Tuesday, May 31, 2005

சத்யம் ஏவ ஜயதே

முன்னெல்லாம் நம் நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்கள் அனைவருமே தமது கருத்தை மேடைகளில் பேசுவது மட்டுமல்லாமல், பத்திரிகைகளிலும் ஆணித்தரமாக எழுதிவந்தார்கள். இந்த வழக்கம் இன்று அழிந்துபோயுள்ளது. இன்று கருணாநிதியைத் தவிர பிற தமிழக அரசியல் தலைவர்கள் யாரும் எழுதுவதேயில்லை. ஜெயலலிதா தனது அரசியல் கருத்துகளை நமது எம்.ஜி.ஆரில் கூட எழுதுவதில்லை. வைகோ ஏதவது கட்சிப் பத்திரிகையில் எழுதுகிறாரா என்று தெரியவில்லை. வீரமணி தொடர்ச்சியாக திராவிடர் கழகப் பிரசுரங்களில் எழுது வருகிறார். திருமாவளவன் இந்தியா டுடே தமிழில் தொடர்ச்சியாக எழுதி வந்தார். ஆனால் பிறர் கொடுத்த நெருக்கடிகளால் இந்தியா டுடே திருமாவளவன் பத்தியை நிறுத்திவிட்டது என்கிறார் தலித் சிந்தனையாளர் ரவிக்குமார்.

மன்மோகன் சிங், ப.சிதம்பரம், சோனியா காந்தி, லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், மாயாவதி, லால் கிருஷ்ண அத்வானி, வாஜ்பாய் - இவர்கள் யாராவது தொடர்ச்சியாக எங்காவது பத்தி எழுதுகிறார்களா? சென்ற வருடம் ப.சிதம்பரம் கல்கியில் தொடர் கட்டுரைகள் எழுதினார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் எழுத்தை நிறுத்தி விட்டார்.

காந்தி, நேரு, ராஜாஜி போன்ற பலரும் தமது எண்ணங்களை எழுத்தில் வடித்தவண்ணம் இருந்தனர். காந்தி, நேரு எழுதியவை இப்பொழுது அனைவருக்கும் கிடைக்கிறது. ஆனால் ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தித் திருமகன் போன்றவை தவிர வேறு எதுவும் கடைகளில் கிடைக்கவில்லை - போனவாரம் வரையில்.

ராஜாஜி ஸ்வராஜ்யா மற்றும் பிற இதழ்களில் எழுதியிருக்கும் ஆங்கிலக் கட்டுரைகள் தொகுப்புகளாக 1960களில் வெளிவந்தது. 1956-61 வரையிலானவை 1962-ல் இரண்டு தொகுதிகளாகவும், 1962-66 வரையிலானவை மற்றும் இரண்டு தொகுதிகளாகவும் வெளியாயின. அதற்குப்பின்னும் ராஜாஜி தன் இறுதி நாள் வரை எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவை இன்று வரை தொகுக்கப்படவில்லை. வெளியான நான்கு தொகுதிகளுமே மறுபதிப்பு காணாமல் இருந்துவந்தது.

இப்பொழுது சென்னையைச் சேர்ந்த உந்துனர் அறக்கட்டளை இந்த நான்கு தொகுதிகளையும் "சத்யம் ஏவ ஜயதே" என்ற பெயரில் மறு பதிப்பாகக் கொண்டுவந்துள்ளது (மலிவு விலையில்). முந்தைய பதிப்பிலிருந்து ஒரு மாறுதல் : ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கட்டுரைகள் காலவரிசைப்படி இல்லாமல் எடுத்தாளப்படும் விஷயங்களின் அடிப்படையில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகம் வெளியிடும் விழா சென்ற வாரம் வெள்ளிக்கிழமை அன்று மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில் நடைபெற்றது. (கல்யாணத்தின் பேச்சை முடித்துக்கொண்டு நேராக அங்குதான் சென்றேன்.)

ஆந்திராவின் முன்னாள் ஆளுனர், ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் C.ரங்கராஜன் (ஆங்கிலத்தில்) சிறப்புரையாற்றினார். அந்த உரையில் ராஜாஜியின் பொருளாதாரக் கொள்கையைப் பற்றிப் பேசினார். ரங்கராஜன் புத்தகங்களை வெளியிட ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன் என்பவர் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார். கேசவன் Rajiv Gandhi National Trust of Youth Development என்னும் அமைப்பின் Vice President என்று அறிமுகம் செய்தார்கள். இப்படி ஓர் அமைப்பு இருக்கிறதா, என்ன செய்கிறது என்று எனக்குத் தெரியாது. இது காங்கிரஸ் கட்சி சார்ந்த அமைப்பா இல்லையா என்று தெரியவில்லை. கூகிளில் தேடினால் ஒன்றும் கிடைக்கவில்லை. கேசவன் ஆங்கிலத்தில்தான் பேசினார். ஆனால் நடுநடுவே தமிழிலும் கொஞ்சம் பேசினார். நன்கு சரளமாகப் பேசுகிறார். அமெரிக்காவில் படித்துவிட்டு இந்தியாவுக்கு வந்து அரசியலிலும், சமூக சேவையிலும் ஈடுபடுவதாகச் சொன்னார். ராஜ்மோகன் காந்தி (ராஜாஜி, காந்தியின் பேரன்) எழுதிய ராஜாஜி வாழ்க்கை வரலாற்றைப் படித்ததும், அதனால் தூண்டப்பட்டு இந்தியா வந்ததாகச் சொன்னார். தமிழக காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கே உரித்தான வெள்ளைக் கதர்ச்சட்டை, வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். (படத்தைக் கீழே கடைசியில் இருக்கும் தி ஹிந்து செய்தியில் பார்த்துக்கொள்ளவும்.)

காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்டதற்குப் பிறகு ராஜாஜி வேதாரண்யம் உப்பு யாத்திரை மேற்கொண்டார். அப்பொழுது அந்த யாத்திரையில் கலந்துகொண்ட நூறு பேரில் ஒருவரான G.K.சுந்தரம் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இவர் கோவை லக்ஷ்மி குழும நிறுவனங்களின் தலைவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

இந்தப் புத்தகங்கள் வெளிவருவதற்குத் தேவையான பண உதவியைச் செய்த சிவநேசன் (முன்னாள் இ.ஆ.ப) பேசும்போது தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் படிக்குமாறு ராஜாஜியின் குறிப்பிட்ட சில கட்டுரைகளையாவது தமிழில் பெயர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விழாவின் கடைசியில் ராஜாஜி பற்றிய ஆவணப்படம் ஒன்று காண்பிக்கப்பட்டது. கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் எடுத்த படம். முழுக்க முழுக்க ராஜாஜியைப் புகழ்ந்து மட்டுமே எடுக்கப்பட்ட ஆவணப்படம் இது. படம் முழுவதிலும் பெரியார் பற்றி ஒன்றுமே சொல்லப்படவில்லை. கடைசியில் ஒரேயொரு காட்சியில் பெரியார், ராஜாஜி இருவரும் கைகுலுக்குவது போல வந்தது. குலக்கல்வித் திட்டம், ஹிந்தித் திணிப்பு, பின் ராஜாஜியே திமுகவுடன் சேர்ந்து ஹிந்தித் திணிப்பை எதிர்த்தது, எதையெடுத்தாலும் சுர்ரென்று கோபம் கொண்டு பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருவது, தேர்தலில் நிற்க மறுத்தது, ராஜாஜிக்கும் பிற தமிழக காங்கிரஸ்காரர்களுக்குமான உறவு, பகை போன்ற எந்த விஷயங்களுமே இந்த ஆவணப்படத்தில் இல்லை.

ராஜாஜியின் வாழ்க்கை பற்றிய கறாரான வரலாறு ஒன்று வேண்டும். ராஜ்மோகன் காந்தியின் புத்தகம் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொன்னாலும் அதைப்பற்றி எந்த விமரிசனத்தையும் வைப்பதில்லை.

ராஜாஜியை இன்று அன்போடு நினைவுகூர்பவர்கள் தமிழகத்தில் உள்ள வயதான பார்ப்பனர்கள் மட்டுமே என்று தோன்றுகிறது. அதேபோல பிறர் அனைவருமே ராஜாஜியை ஏனென்று சொல்லாமல் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ராஜாஜி என்ற பெயரே தங்கள் கட்சி வரலாற்றில் இல்லை என்பது போல நடந்துகொள்கிறார்கள். சுதந்தரா என்றொரு கட்சி இருந்தது என்பதற்கான எந்த அடையாளங்களும் இன்று இல்லை. Liberal Party of India என்றோர் அமைப்பு சில காலமாக மீண்டும் தழைக்க முற்படுகிறது.

ராஜாஜியின் இந்த நான்கு தொகுதிகளையும் இன்னமும் நான் படிக்க ஆரம்பிக்கவில்லை. மேலோட்டமாகப் பார்த்ததில் அப்படி ஒரேயடியாக மறுதலித்துவிட முடியாதவராகவே உள்ளார் ராஜாஜி என்றே தோன்றுகிறது. ராஜாஜியின் பொருளாதாரக் கொள்கைகள், அயலுறவுக் கொள்கைகள், பாகிஸ்தான், சீனா தொடர்பான கருத்துகள், மொழி தொடர்பான கருத்துகள், சோஷியலிஸம், பிற இஸங்கள் தொடர்பான கருத்துகள், நேரு-காங்கிரஸ் செல்லும் வழியின் தவறுகள் ஆகியவற்றுடன் அவரது மதம் சம்பந்தமான கொள்கைகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன.

