[ஒலித்துண்டு: செடிலின்போது அடிக்கப்படும் பம்பை, உடுக்கையின் சத்தம் (இன்னபிற சத்தங்களுடன் கலந்து). கிட்டத்தட்ட இதேமாதிரியான சத்தம்தான் காவடியுடனும் இருக்கும்.]
செடிலைப் பற்றி ஏற்கெனவே பார்த்தாயிற்று. இம்முறை இரவு நேரங்களின் வரும் மின்சாரக் காவடியைப் பார்ப்பதற்கு நான் இருக்கவில்லை. மின்சாரக் காவடி என்பது பிரம்புகளால் ஆன மாபெரும் முப்பரிமாண வடிவம். துக்கிணியூண்டு பால் குடம் ஒரு கோடியில் இருக்கும். காவடிக் கட்டமைப்பைச் சுற்றி மின்விளக்குச் சரங்கள் (ஜீரோ வாட் பல்புகள்) அலங்கரிக்கும். இந்த விளக்குகளுக்கு மின்சாரத்தைத் தருவது பின்னால் ஒரு தள்ளுவண்டியில் வரும் டீசல் ஜெனரேட்டர். இந்தக் காவடியை ஒருவரால் தூக்கிக்கொண்டு எடுத்துவரமுடியாது. சம்பிரதாயமாக நேர்ந்துகொண்டவர் அதன் நடுவில் வர, சுற்றி பத்து இருபது பேர் காவடியைச் சுமந்து வருவார்கள். எவ்வளவு உயரமாகவும், கலை நேர்த்தியுடனும் (அதாவது ஜக ஜகாவென்று ராமராஜன் சட்டை மாதிரி டாலடிக்க வேண்டும்!) காவடி இருக்கிறது என்பது முக்கியம்.
இந்தமுறை மின்சாரக் காவடிகள் குறைவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த மாதிரியான காவடியைச் சுமப்பது அக்கறைப்பேட்டை போன்ற ட்சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட மீனவர் குடியிருப்புகள்.
பகல் நேரத்தில் வரும் காவடிகள் மிகவும் எளிமையானவை. ஒரு பித்தளைச் சொம்பில் பால். ஆனால் இப்பொழுதெல்லாம் எவர்சில்வர் சொம்பில்தான் பால் காவடி. மஞ்சளாடை அணிந்து, தோளில் மாலையணிந்து - இந்த மாலை மணமாகும்போது போடுவது போல நேராக இருக்கலாம் அல்லது குறுக்காக, பூணூல் அணிவது போல ஒரு பக்கம் அல்லது இரு பக்கங்களும் குறுக்காக அணியலாம் - தலையில் வேப்பிலைக்கொத்தும், அதன்மேல் பால் குடமும் (அல்லது சொம்பும்). கோயிலிலிருந்து கிளம்பி, நான்கு வீதிகளையும் சுற்றி மீண்டும் கோயிலை அடைய வேண்டும். ஏற்கெனவே காவடிக்கென சீட்டு வாங்கியிருக்க வேண்டும். பூசாரி காவடிச்சீட்டையும் பால் குடத்தையும் வாங்கி அம்மனுக்கு அபிஷேகம் செய்து, மீதம் சிறிது பாலை சொம்பில் விட்டுத் திருப்பித் தருவார்.
காவடி எடுப்பவர் கூடவே உதவி செய்யவென்று சிலர் வருவர். பல நேரங்களில் காவடி எடுப்போர் மயங்கி சாமியாடும் நிலை ஏற்படும். சிலர் திமிறிக் கூழே விழுந்துவிடலாம்.
காவடி என்பதே தோளில் சுமக்கப்படும் மரச்சட்டக அமைப்பு (பார்க்க: படம்) ஒன்றின் பெயராக இருக்குமோ என்று நினைக்கிறேன். இங்கிருந்து தொடங்கி மற்ற பலவுக்கும் இதே பெயர் நிலைத்துவிட்டது என்று நினைக்கிறேன். தோளில் சுமக்கும் இந்தக் காவடி ஒரு மரத்துண்டின் மேல் அரை வட்டமாக வளைந்த மரம் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இடையில், இந்தச் சட்டங்கள் நிலையாக இருப்பதற்காக சில குறுக்குச் சட்டங்கள் இருக்கும். கீழ் மரத்தின் இரு பக்கங்களிலும் இரண்டு சொம்புகள் அமைக்கப்பட்டிருக்கும். காவடியைச் சுற்றி வேப்பிலையாலும் பூவாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்தக் காவடியைத் தோளில் சுமந்துசெல்வார்கள்.
