Friday, June 06, 2008

சஹாரா வங்கியல்லா நிதி நிறுவனம் முடக்கம்

புதன்கிழமையன்று மத்திய ரிசர்வ் வங்கி, சஹாராவின் நிதி நிறுவனம் மேலும் முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை வைப்பு நிதியாகப் பெறக்கூடாது என்று கட்டளையிட்டது. வியாழன் அன்று, இந்தக் கட்டளைக்கு எதிராக அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் சஹாரா தடை வாங்கியுள்ளது.

1990களில் இந்தியாவில் ஏகப்பட்ட வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் தோன்றின. சில மக்களை ஏமாற்றுவதற்கென்றே. ஆனால் பல நல்ல எண்ணத்தோடும், நியாயமாகப் பணம் சம்பாதிக்கவும் மட்டுமே உருவாயின. வங்கி உரிமம் பெற்று நடத்தப்படும் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. அவை, தாம் வைப்பு நிதியாகப் பெறும் பணத்திலிருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை மத்திய ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்கவேண்டும். இதற்கு கேஷ் ரிசர்வ் ரேஷியோ (CRR) என்று பெயர். நாட்டில் பணப்புழக்கம் அதிகமாவதுபோல் தெரிந்தால் ரிசர்வ் வங்கி இந்த CRR-ஐ அதிகமாக்கும். பணம் குறைவாக நடமாடினால், CRR-ஐக் குறைக்கும்.

அதேபோல வங்கிகள் எந்த அளவுக்கு வைப்பு நிதிக்கு வட்டி தரவேண்டும், எந்த வட்டியில் கடன் தரலாம் போன்றவற்றை பிரைம் லெண்டிங் ரேஷியோ (PLR) என்பதன்மூலம் ரிசர்வ் வங்கி ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும். ஓரளவுக்குத்தான்; ஏனெனில், வீட்டுக் கடன்களுக்கு PLR-ஐவிடக் குறைவான வட்டியில் வங்கிகள் பெரும்பாலும் பணம் கொடுக்கின்றன.

ஆனால் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் (Non-Banking Finance Corporations - NBFC) இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. 24%, 36% என்றெல்லாம் வட்டி தருகிறோம் என்று வைப்புத் தொகையைப் பெற்றனர். அப்படிப் பெற்ற பணத்தையெல்லாம் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி சவுக்குத் தோட்டம், ரியல் எஸ்டேட், தங்கம் என்று முதலீடு செய்தனர். ஆனால் இந்த முதலீடுகள் பொய்த்தபோது அவர்களால் பொதுமக்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கமுடியவில்லை. நாடெங்கிலும் தினமொரு வங்கியல்லா நிதிநிறுவனம் போண்டியானது. லட்சக்கணக்கான மக்களையும் சேர்த்தே போண்டியாக்கியது.

இதன் விளைவாக, ரிசர்வ் வங்கி கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டுவந்து, புதிதாக யாருமே NBFC தொடங்கமுடியாத அளவுக்குச் செய்துவிட்டது. அழிந்து ஒழிந்துபோன NBFC-க்களுக்குப் பிறகு, இன்று மிச்சமிருக்கும் சிலவற்றுள் சஹாரா மிகப்பெரியது. சஹாராவின் வாடிக்கையாளர்கள் 4.5 கோடி பேர். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாடிக்கையாளர்கள் 10 கோடி பேர்! ஆக, பல வங்கிகளைவிடவும் சஹாராவின் வாடிக்கையாளர்கள் அதிகம்.

2006 கடைசியில் ஆந்திராவின் ஈநாடு பத்திரிகை குழும உரிமையாளர் ராமோஜி ராவ் மற்றும் குடும்பத்தினரின் மார்கதர்சி சிட் ஃபண்ட் மேலும் வைப்பு நிதிகளைப் பெறக்கூடாது என்று ரிசர்வ் வங்கி கட்டளையிட்டது. மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனம் ஒரு கம்பெனியாக அமைக்கப்படவில்லை. Hindu Undivided Family என்ற சட்டபூர்வ அமைப்பின்கீழாக நிறுவப்பட்ட அமைப்பு அது. இது ரிசர்வ் வங்கிக்குக் கவலை அளித்தது. இந்த நிறுவனத்தின்மீது சில வாடிக்கையாளர்கள் புகார் செய்திருந்தனர். ராமோஜி ராவ் தரப்பிலிருந்து அவர்கள் காங்கிரஸுக்கு எதிரானவர்கள் என்பதால் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி காரணமாகவே இது நடந்துள்ளது என்று சொல்லப்பட்டது.

