Saturday, May 21, 2005

இலவசப் பாடப்புத்தகங்கள்

தமிழக அரசு 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு (அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள்) இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்குவதாக இன்று செய்தி வந்துள்ளது.

இது வரவேற்கப்படவேண்டிய செய்தி. ஏற்கெனவே 1-10 வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாகப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இப்பொழுது 1-12 வகுப்புகளுக்கு இலவசமாகப் புத்தகங்கள் வழங்குவதற்கு ஆண்டுக்கு ஆகும் செலவு ரூ. 83.7 கோடிகள். இந்தச் செலவு, மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே போகும்.

கிரீஸ் போன்ற நாடுகளில் எல்லா மாணவர்களுக்கும் கல்லூரி வரையில் பாடப்புத்தகங்கள் இலவசம் என்று கிரீஸிலிருந்து வந்த (கார்னல் பல்கலைக்கழகத்தில் வேலை செய்த) என் ஆசிரியர் கூறியிருக்கிறார்.

இப்பொழுது மாநில அரசுகளால் இதைச் செய்யமுடியாவிட்டாலும், குறைந்தது அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காவது இப்படிச் செய்வது நல்லதுதான்.

இந்தியா போன்ற நாடுகளில் படிப்பறிவை அதிகமாக்க, பள்ளிகளில் அனைவரும் வந்து படிக்க
 • இன்னமும் பல அரசுப் பள்ளிகளைக் கட்டவேண்டும், அல்லது தனியார் பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி செய்யவேண்டும்
 • இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது.
 • பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படவேண்டும்.
 • ஆண்டிறுதித் தேர்வுகள் எழுத என்று மட்டும் கட்டணம் வசூலித்தால் போதும்.
 • தேவையான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படவேண்டும்.
ஆனால் இதைப்போன்ற எதையும் கல்லூரி அளவில் செய்யவேண்டியதில்லை. தேவையான மாணவர்களுக்கு கடனுதவி, நிதியுதவி செய்தால் மட்டும் போதும். அரசு தன்னிடமிருக்கும் பணத்தை எவ்வளவுக்கு எவ்வளவு ஆரம்பக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக்கல்வியில் செலவழிக்கிறதோ அவ்வளக்கு அவ்வளவு நல்லது.

2 comments:

 1. இது மிகவும் வரவேற்கப் பட வேண்டியது. எல்லா மாணவர்களுக்கும் வழங்கப் பட வேண்டும். நீங்கள் சொல்வது சரி. சிறுவனாயிருந்த பொழுது கோடை விடுமுறை முடிந்து பள்ளி ஆரம்பித்த உடனே புத்தகம் வாங்கும் வசதியில்லாமல் நானும் சில நண்பர்களும் பல முறைகள் வகுப்பை விட்டு வெளியே அரை மணி நேரம் நின்று (தண்டனையாகத் தான்) இருக்கிறோம். இன்னமும் எத்தனையோ சிறுவர்கள் நின்று கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதற்கெல்லாம் விடிவு காலம் வந்தால் சரி.

  அமெரிக்காவில் அரசு நடத்தும் பள்ளிகளே மிகச்சிறப்பாக நடத்தப் படுகின்றன. பள்ளியில் புத்தகங்களை அவர்களே கொடுத்து வருட இறுதியில் வாங்கிக் கொள்கிறார்கள். நல்ல நிலையிலிருந்தால் அதே புத்தகம் அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்.

  ஒரு அரசாங்கம் அடிப்படைக் கல்வியை தரமாகவும், இலவசமாகவும் எல்லா தரப்பு மக்களுக்கும் அளிக்க வேண்டும். அவற்றில் இரண்டு வகைகள் - ஒன்று முறையான பள்ளிக்கூடக் கல்வி, மற்றது முறை சாராக் கல்வியான நூல்நிலையங்கள். எந்த ஒரு நாட்டில் இவ்விரண்டு தேவைகளும் சரியாகப் பூர்த்தி செய்யப் படுகின்றனவோ, அந்த நாட்டில் வறுமை, அறியாமை, மூடநம்பிக்கை போன்ற சிறுமைகள் நீங்கி வாழ்க்கை மேம்பாடு அடையும்.

  அமெரிக்க போன்ற முதலாளித்துவ மேற்கத்திய நாடுகளில் எல்லாத் துறைகளும் தனியார் வசம் இருக்கும் பொழுது அடிப்படைக் கல்வியும், நூலகங்களும் அரசுகளின் கையில் உள்ளன. அவை ஜனநாயகப் படுத்தப் பட்டு குடி மக்களின் நேரடிப் பார்வையில் சுயாட்சி பெற்ற உயர்தரமான நிறுவனங்களாக நடைபெறுகின்றன. ஆனால் பொதுவுடைமைக் கொள்கைகளையும், அரசுடமைக் கொள்கைகளையும் கொண்டுள்ள இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் மட்டும் ஆரம்பக் கல்வி தனியார் கைகளில் ஒப்படைக்கப்பட்டு, முற்றிலும் வணிகமயமாகத் திகழ்கின்றது. பொது நூல் நிலையங்கள் எல்லாம் இலஞ்ச இலாவண்யங்களுக்கு இரையாகி அழிந்து வருகின்றன.

  இந்தியா - 2020 பற்றிக் கனவு காணும் நம் குடியரசுத் தலைவர் இதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்வார், ஏதாவது சொல்வார் (செய்வதற்கு அவருக்கு அதிகாரமில்லை என்பதால் செய்வார் என்று நான் சொல்ல வில்லை) என்று எதிர்பார்த்தேன். அவர் என்னவோ வல்லரசு ஆவதையும், அணுகுண்டு வெடிப்பதையும், சந்திரனுக்குப் போவதையும் மட்டுமே பேசி, குழந்தைகளைக் கனவு காணச்சொல்லி, ஜால்ராக்களுக்குத் தீனி போட்டுக் கொண்டேயிருக்கிறார். அவர் சமூகத்தின் அடித்தளத்தில் இருந்து மேலே வந்தவர் என்று சொல்லியதால் ஒரு எதிர்பார்ப்புதான்.

  செய்திக்கு நன்றி பத்ரி.

  நன்றி - சொ. சங்கரபாண்டி

  ReplyDelete
 2. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது
  இதே மாதிரி நீங்கள் சொல்லியுள்ள பல விஷயங்களை அமல்படுத்த வேண்டும்.
  கல்வியில் போடும் பணம் என்றுமே வீணாவதில்லை.

  ReplyDelete