இந்தக் காவடி சுமப்பவர்கள் வேண்டுதலைப் பொருத்து, நாக்கில் அலகு குத்திக்கொள்வார்கள். (அப்படிப்பட்ட படங்களை நான் எடுக்கவில்லை. சிறுவர்கள் பலர் நாக்கில் அலகு குத்தியிருப்பதைப் பார்த்து பயப்படுவார்கள். நான் சிறுவனாக இருந்தபோது இந்தக் காட்சியைக் கண்டு நடுங்கிப்போயிருக்கிறேன்.) இன்னமும் சிலர் முதுகுத் தசையில் இரும்புக் கொக்கிகளை மாட்டி அதிலிருந்து காவடியைத் தூக்குவார்கள். இப்படி உடலை வருத்திக்கொள்வதன்மூலம் தமது வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்வார்கள்.
[இன்று சன் நியூஸில் போடிநாயக்கனூரில் கருப்பசாமிக்கு நேர்ந்துகொண்டு சாட்டையால் உடலில் அடித்துக்கொள்ளும் விழாவைப் பற்றிய துண்டுப்படம் காட்டப்பட்டது. வேண்டுதலைப் பூர்த்தி செய்ய சாட்டையால உடலை அடித்துக்கொள்கிறார்கள். எரியும் சூடத்தை அப்படியே விழுங்குகிறார்கள்.]
காவடி எடுப்பவர்கள் ஞாயிறு காலை முதலே தொடங்கிவிடுவர். தொடர்ந்து அடுத்த நான்கைந்து ஞாயிறுகளிலும் நாகையில் காவடி உண்டு.
-*-
முன்னர் தேர் காலை 6.30க்குள் நிலையிலிருந்து கிளம்பிவிடும். இம்முறை 8.00க்குப் பிறகுதான் ஆரம்பித்தது.
பிள்ளையார் தேர்
மொத்தம் மூன்று தேர்கள். விநாயகர் தேர், எல்லையம்மன் தேர், பின் கடைசியாக மாரியம்மன் தேர். முதலிரண்டும் மிகச்சிறிய, எடை குறைவான தேர்கள். இரண்டு மூன்று பேர் சேர்ந்து தள்ளினால் போதுமானது. ஆனால் மாரியம்மன் தேர் மிகப்பெரியது. இழுக்க 200 பேருக்கு மேல் தேவைப்படும். இரண்டு பக்கமும் இழுப்பவர்கள் பெரும்பாலும் ஆண்கள்தான். கொஞ்சம் பெண்கள் தேர் வடத்தில் கோடியில் இருப்பார்கள்.
எல்லையம்மன் தேர்
தேரிழுப்பது சாதாரண விஷயமல்ல. சம்பிரதாயமான தேருக்கு ஸ்டியரிங் வீல் கிடையாது. பிரேக் கிடையாது. சாலைகளில் சற்றி அங்கும் இங்குமாக நகர்த்தி ஓட்டவேண்டும். ஆங்காங்கு நிறுத்த வேண்டும். பின் மீண்டும் சக்கரங்களை நகர்த்த வேண்டும். இதற்குத்தான் முட்டுக்கட்டை, உந்துகட்டை என்று சிலவற்றைப் பயன்படுத்துகிறார்கள். முட்டுக்கட்டை (பார்க்க: படம்) தேர் சக்கரங்களை சற்றே திசை திருப்பவும், முழுவதுமாக நிறுத்தவும் பயனாகிறது. தேரின் வெளிப்பக்கத்திலிருந்தும், உள்பக்கத்திலிருந்தும் முட்டுக்கட்டை போடுவார்கள். உள்ளிருந்து முட்டுக்கட்டை போடுபவரின் பணி மிகவும் சிரமமானது. சிறிது தவறானாலும் சக்கரத்தின் அடியில் கை நசுங்கிப் போகலாம். பெரிய தேராக இருந்தால் ஆளே நசுங்கிப் போகலாம்.
