அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தை மூன்று மாதத்துக்கு ஒருமுறை நடத்துவதற்கு வழிவகை செய்யும் வகையில் 1919 சென்னை மாநகராட்சி சட்டத்தைத் திருத்த ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. திருத்தத்துக்கு மசோதாவில் சொல்லப்பட்ட காரணம் மாநகராட்சி ஆணையர் மற்றும் நிலைக்குழுக்களின் அதிகாரங்கள் திருத்தப்பட்ட பிறகு, மாதம் ஒருமுறை மாநகராட்சி மன்றக் கூட்டத்தைக் கூட்டுவதன் அவசியம் குறைந்து விட்டது என்பதாகும். ஆனால் சட்டசபையில் விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் உண்மையான காரணத்தைக் கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறார்.முதல்வர் ஜெயலலிதாவின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. மாநகராட்சியின் கூட்டங்களில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அஇஅதிமுகவின் குண்டர்களும்தான். உதாரணத்துக்கு இன்றைய விஷயத்தை எடுத்துக் கொள்வோம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 110, 131 வார்டுகளின் அஇஅதிமுக உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொள்ள வந்தபோது திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். சும்மா இல்லை. வாய்க்கு வந்தபடி திட்டிக் குரல் எழுப்பிவிட்டுத்தான். பதவி ஏற்பு முடிந்ததும் மீண்டும் உள்ளே வந்த திமுக உறுப்பினர்களுக்குக் கோபம் வரும் வகையில் அஇஅதிமுக உறுப்பினர்கள் ஸ்டாலினைத் திட்டி ஏதோ சொல்லியுள்ளனர். உடனே கைகலப்பு. அடிதடி. சேர்கள் பறந்தன. திமுக பெண் உறுப்பினர் ஒருவருக்கு அடிபட்டது என்று சன் நியூஸ் தகவல்.
"சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு ஆக்கபூர்வமாக இருப்பதற்குப் பதிலாக, அடித்துக் கொள்வது, பிடித்துக் கொள்வது, நாற்காலிகளை வீசுவது என்று உள்ளது. தலைநகரில் இப்படி கேவலமான சம்பவம் நடைபெறுவது கேவலமாக உள்ளது. எனவே மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றால் போதும்." (தினமணி, 14 ஏப்ரல் 2005)
தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேறினர். இதைத்தான் அஇஅதிமுக எதிர்பார்த்திருக்கிறது.
ஒவ்வொரு முறையும் மாநகராட்சிக் கூட்டங்களில் இப்படியே ஏதோ காரணங்களால் அடிதடி, வன்முறை.
ஆனால் இதையே காரணம் காட்டி மாநகராட்சிக் கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என்று வைப்பதால் ஏதேனும் நன்மை உண்டா? அப்பொழுதும் அஇஅதிமுக, திமுக இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டிருப்பார்கள். பின் அதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டங்களே வேண்டாம் என்று முடிவுசெய்துவிடுவோமா?
எனவே மேற்படி சட்டத்திருத்தத்தை நாம் எதிர்க்க வேண்டும்.
அத்துடன் உள்ளாட்சித் தேர்தல்களிலாவது முடிந்தவரை சுயேச்சைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கழகக் குண்டர்கள் எண்ணிக்கை குறைவது குடியாட்சியைப் பலப்படுத்தும்.
No comments:
Post a Comment