Tuesday, May 03, 2005

மணவை முஸ்தஃபா நேர்காணல்

இன்று தொலைக்காட்சியில் ஓடைகளைப் புரட்டிக்கொண்டிருக்கும்போது பொதிகையில் மணவை முஸ்தஃபாவுடன் ஒரு நேர்காணல் நடந்துகொண்டிருந்தது. நேர்முகம் ஒருங்கிணைப்பாளர் பெயர் சாவித்ரி கண்ணன் என்று நிகழ்ச்சியின் கடைசியில் வந்தது. எனக்கு சாவித்ரி கண்ணன் முகம் ஞாபகம் இல்லை; எனவே மணவை முஸ்தஃபாவுடன் பேசியது சாவித்ரி கண்ணன் என்றே வைத்துக்கொள்வோம். [பின்சேர்க்கை: நேர்முகம் செய்தவர் லேனா தமிழ்வாணன்.]

முஸ்தஃபா தான் உருவாக்கும் தமிழ்ச்சொல் களஞ்சியத்தைப் பற்றிப் பேசினார். பல அறிவியல் துறைகளில் தான் சொற்களை உருவாக்குவதாகவும், கணினித்துறைக்கு மட்டும் ஆயிரக்கணக்கான பக்கங்களில் 30,000க்கும் மேற்பட்ட சொற்களை உருவாக்கியுள்ளதாகச் சொன்னார். இன்னமும் உயிரியல் போன்ற சில துறைகள்தான் பாக்கி என்றார். தமிழ் வேர்ச்சொற்களைத் தோண்டித் துருவி எடுத்து இப்பொழுது ஆங்கிலத்தில் உள்ள கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை உருவாக்கி, அதன்பின் அந்தத் துறை அறிஞர்களிடம் கொண்டு சேர்த்து அவர்களது கருத்தையும் எடுத்துக்கொள்வதாகச் சொன்னார்.

[நான் சில நாள்கள் முன்னர் க்ரியா ராமகிருஷ்ணனைச் சந்தித்தபோது சொற்களை உருவாக்குவது அகராதி செய்பவர்கள் வேலை கிடையாது; சொற்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதுதான் அகராதிகளின் வேலை என்றார். மணவை முஸ்தஃபா செய்வது கலைச்சொல் அகராதி வேலை அல்ல, கலைச்சொல் களஞ்சிய முயற்சி என்று வேண்டுமானால் கொள்ளலாம்!]

இந்தக் களஞ்சியங்களை யார் பதிப்பிக்கிறார்கள் என்ற தகவல் நான் பார்த்த பகுதியில் இல்லை அல்லது நான் சரியாகக் கவனிக்கவில்லை. (இந்த நேர்காணல் நேரத்தில் எனக்கு இரண்டு, மூன்று தொலைபேசி அழைப்புகளும் வந்தன, அதனால் நாள் பல நேரங்கள் நிகழ்ச்சியில் முழுவதுமாகக் கவனம் செலுத்த முடியவில்லை.) இதுபோன்ற புது சொல் கண்டுபிடிப்புகளை இணையத்தில் வைப்பதன் மூலம்தான் அவை பரவலாகி, வார்த்தைகள் அங்கீகரிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன். இவற்றை தடி, தடிப் புத்தகங்களாக வெளியிடுவதனால் மிகக்குறைந்த நன்மையே ஏற்படும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இணையத்தைப்பற்றி நேர்முகம் கண்டவரும் எதையும் கேட்கவில்லை, முஸ்தஃபாவும் எதையும் சொல்லவில்லை.

பேச்சு ஜெயகாந்தனது சமீபத்தைய மேற்கோள் பக்கம் திரும்பியது. ("தமிழில்தான் படிக்க வேண்டும், தமிழில்தான் எழுத வேண்டும் என்று சொல்பவர்கள் தன்னைத்தானே நக்கிக் கொள்ளும் நாய்கள்.") மொழிவெறி வேறு, மொழிப்பற்று வேறு என்று விளக்கினார் முஸ்தஃபா. ஜெயகாந்தன் பேச்சை நாகரிகமாகச் சாடினார். தமிழால் அனைத்தையும் செய்யமுடியும், முக்கியமாக அறிவியலை தமிழிலேயே வெளியிடமுடியும் என்று தான் நினைப்பதாகவும், யுனெஸ்கோ கூரியர் ஆசிரியராகத் தான் இருந்தபோது அதைச் செய்து காட்டியும் இருப்பதாகச் சொன்னார்.