மாரியம்மன் தேர்
நின்றுகொண்டிருக்கும் தேரை வெறுமனே பிடித்து இழுத்து நகர்த்துவது கடினம். அதற்காக பின்பக்கமாக ratchet போன்ற நீண்ட கட்டைகளை தேர் சக்கரத்தின் அடியில் கொடுத்து அந்தக் கட்டையின் மீது சிலர் ஏறி நின்று கீழ்நோக்கி அழுத்துவார்கள். அப்பொழுது சக்கரம் முன்நோக்கி உருளும். அதற்குப் பின்னர் மனிதர்கள் இழுக்கும் இழுவையில் தேர் ஓடும். முட்டுக்கட்டை மூலம் திசையை சற்று இடமும் வலமுமாகத் திருப்புவார்கள். தேரை நிப்பாட்டவேண்டுமென்றால் முட்டுக்கட்டையை நேராக முன்னிரு சக்கரங்களின் முன்பக்கம் சொருக வேண்டியதுதான்.
தேருக்கு மொத்தம் ஆறு சக்கரங்கள். முன்னே இரு சக்கரங்களும், பின்னே இரு சக்கரங்களுமாக நான்கு பக்கமும் நான்கு. நடுவில், முன், பின் சக்கர வரிசைகளுக்கு இடையில் உள்ளடங்கி இரண்டு.
தேர் ஆங்காங்கே வீதியில் ஏதாவது ஓரிடத்தில் நிற்கும். அப்பொழுது பலரும் அங்கு வந்து அர்ச்சனை செய்வார்கள். பல அர்ச்சனைகளுக்குப் பிறகு தேர் மீண்டும் புறப்படும். இப்படியாக மதியம், வெய்யில் கொளுத்தும்போது இழுப்பவர்களால் தாங்கமுடியாது. வெய்யில் தார்ச்சாலையைக் கொதிக்கும் குழம்பாக மாற்றியிருக்கும். கால்களில் செருப்பு போடாமல் தேர் இழுப்பார்கள் என்பதை நினைவில் வைக்க. ஆங்காங்கே விதியில் உள்ள வீடுகளிலிருந்து தெருவில் குடம் குடமாகத் தண்ணீரைக் கொட்டுவார்கள். ஆனால் இதுவும் கூட உபயோகமற்றுப்போயிருக்கும். சாலையில் கொட்டிய தண்ணீர் கொதிநீராக ஆகியிருக்கும். உச்சி வெய்யிலில் தேர் மேல வீதியில் நிறுத்தப்படும். அனைவரும் இளைப்பாறச் சென்றுவிடுவர். மீண்டும் வெய்யில் தாழ்ந்ததும் மாலை 3.00 மணிக்கு மேல் மீண்டும் தேரை இழுத்துக்கொண்டு வந்து நிலையில் சேர்ப்பர்.
தேர் இழுப்பவர்களுக்கென அம்மனுக்குப் படையலிட்ட பானகம், நீர்மோர் (இம்முறை பெப்ஸி கூடக் கிடைத்தது!), எலுமிச்சை சர்பத், குளிர்நீர் ஆங்காங்கே கொடுப்பார்கள். தேர் சாலையை முழுவதுமாக ஆக்கரமித்திருக்கும். வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படும். மேலே குறுக்காகச் செல்லும் மின்சாரக் கம்பிகளை பிரித்து, தேர் சென்றதும் மீண்டும் இணைக்க மின்வாரிய ஊழியர்கள் தேர் கூடவே வருவார்கள்.
திருவிழா அமைதியாக, ஒழுங்காக நடைபெறுவதற்கு நாகை நகராட்சிக்கு முக்கியமான பங்கு உண்டு.
அன்புள்ள பத்ரி,
ReplyDelete//[இன்று சன் நியூஸில் போடிநாயக்கனூரில் கருப்பசாமிக்கு நேர்ந்துகொண்டு சாட்டையால்//
என் மாமியார் வீடு போடிதான். நேத்து ஃபோன் செஞ்சப்ப திருவிழா போய் வந்ததைச்
சொன்னாங்க!
வத்தலகுண்டுலே 'அன்னக்காவடி' ராத்திரியிலே வருவாங்க. பெரிய பித்தளைத் தவலை
ரெண்டு, பளபளன்னு தேச்சு காவடிக்கு ரெண்டு பக்கமும் கட்டி இருக்கும்!
பத்ரி
ReplyDeleteஅலகு குத்திக்கொள்வதைக் கண்டு நானும் நடுங்கிப்போயிருக்கிறேன்.டிஸ்கவரி சனலில் இதை பற்றியும் தீமிதிப்பது பற்றியும் உளவியல் ரீதியில் நன்றாக ஆராய்ந்திருந்தார்கள். இந்தோனேசியாவிலும் கூட இந்த வேண்டுதல் முறை உண்டு.மனம் ஒருமித்த நிலையில் இருக்கும் போது வலி தெரிவதில்லை என்று நினைக்கிறேன்.