்த புத்தகத்தை பற்றிய உங்கள் விமர்சனம் வினோதமாக இருந்தது.ஏதோ ஒரு கோபமான நேரத்தில்
  படித்திதீர்கள் என நினைக்கிறேன்.நீங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மோசம் இல்லை என்பது என்னுடைய தீர்மானமான அபிப்ராயம்.

  -கார்த்தி கேயன்

  ReplyDelete
 4. இருபது ஆண்டுகளுக்கு முன் படித்தது. அதிகம் ஞாபகம் இல்லையென்றாலும் நாவலின் கடைசி மூன்றில் ஒரு பாகம் கடி போட்டது என்று நினைவிருக்கிறது. ஆரம்பம் அபாரமாய் இருந்தது.

  ReplyDelete
 5. fit for a megaserial :)

  ReplyDelete
 6. கும்மோணத்து பிராமணர்களின் சவடாலையும், டபுள் ஸ்டாண்டர்ட் இப்போகிரசியையும், தியாகம் நிறைந்த உயர்ந்த பிராமண தத்துவமே இல்லாத பெருங்காய டப்பா பெருமையையும், வேதாந்தம் பேசிக்கொண்டே செய்த மைனர்த்தனங்களையும், தோலுரித்தவர் தி.ஜா. இத்தனைக்கும் அவரே ஒரு பிராமணராய் இருந்து எழுதியது நேர்மையான ஒரு விஷயம் .. இந்த இப்போகிரசியும் டம்பமும் மட்டும் இன்னும் மாறவேயில்லை .... மயிலாப்பூர், மாம்பலம் டம்ப பேச்சு, மாதுங்கா முனீர்கா பேச்சானது, இப்போது மாசசூசட்ஸ் மிஷிகன் டம்பத்தில் வந்து நிற்கிறது !!!!!! இன்னும் மார்ஸ்-மெர்குரி டம்பம்தான் பாக்கி (தெரியுமோ... எங்காத்து கோண்டு மார்ஸ்லயே ஆத்துக்காரிக்கு சீமந்தம் பண்ணின்டுட்டான்.... நம்ப மயிலாப்பூர் கெட்டுது போங்கோ).... தி.ஜா. இருந்திருந்தால்... இன்னும் ஒரு வாங்கு வாங்கிருப்பார்

  ReplyDelete
  Replies
  1. So much anger? Feel sorry for you. Anyone who helps others see their true nature as something beyond this body and mind is a brahmin. It is not acquired by birth or trade. I wish you come across a person who will encourage you to study your true nature, which is far more civilized and pleasant.

   Delete
 7. போனவாரம் எனது அலமாரியைக் குடைந்த போது எப்போதோ வாங்கிவந்து இன்னும் படிக்காமலிருந்த புத்தகம். படித்து முடித்தேன்...
  //போதனை, சோதனை பத்திகளைத் தாண்டி அற்புத மாயாஜாலம் படைக்கும் மொழி அவருக்கு! அது இல்லாவிட்டால் இந்த நாவலைப் படித்தே இருக்கமுடியாது.
  //
  ரிப்பீட்டேய்...

  குஞ்சம்மாவும், புவனாவும் பல்டியடிப்பது, அண்ணன் முடங்கியிருப்பது போன்ற ரீதியில் போரடிக்கும் மெகா சீரியலில் கஷ்டத்தைத் திணிக்கும் tearjerker போலிருக்கிறது.

  ReplyDelete
 8. sembarutti - idhanai patitthuvittu en nanban kooriyadu :

  " nan ippothu setthupponalum kavalaipatamatten - sattnathan vadivil nan ennaye kandu oru muzu vazkai vaznthathaka unarkiren " - enna oru atputhamana kathai - nanbarkale - palamurai patiyungal sembaruttiye - ovvaru murayam pala atputhangalai kanbeerkal"

  ReplyDelete
 9. கிட்டத்தட்ட முப்பது வருஷம் மூன்று குடும்பங்களுக்கு சோறு போட்ட கடை. அதை கடையில் வேலை பார்ப்பவர்களுக்கு இனாமாக கொடுக்கிறான். இது எவ்வளவு பெரிய முடிவு !!!

  முப்பது வருடம் கூட வாழ்ந்த, அதுவும் எதையும் பகிந்து வாழ்வதாக சொல்லப்படுகின்ற காதல் மனைவியிடம் இவ்வளவு பெரிய முடிவை எடுக்கும் முன்னால் அபிப்ராயம் கேட்கவில்லை. அவளுக்கு சம்மதமா என்று கேட்கவில்லை. அவளை convince செய்யவில்லை, கடையைக் கொடுத்த பின்பு கூட தானாகவே அவளிடம் சொல்லவில்லை. அவன் கடைக்கு சாவகாசமாக போவதை பார்த்து அவளாகவே ஒன்றன் பின் ஒன்றாக கேள்வி கேட்கும் போது தான் சொல்கிறான். தன் சொந்த குடும்பத்தில் முடிவு எடுக்கும் போது அதில் தன் குடும்ப பெண்ணுக்கு அதுவும் மனைவிக்கு என்ன / எவ்வளவு இடமளித்தான் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

  இந்த லட்சணத்தில், முப்பத்து ஐந்து வருடம் முன்பு குஞ்சம்மா அவள் பெற்றோரிடம் தன் கல்யாண விஷயமாக தன் சொந்த அபிப்ராயம் சொல்லியிருக்க வேண்டும் / மறுத்து பேசியிருக்க வேண்டும் என்று கதை நெடுக குறை சொல்கிறான்.

  கோதை ராகவன்

  ReplyDelete