இப்போது சஹாராவும் இதையே சொல்லக்கூடும். சஹாராவின் சுப்ரதா ராய், சமாஜவாதிக் கட்சியின் முலாயம் சிங் யாதவுக்கும் அமர் சிங்குக்கும் மிகவும் நெருக்கமானவர்.

1990களில், சஹாராவின் பெயர் எனக்குத் தெரியவரும்போதே என் நண்பர்கள் சிலர், இந்த நிறுவனம் உத்தர பிரதேச ஏழை மக்களின் பணத்தில் உருவானது; நிறைய தகிடுதத்தங்கள் செய்தே வளர்ந்தது என்று சொல்லியிருந்தனர். ஆனால் இத்தனை நாள் இந்த நிறுவனம் ஒரு ரெகுலேட்டர் கண்ணில் மாட்டாமல் இருந்ததே ஆச்சரியம். இந்த நிறுவனம் வெளிப்படையானதே அல்ல. இவர்கள் இதுவரை உருப்படியான, லாபம் தரக்கூடிய எந்த நிறுவனத்தையும் நடத்தியதே இல்லை. மக்களது வைப்புத்தொகையை மூலதனமாகக் கொண்டு, இவர்கள் விமானச் சேவை, தொலைக்காட்சி, ரியல் எஸ்டேட் என்று பலவற்றைச் செய்தனர். சென்ற ஆண்டு விமானச் சேவை நிறுவனத்தை ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்துக்கு விற்றனர். அது கடுமையான நஷ்டத்தில் சென்றுகொண்டிருந்த நிறுவனம். தொலைக்காட்சி நிறுவனம், சினிமா எடுக்கும் பிரிவு ஆகியவையும் பெரும் லாபம் சம்பாதிப்பவை அல்ல. இந்தத் துறையில் பத்தோடு பதினொன்றாக உள்ள ஒரு நிறுவனமே.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணி, ஹாக்கி அணி ஸ்பான்சர்ஷிப், தேச பக்தி அது இது என்று ரொம்பவே ‘ஃபீல் ஆவது' சுப்ரதா ராயின் திறமை.

இன்று உயர் நீதிமன்றத்தில் தடைவாங்கினாலும் இந்த நிறுவனத்தின் வண்டவாளங்கள் விரைவிலேயே வெளிவரப்போவது திண்ணம்.

2 comments:

  1. சகாரா நிறுவனத்தின் வணிக முறையைப் பார்த்தால் நம்ம ஊர் கலைமகள் சபா தான் நினைவுக்கு வருகிறது.

    ஒரு பெரிய நிறுவனத்தின் லட்சணத்தை அதன் நிர்வகம் சாராத இயக்குனர்களை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.
    சகாரா நிறுவனத்தின் இயக்குனர்கள் கபில் தேவ், ஐஸ்வர்யா ராய் போன்றவர்கள்.

    இவர்களின் மீது தனிப்பட்ட முறையில் குறை இல்லையென்றாலும், பங்குதாரர்களின் நலனையும் கம்பனியின் நலத்தையும் பாதுகாக்கும் அளவுக்கு திறனுள்ளவர்களா என்பது சந்தேகமே.

    ReplyDelete
  2. பத்ரி ஸார்..

    தனது மகன்கள் திருமணத்திற்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாய், எதிர்க்கட்சித் தலைவர் சோனியா என்று இருவரையுமே வரவழைக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தவர் சுப்ரதோ ராய்.

    இந்நிறுவனத்தில் பெருமளவில் முதலீடு செய்திருப்பது அரசியல்வாதிகள்தான். தன் மீது யாராவது கல் வீசினால் ஒட்டு மொத்தப் பெயர்களையும் வெளியிட்டுவிடுவேன் என்று ஒரு சமயத்தில் மிரட்டலும் விடுத்தார் ராய். அப்படியே அடங்கி ஒடுங்கியது அதிகார வர்க்கம். அவ்வளவுதான்..

    பணம் பத்தும் செய்யுமே..

    இந்தியாவில் எந்த மூலையில் எந்த முறைகேடுகள் நடந்தாலும் அதில் நமது திருவாளர் அரசியல்வாதிகளின் திருவிளையாடல் இல்லாமல் இருக்காது..

    ReplyDelete