Friday, July 14, 2006

இம்சை அரசன்

இந்தப் படத்தை பிரிவியூ தியேட்டர் ஒன்றில் பார்த்தேன். அதனால் விசில் சத்தங்கள், ஓயாத சிரிப்பலைகள் என்று மக்களது நாடியைக் கணிக்க முடியவில்லை.

Spoof படங்கள் தமிழில் அதிகமாக வெளிவந்ததில்லை என்று நினைக்கிறேன். தமிழ் சினிமா ஞானசூன்யமாகிய நான் இதைப்பற்றி அதிகமாகப் பேசக்கூடாது. மெல் ப்ரூக்ஸ், வுடி ஆலன், மாண்டி பைதான் சாயல் பல இடங்களிலும் நன்றாக அடிக்கிறது. பல நல்ல ஜோக்குகள் படமெங்கும் உள்ளன.

படத்தில் சில குறைகள் எனக்குத் தென்பட்டது.

முதலாவது எல்லாத் தமிழ்ப்படங்களுக்குமான குறையான படத்தின் நீளம். 140-150 நிமிடப் படம் நிஜமாகவே போரடிக்கிறது. கதையை வேறுவழியின்றி இழுத்துப்போயிருக்கிறார்கள். 100-110 நிமிடத்தில் படத்தை முடித்திருக்கலாம். அடுத்தது படத்தில் வரும் ஓயாத பேச்சு. யாராவது ஒருவர் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கிறார். நாடகம் பார்க்கிறோமா அல்லது சினிமா பார்க்கிறோமா என்று தெரியவில்லை.

பழைய சினிமா பாணியில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகள் ரசிக்கக்கூடியனவாக இருந்தாலும் இவ்வளவு பாடல்கள் தேவையில்லை.

வடிவேலு - இரண்டு ரோல்களில். அதில் சொல்புத்தி வடிவேலு நன்றாக வருகிறார். சுயபுத்தி வடிவேலு வசன உச்சரிப்பில் சொதப்புகிறார். ழ/ல/ள, ன/ண தடுமாற்றம் தாங்க முடியவில்லை.

வெள்ளையன் என்பது ஆங்கிலேயனை மட்டும் குறிக்கிறது என்று நாமாக முடிவு செய்து கொள்ளவேண்டும். பிற நாட்டவர்கள் அந்தந்த நாட்டுப் பெயரால் குறிக்கப்படுகிறார்கள்.

வடிவேலு, நாசரைத் தவிர பிறர் நடிப்பில் சுமார்தான்.

ஏகப்பட்ட பணத்தை செலவழித்து எடுத்திருந்தாலும் கத்திகள், வில் அம்பு ஆகியவை உலோகத்தால் ஆனதாகவே தெரியவில்லை. பேப்பர் கத்திகள்போலத்தான் தெரிந்தன.

இனி படத்தின் நிறைகள்.

நீளமாக இருந்தாலும் தொய்வில்லாத திரைக்கதை. கோகா கோலா, பெப்சி ஆகியவற்றைக் கேலி செய்து எடுக்கப்பட்டிருந்த நகைச்சுவைக் காட்சிகள் அனைத்தும் பிரமாதம். 10-ம் நம்பர் சட்டையணிந்த சச்சிதானந்த் man-of-the-match கோப்பை வாங்கிக்கொண்டு பேசுவது முதல் பல விஷயங்களில் கலக்கியிருக்கிறார்கள். இன்று கர்நாடகா படத்தை தடை செய்துள்ளது போல நாளை பெப்சி/கோக் கோர்ட்டுக்குப் போய் படத்தை நாடெங்கும் தடை செய்யச் சொல்வார்களா என்று தெரியவில்லை.

படத்தில் உணர்ச்சிபூர்வமான பல காட்சிகள் உள்ளன. ராஜா ஆள்மாறாட்டத்துக்குப்பின் நாட்டில் பல சீர்திருத்தங்கள் நடைபெறுவதும் அதனால் மக்கள் overnight சந்தோஷத்தில் திளைப்பதும் நாட்டில் சுபிட்சம் பெருகுவதுமாக. சாதாரணமாக எல்லா சினிமாக்களிலும் ஹீரோக்கள் செய்யும் காரியம்தான் இது. ஆனால் இந்தப் படம் ஒரு spoof என்று தெரிவதால் இதுபோன்ற காட்சிகளை நம்மால் சகித்துக்கொள்ள முடிகிறது.