[ஜெயகாந்தன் பற்றிப் பேசும்போது ராணி சீதை ஹாலில் 29.4.2005 அன்று நடைபெற்ற ஜெயகாந்தன் விழா ஞாபகம் வருகிறது. என்னால் அன்று விழாவுக்குப் போகமுடியவில்லை. ஆனால் ராணி சீதை ஹால் வழியாகச் சென்றேன். முன்னாள் காம்ரேட் ஜெயகாந்தனை, இன்னாள் காம்ரேட் பாண்டியன் உள்ளிருந்து வாழ்த்த, மக்கள் கலை இலக்கியக் கழகத்தவர் வாசலில் வட்ட வட்டத் தட்டிகளில் ஜெயகாந்தனைக் கடுமையாகச் சாடிக்கொண்டிருந்தார்கள். துண்டுப் பிரசுரம் ஒன்றையும் விநியோகித்தனர். காரில் சென்றுகொண்டிருந்ததாலும், பின்னால் அதிகமான போக்குவரத்து இருந்ததாலும், நான் பிரசுரத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.]

பின் தமிழ் செம்மொழி பற்றிய விவாதம் வந்தது. முஸ்தஃபா பொங்கிக் கொட்டிவிட்டார். மத்திய அரசு கல்வித்துறையில் தமிழை செம்மொழியாகச் சேர்க்காமல் பண்பாட்டுத்துறையில் சேர்த்து, தனியான பட்டியல் ஒன்றைத் தயாரித்து, ஆயிரம் வருடங்கள் இருந்தாலே அது செம்மொழியாகும் என்று சொல்லி குட்டையைக் குழப்பி விட்டார்கள், ஆனால் இங்குவந்து நாங்கள் தமிழைச் செம்மொழியாக்கினோம் என்று குரல் விடுக்கிறார்கள், இவர்கள் ஓட்டுக்கு மாரடிப்பவர்கள் என்று சாடு சாடென்று சாடினார்.

[மணவை முஸ்தஃபா தமிழ் செம்மொழியானது பற்றி தினமணியில் எழுதியதும், அதற்கான திமுக மத்திய அமைச்சர் ராஜாவின் பதில் கடிதமும்.]

பின் திடீரென்று பாதையை மாற்றி கருணாநிதியைப் புகழ்ந்து தள்ளிவிட்டார். கருணாநிதி ஒருவரால்தான் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் தமிழைச் செம்ம்மொழியாக்குவோம் என்றதைச் சேர்க்க முடிந்தது, அவரால் மட்டும்தான் தமிழ் செம்மொழியைச் சிறைமீட்டு பண்பாட்டிலிருந்து கல்வித்துறைக்குக் கொண்டுவரமுடியும், அவரால் மட்டும்தான் செம்மொழிக்கான தகுதியை 1000த்திலிருந்து 2000 வருடமாக்க முடியும், ஏனெனில் அவரிடம்தான் 40 எம்.பிக்கள் உள்ளனர் என்றெல்லாம் புகழாரம் சூட்டினார்.

பின், தமிழ் ஒழுங்கான செம்மொழியாக (சமஸ்கிருதம், பாரசீகம், அரபி, பாலி போன்றவையோடு) ஆக்கப்பட்டால் தமிழை எப்படிப் பரப்புவது என்பது பற்றி தன்னிடம் 15 அம்சத் திட்டம் ஒன்று இருப்பதாகவும், அதைச் சம்பந்தப்பட்டவரிடம் தருவேன் என்றும் சொன்னார்.

நேர்காண்பவர் நன்றி சொல்ல, நேர்காணல் முடிவடைந்தது.

3 comments:

 1. பதிவுக்கு நன்றி!

  ReplyDelete
 2. //முன்னாள் காம்ரேட் ஜெயகாந்தனை, இன்னாள் காம்ரேட் பாண்டியன் உள்ளிருந்து வாழ்த்த..//

  paNdiyan didnt attend the function. Gopu attended it.

  Thanks,
  Haranprasanna

  ReplyDelete
 3. I will try to get you the bit notice issued.

  Thanks,
  Haranprasanna

  ReplyDelete