புத்தகங்களை வாங்கிப் படித்து இந்திய வரலாற்றில் ராஜாஜியின் இடம் பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Satyam Eva Jayate, Vol 1-4, Collected works of Rajaji from 1956-66, The Catalyst Trust, 2005. All four volumes together for Rs. 500, each volume Rs. 125

இது பற்றிய தி ஹிந்து செய்தி

5 comments:

 1. சென்ற வாரம் ஒரு நாள், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் - எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையின் ஒரு நாள் ஆசிரியராக இருந்தார். அதில் அவரே எடிட்டோரியல் எனப்படும் தலையங்கத்தையும் எழுதியுள்ளார். ஒரு நாள் முதல்வர் மாதிரி, ஒரு நாள் பத்திரிக்கை ஆசிரியராக ப.சி. மிகவும் சாதுர்யமாக பணியாற்றினார் என எகனாமிக் டைம்ஸ் பெருமை கொண்டுள்ளது.
  http://epaperarchive.timesofindia.com/Archive/skins/pastissues/navigator.asp?AW=1117526022828

  ப.சி.யும் கேரளத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள்/தலைவர்கள்
  எப்படி பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளனர் என முதல் பக்க கட்டுரையை போடவைத்து கேரளம் கொந்தளிக்கிறது. கம்யூனிஸ்ட்கள், ஊமன் சண்டியின், துபாய் இண்டர்நெட் சிட்டியில் (கொச்சி) ஊழல் என மறுபிரசாரம் ஆரம்பித்துள்ளனர்.

  - அலெக்ஸ்

  ReplyDelete
 2. பத்ரி,வணக்கம்!இம்மாதத் தென் செய்தி இணையத்தளம் மண்ணின் மைந்தர்களுக்கே வேலையென்று கருப்பு நாசிகளாக் கருத்துக் கோர்த்துள்ளது.இந்த அரசியல் கிரிமனல்களை அம்பலப் படுத்தியொரு கட்டுரை போடுங்களேன்.எனக்குப்போதிய நேரமின்மையும் கூடவே எழுத வெளிக்கிட்டால்,உலக நாசிகளோடு ஒப்பிட்டுக் கட்டுரை நீண்டுகொண்டே செல்லும்.சுப.வீ.நெடுமாறன் வகையறாக்களுக்கு பழுதாகிய முட்டை,தக்காளியடி கொடுக்கவேண்டும்.இவர்கள் கருப்பு நாசிகளாகிய வரலாறு ரொம்ப ஆர்வமான கதை.இந்தத் திருடர்களை அம்பலப்படுத்துங்களேன்.

  ReplyDelete
 3. there is a need for an objective biography on rajaji.his son and his grandson have written about him but they lack objectivity.i have posted a blog post on rajaji.
  i have pointed out that rajaji was defeated politically by congress and periyar but his ideas on economy and state's role in economic affairs were revived in late 80s and 90s.so in one sense he has won after being dead.i dont deny his role in freedom struggle or his contribution to post 1947 india.if he had given up the
  disastrous educational plan he introduced history would have been
  different.

  ReplyDelete
 4. "ராஜாஜியை இன்று அன்போடு நினைவுகூர்பவர்கள் தமிழகத்தில் உள்ள வயதான பார்ப்பனர்கள் மட்டுமே என்று தோன்றுகிறது."
  அப்படி ஒரேயடியாகக் கூறிவிட முடியாது. அவரை ஆதரிப்பவர் எல்லா ஜாதியிலும் உள்ளனர். இந்த ஸ்டேட்மென்ட் அவரை எதிர்ப்பவருக்கும் பொருந்தும். ராஜாஜி விஷயத்தில் கருத்துகள் தீவிரமாகவே இருந்திருக்கின்றன. ஒன்று ஒரேயடியாக ஆதரவு, மற்றொன்று ஒரேயடியாக எதிர்ப்பு. நான் எந்தப் பிரிவில் வருகிறேன் என்பது இங்கு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் "ராஜாஜி என்னும் மாமனிதர்" என்றத் தலைப்பில் நான் எழுதியப் பதிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம். அதில் அவருடையக் கல்வித் திட்டத்தைப் பற்றியும் எழுதியுள்ளேன். பின்னூட்டங்களிலேயே தங்கள் எதிர்ப்பு எண்ணம் என் விளக்கத்தால் மாறியது என்று சிலர் எழுதியிருந்தனர். பலர் எனக்கு தனியாக அனுப்பிய மின்னஞ்சலில் கூறியிருந்தனர்.

  ராஜாஜி இறக்கும் போது எனக்கு வயது 26 இப்போது 59. ஆக 33 வருடங்கள் ஆகிவிட்டன. அவருடன் நேரடித் தொடர்மிலிருந்தவர்கள் என்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

  ஆனால் ஒன்று. அவர் தன் கட்சி மூலம் பொருளாதாரக் கருத்துகள் இன்று இந்தியவில் கோலோச்சி வருகின்றன. அம்முறையில் ராஜாஜி அவர்கள் இன்னும் உயிருடனேயே இருக்கிறார் என்று பெருமிதத்துடன் நான் கூறுவேன்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்
  ப்ளாக்கர் எண் 4800161
  (எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

  ReplyDelete
 5. இந்த வார கல்கியில்: http://www.kalkiweekly.com/thisweekissue/page5.asp

  ReplyDelete