சொல்புத்தி வடிவேலு செய்யும் ரகளைகளுக்காகவே படத்தை இரண்டு மூன்று முறைகள் பார்க்கலாம்.

படத்தில் ஹீரோயின்கள் ஒன்றும் செய்வதில்லை. இரண்டு மூன்று பாடல்களில் வருவதைத் தவிர. கடைசியில் கல்யாண கோலத்தில் நிற்பதைத் தவிர. ஆனால் இது அவ்வளவாக உறுத்துவதில்லை.

படத்தின் கடைசிக்காட்சியில் வரும் பத்து கட்டளைகளும் கடைசியாக வரும் பிரேவ்ஹார்ட் மெல் கிப்சன் ஜோக்கும் படத்தை சொதப்பாமல் நல்லபடியாக முடித்துவைக்க உதவுகின்றன. நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.

8 comments:

  1. வடிவேலுவுக்கே உரிய வீராப்பு பேசி சலம்பும் கேரக்கடரில், அவர் ஜொலிப்பது எதிர்பார்த்ததே !!

    சிம்புதேவனுக்கு (டைரக்டர்) பாராட்டுக்கள் (சிறப்பான திரைக்கதைக்காக) !!

    ReplyDelete
  2. ////ஏகப்பட்ட பணத்தை செலவழித்து எடுத்திருந்தாலும் கத்திகள், வில் அம்பு ஆகியவை உலோகத்தால் ஆனதாகவே தெரியவில்லை. பேப்பர் கத்திகள்போலத்தான் தெரிந்தன.////

    உண்மையில் இது லோ பட்ஜெட் படம்.... மொத்தம் 13 செட்டுகளிலேயே படத்தை முடித்திருக்கிறார்கள்.... மக்கள் கூட்டத்தை காட்டும் போது கூட ரொம்பவும் குறைவான துணை நடிகர்களையே பயன்படுத்தி இருக்கிறார்கள்.... தமிழில் இப்பொது வரும் படங்களின் பட்ஜெட்டில் பாதி கூட இந்தப் படத்துக்கு செலவாகி இருக்காது என்பதே உண்மை....

    ReplyDelete
  3. இந்த சனிக்கிழமை வந்தாலே என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கும்.
    குடுத்திட்டீங்க யோசனயை..
    பார்த்துவிடவேண்டியதுதான்.

    ReplyDelete
  4. ழ/ல/ள, ன/ண தடுமாற்றம் - மதுரைக்காரவுகளுக்கு இந்த ழ, ல, ள ரொம்பவே தொல்லை கொடுக்கும்.

    ReplyDelete
  5. கொல்லனை பார்த்த உடன் வடிவேலு சங்கிலியை உடைக்கும் காட்சியில் உன்மையிலேயே தியேட்டர் குலுங்கியது.

    உள்ளத்தை அள்ளித்தா படத்திற்கு பிறகு (1996) சுமார் பத்து வருடங்கள் கழித்து தியேட்டர் முழுவதும் சிரிப்பொலி கேட்டது இந்த படத்திற்குதான்

    Of course, another movie where a section (youth) enjoyed to the full was "New", but in Imsai Arasan even the ladies are was seen to be in raptures

    இரட்டை அர்த்த வசனங்கள், வன்முறை, கள்ள உறவு எதுவும் இல்லாமல் சுமார் இரண்டு மணி நேரம் நம்மை தொடர்ந்து சிரிக்க வைக்க கூடிய ஒரு படம் தந்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. நான் மிகவும் ரசித்தேன். வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல நகைச்சுவைப்படம்.

    ReplyDelete
  7. இன்னும் நமக்கு வரலை.

    படத்தைத்தான் சொன்னேன். மத்தது (?)நல்லாவே வருது

    ழ/ல/ள, ன/ண :-)))

    ReplyDelete
  8. ம்ம்ம்.. பார்க்க வேண்டிய படம்தான். இப்பதைக்கு நல்ல நகைச்சுவைப் படங்களின் வருகை குறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் படத்திற்கு நாம் அளிக்கும் ஆதரவு மற்றோரையும் நல்ல நகைச்சுவைப் படம் எடுக்கத் தூண்டும்!

    ReplyDelete