வெகு நாள்களுக்குப் பின் ஒரு பெண் இன்று என்னை செல்பேசியில் அழைத்தார். ‘சார், என்னை ஞாபகம் இருக்கா? இப்ப நான் நல்ல நிலைல இருக்கேன், சார்’ என்றார்.
நன்றாக ஞாபகம் இருந்தது. இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அவர். சில ஆண்டுகளுக்குமுன் இலங்கையில் கவிஞர் சு.வில்வரத்தினத்தைச் சந்தித்தபோது, இந்தப் பெண்ணுக்கு உதவுமாறு அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். இந்தப் பெண் சென்னையில் ஒரு நடனக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தார். அவரது படிப்புக்கு உதவி செய்து வந்த அவரது தந்தை அகால மரணம் அடைய, மேற்கொண்டு பண உதவி செய்ய யாரும் இல்லாத நிலை. இவ்வளவு செலவு செய்தாகி விட்டது. இனி படிப்பில் மீதியையும் முடித்தால்தான் பிரயோஜனம்.
நான் சில நண்பர்களிடம் மின்னஞ்சல் எழுதிக் கேட்டேன். ஒன்றும் நடக்கவில்லை. இடையில் அந்த மாணவியும் இலங்கை அரசிடம் உதவித் தொகை பெறுவதற்கு முயன்றுகொண்டிருந்தார். இலங்கை அரசு கிட்டத்தட்ட பண உதவி செய்யப்போகும் நேரம், அப்போதுதான் இலங்கையில் போர் வெடித்துப் பெரிதானது. உதவித்தொகை கை நழுவிப் போயிற்று.
என்னால் முடிந்த அளவு உதவினேன். அவர் சில தோழிகளுடன் வீடு ஒன்றில் தங்க, சாப்பிட, கல்விக் கட்டணத்துக்கு என்று நிறையப் பணம் தேவைப்பட்டிருக்கும். நான் மாதாமாதம் கொடுத்த கொஞ்சம் பணத்தில் அவர் எப்படிச் சமாளித்தார் என்று தெரியாது. வேறு சிலரும் உதவியிருக்கலாம்.
ஒருவிதமாக அவர் படித்து முடித்தார். அதற்குப் பின் மேற்கொண்டு அவர் எப்படியோ தன்னைச் சமாளித்துக்கொண்டார். கடந்த இரு ஆண்டுகளில் எனக்கு அவருடன் தொடர்பு ஏதும் இல்லை.
இப்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பேசினார். படித்து பட்டம் பெற்றபிறகு, சென்னையில் ஒரு நாட்டியப் பள்ளி தொடங்கியுள்ளாராம். சுமார் 80 பேர் கற்றுக்கொள்கிறார்களாம். இலங்கையிலிருந்து தன் தாயை அழைத்து வந்து இங்கேயே வைத்திருக்கிறாராம். தமிழ்ப் பாரம்பரிய நடனம் தொடர்பாக ஆராய்ச்சி செய்து ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளாராம். அடுத்த மாதம் தன் நாட்டியப் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து ஒரு பெரும் நாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
தனி மனிதர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் தடைக்கற்கள் ஏராளம். நம்மில் பலருக்கும் எதிர்காலம் தெளிவில்லாமல்தான் உள்ளது. அரசுகள், ராணுவங்கள், போராட்ட இயக்கங்கள் என்று நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பலரும் நம் வாழ்வைப் பெருமளவு பாதிக்கிறார்கள். இவற்றைமீறி, தனி மனிதச் சோகங்களை மீறி, நம் வாழ்வை முன்னெடுத்துச் செல்வது எளிதானதல்ல.
வெகு சிலரே தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டு, தம் வாழ்க்கையின் லட்சியத்தை அடைகிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
நம்பிக்கையை இழக்காமல் இருக்கவேண்டிய காலம் இது.
Friday, September 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
மிகச் சரியாக சொன்னீர்கள் பத்ரி.
ReplyDeleteபொதுவாக ஈழத்து பெண்களுக்கு தன்னம்பிக்கையும், போராடும் குணமும் மிக அதிகம்.
தமிழகம் அவருக்கு வளமையான எதிர்காலத்தையும், முழு மன அமைதியும் தரட்டும்.
மயிலாடுதுறை சிவா...
//தனி மனிதச் சோகங்களை மீறி, நம் வாழ்வை முன்னெடுத்துச் செல்வது எளிதானதல்ல.
ReplyDeleteவெகு சிலரே தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டு, தம் வாழ்க்கையின் லட்சியத்தை அடைகிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.///
மிகச்சரி!பொருள் உதவி மட்டுமல்ல, சரியான நேரத்தில் திசைகாட்டும் செயலாய் செய்யப்படும் எந்த உதவியும் பெறுபவர் அதன் பலனை முழுமையாக அடையும் போது,அதை காண்பது மகிழ்ச்சியே!
ஏதோ ஒரு வகையில் அப்பெண்ணின் வாழ்க்கை பாதையில் உங்களின் உதவியும் உறு(சிறு) துணையாக இருந்திருக்கிறது!
இறக்காது நம்பிக்கை!
ReplyDeleteஅந்த உதவி கேட்ட நேரத்தில் வலையுலகில் நண்பர்கள் குறைவாக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்!
இன்று ஒரு உயிரையே காப்பாற்றியிருக்கிறார்கள்!
வலையுலகம் ஆயிரம் கருத்து பேதங்கள் கொண்டிருந்தாலும் இவ்விசயத்தில் நாம் பெருமைப்படலாம்!
ஈதல் இசை பட வாழ்தல் என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப எந்த ஒரு மனிதன் நடக்கின்றனோ அப்போது இந்த சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு என்பது மறைந்து போகும். அந்த வகையில் உதவிய உங்களுக்கு நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎவனது இதயம் தவிப்பவர்களுக்கு உதவுகிறதோ அவனை நான் மகாத்மா என்பேன். எப்போதோ படித்த பொன்மொழி இப்போது நினைவுக்கு வருகிறது.
அந்த மாணவியை ஒரு நண்பர் உங்களுக்கு அறிமுகபடுத்தினார். ஆனால்.... இன்னும் பலருக்கு அறிமுகம் இல்லாமல் தவிப்பதையும் மறக்க முடியாது... அவர்களுக்கு நாம் என்ன செய்ய போகிறோம்?
மிகச்சரி!பொருள் உதவி மட்டுமல்ல, சரியான நேரத்தில் திசைகாட்டும் செயலாய் செய்யப்படும் எந்த உதவியும் பெறுபவர் அதன் பலனை முழுமையாக அடையும் போது,அதை காண்பது மகிழ்ச்சியே!//
ReplyDeleteஆயில்யனை வழிமொழிகிறேன்.உங்கள் நல்ல உள்ளத்திற்கு எனது பாராட்டுக்கள்.